நன்றி குங்குமம் தோழி
“ஒரு நல்ல உடை வாங்கவும், எழுதுவதற்கு ஒரு பேனா வாங்கவும் வழியில்லாத காலம் அது. அப்போது என் ஆசிரியர்கள்தான் எனக்கு உதவினார்கள். ‘உன் கண்ணீரையும் கஷ்டத்தையும் காரணம் காட்டாதே. உன்னை யாராலும் நிராகரிக்க முடியாத அளவுக்கு நீ வளர வேண்டும். நன்றாகப் படி’ என்று என் ஆசிரியர் சொன்ன வார்த்தை என் வாழ்க்கையை மாற்றியது” என்கிறார் திருநங்கை டட்லிகா முத்தீஸ்வரன். திருநங்கைகள் என்றாலே புறக்கணித்து செல்லும் இதே சமூகத்தில்தான், கல்வியை மட்டுமே துணையாகக் கொண்டு ஆசிரியராக பணியாற்றுவதுடன் ‘அன்பே கடவுள்’ எனும் அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் பல சமூகப் பணிகளை செய்து வருகிறார்.
“திண்டுக்கல் என் சொந்த ஊர். மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தேன். அம்மா இல்லை. அப்பா மறுமணம் செய்து கொண்டதும் சித்தியின் தயவில்தான் வளர்ந்தேன். மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே அப்பா என்னை பள்ளி விடுதியில் சேர்த்துவிட்டார். பனிரெண்டாம் வகுப்பு வரையிலும் திண்டுக்கல்லில் உள்ள டட்லி பள்ளியின் மாணவர் விடுதியில்தான் வளர்ந்தேன்.
அப்பாவின் கவனிப்பும் ஆதரவும் கிடைக்காத சூழலில், எனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என் பள்ளி ஆசிரியர்கள்தான். சிறுவயதில் இருந்தே கட்டுரை, கவிதை எழுதுவது, பாடுவது, தமிழ் பேச்சு என திறமையாக இருப்பேன். நான் 6ம் வகுப்பு படிக்கும்போது எனக்குள் ஏற்பட்ட சில பாலின மாற்றங்களை நான் உணர்ந்தேன். அப்போதிருந்தே நான் பல கேலி கிண்டல்களை சந்தித்திருக்கிறேன். ஆனால், அப்போதெல்லாம் என் ஆசிரியர்கள்தான் எனக்கு நம்பிக்கை வார்த்தைகளை கூறி என்னை தேற்றுவார்கள். நான் நன்றாக படித்தேன்.
பள்ளிப் படிப்பை முடித்ததும் என் இயற்பியல் ஆசிரியர் என்னை மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்ப பட்டயப் படிப்பு (DMLT) படிக்க வைத்தார். மேற்கொண்டு மருத்துவமனை மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு சேவைக்கான தொழிற்படிப்பை (DHA) நானே படித்தேன். வேலைக்கு சென்றேன். என் தமிழ் ஆசிரியரை உதாரணமாக கொண்டு நானும் ஓர் தமிழ் பேராசிரியர் ஆகவேண்டும் என்கிற என் சிறுவயது கனவை நோக்கி பி.லிட், எம்.ஏ, பி.எட் எம்.எட் போன்ற படிப்புகளை முடித்திருக்கிறேன்.
சமூக உதவிகளை செய்துவரும் நிலையில் தொலைதூரக் கல்வி வாயிலாக சோஷியல் ஒர்க் படிப்பையும் முடித்தேன். இப்போது முனைவர் பட்டம் படிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு எல்லாம் கொடுத்தது என் பள்ளிதான் என்பதால், Dudley higher secondary school என்கிற பள்ளியின் பெயரை இணைத்து டட்லிகா முத்தீஸ்வரன் என்று பெயரை மாற்றம் செய்துள்ளேன்” எனும் டட்லிகா மேலும் தொடர்ந்தார்.
“கல்வித் தகுதி இருந்தபோதும் அங்கன்வாடி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த போது, மூன்றாம் பாலினத்தவர் என்கிற காரணத்தினால் நான் நிராகரிக்கப்பட்டேன். அதன் பிறகு ஆசிரியர் பணிக்காக வேலை வாய்ப்பை தேடி அலைந்தபோது 23 பள்ளிகளில் நிராகரிக்கப்பட்டேன். “நீங்க திருநங்கை என்பதால் பள்ளியில் சேர்க்க முடியாது, உங்களை பார்த்து வளரும் குழந்தைகளுக்கும் ஏதேனும் பிரச்னை ஏற்படும். இதனால் எங்க பள்ளியில் யாரும் மாணவர்களை சேர்க்கமாட்டார்கள்” என்றார்கள். பின்னர் அரசுப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது ஒப்பந்தத்தின் அடிப்படையில் குழந்தைகள் நலத்துறையில் பணியாற்றி வருகிறேன்.
கல்வியினால் என்னுடைய மரியாதையையும் வாழ்க்கை தரத்தையும் உயர்த்திக் கொண்டேன். எனக்கு வேலை வழங்க மறுத்த அதே பள்ளிகளில் இன்று பேச்சாளராகவும், விருந்தினராகவும் அழைக்கப்படுகிறேன். 2022 ஆம் ஆண்டு ‘அன்பே கடவுள்’ என்கிற அறக்கட்டளை தொடங்கினேன். அதன் மூலம் குழந்தைகளுக்கு இலவச மாலை நேர படிப்பகம் தொடங்கி, தற்போது 90க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தழகுபட்டி மற்றும் முத்தனம்பட்டி ஆகிய இரண்டு கிராமங்களிலும் மாலைநேர படிப்பகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து பனிரெண்டாம் வகுப்பு வரையிலும் இந்த படிப்பகத்தில் படிக்கும் பொருளாதார பின்னடைவுள்ள குழந்தைகளின் கல்லூரி படிப்புக்கும் உதவுகிறோம். நன்றாக மதிப்பெண் பெற்ற 6 மாணவர்களை படிக்க வைத்திருக்கிறோம். சிலர் படித்துக்கொண்டும் இருக்கிறார்கள். அன்பே கடவுள் அறக்கட்டளை திருநங்கைகளுக்காக தொடங்கப்பட்டதுதான்.
ஆனால், நான் சிறுவயதில் வறுமையில் இருந்தது மட்டுமின்றி மாணவர் இல்லத்தில் வளர்ந்ததாலும் குழந்தைகளுக்காக ஒரு அறக்கட்டளை தொடங்க வேண்டும் என்கிற ஆசையும் இருந்ததால் குழந்தைகளுக்கான கல்விச் சேவையை செய்து வருகிறேன். மட்டுமின்றி கேரம், செஸ், கபடி போன்ற விளையாட்டு மற்றும் நடனம் போன்ற திறன்களை பயிற்சியளித்து போட்டிகளில் பங்கு பெறவும் உதவுகிறோம். திருநங்கைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சுயதொழில் தொடங்குவது, வங்கிக் கடன் பெறுவது, மாற்றுப்பாலின அறுவை சிகிச்சைக்கு வழிகாட்டுதல் போன்ற உதவி செய்து வருகிறேன். தற்போது 16 திருநங்கைகள் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை படித்து வருகின்றனர்” என்றவர், திருநர் சமூகத்தின் முன்னேற்றம் குறித்து பேசினார்.
“திருநர் சமூகத்தினர் எவ்வளவுதான் படித்து வாழ்க்கையில் நல்ல நிலையை எட்டினால் கூட மக்களிடையே எங்களை குறித்த தவறான தகவல்கள்தான் பரவுகின்றன. சேலை போன்ற பாரம்பரிய ஆடைகளை அணிந்து கொண்டு ஆண்களுடன் வண்டியில் சென்றால் கூட சமூகத்தின் பார்வை வேறுவிதமாக உள்ளது. நான் படித்து நல்ல நிலையில் இருப்பதை சமூக வலைத்தளங்களில் பார்த்தும் கூட, ஆண்கள் சிலர் தவறான குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர்.
பேருந்து நிலையத்தில் நின்றால் தவறான அணுகுமுறையில் பேசுகின்றனர். சமூகத்தின் இந்த பார்வை எப்போது மாறுகிறதோ அப்போதுதான் உண்மையான மாற்றம் நிகழும். என்னுடன் படிப்பவன், எனது பக்கத்து வீட்டுக்காரர், என் அண்ணன், என் குழந்தை ஒரு திருநங்கை என்று ஒவ்வொருவரும் உரக்க சொல்வதில்தான் உள்ளது மாற்றம். பெற்றோர்களால் புறக்கணிக்கப்படுவதாலும் அன்பு நிராகரிக்கப்படுவதாலும்தான் பெரும்பாலும் திருநங்கைகள் பாலியல் தொழிலுக்கு செல்கின்றனர்.
ஒரு வீட்டில் ஒரு குழந்தை மாற்றுத்திறனாளியாக பிறந்தால் அதை எப்படியாவது காப்பாற்றி வாழவைக்க வேண்டும் என்று போராடும் பெற்றோர்கள் ஒரு குழந்தை மாற்று பாலினத்தவராக பிறந்தால் மட்டும் அதை அவமானமாக கருதுவது வருத்தமளிக்கிறது. எங்க திருநர் சமூகத்தை முன்னேற்றத்தின் பாதையில் அழைத்துச் செல்ல நான் செய்த முன்னெடுப்புதான் அன்பே கடவுள் அறக்கட்டளை.
இன்னும் பல இடங்களில் இலவச மாலை நேர படிப்பகம் வைக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லம் அமைக்க வேண்டும் என்பது என் கனவு. திண்டுக்கல் முழுவதும் என்னை பார்க்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என்னை ‘அம்மா’ என்றே அழைக்கின்றனர். திருநங்கைகளுக்கான சரியான இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பு போன்றவற்றை முறையாக அரசு எங்களுக்கு வழங்க வேண்டும்” என்கிற கோரிக்கையை முன்வைத்தார்.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்



