Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

உச்சபட்ச வெற்றியை பதிவு செய்த திருநங்கை ஈஸ்வரி

நன்றி குங்குமம் தோழி

தகுதி, திறமை, கல்வி இவை எல்லாவற்றையும் விட, ஒருவரின் தோற்றமும், குரலுமே, இந்த சமூகத்தில் அவருக்கான இடத்தை முடிவு செய்கிறது என்பது எத்துனை கொடூரமான நிதர்சனம்.இந்தச் சமூகத்தால் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்ட ஒருவர், அத்தனை நிராகரிப்புகளையும் தாண்டி, கல்வியை ஆயுதமாக மாற்றி, வெற்றி பெற்றதே திருநங்கை ஈஸ்வரியின் கதை.

ஆம்! சென்னை ராயபுரம் பகுதியில் பிறந்து வளர்ந்த ஈஸ்வரி, எம்ஃபில்., பிஎச்டி பட்டம் பெற்று, தற்போது பெங்களூருவில் உள்ள ஜெயின் கல்லூரியில் அறிவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் பிஹெச்டி பட்டம் கைகளில் இருக்க, தொடக்கத்தில் பள்ளி ஒன்றின் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கிறார் ஈஸ்வரி. அவரின் தகுதியைப் பார்த்த பள்ளி நிர்வாகமும் உடனே அவரைத் தேர்வு செய்கிறார்கள். ஆனால், அவரின் குரலை தொலைபேசியில் கேட்ட அடுத்த நிமிடமே, அந்த வேலை உங்களுக்கு இல்லையென மறுக்கிறார்கள்.

நிராகரிப்புக்குப் பிறகு, அடுத்த வேலை சாப்பாட்டுக்காக அதே பிஎச்டி பட்டத்தோடு காசிமேடு மீன் மார்க்கெட்டில் உட்கார்ந்து மீன் சுத்தம் செய்கிற வேலைக்குப் போகவேண்டிய நிலையும் ஈஸ்வரிக்கு ஏற்படுகிறது. இதைக் கேட்கவே ஒரு மாதிரி நம்மை பதற வைக்குது இல்லையா?

இப்படியான தன் சூழலை, கல்வி என்கிற ஆயுதத்தால் தீவிரமாக மாற்றியவர் ஈஸ்வரி. கல்வி என்பது எனக்கு வெறும் சான்றிதழ் அல்ல... அது மனிதனின் சுயமரியாதையை காக்கும் மிகப்பெரிய ஆயுதம் என நிரூபித்திருக்கிறார் இவர்.அப்பா இல்லாத நிலையில், ஈஸ்வரியின் குடும்பப் பின்னணியோ மிகவும் ஏழ்மையானது. இந்த நிலையில் அவர் எட்டாம் வகுப்பு படிக்கும்போது தன் பாலின மாற்றத்தை உணர ஆரம்பிக்கிறார். 13 வயது என்பது இயல்பாகவே குழப்பமான காலகட்டம்தான். தானொரு திருநங்கை என்பதை உணர்ந்ததுமே, ஈஸ்வரி வீட்டை விட்டு வெளியேறவில்லை.

புயல் வீசும் பகுதியில் வீட்டைக் கட்டுவதற்கு முன், அஸ்திவாரத்தை எவ்வளவு ஸ்ட்ராங்காய் போட வேண்டுமோ, அப்படியான முடிவைத்தான், தன் சிறு வயதிலேயே எடுக்கிறார் அவர். ஆம், தானொரு திருநங்கை என்கிற உண்மையை தனக்குள்ளேயே புதைத்து மறைக்கிறார்.பதின்ம வயதில், ஹார்மோன் மாற்றங்கள் உடலில் மிகத் தீவிரமாய் நடக்க, ஈஸ்வரியின் விஷயத்திலோ, உயிரியல் ரீதியாக ஹார்மோன் சுரப்பிகளால் ஆணுடலில் பெண் தன்மையும், பெண்மைக்கான உணர்வுகளும் உருவாகத் தொடங்க, உடல் ரீதியான மாற்றம் என்பதைத் தாண்டி, உளவியல் ரீதியாக அணுகுதல், விலகுதல் எனச் சொல்லப்படும் மிகக் கடுமையான மனப் போராட்டத்திற்கு உள்ளாகிறார்.

நாம் நிற்கிற பாலம் தீ பிடித்து எரியும் போது, அங்கேயே நின்றால், அந்தத் தீ நம்மையும் சேர்த்து அழித்துவிடும்தானே. இதுதான் தன் அடையாளத்தை மறைத்து வாழ்கிற அணுகுதல் நிலை. அந்தப் பாலத்தில் இருந்து கீழே குதித்தால், உறைந்த நிலையில் இருண்ட நதி ஒன்று கீழே ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த சமூகமே அந்த நதி. இதுவே ஈஸ்வரியின் விலகுதல் நிலை. தான் ஒரு திருநங்கை என்பதை வெளிப்படுத்திய பிறகு, வீட்டில் அடி, உதை, சண்டை, சூடு, பட்டினி என பல்வேறு சித்திரவதைகள் நடந்தேற, ஆனாலும், தன்னை திருநங்கையாக வெளிப்படுத்த வேண்டும் என்கிற உந்துதல் அவருக்குள் ஒரு பக்கம் உந்தித்தள்ள...

வீட்டிலோ அண்ணணும், அம்மாவும் அடிப்பார்கள். பள்ளிக்கூடத்திலோ நண்பர்கள் கிண்டல் செய்வார்கள். ஒட்டுமொத்த சமூகமும் தன்னை தூக்கி மொத்தமாய் வெளியே எறியும் என்கிற பயம் இன்னொரு பக்கம் என, இரண்டுக்கும் நடுவில் சிக்கி, தனக்கு என்ன வேண்டும் எனத் தெரிந்தும், அதை நோக்கிப் போக முடியாத நரக வேதனையை அனுபவிக்கிறார் ஈஸ்வரி.

உண்மையான அடையாளத்தை மறைத்து ஒரு ஆணாக வாழ்வது உள்ளுக்குள் அவரை முற்றிலும் அழிக்க, வீட்டைவிட்டு வெளியேறி விடலாம் என்கிற எண்ணம் வந்தாலும், “நீ வீட்டை விட்டு போனால் ரயிலில் கை தட்டுவது, கடையில் காசு கேட்பது, பாலியல் தொழில் செய்வது என்பதே உன் வாழ்க்கையாகும்” என முகத்தில் அடித்தார் போல் சொல்லி கடுமையாகவே எச்சரிக்கிறார் அவரின் தாயார்.

இந்தச் சமூகம் எந்தவொரு பாதுகாப்பையும் தானாக முன்வந்து ஒரு திருநங்கைக்கு தராது. எனக்கான பாதுகாப்பை நானேதான் உருவாக்க வேண்டும் என்பதை, தனது அம்மாவின் வார்த்தைகள் வழியாக ஆழமாக உணர்ந்தவர், கல்வி ஒன்றே தன் நிலையை முற்றிலும் மாற்றும் என முடிவெடுத்து, கல்வி என்ற ஆயுதத்தை இறுகப் பற்றுகிறார்.

வீட்டில் இருந்த வறுமையுடன், கல்வியை இலக்காகக் கொண்டு தொடர்ந்து படித்து முன்னேறியவர், தனது அடையாளத்தை மறைத்தவாறே, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பிஎஸ்சி, பிரசிடென்சி கல்லூரியில் எம்எஸ்சி., பிறகு சைதாப்பேட்டை அரசு கல்வி மேம்பாட்டு நிறுவனத்தில் பிஎட்., எம்எட் மற்றும் எம்.ஃபில் முடித்த நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டமும் பெறுகிறார்.

கல்வியை தனக்கான வேலை வாய்ப்பாகவோ, வெறும் சான்றிதழாகவோ பார்க்காத ஈஸ்வரி, கல்விதான் தனக்கான பாதையை வகுக்கும் என்பதில் தெளிவாக இருந்ததுடன், கல்வி வளாகங்களுக்குள் வலம் வந்த, 12 ஆண்டுகளும் உடன் படித்த நண்பர்களின் கேலிகளில் இருந்தும், குடும்ப நிர்பந்தங்களில் இருந்தும் தன்னை தற்காக்க தேடிக்கொண்ட புகழிடமாகவும், தன்னை இந்த சமூகத்தில் நிலைநிறுத்திக் கொள்கிற கவசமாகவும் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்.

இத்தனை தூரம் கல்வியில் தன் உழைப்பைச் செலுத்தியவர், தன்னை படிக்க வைத்த அண்ணனுக்குத் தன் செலவிலேயே திருமணம் செய்து வைத்த பிறகே, வீட்டைவிட்டு வெளியேறி திருநங்கை சமூகத்தோடு தன்னை இணைத்து, அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறியிருக்கிறார்.

இந்த நிலையில், பெரம்பூர் கே.ஆர்.எம் பள்ளியின் சி.இ.ஓ. திரு தாயுமானசாமி, ஈஸ்வரியின் திறமையை பார்த்து, எந்த பாகுபாடும் பார்க்காமல், அறிவியல் ஆசிரியர் பணியை வழங்க, அந்தப் பள்ளியின் மாணவர்களும், சக ஆசிரியர்களும் ஈஸ்வரிக்கு கொடுத்த மரியாதை, அவரது 12 வருட கல்லூரி கல்விக்கு கிடைத்த முதல் வெற்றியாக அமைந்தது.

சிறுகச் சிறுக ஈஸ்வரி கட்டி எழுப்பிய கல்வி என்கிற கவசம், அவருக்கான முதல் அங்கீகாரத்தை கல்வித் துறைக்குள் பெற்றுத்தந்த நிகழ்வாகவே இது பார்க்கப்பட்டது. ஆனாலும், ஈஸ்வரியின் கனவு கல்லூரி ஒன்றில் பேராசிரியர் ஆவதே அடுத்து பெங்களூர் ஜெயின் பல்கலைக்கழகத்தில் நேர்காணலுக்கு செல்கிறார். அங்கும் அதே சமூக பிரச்னை அதே பாகுபாடு என அனைத்தையும் சந்திக்க நேர, நிர்வாகக் குழுவில் உள்ள பலரும், திருநங்கையை வேலைக்கு எடுத்தால் சமூகம் எப்படி பார்க்கும்... மாணவர்களின் பெற்றோர்கள் எப்படி பார்ப்பார்கள் எனத் தயங்கி நின்றனர். நேர்காணல் குழுவில் இருந்த டாக்டர் ஜவகர் நேசன், கல்லூரி நிர்வாகத்திடம் சண்டையிட்டு, அவருக்காக நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் எனச் சொல்லி, கல்லூரிப் பேராசிரியர் பணியை ஈஸ்வரிக்கே பெற்றுக் கொடுக்கிறார்.

ஆசிரியர் வாய்ப்பு கிடைத்த பிறகும் ஈஸ்வரி ஒன்றும் சும்மா இருக்கவில்லை. இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் (Indian Council of Social Science Research - ICSSR) வழங்கக்கூடிய 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள தேசிய அளவிலான மாபெரும் ப்ராஜெக்ட் ஒன்றை தன் திறமையால் வென்று காட்டியிருக்கிறார். அவரின் இந்த வெற்றிக்கு, ஈஸ்வரியின் தோற்றமோ, குரலோ ஒரு பொருட்டே கிடையாது. அவரது ஆராய்ச்சி திறன் மட்டுமே அளவுகோலாக இருந்தது.

இந்த இடத்தில்தான், ஈஸ்வரி எடுத்த கல்வி என்கிற ஆயுதம் தன் உச்சபட்ச வெற்றியை பதிவு செய்தது. தொடர்ந்து பல்வேறு விருதுகளும் ஈஸ்வரியை தேடிவரத் தொடங்கியது. இந்த நிலையில் ஈஸ்வரிக்கு முகநூல் வழியாக நண்பர் ஒருவரின் அறிமுகம் கிடைக்க, சிறிது நாளில் அது நட்பாகி, காதலாகி, பின்னர் திருமணத்தில் முடிந்திருக்கிறது.

‘‘திருநங்கை சமூகத்துக்குள் ஜாதி, மதம், வயது போன்ற எந்த பாகுபாடுகளும் பார்ப்பதில்லை. யாரையும் முழுமையான மனிதனாக ஏற்கும் பண்பு எப்போதும் உண்டு’’ என்கிற ஈஸ்வரி தன் கணவரோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.ஈஸ்வரியின் அம்மாவும், அண்ணணும் இன்னும் முழுமையாக அவரை ஏற்காத நிலையில், கணவரின் குடும்பம் எந்தவித தயக்கமும் இன்றி, திருநங்கை ஈஸ்வரியை தங்கள் வீட்டு மருமகளாகக் கொண்டாடி வருகிறார்கள்.

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்