Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திறமையை வெளிப்படுத்த சரியான வாய்ப்புகள் மட்டுமே தேவை!

நன்றி குங்குமம் தோழி

சவாலான வாழ்வில் எதிர்நீச்சல் போடுவது பலருக்கும் கடினமாக இருக்கலாம், ஆனால், 29 வயதான கிரிஜாவுக்கு அதுவே வாழ்க்கையாக மாறியிருக்கிறது. எலும்புகளை பாதிக்கும் ஆஸ்டியோஜெனெசிஸ் இம்பர்ஃபெக்டா (Osteogenesis Imperfecta - Stage 1) என்கிற ஒரு அரிய உடல் நிலையுடன் பிறந்திருந்தாலும், தனது மன உறுதியால் இன்று ஒரு சிறந்த கைவினைக் கலைஞராகவும் தொழில்முனைவோராகவும் மிளிர்கிறார். பெங்களூருவில் வசிக்கும் கிரிஜா, அழகிய கைவினைப் பொருட்களை தயாரித்து, Girija Magic In Little Hands எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறு தொழில் செய்து வருகிறார்.

“எட்டு வயதிலிருந்தே எனக்கு கலை ஆர்வம் தொடங்கிவிட்டது. ஆரம்பத்தில் அதற்கான பயிற்சிகளை செய்து எனக்கு தெரிந்தவற்றை தயாரித்துக் கொண்டிருந்தேன். சாதாரணமாக எனக்குள் தொடங்கிய இந்த ஆர்வத்தை மெருகேற்ற 2020ம் ஆண்டிலிருந்து முழுநேரக் கலைப் பணியாக மாற்றினேன். இப்போது எனக்குள் இருக்கும் இந்தத் திறமைக்கு என்னுடைய தாயார் நந்தாபாயே மிகப்பெரிய தூண்டுகோல்.

அவர் ஒரு சிறந்த ஓவியர் மற்றும் எம்பிராய்டரி கலைஞர். எனக்கு சிறுவயதிலிருந்தே சில அடிப்படை விஷயங்களை கற்றுக்கொடுத்தார். அதன் பின்னர் நான் முறையாக கைவினைக் கலைகளை கற்க வகுப்புகளுக்கு சென்றிருந்தாலும், என் அம்மாதான் என் முதல் ஆசிரியர் என்பதை எப்போதும் பெருமையுடன் சொல்வேன். தற்போது பலவிதமான கலைப் படைப்புகளை உருவாக்கி வருகிறேன்.

ரிப்பன் ஆர்ட் செய்ய எனக்கு மிகவும் பிடிக்கும். நூல், மணிகள் போன்றவற்றை கொண்டு பல விதமான டிசைன்களில் கைவினைக் காதணிகள் தயாரிக்கிறேன். எனக்கு குரோஷே பின்னுவதிலும் ஆர்வம் அதிகம். சிறிய பொம்மைகள் மற்றும் செல்போன் கவர் போன்றவைகளை தயாரித்து வருகிறேன். கோவா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளிலிருந்தும் ஆர்டர்கள் வருகிறது. திருமணம், கார்ப்பரேட் நிகழ்வுகளுக்கு ரிட்டன் கிஃப்ட் கொடுப்பதற்காக கைவினைப் பொருட்களை கேட்டு ஆர்டர்கள் வருகின்றன.

என் குடும்பத்தினர் மட்டுமின்றி, என் நண்பரின் குடும்பமும் எனக்கு பக்க பலம். என் நண்பர் குமார், ஒரு சைக்காலஜிஸ்ட், அவர் எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார். உமா ராம் என்கிற ப்ளாக்கர் இன்ஸ்டாகிராமில் என்னைப் பற்றிய ஒரு வீடியோ வெளியிட்டார். அதன்பிறகு நான் சமூக வலைத்தளங்களில் பிரபலமானேன்” எனும் கிரிஜா, உடல் ரீதியான சவால்களை எதிர்கொள்வதுடன், மன உறுதியுடனும் பயணிக்கிறார்.

“ஆஸ்டியோஜெனெசிஸ் இம்பர்ஃபெக்டா என்கிற பாதிப்பில் நிறைய நிலைகள் உள்ளன. இந்த பாதிப்பு கொண்ட பல மனிதர்கள் பார்ப்பதற்கு சாதாரணமாகவே இருப்பார்கள். அவர்களுக்கு 99% சதவீதம் உடல்நிலை சரியாக வாய்ப்புள்ளது. நான் முதல்நிலை என்பதால், எனக்கிருக்கும் பாதிப்பிற்கு எந்தவித சிகிச்சையும் இல்லை. நான் தும்மும் போதோ அல்லது இருமும் போதோ கூட விலா எலும்புகளில் முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது. முறிவு ஏற்பட்டால், எலும்பு சரியாக ஒன்று சேரும் வரை நான் ஒரேநிலையில் படுத்திருக்க வேண்டும். இவ்வளவு சவால்கள் இருந்தாலும், நான் என்னை ஒருபோதும் தாழ்வாகக் கருதியதில்லை.

நான் முறையான உயர் கல்வி பெறவில்லை. எனினும், எனக்கு நிறைய மொழிகளை கற்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. என் சொந்த ஆர்வத்தால் கன்னடம், தமிழ், இந்தி, தெலுங்கு

மற்றும் ஆங்கிலம் போன்ற ஐந்து மொழிகளை சரளமாக பேசக் கற்றுக் கொண்டேன். தொலைக்காட்சியில் திரைப்படங்கள், நிகழ்ச்சிகளை பார்த்தே இவற்றை கற்றேன். கார்ட்டூன்கள் பார்ப்பதும் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு சமூக அக்கறையும் உண்டு. என்னால் முடிந்த உதவியை பிறருக்குச் செய்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம். நான் செய்யும் இந்த சிறு தொழில் மூலம் கிடைக்கும் சேமிப்பில் இருந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குத் தேவையான வாகனங்கள் வாங்கிக் கொடுப்பது, கல்விக்கு உதவுவது போன்ற சமூகப் பணிகளிலும் என்னை ஈடுபடுத்தி வருகிறேன்” என்றவர் சமூகத்திற்கு ஒரு கோரிக்கை வைக்கிறார்.

‘‘ஒரு புத்தகத்தை அதன் அட்டைப் படத்தை வைத்து எடை போடாதீர்கள். இப்படித்தான் இருப்பார்கள் என்று தீர்மானம் செய்துவிடாதீர்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு பரிதாபம் தேவையில்லை, அவர்களது திறமையை வெளிப்படுத்த சரியான வாய்ப்புகள் மட்டுமே தேவை. நிறைய நிராகரிப்புகளை சந்தித்தபோதும் நான் சோர்ந்து போகவில்லை. என் திறமையை பாராட்டி சென்னையில் எனக்கு வழங்கப்பட்ட கலாம்ஸ் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் விருது உட்பட பல்வேறு விருதுகள் எனக்கு கிடைத்துள்ளன. நாலு பேருக்கு உதவி செய்யும்படி நான் உயர வேண்டும். என் பிசினஸ் வளர்ச்சியடைய வேண்டும். நான் தொடர்ந்து என் கனவுகளை நோக்கிப் பயணம் செய்கிறேன். என் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும், சவால்களை கண்டு துவண்டு போகாது என நம்புகிறேன்” என்றார் கிரிஜா.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்