Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மாடலிங் துறையில் சாதிக்கும் திருவாரூர் தேவதை!

நன்றி குங்குமம் தோழி

சிறு வயது முதல் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு காத்திருக்கும் நந்தினி, மாடலிங் துறையை சினிமா வாய்ப்புக்கான திறவுகோலாக கையிலெடுத்துள்ளார். விடாமுயற்சியின் பலனாக கிடைக்கும் மாடலிங் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு, கடந்த 8 வருடங்களாக இத்துறையில் தன் திறமையை வெளிப்படுத்தி, தன்னை நிலை நிறுத்திக்கொண்டு பிரபல பிராண்டுகளின் மாடலாக மிளிர்கிறார்.

“நான் கிராமத்திலிருந்து உருவான ஒரு மாடல்” என்று பேசத் தொடங்கினார். ‘‘திருவாரூர் மாவட்டம், ஆலத்தம்பாடி எனும் கிராமம்தான் என் சொந்த மண். எனக்கு அப்பா இல்லை. வீட்டில் நான், அம்மா, தாத்தா, பாட்டி நால்வர்தான். சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. என் கனவுக்கேற்றாற் போல குழந்தை நட்சத்திரமாக நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தபோது பல்வேறு காரணங்களால் என்னால் அதை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போனது. டிப்ளமோ படிப்பை முடித்ததும் சென்னைக்கு வந்து ஒரு நிறுவனத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக வேலையில் சேர்ந்தேன்.

புத்தக வெளியீடு, சாதனையாளர்களுக்கு விருதுகள், பட்டங்கள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும்போது மருத்துவர்கள், திரைத்துறை பிரபலங்கள், தொலைக்காட்சி பிரபலங்கள் போன்றவர்களை விருந்தினர்களாக அழைப்போம். இதனால் ஊடகம், திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களிடம் உரையாடும் வாய்ப்புகள் எனக்கு கிடைத்தன. இருப்பினும் சினிமாவில் வாய்ப்புகளை பெற அட்ஜஸ்ட்மென்ட் போன்ற சில சிக்கல்கள் என் முன் நின்றன. கனவோடு காத்திருக்கும் எனக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தாலும், அத்துடன் நான் ஸ்தம்பித்து நின்றுவிடவில்லை. சினிமாவில் சேருவதற்கான வேறு சில வழிகளை தேடியபோது மாடலிங் என் சிந்தனைக்கு எட்டியது. 2019ம் ஆண்டிலிருந்து நான் மாடலிங் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். ஒரு ப்ரொஃபஷனல் மாடலாக பணியாற்றும் வாய்ப்புகளை தேடியபோது எனக்கான ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்க வேண்டிய தேவை இருந்தது. என் திறமை மற்றும் ஆர்வத்தை வெளிப்படுத்த என் சொந்த தயாரிப்பில் நானே நடித்து இரண்டு ஆல்பம் சாங் வெளியிட்டேன்” என்றார்.

“விளம்பர போட்டோ ஷூட் செய்யும் வாய்ப்புகள் கிடைத்தன. அழகு நிலையங்கள், ஆடை நிறுவனங்களுக்கு மாடலாக அறிமுகம் ஆனேன். பிரபலமான அழகு நிலைய நிறுவனங்களின் ப்ராண்ட் மாடலாகும் வாய்ப்பும் கிடைத்தது. இவ்வாறு மாடலிங் துறையில் கிடைக்கின்ற வாய்ப்புகளை பற்றிக்கொண்டு அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருந்தேன். பல விளம்பரங்களில் நடித்துள்ளேன். என் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக பாராட்டுகளும் விருதுகளும் என்னை நோக்கி வரத்தொடங்கின. பிரபல பெண் சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் குழுவினர், ஒரு கிராமத்திலிருந்து வந்து மாடலிங் துறையில் முன்னேறிக் கொண்டும், விளம்பரங்களில் நடித்தும் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதை அங்கீகரித்து 2019ம் ஆண்டிற்கான தென்னிந்திய பெண் சாதனையாளர்கள் விருதுகளில், ‘அவுட்ஸ்டாண்டிங் ஆர்ட்டிஸ்ட்’ அவார்டு வழங்கினர். 2020ல் தேசிய அளவிலான பெண் சாதனையாளர் விருதுகளில், ‘சிறந்த கலைஞருக்கான’ விருது கிடைத்தது. 2021ல் சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் எனக்கு ‘கவுரவ முனைவர் பட்டம்’ வழங்கி சிறப்பித்தது. 2022ல் ‘இளம் சாதனையாளர்’ விருது கிடைத்தது.

மாடலிங் செய்வதற்கு அப்பாற்பட்டு நான் சில சமூகப் பணிகளையும் செய்து வருகிறேன். இதற்காக தொண்டு நிறுவனம் எதுவும் தொடங்கவில்லை. என் சொந்த உழைப்பில் கிடைத்த பணத்திலேயே இந்த உதவிகளை செய்து வருகிறேன். பொருளாதார பின்னடைவு காரணமாக கல்வியினை தொடர முடியாத நிலையில் உள்ள மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்தி உதவுகிறேன். இதற்கான அங்கீகாரமாக 2022ல் ‘எக்செலன்ஸ் இன் மாடலிங் அண்ட் சோசியல் சர்வீசஸ்’ விருது வழங்கினார்கள். 2023ல் ‘சிறந்த கலைஞர்’ மற்றும் ‘பெஸ்ட் ஃபேஷன் ஐகானிக் மாடல்’ போன்ற விருதுகளும் எனக்கு கிடைத்தன. 2024ல் பிரபல பியூட்டி அவார்ட்ஸ் நிகழ்வில் ‘வளர்ந்துவரும் கலைஞருக்கான’ விருது வழங்கப்பட்டது. இதுவரையில் எனக்கு கிடைத்த விருதுகளும் பாராட்டுகளும், மேலும் பல உயரங்களை அடைய வேண்டும் என்கிற உத்வேகத்தை அளிக்கின்றன” என்றார்.

சிறிய கிராமத்திலிருந்து வந்து மாடலிங் துறையில் வளர்ந்துவரும் நந்தினி, பல தடைகளை உடைத்தெறிந்து இத்துறைக்கு வந்ததை குறிப்பிடுகிறார்.

“அப்பா இல்லாததால், சிறுவயதில் அம்மாவும் நானும் மிகவும் சிரமப்பட்டோம். தாத்தா, பாட்டி எங்களுக்கு ஆதரவாக இருந்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் கோவிட் காலத்தில் உயிரிழந்தனர். கஜா புயலின் தாக்கத்தால் எங்களது வீடும் சேதமானது. இதுபோன்ற சூழ்நிலைகளால் பல மடங்கு உழைத்தேன். எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதாரத்தில் முன்னேறி வந்தேன். தனி ஆளாக நின்று வீடு கட்டியிருக்கிறேன். என்னுடைய முதல் மாடல் ஷூட்டின் போது ஸ்கூல் படிக்கும் பெண்ணை எதற்கு மாடலாக அழைக்கிறீர்கள் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், நான் மேக்-அப் செய்து போட்டோ ஷூட் எல்லாம் முடிந்த பிறகு ரிசல்ட் பார்த்து, நன்றாக வந்திருக்கிறது என்றனர். நான் சினிமாவில் ஆர்வம் காட்டுவதற்கு என் கிராமத்தினரே எதிராக இருந்தனர். இது போன்ற காரணங்களினாலே திரைப்படத்தில் பங்குபெறும் சிறிய வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். எனவே என் கிராம மக்கள் மத்தியிலேயே நான் சாதித்து நிற்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் இப்போதும் சென்னையிலேயே செட்டில் ஆகிவிடாமல், என் சொந்தக் கிராமத்தில் இருந்தபடியே வாய்ப்புகளை தேடி பெறுகிறேன்.

நல்லபடியாக மாடலிங் செய்து கொண்டிருந்தாலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் மிகப்பெரிய கனவு. மேலும், என்னை போன்று எளிமையான பின்னணியிலிருந்து வந்து வாய்ப்புக்காக காத்திருக்கும் கலைஞர்களை வைத்து நானே படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. மாடலிங் பயிற்சி செய்பவர்கள் மிகவும் எளிதாக யாரையும் நம்பிவிடக்கூடாது. சில எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால் வாய்ப்புகள் கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆரம்பத்தில் சினிமாவில்தான் இந்த பிரச்னைகள் இருந்தன. இப்போது மாடலிங் துறையிலும் இதுபோன்ற பிரச்னைகளை சந்திக்கிறார்கள். எனவே புதிதாக இத்துறைக்கு வருகிறவர்கள் தங்கள் திறமையை வலுவாக்கிக் கொண்டு, தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், உங்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆரம்ப காலத்தில் என் தோழி உமா என்பவர்தான் என்னை ஊக்கப்படுத்தி ஆதரவளித்தார். நம் கனவு வலுவாக இருந்தால் நம்மை ஆதரிக்கும் மனிதர்கள் நமக்கென அமைவார்கள்” என்று ஆலோசனைகள் சொன்னபடி பேசி முடித்தார்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்