Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

அந்த பத்து நாட்கள் நரகமாக இருந்தது!

நன்றி குங்குமம் தோழி

‘‘நான் கிராமத்துப் பொண்ணு. சின்ன சேலம் பக்கத்தில் வாசுதேவனூர் என்ற கிராமத்தில்தான் வளர்ந்தேன். அங்கதான் படிச்சேன். கல்லூரி பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஏதாவது வேலைக்கு போக வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது. அதே சமயம் பகுதி நேரமாக ஏதாவது வேலைக்குச் செல்லலாம்னு நினைச்சேன். எங்க கிராமத்தில் ப்ரவுசிங் சென்டர் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். பட்டப்படிப்பு முடித்தவுடன் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை கிடைத்தது.

அங்கு ஒரு வருடம் வேலை செய்தேன். இதற்கிடையில் எங்க வீட்டில் எனக்கு திருமணம் பேசி முடிச்சாங்க. என் கணவர் சென்னையில் வசிப்பதால், திருமணத்திற்குப் பிறகு சென்னைக்கு மாற்றலாகி வந்துவிட்டேன்’’ என்று பேச ஆரம்பித்தார் குறிஞ்சிமலர்.சாதாரண குடும்பத்துப் பெண்ணான இவர் தற்போது டென்டர் கட்ஸ் என்ற இறைச்சி கடையில் ஸ்டோர் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். முதலில் கஸ்டமர் கேரில் வேலைக்கு சேர்ந்தவர் ஐந்து வருடங்களில் படிப்படியாக முன்னேறி ஸ்டோர் மேனேஜராக உயர்ந்துள்ளார்.

‘‘சென்னைக்கு வந்தவுடன் குடும்பம், குழந்தைன்னு என்னால் வேறு வேலையில் ஈடுபட முடியாமல் போனது. வாழ்க்கையும் சந்தோஷமாகத்தான் நகர்ந்தது. என்னதான் என் கணவர் எனக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்தாலும் அவருக்காக நான் பினான்ஷியலா என்னால் முடிந்த உதவியினை செய்ய விரும்பினேன். சிறிய அளிவில் கடை ஒன்றை ஆரம்பிச்சு அதை நிர்வகிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது’’ என்றவர், நகர வாழ்க்கையினை எதிர்கொள்ள கொஞ்சம் சிரமப்பட்டுள்ளார்.

‘‘நான் பிறந்து, வளர்ந்து, படிச்சது எல்லாம் கிராமத்தில். திருமணமான பிறகு தான் நான் சென்னைக்கு வந்தேன். என் கணவர் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வந்தார். வீட்டில் இருந்தபடியே ஏதாவது தொழில் செய்யலாம்னு நினைச்சேன். ஆனால், எனக்கு நகர வாழ்க்கை ரொம்பவே புதுசா இருந்தது. அதற்கு அடாப்டாக ஆரம்பகட்டத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டேன். அதனால் மற்றவர்களிடம் பேசவும் எனக்கு தயக்கமாக இருந்தது. அதனால் என் கணவர் நீ ஏற்கனவே டீச்சர் வேலை பார்த்து இருப்பதால், அதே துறையில் போகலாம்னு சொன்னார்.

ஆனா, எனக்கு சொந்தமா சிறிய அளவில் மளிகை கடை போல அமைக்கணும்னு விருப்பமாக இருந்தது. அதற்கான அனுபவம் கிடைக்க வேண்டும்னு நினைச்சேன். சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். முதலில் பில்லிங்தான் செய்து வந்தேன். அதன் பிறகு அங்குள்ள அனைத்து வேலைகளையும் செய்ய கற்றுக் கொண்டேன். இதற்கிடையில் நான் இரண்டாவது முறை கருவுற்றேன். அந்த சமயம் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஊரடங்கு ஏற்பட்டதால், என் கணவரின் பிசினஸும் கொஞ்சம் டல்லானது. நான் ஆசிரியராக வேலை பார்த்து வந்திருந்தா கூட ஆன்லைனில் கிளாஸ் எடுப்பது என்று ஒரு பேக்கப் இருந்திருக்கும். இரண்டு குழந்தைகள், வீட்டையும் கவனிக்கணும்... எப்படி சமாளிப்பதுன்னு புரியல’’ என்றவர், இறைச்சி கடையில் வேலைக்கு சேர்ந்தது பற்றி விவரித்தார்.

‘‘வீட்டுச் சூழல் காரணமாக நான் கட்டாயமாக வேலைக்கு போக வேண்டும் என்று முடிவு செய்தேன். பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை. அந்த சமயத்தில்தான் டென்டர் கட்ஸ் என்ற இறைச்சி நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக கேள்விப்பட்டு நேர்காணலுக்கு சென்றேன். அங்கு கஸ்டமர் சர்வீஸ் துறையில் வேலைக்கு சேர்ந்தேன். இங்கு என்னுடைய வேலை கஸ்டமர்களின் தேவை என்னவோ அதற்கு ஏற்ப இறைச்சியினை வழங்க வேண்டும்.

அதாவது, கஸ்டமர் அவங்களுக்கு சிக்கன் எப்படி வேண்டும்னு சொல்வாங்க. சிலர் எலும்பு இல்லாமல் கேட்பாங்க, சிலர் சிக்கன் லெக்பீஸ் மட்டும் வேணும்னு சொல்வாங்க. அவங்க என்ன கேட்கிறாங்களோ அதற்கேற்ப நாம சிக்கனை சரியான முறையில் ரெடி செய்து பேக்கிங் செய்து கொடுக்கணும். சிக்கன் மட்டுமில்லை, மீன் மற்றும் ஆட்டிறைச்சி என அனைத்தும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தர வேண்டும். முக்கியமாக தரத்தில் குறைவு இருக்கக் கூடாது.

ஆசிரியராக வேலை பார்த்து இருந்தாலும், இப்போது நான் இந்த வேலையில் இருக்கிறேன். அதற்கேற்ப நான் என்னை அடாப்ட் செய்து கொண்டேன். இறைச்சி கடை என்று முகம் சுளிக்காமல், வேலையில் முழு கவனம் செலுத்தினேன். பெரும்பாலும் ஆர்டர் ஆன்லைனில்தான் வரும். வாடிக்கையாளர்கள் அதில் எவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறார்களோ அதற்கு ஏற்பதான் டெலிவரி செய்வோம்’’ என்றவர் இந்த வேலையினால் தன்னுடைய பிரச்னைகளை சமாளிக்க முடிவதாக கூறினார்.

‘‘இறைச்சி கடையில் வேலை பார்க்கிறேன் என்ற மனக்கசப்பு எல்லாம் எனக்கு இல்லை. காரணம், என் கணவருக்கு வருமானம் குறைந்த போது, ஏதாவது வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் நான் இருந்தேன். வேலைக்காக தேடி அலைந்தேன். அந்த பத்து நாட்கள் எனக்கு நரகமாகத்தான் இருந்தது. இப்ப மாசம் ஒரு வருமானம் கிடைக்குது. என்னுடைய பிரச்னைகளை சமாளிக்க முடிகிறது. இங்கு வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்களாகிறது. ஆரம்பத்தில் கஸ்டமர் சர்வீசில்தான் இருந்தேன். இப்போது டிரெயினிங் ஸ்டோர் மேனேஜராக உயர்ந்து இருக்கிறேன். எதுவுமே தெரியாம நான் சென்னைக்கு வந்தேன். கஸ்டமர்களிடம் பேசவே பயப்படுவேன்.

என் சீனியர் மேனேஜர்கள் எல்லோரும் எனக்கு தைரியம் கொடுத்தாங்க. ‘எதையும் பொறுமையா செய்யு’ன்னு ஊக்குவித்தாங்க. படிப்படியாக ஒவ்வொரு விஷயமும் கற்றுக் கொண்டேன். இப்போது எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளும் அளவிற்கு வளர்ந்திருக்கிறேன்’’ என்றார் குறிஞ்சிமலர்.

தொகுப்பு: பி.கே