Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உலகிலேயே முதல் முதலாக தயாரிக்கப்பட்ட AI சுயசரிதை!

நன்றி குங்குமம் தோழி

‘தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்’ என்பதைப் போல இன்று எங்கு திரும்பினாலும் AIதான். Artificial Intelligence எனும் செயற்கை நுண்ணறிவு அதிரடியாக களம் இறங்கி, நம் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த தொழில்நுட்பம் திடீரென முளைத்த விஷயமாக தோன்றலாம். ஆனால், ஹிட்லர் இரண்டாம் உலகப் போரில் ஏஐ தொழில்நுட்பத்தினை பயன்படுத்தியுள்ளார். மருத்துவம், கல்வி, ராணுவம், விவசாயம் என அனைத்து துறைகளிலும் இது தன் ஆதிக்கத்தினை செலுத்த ஆரம்பித்துவிட்டது. குழந்தைகளும் பெரியோர்களும் தங்கள் புகைப்படத்தை வைத்து மாயாஜாலம் செய்து மகிழ்வதும், வீடியோவாக்கிக் கொண்டாடுவதும் வெகு இயல்பாக நடந்து வருகிறது.

இப்படி பலரும் பலவிதமாக AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது, சென்னையை சேர்ந்த காம்கேர் புவனேஸ்வரி, முழுக்க முழுக்க AI தொழில்நுட்பத்தில் தன் தந்தையின் சுயசரிதையைஆவணப்படமாக தயாரித்துள்ளார். இந்த ஆட்டோ பயோகிராஃபி படம்தான் உலகிலேயே முதல் Artificial Intelligence தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டது என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

‘விகே (எ) விக்டரி கிங்’ என்ற தலைப்பில் மூன்று சீசன்களாக இயக்கி உள்ளார். கம்ப்யூட்டரில் முதுகலைப் பட்டம் மற்றும் எம்.பி.ஏ பட்டம் பெற்றவர்.‘‘ஒவ்வொரு சீசனிலும் 7 பகுதிகள் என நான் என் அப்பாவின் சுயசரிதையை வெளியிட்டு இருக்கிறேன். முதல் சீசனில், அப்பாவின் பிறப்பு முதல் திருமணம் வரை. இரண்டாம் சீசன், அவர்களின் பிள்ளைகள். கடைசி சீசனில் இவர் களைப் பற்றி குழந்தைகள் பேசுவது என அமைத்திருக்கிறேன். ஒவ்வொரு பகுதியும் 20 நிமிடங்கள் என ஏழு மணி நேர ஆவணப்படம். 1992ல் காம்கேர் சாஃப்ட்வேர் என்ற ஐ.டி நிறுவனத்தைத் தொடங்கி நிர்வகித்து வருகிறேன்.

கம்ப்யூட்டர், இணையம், ஏஐ என அனைத்து தொழில்நுட்பத்தின் சாத்தியக்கூறுகளை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் என் நிறுவனம் மூலம் கொண்டு சென்றிருக்கிறேன். இப்போதுதான் எல்லோரும் AI பக்கம் செல்கிறார்கள். நான் என் நிறுவனம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே அதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். 1996ல் சாதாரண டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் யானை நடந்து வருவது போல் அனிமேஷன் செய்திருக்கிறோம்.

2002ல் ஒருவரின் குரலை க்ேளான் செய்து புத்தகங்களை அவரின் குரலிலேயே படிப்பது போல அமைத்திருக்கிறோம் 2005ல் கண் பார்வைத்திறன் குறைபாடுள்ளவர்கள் ஸ்க்ரைபர்ஸ் உதவியுடன் தேர்வு எழுதாமல், வாயால் சொல்லச் சொல்ல கம்ப்யூட்டர் திரையில் பதில்கள் தானாகவே வெளியாகும் சாஃப்ட்வேர்களை வெளியிட்டோம். இவை அனைத்துமே AI தொழில்நுட்பத்தினால் இயங்கக்கூடியதுதான். ஏ.ஐ என்பது ஒரு சிறப்பு சாஃப்ட்வேர். சாதாரண சாஃப்ட்வேர்கள் நாம் சொல்லும் கட்டளைகளை மட்டுமே செய்யும். ஏ.ஐ அதனை மேம்படுத்தி துல்லியமாக செயல்படுத்திக் கொடுக்கும்’’ என்றவருக்கு தன் பெற்றோரின் சுயசரிதை தயாரிக்கும் எண்ணம் ஏற்பட்டது குறித்து விவரித்தார்.

‘‘பொதுமக்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மட்டுமே செய்வார்கள். நாங்க ஆய்வு செய்து அதனை கண்டுபிடிப்போம். ஒரு விஷயத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதுதான் எங்களின் வேலையே. அதன் மூலம் ஒரு அழகிய படைப்பினை தயாரித்து மக்களுக்கு அறிமுகப்படுத்த நினைத்தேன். அப்படித்தான் என் பெற்ேறாரின் சுயசரிதை உருவானது. மேலும், இதனை என் பெற்றோரின் சதாபிஷேகத்திற்கு பரிசாக கொடுக்க நானும் என் உடன் பிறந்தவர்களும் விரும்பினோம்.

‘விகே (எ) விக்டரி கிங்’... என் அப்பாவின் பெயர் வி. கிருஷ்ணமூர்த்தி. அவரை எல்லோரும் வி.கே என்று அழைப்பார்கள். அவர் ‘விக்டரி கிங்’ என்ற புனைப்பெயரில் வாழ்வியல் பதிவுகளை பகிர்ந்து வருகிறார். அதையே சுயசரிதைக்கு தலைப்பாக வைத்தேன்’’ என்றவர் இந்தப் படத்தை உருவாக்கிய வழிமுறைகளை விவரித்தார்.‘‘இந்தப் படம் என் அப்பாவும், அம்மாவும் சந்தித்த காலத்தில் இருந்து துவங்குகிறது. 1966 காலக்கட்டம் என்பதால், இருவரின் இளம் வயது பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மட்டுமே இருந்தது.

அதைக்ெகாண்டு அவர்களை உருவாக்கினேன். அவர்களின் உறவினர்களின் இன்றைய புகைப்படங்கள் கொண்டு அவர்கள் இளம் வயதில் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்ற அனுமானத்தில் ஒவ்வொருவருக்கும் உருவம் கொடுத்து உயிர்ப்பித்தேன். அதன் பிறகு ஒவ்வொருவருக்கும் குரல் உருவாக்கினேன். அவர்களின் வேலை, சிறப்பியல்புகளை தொகுத்து ஸ்கிரிப்ட் எழுதினேன். அதற்கு என் பெற்றோர் மிகவும் உதவினார்கள். அவர்களின் வாழ்க்கையை கதை போல சொல்ல, நான் அதற்கேற்ற காட்சிகளை திரையில் அமைத்தேன். அதன் பிறகு திரைக்கு ஏற்ப பாடல் காட்சியினையும் அமைத்தேன். பார்க்க ஏஐ போலவே இல்லாமல் இயல்பாக நம்மை வியக்க வைக்கும் அளவுக்கு உருவமும், நடை உடை பாவனையும், வசன உச்சரிப்பும் அமைத்தேன்.

ஒவ்வொரு அசைவுக்கும் பிராம்ப்ட் கொடுக்க வேண்டும். சில நேரங்களில் நாம் கொடுக்கும் பிராம்ப்ட் ஒத்துழைக்காது. அப்போது பைத்தான் மொழியில் புரோகிராம் எழுதி இயக்கினேன். அதுபோல என் பாட்டி, அம்மா, அத்தைகளுக்கு மடிசார் கட்ட ஏஐக்கு தெரியவில்லை. காரணம், ஏஐ ஒரு சாஃப்ட்வேர். நாம் கொடுக்கும் தகவல்கள் மற்றும் கேள்விகளுக்கு பதில் சொல்லும். அதேபோல் பிராம்ப்ட்டுகளுக்கு ஏற்ப படம் வரையும், வீடியோ உருவாக்கும். மடிசார் கட்டுவதற்கான தகவல் அதற்குள் இல்லை. ஏஐ பொறுத்தவரை எந்த அளவுக்கு விரிவாக, விளக்கமாக, உரையாடி தகவல்களை வெவ்வேறு கோணத்தில் பதிவு செய்கிறோமோ அதற்கேற்ப தெளிவான பதிலை தரும்.

முன்பெல்லாம் குழந்தைகள் படத்தை வரையச் சொன்னால் அது மேற்கத்திய குழந்தைகளையே வரைந்து தரும். ஏனெனில் குழந்தைகள் என்றாலே மேற்கத்திய குழந்தைகளின் முகபாவனைகள் மட்டுமே அதனுள் பதிவாகி இருந்தன. இன்று நாமும் ஏஐ அதிகமாக பயன்படுத்தத் தொடங்கி விட்டதால், நாம் கொடுக்கும் தகவல்களை சேகரித்து வைத்துக் கொண்டு நமக்கான தகவல்களை கொடுக்கிறது. ஏஐ நாம் கொடுக்கும் அனைத்து உள்ளீடுகள் மற்றும் தகவல்களையும் சேகரித்து வைத்துக் கொள்ளும்.

எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து நாம் கேட்கும் தகவல்களை தரும். நாம் தொடர்ச்சியாக பயன்படுத்த ஆரம்பித்தால், நாம் என்ன நினைக்கிறோம் என்பதை புரிந்துகொண்டு மனிதர்களை போலவே நம்முடன் நட்பாகி நாம் நினைத்ததை செய்து கொடுக்கும். ஆனால், அதே சமயம் நாம் ஒன்று சொன்னால் அது வேறு ஒன்றை தரும். மேலும் மேலும் அழுத்தம் கொடுத்தால், குழந்தை போல ‘எனக்கு ஓய்வு வேண்டும். பின்னர் முயற்சிக்கவும்’ என்று சொல்லிவிடும். இடைவெளிவிட்டு மீண்டும் அதே பிராம்ப்ட்டிங் கொடுத்தால், அழகாக நாம் கேட்பதைக் கொடுக்கும்.

மேலோட்டமாக பார்த்தால் ஏஐ மூலம் ஒரு விஷயத்தை உருவாக்குவது சுலபம் போல் தோன்றலாம். பொழுதுபோக்கிற்காக ஏஐ-ஐ பயன்படுத்தும் போது கிடைக்கும் படமோ, வீடியோவோ அந்த நேரத்துக்கு அற்புதமாக தோன்றலாம். ஆனால், பணியாக செய்யும் போது நாம் திறமைசாலியாக இருந்தால் மட்டுமே நாம் நினைக்கும் விஷயத்தை அதனிடம் இருந்து பெற முடியும். எப்படி சொன்னால் அதற்கு புரியுமோ அப்படிப்பட்ட தகவல்களை கொடுக்க வேண்டும். தமிழ் பிராம்ப்ட்டிங் சரியாக புரிந்துகொள்ள முடியாத போது, ஆங்கிலத்தில் புரிய வைக்க வேண்டும். மொத்தத்தில் நமக்கு என்ன தேவை என்பதில் நாம் முதலில் தெளிவாக இருக்க வேண்டும். நாம் எந்த துறைக்காக ஏஐ-ஐ பயன்படுத்தப் போகிறோமோ அந்தத் துறை சார்ந்த அனுபவமும், ஞானமும் இருந்தால் ஏஐ-ஐ நம்மால் திறமையாக கையாள முடியும்.

ஏஐ அறிமுகமான போது வேலை வாய்ப்புகளை குறைத்துவிடும் என பயந்தார்கள். கம்ப்யூட்டர்கள் வந்த பிறகுதான் சாஃப்ட்வேர் துறை செழித்து ஓங்கி வளர்ந்தது. அதே போல் ஏ.ஐ வருகையால் வேலை வாய்ப்புகள் குறையாது. இப்போது பயன்படுத்தும் சாஃப்ட்வேர்களில் ஏஐ தொழில்நுட்பம் புகுத்தப்படும். மற்ற பணிகளிலும் ஏஐ தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும். இதனால் நாம் செய்து கொண்டிருக்கும் பணிகள் சுலபமாகுமே தவிர, வேலை வாய்ப்புகள் குறையாது. ஏ.ஐ வேறு மாதிரியான புது வேலை வாய்ப்புகளை உருவாக்கும். அதற்கு அந்தந்த துறை சார்ந்தவர்கள் ஏ.ஐ தொழில்நுட்பத்துக்கு தங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்’’ என்றார் காம்கேர் புவனேஸ்வரி.