Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

உழைக்கும் வர்க்கத்தின் உண்மையான அழகு

நன்றி குங்குமம் தோழி

உழைக்கத் துடிக்கும் கரங்களுக்கு வெறும் அனுதாபத்தை மட்டுமே கொடுக்காமல், சரியான ஆயுதங்களைக் கொடுத்தால் அவர்கள் வாழ்க்கை எவ்வளவு அழகாய் மாறும் என்பதற்கு கிக் வொர்க்கர் (GiG worker) சுதாமணி வாழ்க்கை சிறந்த உதாரணம். சுதாமணி எனும் டெலிவரி செய்கிற பெண்ணின் உண்மைக் கதை இது.

நள்ளிரவை நெருங்கும் நேரம். மணி 11 தாண்ட, பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை முன்னெடுக்கும் ‘வுமன் லீக் ஃபவுண்டேஷன்’ என்கிற தன்னார்வ நிறுவனத்தின் நிறுவனர் திவ்யா ஸ்வப்னா ராஜ், தன் வீட்டு பால்கனியில் நின்றபடி நிலவை ரசிக்க, வெளியே ரோடு நிசப்தமாய் இருக்கிறது. அப்போது இருட்டைக் கிழித்துக் கொண்டு, பழைய சைக்கிள் சத்தம் ‘கிரீச்... கிரீச்...’ எனக் கேட்க, திவ்யா சத்தம் வரும் திசை நோக்கி உற்றுப் பார்க்கிறார்... 47 வயது பெண்மணி ஒருவர், வியர்வை சிந்த பெரிய பார்சலை சுமந்து கொண்டு, அந்த நள்ளிரவில் சைக்கிளை மிதித்தபடி திவ்யா வசிக்கும் குடியிருப்பை நோக்கி வருகிறார்.

நடுத்தர வயது பெண்மணி ஒருவரை, அந்த நேரத்தில் கிக் வொர்க்கராகப் பார்ப்பது சாதாரணக் காட்சியே இல்லை. நம்மை அறியாமலே நமக்குள் பல கேள்விகளையும்... ஒருவிதமான குற்ற உணர்ச்சியையும் எழுப்புகிற தருணம் அது என்கிறார் திவ்யா நம்மிடத்தில் மிகவும் நிதானமாக.கிக் வொர்க்கர் சுதாமணிக்கு இரண்டு மகள்கள். ஒரு பெண் கல்லூரியில் நான்காம் வருடமும், இன்னொரு பெண் இரண்டாம் வருடமும் படிக்கிறார்கள். தனது கணவர் சரியில்லாத நிலையில், குடும்பத்தின் வாழ்வாதாரம் மற்றும் தன் இரண்டு பெண்களின் படிப்பு செலவுக்காக, வாரத்தின் ஏழு நாட்களும், ஒரு நாள்கூட விடுமுறை இன்றி, இரவு 11 மணி வரை தனது பழைய சைக்கிளில் டெலிவரி வேலை செய்கிறார் இவர்.

கிக் வொர்க்கர்ஸ் வேலை என்பது எவ்வளவு டெலிவரி செய்கிறோமோ அவ்வளவுக்கு காசு. சென்னை மாதிரியான பெரு நகரத்தில், டூ வீலர் இல்லாமல், சைக்கிளில் சென்று, ஒரு பெண் வருமானம் ஈட்டுவது இன்றைய டிராபிக் சூழலில், மிகப்பெரிய சுமையை முதுகில் சுமந்து மாரத்தான் ஓடுவதற்கு சமம். உடம்புதான் இதில் முதல் மூலதனம். கிக்(GiG) எகானமி வேகமாக வளருதுன்னு நாம நினைச்சிட்டு இருக்கோம். ஆனால், அதன் நிஜ முகம் இப்படியாகத்தான் இருக்கிறது என்கிற திவ்யா, கிக் எகானமியின் அல்காரிதம் எப்படி வேலை செய்கிறது என்பதையும் முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்.

ஸ்விக்கி, ஜொமேட்டோ, அமேசான் மாதிரியான நிறுவனங்களின் செயலிகள்(app) நேரத்தை அடிப்படையாய் கொண்டு வடிவமைக்கப்பட்டவை. அதாவது, டைம் இஸ் மணி கோட்பாடு. ஒருத்தருக்கு டூ வீலர் இருந்தால், அவரால் ஒரு மணி நேரத்தில், நான்கு டெலிவரி கூட செய்ய முடியும். பணத்தை சம்பாதிக்க முடியும். ஆனால், சுதாமணி மாதிரி, சைக்கிளில் சென்று டெலிவரி செய்கிற பெண்களுக்கு, இந்த செயலிகள் அதிக தூரம் செல்கிற, அதிக வருமானம் தரக்கூடிய ஆர்டர்களைக் கொடுப்பதில்லை.

காரணம், இந்த செயலிகளின் அல்காரிதம் ரொம்பவே ஸ்மார்ட். சைக்கிள் வைத்திருப்பவர்கள் மெதுவாகத்தான் போவார்கள் என்று அந்த சிஸ்டம்க்கு தெரியும் என்பதால், பக்கத்தில் இருக்கிற குறைவான வருமானம் தருகிற ஆர்டர்களை மட்டுமே கொடுப்பார்கள். டூ வீலர் வைத்திருப்பவர் 6 மணி நேரத்தில் சம்பாதிக்கும் பணத்தை, சுதாமணி 14 மணி நேரமும் சைக்கிளை மிதித்தால் மட்டுமே சம்பாதிக்க முடியும். இது அவரின் வறுமையில இருந்து வெளியே வரவே முடியாத சூழல். சுருக்கமாய் Poverty drop.

உடனே நமக்கு தோணும். சுதாமணி வங்கி லோன் போட்டு இ.எம்.ஐ மூலமாக செகண்ட் ஹேண்ட் வண்டிய வாங்கிடலாமே என! இதுதான் அவரின் வறுமை சூழலோட மிகப்பெரிய சிக்கலே. சுதாமணி மாதிரியான அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு, முறையான சம்பள ரசீது கிடையாது என்பதால், வங்கியில் லோன் பெற நிலையான வருமானத்தை இவர்களால் காட்ட முடியாது. வங்கிகளின் கண்களுக்கு சுதாமணி போன்ற உழைப்பாளர்களின் உழைப்பு சுத்தமாய் தெரியாது. இந்த மாதிரியான சூழலில் மாட்டி, வாரத்தின் ஏழு நாளும் தன் உடம்பை உருக்கி, இரவு பகல் பாராமல் உழைக்கிறார் இவர்.

திவ்யா ஸ்வப்னா, சுதாமணியின் ரெகுலர் கஸ்டமர் என்பதால், இரவு 11 மணிக்கு பார்சலைக் கொடுக்க வந்த சுதாமணியின் வியர்வையையும், கஷ்டத்தையும் பார்த்து மனம் பதறுகிறது. சுதாமணியை வைத்து ஒரு சின்ன வீடியோ எடுத்து, “இவருக்கு டூ வீலர் வாங்கி கொடுக்க உதவலாமா?” என தன் நண்பர்களிடம் கேட்டு, தனது வாட்ஸப் குழுவில் பதிவேற்றுகிறார் திவ்யா.

இதற்குப் பிறகு நடந்த விஷயம்தான் இதில் முக்கியமானது என்றவர், என் வீடியோ பார்த்து நண்பர்கள் பலரும், சுதாமணிக்கு 1000, 2000 என பணமாக உதவி செய்ய முன்வர, என் நண்பர் ஒருவரோ எனக்கு போன் செய்து, டெமனோஸ்(Temenos) நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். திட்டம், சுதாமணி போல் கஷ்டப்படும் கிக் வொர்க்கர்ஸ்க்கு இருசக்கர வாகனம் கொடுப்பதை தெரிவித்து, அதன் வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறார்.

இந்நிறுவனத்தின் ஒருசில முறையான நடைமுறைகளுக்குப் பிறகு புதிய இருசக்கர வாகனம், ஹெல்மெட், வண்டிக்கான ஆவணங்கள், முறையான பராமரிப்பு உத்தரவாதம் என எல்லாமே பேக்கேஜாக சுதாமணிக்கு கிடைத்துவிடுகிறது. சுதாமணிக்கு கிடைத்தது பொருள் உதவி கிடையாது. இது அவருக்கு கிடைத்த எம்பவர்மென்ட். அதாவது, அதிகாரம் அளித்தல். இது சுதாமணியின் தன்னம்பிக்கை உயர்த்துகிற முக்கியமான செயல்.வண்டியை பெற்றுக்கொண்ட சுதாமணி நெகிழ்ந்து போய் குறிப்பிட்ட அந்தக் காணொளியில் சில வார்த்தைகளைச் சொல்கிறார். அதாவது, “என்னைப்போல கஷ்டப்படுகிற பலருக்கும் டெமனோஸ் நிறுவனம் இதுபோல வண்டி கொடுத்து உதவி செய்யணும்” என்கிற ஆசையை வெளிப்படுத்துகிறார். தனக்கு கிடைச்ச வெளிச்சம், சைக்கிளை மிதிச்சிட்டு இருக்கற அத்தனை பேருக்கும் கிடைக்கணும் என நினைப்பதே உழைக்கும் வர்க்கத்தின் உண்மையான அழகு.

இத்தனை ஆண்டுகளும் சைக்கிளை மிதித்து மிதித்து தேய்ந்த சுதாமணி இன்று மோட்டார் வாகனத்தில் அமர்ந்து விரைவாக சாலைகளை கடக்கிறார். அவரின் வேகமும் பல மடங்கு கூடியிருக்கிறது. ஒரு டூவீலர் ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தையே ராக்கெட் வேகத்தில் மாற்றியிருக்கு என்கிற திவ்யா, சுதாமணியின் முகத்தில் மிகப்பெரிய சந்தோஷம் நிறைவாய் இருப்பதையும் குறிப்பிடுகிறார்.

ஒருவரின் பொருளாதாரத்தை, அவரின் தொழிலுக்கான கருவி, ஒரே இரவில் எப்படியாக மாற்றும் என்பதற்கு சிறந்த உதாரணம் சுதாமணி வாழ்க்கை. “எனக்கு வண்டி கிடைச்சிருச்சு. நான் அமேசான் மாதிரியான பிற டெலிவரி நிறுவனங்களிலும் சேர்ந்து வேலை செய்யப் போகிறேன். என் வருமானம் இனி இரட்டிப்பாகும்” என நம்பிக்கையோடு விரல் உயர்த்துகிறார். இதுதான் சுதாமணி வாழ்க்கையில் கேம் சேஞ்சர்.

ஒரு சாதாரண WhatsApp பகிர்தல்... ஒரு சரியான வழிகாட்டுதல்... ஒரு குடும்பத்தின் தலையெழுத்தையே இன்று மாற்றியிருக்கிறது. இத்தனை ஆண்டுகளும், ஒரு பழைய சைக்கிளில், ஒரு குறிப்பிட்ட செயலியில் மட்டும், அதுவும் குறிப்பிட்ட ஏரியாவுக்குள் மட்டுமே அவரால் வேலை பார்க்க முடிந்தது. இனி காலையில் அமேசான் டெலிவரி, மதியம் ஸ்விக்கி, மாலை சொமேட்டோ என பல தளங்களில் ஒரே நேரத்தில் அவரால் வேலை பார்க்க முடியும்.

ஒரு வேலை போனாலும், இன்னொரு வேலையை தேடிக்கொள்ள முடியும். இது அவர் வருமானத்தை சில நேரம் மூன்று மடங்குகூட உயர்த்தலாம்.நம்மைச் சுற்றி தினமும் ரோட்டில், சிக்னலில் அல்லது நம் வீட்டுக்கு டெலிவரி கொண்டு வரும் நபர்களில் எத்தனையோ சுதாமணிகள் இருக்கலாம். அவர்கள் எல்லோர் முகத்திலும் அவர்களின் வலியோ, கதையோ எழுதப்பட்டிருக்காது. ஆனால், திவ்யா ஸ்வப்னா ராஜ் மாதிரி நாம் செய்கிற சின்ன வழிகாட்டல் அல்லது நாம் பதிவேற்றும் ஒரு சின்னத் தகவல், அவர்களின் வாழ்க்கையை வெளிச்சத்துக்கு கொண்டு வரலாம்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்