ரௌத்திரம் பழகும் ராணி!
நன்றி குங்குமம் தோழி
“ரத்தமும், சதையும், எலும்பும், நரம்பும் சேந்ததுதானே நீ நானும்...
ஒனக்கும் எனக்கும் ஒன்னாத்தான தலையும் ஒடம்பும் கை காலும்...
தலை முதல் கால் வர சதை தான்னா, என்
கழுத்துக்கு கீழ மட்டும் தனி கணக்கா?
தவியா தவிச்சு வரங்கெடந்து, நா தனியா கேட்டு வாங்கலையே...
எனும் இந்த ரௌத்திரம் பொங்கும் வரிகள் ‘ராணி’ என்கிற காணொளி பாடலில் இடம்பெறுகின்றன. சிறு வயதிலேயே பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு பெண் பால் சார்ந்த அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் விதமாக இந்த காணொளி பாடலினை எழுதி இயக்கியுள்ளார் அனு சஷ்டி.
யூடியூப் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் இந்தப் பாடல் ஒவ்வொரு பெண்ணும் தங்கள் சிறு வயதின் கசப்பான அனுபவங்களுடன் தொடர்புபடுத்தி பார்க்கும்படியே அமைந்துள்ளது. “சிறு வயதிலேயே குழந்தைகளின் மேல் திணிக்கப்படுகின்ற கருத்துகளின் தாக்கம் நேர்மறை அல்லது எதிர்மறையாக அமையலாம். குறிப்பாக பெண் குழந்தைகளை அவர்களின் உடல் தோற்றம் மற்றும் குணாதிசயங்களை வைத்து, “நீ இப்படித்தான்” என இந்த சமூகமே தீர்மானிக்கிறது.
ஒரு பெண் குழந்தையிடம் அவள் குணமான, அன்பான, பொறுப்பான பெண் என்றெல்லாம் சொல்வது நல்ல விஷயம்தான். ஆனால், “நீ ரொம்ப அழகா இருக்க, அசிங்கமா இருக்க’ என்று அவளின் உடல் தோற்றத்தை பற்றி பேசும் போது அவளுக்குள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். “அவள் ரொம்ப அமைதியான பொண்ணு பேசமாட்டாள், இவளா ரொம்ப அதிகமா பேசுவாள்” என்று சொல்லி அந்தக் குழந்தையின் ஆழ்மனதில் தான் இப்படித்தான் என்ற எண்ணத்தினை பதிய செய்துவிடுகிறார்கள்.
இதைத்தான், “ஊர் உலகம் சொல்லுது நல்ல பொண்ணு செல்லப் பொண்ணு...
உன் மனசு உன்ன என்ன சொல்லுது கண்ணு?
லட்சம் கண்ணு பாக்குது அழகும் அசிங்கமும்...
உன் கண்ணு ரெண்டு உன்னை எப்படி பாக்குது பொண்ணு?”
எனும் வரிகளாக எழுதியிருந்தேன். நீங்கள் எப்படி என்பதை நீங்கள்தான் உணர வேண்டும்.
இந்தப் பாடலில் நான் முக்கியமாக பேசி இருப்பது பெண்களின் மார்பகம் பற்றித்தான். பெண் குழந்தைகளுக்கு வளர்சிதை மாற்றங்களின் போது அவள் உடலில் மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையான விஷயம். ஆனால் அதுவே அவள் கேலிக்கும் பாலியல் சீண்டல்களுக்கும் காரணமாக அமைகிறது என்பது கவலைப்பட வேண்டிய விஷயம். உடலின் மற்ற பாகங்களைப் போலதானே மார்பகமும் என்ற எண்ணம்தான் குழந்தை மனதில் இருக்கும். அதனைப் பற்றிய பார்வை மாறுபடும்போது அவளுக்குள் ‘ஏன் இப்படி’ என்ற குழப்பமும் பயமும் ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறாள். சிறுவயதில் இது போன்ற கசப்பான சம்பவங்கள் எனக்கு நடந்திருக்கின்றன.
அதனை நான் இந்தப் பாடலில் காட்சிப்படுத்தி இருக்கிறேன். பாடலில் ஒரு காட்சியில் ஒரு பெண் குழந்தை தன் பள்ளிச் சீருடையில் குத்தி இருக்கும் பேட்சினைப் பார்த்து ஆண் பிள்ளைகள் கிண்டல் செய்வார்கள். அந்த சம்பவம் எனக்கு ஏற்பட்டது. அப்போது அவர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள்... என் ஆடையை பற்றியா, பேட்ச் பற்றியா, அது குத்தப்பட்டு இருக்கும் இடத்தினை பற்றியா என்பது புரியாமல் ஸ்தம்பித்து நின்றிருந்தேன். அதனால் ஓடும் போதும், விளையாடும் போதும், பள்ளி, கல்லூரி காலங்களில் கைகளை நீட்டி உயர்த்தி நடனமாடும் போதும் கூட அசௌகரியமாக இருக்கும். இதே கசப்பான அனுபவங்களை என் தோழிகள் மற்றும் நான் சந்தித்த சில பெண்கள் பகிர்ந்துள்ளனர்.
அந்த சமயத்தில் நமக்கு ஏற்படும் மன உளைச்சலை எவ்வாறு கடந்து வர வேண்டும் என்றுதான் ஆலோசனை அளிக்கிறார்களே தவிர ஏன் ஆண்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி எவ்வாறு வைப்பது என்று யாரும் பேசுவதில்லை. மார்பகம் என்ற வார்த்தையை கவிதையாகவும், கவர்ச்சியாகவும், கேலி கிண்டல் செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். அது உடலின் ஒரு பாகம் என்பதை ஏன் உணர மறுக்கிறார்கள். இதனாலேயே அதனை காமப் பொருளாக மட்டுமே பார்க்கிறார்கள். எந்த பெண் குழந்தையும் தன் உடலில் மாற்றம் வேண்டும் என்று வரம் கேட்டுப் பெறுவதில்லை. அதை ஒரு பாகமாக பார்க்காமல் வக்கிரமாக சிந்திப்பது அவர்களின் அறியாமையா என்று தெரியவில்லை. இதனை உளவியல் சார்ந்தும் பார்க்க முடிவதில்லை.
காரணம், ஆண்கள் தன் வீட்டில் இருக்கும் பெண் குழந்தையை காமம் சார்ந்து பார்ப்பதில்லை.
உடல் முழுவதும் போர்த்தியபடி உடை அணிந்தாலும் சிலர் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கத்தானே செய்கிறார்கள். உடலை முழுவதுமாக மறைத்திடலாம். ஆனால் ஒருவரின் எண்ணங்களில் மாற்ற முடியுமா? பெண்ணின் உடலோ தோலோ தெரிகிறதென்றால் இப்படி பார்க்கலாம் என்ற எண்ணம் நெறிப்படுத்தப்பட்டு இருக்கிறதே தவிர பிறக்கும் போதிலிருந்தே யாருக்கும் இப்படியான எண்ணம் இருப்பதில்லை. ஒரு சிலரின் மனதில்தான் இது போன்ற வக்கிரமான எண்ணங்கள் விதைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் வாழும் சூழல், வளர்ப்பு மற்றும் சமூகம்தான் காரணம். பெற்றோர்களுக்கு மட்டுமில்லை சமூகத்தின் அங்கமாக நம் ஒவ்வொருவருக்கும் குழந்தை வளர்ப்பில் அக்கறை வேண்டும்.
பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் குழந்தைகள் உளவியல் ரீதியாக பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதனை நான் என் பாடலில் காட்சிப்படுத்தி இருக்கிறேன். குழந்தை பருவத்தில் கடைக்காரர் ஒருவர் தன்னிடம் அத்து மீறும் போது, அந்தக் குழந்தை பயம் கலந்த உணர்வில் தன் கைகளை கொண்டு அங்கங்களை மறைத்துக் கொள்கிறாள். ஒரு பெண்ணுடைய அன்பு தெரியவில்லை.
ஆனால் அவளின் உடல் பாகம் மட்டும் எப்படி தெரிகிறது? என்ற கேள்வி எழுகிறது’’ என்றவர், அவரின் பாடலில் இருந்து சில வரிகளைப் பாடியபடி மேலும் தொடர்ந்தார். “ஒரு பெண் தன் உடலை எப்போதும் முழுமையாக மறைத்திருக்க வேண்டும் என்ற நிலைதான் இன்று வரை உருவாகியிருக்கிறது. அதனாலேயே தன் கைகளை அவளின் பாதுகாப்பு கவசமாக பயன்படுத்தி வருகிறாள். என்னால் இப்போது கூட கைகளை தாராளமாக உயர்த்தி அசைக்க முடியாது. 37 வயதுக்கு மேல் இதை எப்படி உடைத்து வெளிவருவது. என் உடம்பையும் மனசையும் மாத்தி பார்க்க வைத்துவிட்டார்கள்.
பல பெண் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான கேலி கிண்டல்களை வெளியே சொல்லவே பயப்படுகிறார்கள். இதற்கு காரணம் சமூகம் அவர்களை எவ்வாறு பார்க்கும் என்ற அச்சம். இந்தச் சூழலில் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் நம்பிக்கை அளிக்க வேண்டும். எந்தப் பிரச்னைக்கும் உடன் இருப்பதாக ஆதரவு கொடுக்க வேண்டும். அப்ேபாதுதான் குழந்தைகளும் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தைரியமாக வெளிப்படுத்த முன் வருவார்கள்.
இது அவர்கள் மன உளைச்சலில் இருந்து மீண்டு வர உதவும். மேலும் பெற்றோர்கள் ஆண், பெண் குழந்தைகள் இருவருக்குமே உருவக்கேலி செய்தல், பிறரை மனதளவில் துன்புறுத்துதல் தவறு என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். வளர்ப்பில் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி வளர்த்தல் வேண்டும்.பெண்கள் ஒவ்வொருவரும் தாங்கள் ராணி என்பதை உணருங்கள். இது உங்கள் காடு, இந்தக் காட்டை ஆளப்பிறந்த ராணி நீங்கள். உங்களுக்குள் ஒரு உயர்ந்த சுயம் இருக்கிறது என்பதையும் உணருங்கள்” என்றார் அனு.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்