Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவில் பெண்களுக்கான முதல் பத்திரிகை!

நன்றி குங்குமம் தோழி

‘தி இந்தியன் லேடி’ஸ் மேகஸின்’-‘The Indian Ladies’ Magazine’

எழுத்து சமூக மாற்றத்திற்கான ஓர் ஆயுதம். இன்று பெண்கள் செய்தித்துறையில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும், ஊடகத் தலைவர்களாகவும் உயர்ந்து நிற்கும் காலம். ஆனால், ஒரு காலத்தில், பெண்கள் எழுதுவது கூட அசாதாரணமாகக் கருதப்பட்ட சூழல் இருந்தது. அந்தச் சூழலை உடைத்தெறிந்து, தன்னுடைய எழுத்தின் மூலம் சமூகத்தில் ஒளி ஏற்றிய முன்னோடி பெண்களில் முக்கியமானவர் தென்னிந்தியாவின் முதல் பெண் பத்திரிகையாளர் கமலா சத்யநாதன். பல தடைகளையும் மீறி ‘தி இந்தியன் லேடிஸ்’ என்கிற முதல் பெண்கள் பத்திரிகையை நடத்தினார்.19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்திய சமூகம் பல கட்டுப்பாடுகளால் கட்டுண்டிருந்தது.

பெண்கள் கல்வி பெறுவதற்கே எதிர்ப்புகள் நிலவிய காலம் அது. வீட்டின் சுவற்றுக்குள் மட்டுமே பெண் வாழ்க்கை முடங்க வேண்டும் என்ற மனப்பான்மை வலுத்திருந்த சமயம். அத்தகைய சூழலில், எழுத்தை ஆயுதமாகக் கொண்டு சமூக உரையாடலுக்குள் நுழைந்தார் கமலா. வெறும் செய்திகளை மட்டுமே எழுதாமல் சமூகத்தின் பிரச்னைகளை கேட்டு, அதன் வலிகளை வார்த்தைகளாக மாற்றியவர்.

பெண்களின் கல்வி, உரிமைகள், குடும்ப அமைப்பில் சமத்துவம், சமூக சீர்திருத்தம் போன்ற தலைப்புகள் அவரது கட்டுரைகளின் மையமாக இருந்தன. அவர் எழுதிய வரிகளில் வாதம் மட்டுமின்றி மனிதநேயம் இருந்ததையும் காணமுடிகிறது. பெண்கள் தங்கள் குரலை வெளிப்படுத்த வேண்டும் என்ற கருத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்.

பெண் கல்வி பெறுவது குடும்பத்தின் உயர்வுக்காக மட்டுமல்ல, சமூக முன்னேற்றத்திற்காகவும் என்ற எண்ணம் அவரது எழுத்தின் உட்பொருளாக இருந்துள்ளது. இவர் கேள்விகளை எழுப்பிய போதும், மக்கள் கருத்துகளை பதிவு செய்த போதும், மனித உறவுகளின் நுணுக்கங்களை கவனத்தில் கொண்டவராக இருந்துள்ளார். ஒரு பத்திரிகையாளராக மட்டுமல்லாமல் ஒரு சிந்தனையாளராகவும் தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.

1880ம் ஆண்டு பிறந்த கமலா சத்யநாதனின் இயற்பெயர் ஹன்னா ரத்தினம் கிருஷ்ணம்மா. அவர் கமலா சத்யநாதன் என்று பெயரை மாற்றிக்கொண்டார். வீட்டிலேயே ஹோம் ஸ்கூலிங் முறையில் படித்த கமலா, நோபிள் கல்லூரியில் சேர்ந்து BA பட்டம் முடித்தார். தென்னிந்தியாவின் முதன்முறை பட்டம் பெற்ற முதல் பெண் பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கது. 1901 ஆம் ஆண்டில் கமலா சத்தியநாதன் “The Indian Ladies’ Magazine” என்கிற இந்தியாவின் முதல் பெண்களுக்கான ஆங்கில மாத இதழை உருவாக்கி வெளியிட்டார்.

அந்தக் காலத்தில் பத்திரிகை மட்டுமல்லாது சமூக ஆராய்ச்சியில் பெண்கள் பாதிக்கப்பட்ட நிலைகளும், அவர்களின் கல்வி, உரிமைகள், குடும்பப் பிரச்னைகள் மற்றும் தேசிய சிந்தனைகள் ஆகியவை பெரும்பான்மையாக காட்டப்படவில்லை. இதை கருத்திற் கொண்டு, பெண்கள் குரல் எழுப்பி அவர்களின் சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஒரு தளம் உருவாக்குவதே இதன் நோக்கமாக இருந்துள்ளது.

பெண்களின் கல்வி முக்கியத்துவம், குடும்பத்தில் சமத்துவம் மற்றும் உரிமைகள், பெண்களுக்கான தொழில்நுட்ப ஆதரவு, சமூக சீர்திருத்தத்தின் அவசியம் குறித்த கட்டுரைகள் இதில் வெளியாகின. பல முன்னணி பெண்கள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களும் இதில் பங்காற்றினர். 1901 முதல் 1938 வரை பல சாதனைகளை படைத்தது ‘தி இந்தியன் லேடிஸ் பத்திரிகை’. பெண்கள் சமூகத்தில் உரிமைகளை பெற்று, கல்வியை விரும்பி, பத்திரிகையில் தங்கள் குரலை எழுப்புவதற்கான பாதையை உருவாக்கியது.

இதழ் மூலமாக மாடர்ன் இந்திய பெண்களின் எண்ணங்களை பதிப்பித்தார் கமலா சத்தியநாதன். இது ஒரு சீர்திருத்த இதழாகவும், ஒரு சமூகத்தன்மை கொண்ட இயக்கமாகவும் எங்கும் பரவியது. தனது பணிக்காக கமலா பல நாடுகளுக்கு பயணம் செய்து வந்தார். கல்வியை ஊக்குவித்த தனது தந்தை மற்றும் கணவரை அடுத்தடுத்த இழந்த கமலா, குழந்தைகளை காப்பாற்றவும் போராடியுள்ளார். பல இன்னல்களுக்கிடையே பத்திரிகையை நடத்தி வந்துள்ளார்.

பத்திரிகையின் தயாரிப்புக்கான உள்கட்டமைப்பை உருவாக்கவும், விளம்பரங்களிலிருந்து வருவாய் பெறவும் அவர் போராட வேண்டியிருந்தது. பத்திரிகைக்கான சந்தாக்கள் குறைந்ததால், அதன் வெளியீட்டில் சிரமம் ஏற்பட்டது. 1918ம் ஆண்டு வெளியீடு இடை நிறுத்தம் செய்யப்பட்டு, 1927ல் மீண்டும் தொடங்கப்பட்டது. அதன் பின்னும் பெண்களுக்காக செயல்பட்டு வந்த தி இந்தியன் லேடிஸ் பத்திரிகை இறுதியாக 1938ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

பெண்கள் தினம் கொண்டாடப்படும் இந்த சமயத்தில், கமலா சத்யநாதனை நினைவுகூர்வது ஒரு மரியாதை மட்டுமல்ல, அது ஒரு பொறுப்பும் கூட. இன்று நாம் உரிமையுடன் பேசும் சுதந்திரம், கமலா போன்றோர் உருவாக்கிய பாதையின் பலன்தான். இன்றைய தலைமுறை பெண்கள், தொழில்நுட்பம் முதல் அரசியல் வரை பல துறைகளில் சாதிக்கின்றனர். அந்தச் சாதனைகளின் அடித்தளத்தில் கமலா போன்ற பெண்களின் அமைதியான போராட்டங்கள் மறைந்திருக்கின்றன.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்