Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மூன்று படைப்பாளிகளின் எதிரொலி!

நன்றி குங்குமம் தோழி

‘‘பொதுவாக ஆடை, அணிகலன், வீட்டுக்குத் தேவையான பொருட்களுக்கான கண்காட்சிகள் நடைபெறும் போது மக்கள் ஆர்வமாக அதில் பங்குபெறுவதை பார்க்க முடியும். ஆனால், அதுவே ஓவியக் கண்காட்சி என்றால் மக்கள் அதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. காரணம், விலை. ஒரு ஓவியத்திற்கு பல ஆயிரம் கொடுத்து வாங்க வேண்டுமா? என்று மக்கள் நினைக்கிறார்கள்.அதே சமயம் ஓவியம் உங்கள் வீட்டை அலங்கரிக்கும் போது, அதிலுள்ள வண்ண நிறங்கள் நம்முடைய மனதை அமைதிப்படுத்தும்’’ என்கிறார்கள் மூன்று தோழிகளான எழில் அபராஜித், கவிதா அரவிந்த், ராதா கண்ணன். இவர்கள் மூவரும் தங்களின் அழகான ஓவியங்களை காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும், ஓவியப் பயிற்சியும் அளித்து வருகிறார்கள்.

‘‘நான் இதை முறையாக பயிலவில்லை. சித்திரம் கைப்பழக்கம் என்பது போல்தான் நானாகவே ஓவியம் வரைய பழகினேன். சொல்லப்போனால் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் விலங்கியலில் படிச்சேன். அதன் பிறகு முதுகலையில் கம்ப்யூட்டர் முடிச்சேன். இரண்டும் சம்பந்தமில்லை என்றாலும் ஓவியம் வரைவது என்னுடைய விருப்பமாக மாறிவிட்டது. ‘ஏக்கம் கிரியேடிவ்ஸ்’ என்ற பெயரில் சென்னை மற்றும் வெளிநாடுகளில் உள்ள மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சியினை 2005ல் இருந்து அளித்து வருகிறேன். இதுவரை 3000 மாணவர்களுக்கு நான் பயிற்சி அளித்து இருக்கிறேன்’’ என்று பேசத் துவங்கினார் எழில்.

இவரின் ஓவியங்கள் அனைத்தும் மிருகங்கள் சார்ந்து இருந்தது. ‘‘எனக்கு மிருகங்களை வரைவது அலாதிப் பிரியம். பெரும்பாலும் வைல்ட்லைஃப் ஓவியர்களில் விரல்விட்டு எண்ணும் அளவில்தான் உள்ளனர். அதிலும் அழிவு நிலையில் இருக்கும் மிருகங்கள்தான் அவர்கள் வரைகிறார்கள். எனக்கு அப்படி இல்லை. மனிதர்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருப்பவைகள்தான்

மிருகங்கள். அதனால் இந்தக் கண்காட்சியில் மும்மூர்த்திகள் என்று குறிப்பிடும் பிரம்மா, திருமால் மற்றும் சிவன் கடவுள்களின் வாகனங்களை உயிர்ப்போட கொடுக்க விரும்பினேன்.

முதல் கடவுள் கணேசன் என்பதால் யானையினை வரைந்தேன். அடுத்து சிவபெருமானின் குடும்ப வாகனங்களான நந்தி, சிங்கம் மற்றும் மயில். திருமால் மற்றும் மகாலட்சுமியின் வாகனங்களான கருடன், ஆந்தை, கடைசியாக பிரம்மா-சரஸ்வதியின் அன்னப் பறவைகள். கழுகுகள் என பல வகைகள் உள்ளன. ஆனால், விஷ்ணுவின் வாகனமான கருடனின் நிறம் யாருக்கும் சரியாக தெரியாது. கருடனின் கழுத்தில் வெள்ளையாக இருக்கும், ஒரு சிலர் தங்க நிறம் என்றார்கள். அதனால் இரண்டையும் கலந்து வரைந்திருக்கேன். அதேபோல் லட்சுமியின் வாகனம் கஜேந்திரன் என்று நாம் நினைக்கிறோம். அவரின் வாகனம் ஆந்தை. இது தீய பார்வையை போக்கி வீட்டில் சுபிட்சம் நிலைத்து தரும்.

என்னுடைய ஓவியங்கள் அனைத்தும் இம்ப்ரஷன் ஸ்ட்ரோக் முறையில் வரைந்திருக்கிறேன். அதாவது, ஓவியங்களை ெதாட்டுப் பார்க்கும் போது அதை உணர முடியும். ஒவ்வொரு ஓவியத்திலும் கண்களுக்கு அதிக கவனம் செலுத்தி இருக்கிறேன். ஒருவரின் கண்களைப் பார்த்தால் அவர் என்ன நினைக்கிறார் என்று தெரிந்து கொள்ள முடியும். அதனால் என் ஓவியத்தில் உள்ள கண்கள் எந்த திசையில் இருந்து பார்த்தாலும் நம்மை பார்ப்பது போல் உணர செய்திருக்கிறேன்’’ என்றவரை தொடர்ந்தார் ராதா கண்ணன்.

‘‘நானும் கவிதாவும் ஒன்றாக ஓவியப் பயிற்சி மேற்கொண்டோம். எழிலை ஒரு ஓவியக் கண்காட்சியில்தான் நாங்க சந்தித்தோம். அப்படித்தான் எங்க மூவருக்கும் நட்பு ஏற்பட்டது. நாங்க தனித்தனியா நிறைய நிகழ்ச்சிகள் செய்திருக்கிறோம். இதுதான் மூவரும் இணைந்து முதல் முறையாக செய்கிறோம். எனக்கு ஜியாமென்டிரக்கல் அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்கள் வரைவது பிடிக்கும். இந்தக் கண்காட்சியில் ஒரு பெண் என்னென்ன விஷயங்களை தன் வாழ்க்கையில் சந்திக்கிறாள் என்பதை ஜியாமென்டிரக்கல் அப்ஸ்ட்ராக்ட் முறையில் சீதையின் பார்வையில் ஓவியமாக வரைந்திருக்கிறேன். சீதா இலங்கையில் இருந்த காலத்தில் மனதளவில் எவ்வளவு போராடி இருப்பாங்க. அதே நிலையினை இன்றும் பெண்கள் சந்திக்கிறார்கள்.

அதனால் சீதாவினை ஒவ்வொரு பெண்ணுடைய வாழ்வில் நாம கனெக்ட் செய்யலாம். மான் வேண்டும், வேண்டாம் என்பது சீதாவின் தேர்வுதான். அதேபோல்தான் ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்வில் எது வேண்டும், வேண்டாம் என்பதை தீர்மானிக்கிறாள். அடுத்து லட்சுமணன் வரைந்த கோட்டை தாண்டியது. அவள் தாண்டாமல் இருந்திருந்தால் இலங்கையில் கஷ்டப்பட வேண்டி இருக்காது. அடுத்து ராஜ்ஜியத்தை விட்டு காட்டுக்கு செல்வது. அந்த இடத்தில் தைரியமாக தன் தனித்துவத்தை இழக்காமல் இருந்தாள். அதை எல்லா பெண்களும் கடைபிடிக்க வேண்டும். தன் உண்மை தன்மையை நிரூபிக்க தீக்குள் இறங்கியதை அழிவாக பார்க்காமல், பிறப்பாக பார்க்க வேண்டும்.

கடைசியாக இருப்பது டெஸ்டினி. நம் வாழ்க்கையில் என்னெல்லாம் நடந்தது என்பதை சிந்திக்கும் போது, கடந்த காலத்தில் என்ன நடந்திருந்தாலும், வரும் காலத்தினை தைரியமாக பெண்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று முடித்திருக்கிறேன். என்னுடைய ஓவியங்கள் பெரும்பாலும் இந்திய கலாச்சாரத்தை சார்ந்து தான் இருக்கும். குழந்தைகள் கிராமத்தில் விளையாடுவது, முராரி கிருஷ்ணர் ஓவியங்கள், வயதானவர்கள் தன் பேரக்குழந்தைகளுடன் இருப்பது போன்ற தனிப்பட்ட ஓவியங்கள் வரைந்திருக்கிறேன். அதை மார்டன் மக்களுக்கு புதுமைக்காக கொடுக்கதான் அப்ஸ்ட்ராக்ட் ஓவியத்தை ேதர்வு செய்திருக்கிறேன். அதே சமயம் நம்முடைய கலாச்சாரமும் பாதுகாக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்.

பொதுவாக அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்கள் ஒவ்வொருவருக்கும் ஒருவிதமாக காட்சியளிக்கும். சிந்தனையை தூண்டும், சலிப்பு ஏற்படுத்தாது. காரணம், ஒவ்வொரு முறை பார்க்கும் போது அது புதுப்புது விளக்கத்தை தரும்’’ என்றவர், ஓவியம் வரைவது மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கு ஓவியப் பயிற்சியும் அளித்து வருகிறார்.‘‘எனக்கு மனிதர்களின் முகங்கள் வரைய பிடிக்கும்’’ என்று பேசத் துவங்கினார் கவிதா. நான் மதுரைக்கார பொண்ணு. திருமணத்திற்குப் பிறகு சென்னையில் செட்டிலாகிட்டேன்.

என்னுடைய மரபினை நவீன ஓவியமாக கொடுக்க விரும்பினேன். ஊரில் வயதான பாட்டிகள் மூக்குத்தி, தண்டட்டி எல்லாம் போட்டிருப்பாங்க. அந்த முகங்களை தான் நான் மார்டன் வடிவில் அப்ஸ்ட்ராக்ட் ஓவியமாக கொடுத்திருக்கிறேன். அதனால்தான் என்னுடைய அனைத்து ஓவியத்திலும் மூக்குத்தி ஹைலைட்டா தெரியும். மேலும், இதில் மனிதரின் முகங்கள் மட்டுமில்லாமல் மாடு, மயில் போன்ற மிருகம், பறவையின் முகங்களையும் உடன் இணைத்திருக்கிறேன்.

இவை எல்லாம் நான் ஊரில் பார்த்த முகங்கள். அந்த முகங்கள் நம்மை கவனித்துக் கொண்டிருக்கும். அப்போது ஒவ்வொரு முகபாவங்களும் மாறுபடும். அதை வெளிப்படுத்தவே பலவித முகங்களை என் ஓவியத்தில் கொண்டு வந்திருக்கிறேன். என் ஓவியங்களை பார்க்கும் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்க வேண்டும். முழுக்க முழுக்க கன்டம்பிரரி விஷயத்தைதான் மார்டன் ஸ்டைலில் வரைந்திருக்கிறேன்’’ என்றார் கவிதா.

‘‘எங்களை ெபாறுத்தவரை மற்ற பொருட்களுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை ஓவியங்களுக்கும் கொடுக்க வேண்டும். ஓவியங்களை வீட்டில் மாட்டினால் என்ன பலன் என்று நினைக்கிறார்கள். இதிலுள்ள வண்ணங்கள் மனசுக்கு ஒரு நல்ல வைப்ரேஷனை கொடுக்கும். இதற்கு நாங்க பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் தரமானவை. அப்போதுதான் இதன் வண்ணங்கள் நிறம் மங்காமல் என்றும் நிலைத்திருக்கும். இவைதான் ஓவியத்தின் விலையினை நிர்ணயிக்கிறது. அதே சமயம் எல்லோரும் வாங்கக்கூடிய விலையிலும் ஓவியங்கள் உள்ளன என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்ததான் நாங்க இந்த கண்காட்சியே நடத்துகிறோம்’’ என்றனர் மூன்று தோழிகள்.

செய்தி:ஷன்மதி