Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

என்னிடம் இருப்பது மூர் மார்க்கெட்டில் தேடி சேகரித்த அரிய புத்தகங்கள்!

நன்றி குங்குமம் தோழி

புத்தகத்தைத் தாண்டிய வாசிப்புத் தளங்களாக மொபைல் போன், கிண்டில், ஆடியோ புக்ஸ் போன்றவை விரல் நுனிக்கு வந்த பிறகு, புத்தகங்களைத் தேடிப்பிடித்து வாடகைக்கு எடுத்துப் படிக்கும் பொறுமை இன்றைய தலைமுறைக்கு சுத்தமாக இல்லை என்கிற ஜமுனா, கடந்த 44 ஆண்டுகளாக சென்னை கோடம்பாக்கத்தில் வாடகை நூலகம் ஒன்றை ஒரே இடத்தில் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

சின்னதாய் ஒரு வாடகைக் கட்டிடம். தரை முதல் கூரை வரை 50 ஆயிரம் புத்தகங்கள். அதில் அடைக்கப்பட்டிருப்பவையில் தமிழ் புத்தகங்கள் 30,000. ஆங்கில புத்தகங்கள் 15,000

என மிகப்பெரிய அறிவுச் சுரங்கமாக, பிரபல எழுத்தாளர்கள் பலரின் புத்தகங்களும் காணக் கிடைக்கின்றது.ரமணிச்சந்திரன், காஞ்சனா ஜெயதிலகர், சுபஸ்ரீ கிருஷ்ணவேணி, கலைவாணி சொக்கலிங்கம், அமுதவல்லி கல்யாண சுந்தரம், வித்யா சுப்பிரமணியம், ராகி.ரங்கராஜன், RVR ஜாவர் சீத்தாராமன், சுஜாதா, பாலகுமாரன், ராஜேஷ்குமார் போன்ற தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் ஒருபுறம். அகதா கிறிஸ்டி, ஹாரிபாட்டர், ஜெரோனிமோ ஸ்டில்டன், டாம் கிளாங்கி, டான் ப்ரவுன், டேவிட் பால்டெக் போன்ற உலகப்புகழ் பெற்ற படைப்புகள் மறுபுறம் என வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது.

‘‘ஒரு காலத்தில் என் கணவர் சென்னை மூர் மார்க்கெட்டுக்கு சென்று தேடித்தேடி வாங்கிச் சேர்த்த பழைய அரிய புத்தகங்கள் பலவும் இதில் இருக்கின்றது’’ என்கிற ஜமுனாவிடம், வாடகை நூலகங்களின் இன்றைய நிலை குறித்து விரிவாகப் பேசியதில்..

‘‘1982ல் புத்தகங்கள் மேலிருந்த தீராத காதலால் என் கணவர் விஜயனால் அவருடைய 30 வயதில் தொடங்கப்பட்ட வாடகை நூலகம் இது. ஒவ்வொரு புத்தகமாய் தேடித்தேடி வாங்கி, ஒரு குழந்தைய போல இந்த நூலகத்தை வளர்த்த நிலையில், 2012ல் திடீரென அவர் மரணம் அடைய, எனது இரண்டு மகன்களின் எதிர்காலமும், என் குடும்பத்தின் வாழ்வாதாரமும் என் கண் முன்னே நின்றது.

கணவரின் நூலகத்தை தொடர்ந்து நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில், துளியும் பழக்கம் இல்லாத புத்தகத் துறைக்குள் அடி எடுத்து வைத்தேன். ஒரு பஸ்ஸில் வெறும் பயணியாக மட்டுமே இருந்தவளிடம், திடீரென ஸ்டியரிங்கை கொடுத்த மாதிரி, பிரேக் எங்கு இருக்கு, கிளெட்ச் எங்கு இருக்கு என எதுவுமே தெரியாத நிலை எனக்கு.நான் பொறுப்பேற்ற போது, இந்த இடமே முற்றிலும் புதிதாக, மிகப்பெரிய சவாலாய் இருந்தது. நான் பி.ஏ சோசியாலஜி படித்திருந்ததால், வாசிப்பு பழக்கம் கொஞ்சம் இருந்தது. எனது கல்வி புத்தகங்களை புரிந்துகொள்ள உதவியது.

ஒரு நூலகத்தை நடத்துவது வெறும் புத்தகங்களை நேசிப்பது மட்டுமே கிடையாதே. வாடிக்கையாளர்களைக் கையாளுவது? கணக்கு வழக்குகளை பார்ப்பது? புதிய புத்தகங்களை தேர்ந்தெடுப்பது போன்ற நெளிவு சுழிவுகளும் தெரிய வேண்டுமே?

என் கணவரின் குடும்பத்திலும், இந்தத் தொழிலின் பின்னணி இருந்ததால், நாங்கள் இருக்கிறோமென அவர்களும் கை கொடுக்க, நின்றுபோன என் குடும்பம் தொடர்ந்து ஓட இதுவே உந்துதலாக இருந்தது.எனது கணவரின் வாடிக்கையாளர்களைத் தேடிப்பிடித்து, தொலைபேசி வாயிலாக அவர்களை எல்லாம் அழைத்து, நூலகம் மீண்டும் செயல்பட தொடங்கியதை தெரிவித்த பிறகே, என் முதல் அடியை எடுத்து வைத்தேன். என்னிடமிருந்த மிகச் சிறிய வாசிப்பு பழக்கத்தை வைத்து, என் கணவர் சேர்த்து வைத்திருந்த 50 ஆயிரம் புத்தகங்களையும், முறையாக வகைப்படுத்தி, கேட்டலாக் ஒன்றைத் தயாரித்து, புத்தகங்களை சீரியல் வரிசையாக அடுக்க ஆரம்பித்தேன்.

ஒரு புத்தகம் எவ்வளவு வேகமாகக் கை மாறுகிறதோ, அதாவது, சர்க்குலேஷனில் இருக்கிறதோ அவ்வளவு வேகமாய் அதன் 10 சதவீத வாடகை திரும்ப திரும்ப நமக்கு கிடைக்கும்’’ என்கிற ஜமுனா, ‘‘வாடகை நூலகத்தின் உண்மையான வருமானம் ஒரு புத்தகத்தோட விலையில் இல்லை. அது எத்தனை கைகளுக்கு விரைவாக மாறுகிறது என்பதில்தான் இருக்கிறது’’ என்கிறார்.

‘‘இன்றைய தொழில்நுட்பம் மனிதர்களின் கவனத்தை தன்வசப்படுத்தி இருக்க, டிஜிட்டல் திரைகளை தொடர்ந்து பார்த்து பார்த்து ஏற்படுகிற கண் சோர்வில் இருந்து தப்பிக்க, ஒரு காகித புத்தகத்தை கையில் ஏந்தும் பழைய சுகத்தை இன்றும் வயதானவர்கள் தேடுகிறார்கள்’’ என்றவர், ‘‘வாடகை நூலகங்களை இன்றைக்கும் தாங்கிப் பிடிப்பவர்கள் 45 முதல் 60 வயதுக்கு உட்பட்ட நடுத்தர வயதினர் மட்டுமே’’ என்கிறார் தன் அனுபவத்தில்.

ஜமுனா இன்று புத்தகங்களை மட்டுமே எடுத்துக் கொடுப்பவரில்லை. ஜமுனாவைத் தேடி புத்தகங்களை வாங்க வருபவர்கள், அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்களில் சிக்கி தவிப்பவர்கள். அப்படி வருபவர்களிடம், ‘நீங்கள் ஏன் சற்று விறுவிறுப்பான க்ரைம் நாவல்களை படிக்கக் கூடாது. அது உங்களின் சிந்தனையை திசை திருப்ப உதவுமே’ எனப் பரிந்துரைக்கிற அளவுக்கு அனலாக் தெரபிஸ்டாகவே மாறியிருக்கிறாராம்.‘‘இன்றைக்கு வாசிக்க உங்களுக்கு என்ன தேவை? எந்தப் புத்தகம் உங்களின் மனபாரத்தை குறைக்கும்? என்றெல்லாம் பரிந்துரைக்க, அல்காரிதம் இல்லாத மனிதத் தொடர்பு இன்று அனைவருக்கும் தேவைப்படுகிறது’’ என்றவர், அதற்காகவே வாடிக்கையாளர்கள் தன்னைத் தேடி வருவதாய் குறிப்பிடுகிறார் ஜமுனா.

‘‘வாடகை நூலகங்கள் வெறும் புத்தகங்களை வாடகைக்கு விடுகிற இடம் மட்டுமே கிடையாது. ஒரு சமூகத்தோட வாசிப்புப் பழக்கம் காலப்போக்கில் எப்படி மாறி இருக்கு என்பதற்கான வாழும் சாட்சி. ஒரு காலத்தில் புத்தகம் பெறுவதற்கான வாடிக்கையாளர் அட்டை எண்ணிக்கையில் 2000, 3000 என என்னிடம் இருந்தது. இன்று 200, 300 என குறைந்துவிட்டது’’ எனவும் குறிப்பிடுகிறார் ஜமுனா.

‘‘கல்லூரி மாணவர்கள் தேர்வுகள் முடிஞ்சதுமே கூட்டம் கூட்டமாய் வந்து நாவல்களை அள்ளிச் செல்வார்கள். இன்றைக்கு இருக்கிற 2k கிட்ஸ் புத்தகங்கள் பக்கமே வருவதில்லை’’ என வருத்தம் தெரிவித்தவர், ‘‘ஏஜெண்டுகள் இன்றைக்கு நேரடியாகவே பதிப்பகங்களில் இருந்து புத்தகங்களை கொண்டு வந்து கொடுத்துவிடுவதால், புதிய புத்தகங்கள் சுலபமாய் கிடத்துவிடுகிறது. அதே சமயம் வாசிக்கிறவுங்க எண்ணிக்கை குறைஞ்சிருப்பதால், புத்தகங்களின் காப்பிகளை அதிகமாக வாங்கி வைக்க முடிவதில்லை’’ என்கிறார்.‘‘1982ல் என் கணவர் இருந்தபோது நூலகத்திற்கு வாடகை 200 ரூபாய்.

இன்றைக்கு 15,000மாக உயர்ந்திருக்கு. புத்தகங்களின் விலையும் கடுமையாக ஏறிடுச்சு. மேலும், ஒரு புத்தகம் பல கைகளுக்கு மாறும்போதே அதன் ஆயுட்காலமும் குறைய தொடங்கி விடுகிறது. இதில் பழைய புத்தகங்களை பராமரிப்பது மாபெரும் சவாலான விஷயம்.ஒரு புத்தகத்திற்கு எப்படி வயதாகுதுன்னா? சிலர் படிக்கும்போது பக்கங்களை மடிச்சு வைப்பாங்க. சிலர் சாப்பிட்டுகிட்டே படிப்பாங்க. சிலர் தூக்கம் வரும்போது புத்தகத்தை அப்படியே முகத்துல கவிழ்த்து படுப்பாங்க. ஒவ்வொரு வாசிப்பாளரும் அந்தப் புத்தகத்தின் மீது தங்களின் ஏதோ ஒரு சுவட்டை விட்டுவிட்டுச் செல்பவரே. இதனால் காலப்போக்கில் புத்தகம் கிழிஞ்சிடுது. இதை சரி செய்ய நான் படுகிறபாடு உண்மையிலே அந்தப் புத்தகத்தின் ஆயுட்கால போராட்டம்தான்’’ என்கிறார் ஜமுனா புன்னகைத்தபடி.

ஜமுனாவின் 50ஆயிரம் புத்தகங்களையும் சுமந்து நிற்கும் அந்த கட்டிடம் 55 ஆண்டுகள் பழமையானது என்பதால், இன்றைய நகர வளர்ச்சி காரணமாக, இந்தப் பழைய கட்டிடம் விரைவில்

இடிக்கப்பட இருக்கிறதாம். ‘‘ஒரு வாடகை நூலகம் அதே இடத்தில் அதே மக்களிடையே இருந்தால்தான் பிழைக்க முடியும். தற்போது எனக்கு 60 வயதாகிறது. எனது இரண்டு மகன்களும் படித்து முடித்து, ஒருவர் சார்ட்டெட் அக்கவுன்டென்ட், மற்றொருவர் பயோமெடிக்கல் துறைன்னு கால் பதிச்சுட்டாங்க.

என்னோட அன்றாட செலவுகளுக்காகத் தொடங்கிய ஒரு போராட்டம் அதன் நோக்கத்தை அடைஞ்சிடுச்சு என்றாலும், இது வெறும் ஒரு தனிப்பட்ட வியாபாரத்தின் முடிவு கிடையாது. ஒரு சமூகத்தோட வாசிப்பு கலாச்சாரத்தின் அத்தியாயம் முடிவுக்கு வருவதற்கான அடையாளமும். ஒரு நூலகம் மூடப்படும்போது நாம இழப்பது வெறும் காகிதங்களையும் அந்த அட்டைகளையும் மட்டும்தானா?

கண்டிப்பாகக் கிடையாது. அந்தக் கட்டிடம் இடிக்கப்படும்போது கடந்த 45 வருஷமா அந்தப் பகுதி மக்கள் புத்தகங்கள் வழியாக தங்களுக்கிடையே பரிமாறிக் கொண்ட கூட்டு நினைவுகளும்தான்... எத்தனையோ பேரின் மன அழுத்தத்தைப் போக்கிய அமைதியான அறிவு சரணாலயமும்தான்’’ என தனது உணர்வுகளைக் கடத்தி மௌனமாய் விடை கொடுத்தார் ஜமுனா.

அடுத்த முறை நீங்கள் உங்கள் கைகளில் இருக்கும் பளபளப்பான டிஜிட்டல் திரைகளில் சலிப்பின்றி ஸ்க்ரோல் செய்து எதையாவது தேடும்போது, ஒரு கணம் உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள். இந்த வசதிக்காக எதையெல்லாம் இழந்திருக்கிறோம் என்று?டிஜிட்டல் திரைகளின் வெளிச்சம் காகித வாசிப்பில் உள்ள மனித உணர்வுகளின் வெற்றிடத்தை நிரப்ப முடியுமா?

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்