Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேடலுக்கு கிடைத்த விருது!

நன்றி குங்குமம் தோழி

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகம் பார்த்த ஒரு மாபெரும் சமூகப் புரட்சியாளரான, இராமாமிர்தம் அம்மையாரின் வாழ்க்கையே ஒரு போராட்டம்தான். காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என பல அரசியல் தளங்களில் இயங்கியவரின் மிக முக்கிய பங்களிப்பு, தேவதாசி முறைக்கு எதிராய் அவர் நடத்திய பல்வேறு போராட்டங்கள்.மூவலூர் இராமாமிர்தம் என்கிற வரலாற்று ஆளுமை குறித்து எழுத்தாளர் பா.ஜீவசுந்தரி எழுதிய ‘மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும்’ வரலாற்று நூல், தடைகள் பல கடந்து, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யப்பட்டு பயணித்திருக்கிறது.

இராமாமிர்தம் தேவதாசி குலத்தில் பிறந்தவர் என எளிதாகச் சொல்லிவிட்டு நாம் கடந்துவிடுவோம். ஆனால், அதன் அர்த்தம் என்ன? தேவதாசி முறையின் கொடூரம் என்ன? பலருக்கும் இது முழுமையாகத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. இந்த நூல் அந்த முறையின் மறைக்கப்பட்ட கொடூரமான பக்கங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருது.தேவதாசி முறை என்பது இளம் பெண்களை கடவுளுக்கு சேவை செய்கிறேன்னு சொல்லி கோவில்களுக்கு அர்ப்பணிக்கிற வழக்கம். ஆனா, உண்மையில் அது ஒரு சுரண்டல். கலைப்பணி என்ற பெயரில், தேவதாசி பெண்கள் கோவில் நிர்வாகிகள், ஊர் செல்வந்தர்களோட பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஒரு மதம் சார்ந்த சட்டப்பூர்வமாக்கப்பட்ட பாலியல் தொழில் முறை அது.

சிவன் கோவில்களுக்கு அர்ப்பணிக்கப்படுற தாசிகளுக்கு அவங்க தோள்களில் சூலாயுத முத்திரையை போடுவாங்க. வைணவ கோவில் தாசிகளுக்கு சங்கு சக்கர முத்திரையை குத்துவாங்க. நம்மால் நினைச்சுப் பார்க்கவே முடியாத, அவர்களை ஒரு உடைமைப் பொருளா ஒரு பொதுச் சொத்தா அடையாளப்படுத்துற மிருகத்தனமான செயல் இது. ஒரு பெண் அவ விருப்பமின்றி, கடவுள் பேர்ல கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, திருமணம் செய்து கொள்கிற உரிமைய இழந்து, சமூகத்தின் குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு தள்ளப்படுகிற பின்னணியில் இருந்து, சில நடைமுறை சிக்கல்களால் தப்பிச்சவர்தான் இராமாமிர்தம் அம்மையார்.

ஆம், தாசி குலத்தில் பிறந்த இராமாமிர்தம் அம்மையார், தான் தேவதாசியாக அர்ப்பணிக்கப்பட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டாலும், தன் சமூகத்துக்கு எதிராகப் போராடத் துணிந்திருக்கிறார். பொதுக் கூட்டம் ஒன்றில் அவர் பேசிக்கொண்டு இருந்தபோதே, மேடையேறிய ஒருவன், அம்மையாரின் தலைமுடியை பிடித்து இழுத்து அறுத்து அசிங்கப்படுத்த, குறிப்பிட்ட சம்பவத்துக்கு பிறகு, வாழ்நாள் முழுவதும் குட்டையான முடியோடு வலம் வந்ததே, அவரின் அடங்க மறுக்கும் குணத்தின் நிரந்தர அடையாளமானது.

நூலின் ஆசிரியர் அவரின் இந்த வரலாற்றை எழுதப் பல ஊர்களுக்கும் நூலகங்களுக்கும் சென்று அலைந்து திரிந்து தகவல்களைச் சேகரித்திருக்கிறார். ஒரு பிராந்தியத்தின் குரலை உலக அரங்கில் ஒலிக்கச் செய்வது கடினமான பணி. இவரால் முதலில் வெளியிடப்பட்ட புத்தகத்தில் இடம்பெற்ற, சில குடும்பத் தகவல்களால் தங்கள் கௌரவம் பாதிக்கும் என்று அஞ்சிய அம்மையாரின் உறவினர்கள், அனைத்துப் பிரதிகளையும் விலைக்கு வாங்கி அழித்தனர்.

ஒரு எழுத்தாளராக இது ஆசிரியருக்குப் பெரும் மனவலியைத் தந்தது. புத்தகங்களை அவர்களே வாங்கிக் கொண்டதற்கு பதிப்பாளருக்கு நஷ்ட ஈடாக காசோலை வழங்கியதைப் போல் எழுத்தாளருக்கும் தர முன்வந்தபோதும் அதை ஏற்க அவர் மறுத்ததுடன், மறுநாள் அவரின் முகவரிக்கே வந்த காசோலையை மாற்றாமல், இப்போது வரை நினைவுக்காக அப்படியே வைத்திருக்கிறார். பின்னர், மீண்டும் முழுமையான ஆதாரங்களுடன் புதிய புத்தகத்தை ஆசிரியர் உருவாக்கினார். இந்தப் புத்தகம் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களிடம் வழங்கப்பட்டு, அவரால் பெரிதும் பாராட்டப்பட்டது.

சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் புத்தகங்களுக்கு தேசிய அளவில் லாட்லி மீடியா (Laadli Media Award) தேசிய விருது வழங்கி சிறப்பிக்கிறது. அந்த வகையில இந்த விருதை வென்ற நூலின் ஆசிரியரும், எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான பா.ஜீவசுந்தரி அவர்களை நேரில் சந்தித்துப் பேசியதில், இராமாமிர்தம் அம்மையாரின் வாழ்க்கையைத் தேடிப் பயணித்த கதையை நம்மிடம் விரிவாகவே பகிர்ந்து கொண்டார்.

‘‘1980களில் திராவிட இலக்கியம் குறித்து, ‘இந்தியா டுடே’ பத்திரிகை சிறப்பிதழ் ஒன்றை வெளியிட, அதில் இராமாமிர்தம் அம்மையார், 1930களில் எழுதிய ‘தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்’ நாவலின் ஒரு அத்தியாயத்தை மட்டும் வெளியிட்டிருந்தது. இந்தச் சிறு துண்டுதான் என் தேடலுக்கு ஆரம்பப் புள்ளி.‘குடிஅரசு’ மாதிரியான சில இதழ்களைத் தேடிப் படித்ததில், அம்மையார் குறித்து சில கட்டுரைகள் மட்டும், ஆங்காங்கே கிடைத்ததே தவிர, அவரின் முழு வாழ்க்கையையும் சொல்கிற மாதிரியான ஒரு புத்தகம் கூட இல்லையென உணர ஆரம்பித்தேன். அப்படி ஒரு புத்தகத்தை நானே உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அந்த நொடியில் எனக்குப் பிறந்தது. ஒரு வாசகியாய் இருந்த நான், ஒரு படைப்பாளியாக, ஒரு வரலாற்று ஆய்வாளராக, மெல்ல மெல்ல மாறிய தருணம் இதுவே.

அம்மையாரின் வாழ்க்கையை புத்தகமாக்க முடிவு செய்தாலும், அந்த எண்ணம் தீவிரம் பெற்றது, அரசியல் ரீதியான முக்கியத்துவம் அம்மையாருக்குக் கிடைத்தபோதுதான். ஆம்! முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு கொண்டு வந்த ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம்’தான் அது.

இது வெறும் சட்ட ரீதியான மாற்றமில்லை. பல நூற்றாண்டுகளாய் ஒரு சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட விதியை, அடையாளத்தை, அவமானத்தை உடைக்கும் செயல். சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட பெண் ஒருவரின் பெயரில், மற்ற பெண்கள் திருமணம் செய்துகொள்ள உதவுவது. இது அந்த வரலாற்றின் தழும்புகளுக்குப் போடப்படும் மருந்து போல. இது சமூக நீதி மட்டுமல்ல; வரலாற்றுப் பிராயசித்தம். இந்தத் திட்டம்தான், இராமாமிர்தம் அம்மையாரின் வாழ்க்கையை, அவரின் முழு ஆளுமையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற அவசியத்தை ஆழமாய் எனக்குள் விதைத்தது.

இராமாமிர்தம் அம்மையார் வாழ்ந்த இடங்களுக்குச் செல்வது, அவரின் சொந்தங்களைத் தேடிக் கண்டுபிடிக்க முயற்சிப்பதென எனது ஆய்வு விரிவடைந்து, தேடல் தீவிரமானது. அப்போது அமெரிக்காவில் இருந்த இராமாமிர்தம் அம்மையாரின் கொள்ளுப் பேத்தி மூலமாக முதல் துப்பு எனக்குக் கிடைத்தது. அம்மையாரே கைப்பட பழைய எழுத்து முறையில் எழுதிய 16 பக்க குறிப்பு ஒன்று அவரிடமிருந்து கிடைத்தது. இதுதான் தேடலின் ஆரம்பப் புள்ளி. அவரின் கொள்ளுப் பேத்தி இன்னும் சில கூடுதல் தகவல்களையும் எனக்கு கொடுத்து உதவினார். பிறகு ஓய்வு பெற்ற பொறியாளரான, அம்மையாரின் பேரன் செல்வராஜ் என்பவரையும் தேடிக் கண்டுபிடித்துப் பேசினேன்.

பாட்டி இராமாமிர்தம் தேவதாசி முறையிலிருந்து பல பெண்களை மீட்டுத் திருமணம் செய்து வைத்ததையும், இது பெரியாரின் கொள்கையும் கூட என்பதையும் பதிவு செய்ததுடன், தன் பாட்டி செய்த சீர்திருத்தங்களை, பல்வேறு தகவல்களை, தன் குடும்பத்தின் பெருமையாக நினைத்து நிறையவே பகிர்ந்து கொண்டார். இவற்றையும் சேகரித்து அம்மையார் குறித்து விரிவான புத்தகத்தை எழுதினேன். ஒரு சிறு பத்திரிகை துணுக்கில் ஆரம்பித்த என் வேலை, உடல்நல பிரச்னை, பொருளாதாரச் சிக்கல்னு, பல தடைகளை கடந்து கிட்டத்தட்ட 20 வருடம் நீடித்து, ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் வாழ்வும் பணியும்’ என்கிற எனது புத்தகம் பல்வேறு தடைகளுக்குப் பிறகே வெளியானது.

தமிழில் உருவான அம்மையாரின் வரலாற்றை ஆங்கிலத்தில் கொண்டு செல்வது உலக அளவில் அவரைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என பலரும் கருதவே, 2021-ல் பதவியேற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஆதரவில், மொழியாக்கப் பணி தொடங்கியது. பிராந்திய வரலாறுகளை மொழியாக்கம் செய்ய, மொழியறிவு மட்டும் போதாது. அந்தக் கலாச்சாரத்தையும் அரசியலையும் ஆழமாய் புரிந்துகொள்வதும் முக்கியம். அந்த வகையில், கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் பாரதி ஹரிசங்கர் இப்புத்தகத்தை ஆங்கிலத்தில், அதே உணர்வுடன் மிகச் சிறப்பாய் மொழியாக்கம் செய்திருந்தார்.

மொழியாக்கம் செய்யப்பட்ட அம்மையாரின் வரலாற்றுப் பிரதிகள், டெல்லியில் பெண்கள் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற வகையில் இயங்கி வரும், பிரபல பதிப்பகமான சுபான் புக்ஸ்(Zubaan Books) பதிப்பகத்திற்குச் செல்ல, அதனை இயக்கி வரும் பெண்ணிய எழுத்தாளர் ஊர்வசி புதாலியா, இவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வரலாறு அவருக்குப் புதியதாய் இருக்கவே, புத்தகத்தில் அதிகமான நபர்களின் பெயர்கள் இருப்பதாகவும், வட இந்திய வாசகர்களுக்கு இது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் பெயர்களைக் குறைக்கவும் கேட்டிருந்தார்.

புத்தகத்தில் இடம் பெற்றிருந்தவர்களின் பெயர்கள் நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்க வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடையவை. அவற்றை நீக்கினால் வரலாறு சிதைந்து விடும். வரலாற்றின் ஆணி வேர்களை நீக்குவது, சீட்டுக்கட்டில் நடுவே ஒரு அட்டையை உருகுவதற்குச் சமம். ஒரு முற்றுப்புள்ளியைக் கூட நீக்க சம்மதிக்க மாட்டேன் என திட்டவட்டமாய் நான் மறுக்க, இதற்குத் தீர்வாய் பெயரடைவு தயாரித்து (Glossary) புத்தகத்தின் இறுதியில் சேர்க்கப்பட்டது.

இதுவொரு மொழிபெயர்ப்பு புத்தகம் என்பதைவிட, மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததில் இருந்த அரசியல், உணர்வுப் பூர்வமான போராட்டங்கள், தனிநபரின் அசைக்க முடியாத உறுதியென, ஒரு பிராந்தியப் போராளியின் கதை, புத்தகம் வெளியான பிறகே, தேசிய அளவில் விவாதிக்கப்பட ஆரம்பித்தது.

ஒரு நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த ஒரு தமிழ் போராளியோட குரலை இன்னைக்கு உலகம் முழுக்க ஒலிக்க வச்சுருக்கேன். மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரை பத்தி ஆய்வு செய்ய விரும்புற யாருக்கும் இந்தப் புத்தகம் ஒரு தவிர்க்க முடியாத தொடக்கப்புள்ளி; ஒரு ஆதார நூல்.’’

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்