நன்றி குங்குமம் தோழி
பொதுவாக ஒரு ஓட்டலுக்கு சென்றால், கூட்டம் அதிகமாக இருந்தால் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். அவ்வளவுதான். ஆனால், சென்னை தி.நகரில் உள்ள கிராண்ட் ஜி.ஆர்.டி ஓட்டலில் ‘த கோட் பை ஸ்டீம் அண்ட் விசில்’ என்ற பெயரில் இயங்கி வரும் உணவகத்திற்குள் செல்ல வேண்டும் என்றால் ரகசிய பாஸ்கோட் சொல்ல வேண்டும். அதை கூறினால் தான் உள்ளே அனுமதிப்பார்கள். இதுகுறித்தும் அங்கு வழங்கப்படும் வித்தியாசமான உணவுகள் குறித்தும் பகிர்ந்தார் அந்த ஓட்டலின் தலைமை சமையல் கலைஞர் மற்றும் சமையல் இயக்குநரான செஃப் சீதாராமன் பிரசாத்.
‘‘மக்களுக்கு புதுமையாக ஒரு விஷயத்தை சொன்னால் அதை விரும்புவார்கள். சொல்லப்போனால் அதையே கதை வடிவத்தில் கூறும் போது அவர்களின் ஆர்வம் அதிகரிக்கும். குறிப்பாக ஒரு உணவுக்கான கதையினை மக்களுக்கு அறிவிக்கும் போது விரும்பி சாப்பிட வருகிறார்கள். அதைத்தான் நாங்க எங்களின் உணவகத்தில் செய்திருக்கிறோம். இந்த உணவகம் அமைக்க ஒரு குட்டிக் கதை உள்ளது. 1940களில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.
மக்களுக்கு ஒன்றை தடை செய்யும் போது அதை அடைய பல விஷயங்களை சிந்திப்பார்கள். அவ்வாறு யோசித்தவர்கள் ரகசியமாக மதுவினை விற்க ஆரம்பித்தார்கள். ெவளியே பார்க்க சாதாரண டீக்கடை, டெய்லர் கடை போல் இருக்கும். ஆனால், அந்த கடைக்குள் மற்ெறாரு சிறிய உணவகம் அமைக்கப்பட்டிருக்கும். அங்கு மதுவினை விற்பனை செய்தார்கள். இதனை தெரிந்தவர்கள் அங்கு நண்பர்களுடன் சென்று தங்களின் பொழுதினை கழிப்பார்கள். அதை மனதில் கொண்டுதான் நாங்க இந்த உணவகத்தை கொஞ்சம் வித்தியாசமாக அமைத்திருக்கிறோம்.
இந்த உணவகத்திற்கு நேரடியாக செல்ல முடியாது. அதற்கென்று சில சீக்ரெட் முறைகளை அறிமுகம் செய்திருக்கிறோம். முதலில் உணவகத்திற்கு செல்ல ஆன்லைனில் புக்கிங் செய்ய வேண்டும். அப்போது ஒரு சீக்ரெட் வார்த்தை அவர்களின் செல்போனிற்கு குறுஞ்செய்தியாக கொடுக்கப்படும். அதை சொன்னால்தான் உணவகத்தின் கதவு திறக்கப்படும். சுமார் 30 நபர்கள் இங்கு அமர்ந்து சாப்பிடக்கூடிய வகையில் இதனை மிகவும் அழகாக அமைத்திருக்கிறோம். இந்த உணவகத்தின் சிறப்பம்சமே வெளியே இருந்து பார்க்கும் போது ஒரு டெய்லர் கடை போல் இருக்கும். மேலும், இந்த உணவகத்தில் மற்றொரு சிறப்பம்சம் அங்கு வழங்கப்படும் உணவு. இதற்காக நாங்க பல ஆய்வுகளை மேற்கொண்டு இருக்கிறோம்.
பொதுவாக அனைத்து உணவகத்திலும் வழங்கப்படும் உணவுகளை இங்கு கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். அதனால் ஸ்மால் பைட்ஸ் முறையில் உணவினை அறிமுகம் செய்திருக்கிறோம். நம்முடைய மக்கள் விரும்பும் சுவையில் இருக்க வேண்டும், அதே சிறிய பிளேட்களில் நிறைய உணவுகளை கொடுக்க திட்டமிட்டோம். ஒரு உணவினை இரண்டு நபர்கள் தாராளமாக ஷேர் செய்யலாம், மேலும், நான்கு ஐந்து உணவுகளை ஒரே நேரத்தில் சுவைக்கலாம். இதற்காகவே ஒவ்வொரு உணவினையும் பார்த்து பார்த்து கொடுத்து வருகிறோம்’’ என்றவர், அங்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து விவரித்தார்.
‘‘பள்ளிக் காலங்களில் அம்மாக்கள் ஸ்கூல் டிபன் பாக்ஸில் புளியோதரை கட்டித் தருவார்கள். எத்தனை கலவை சாதம் இருந்தாலும் புளியோதரையை மட்டும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் சுவை அலாதியானது. புளியோதரைக்கு துவையல், சாம்பார், தயிர்வடை என பலவற்றையும் சேர்த்து சாப்பிடுவார்கள். எல்லோரும் விரும்பும் புளியோதரையை ஒரு புதுவிதமாக கொடுக்க விரும்பினோம். அப்படி உருவானதுதான் புளியோதரை அரான்சி. புளியோதரையை சிறிய பந்துகளாக உருட்டி, மாவில் நனைத்து, எண்ணெயில் பொரித்து அதன் மேல் கன் பவுடர் தூவி தருகிறோம். அடுத்து மசாலா நாச்சோஸ்.
பொதுவாக இந்த உணவு மொறுமொறுவென்று மட்டுமே இருக்கும். மொறுமொறு மற்றும் மிருதுவாகவும் இருக்க வேண்டும் என்று இந்த மசாலா நாச்சோஸினை அறிமுகம் செய்திருக்கிறோம். பலவிதமான சால்சாவுடன் சேர்த்து சாப்பிடும் போது ஒன்று, இரண்டு என நம்மை அறியாமல் சுவைக்க தோன்றும். அடுத்து அசைவ கிரில் பிளாட்டர். இதில் இறைச்சி மற்றும் கடல் உணவுகள் இரண்டுமே தருகிறோம். நான்கு பேர் சேர்ந்து சாப்பிடக்கூடிய பிளாட்டர் உணவு. குண்டூர் காலிஃப்ளவர் ஃப்ரையும் இங்கு ஃபேமஸ்.
எங்களைப் பொறுத்தவரை சிம்பிளாகவும் உடன் ஒரு பர்சனல் டச் இருக்க வேண்டும். மேலும், இங்கு சாப்பிடக்கூடிய உணவுகள் உடலை பாதிக்கக்கூடியதாக இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். மதிய உணவு சாப்பிட்டால் இரவு பசிக்க வேண்டும். ஒவ்வொரு உணவினையும் பார்த்து பார்த்து வடிவமைத்திருக்கிறோம். ஒரு உணவினை பல டிரையல் முறையில் செய்த பிறகுதான் அது மெனுவில் இடம் பெறும். சில உணவுகள் சரியாக வராது, அதனை நாங்க எங்களின் மெனுவில் சேர்ப்பதில்லை. உணவின் சுவை ஒரு பக்கம் என்றால் அதனை பரிமாறும் விதமும் அழகாக இருக்க வேண்டும்.
உணவினை நாவால் சுவைக்கும் முன் கண்களால்தான் முதலில் சுவைக்கிறோம். பார்க்கும் போது சாப்பிட வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்த வேண்டும். அதே சமயம் சுவையும் நன்றாக இருக்க வேண்டும். இதற்காக நாங்க எந்த சுவையூட்டிகளும் மற்றும் ரசாயனப் பொருட்களையும் சேர்ப்பதில்லை. உணவுக்காகவே தனிப்பட்ட ஆய்வுக் கிச்சன் இங்கு செயல்பட்டு வருகிறது. நான் பல இடங்களுக்கு பயணம் செய்வேன்.
அங்கு பிரபலமாக இருக்கும் உணவினை இங்கு நம்முடைய மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தயாரிப்போம். சில சமயம் அதில் மாற்றம் செய்து வேறொரு உணவாக கொடுப்போம். சமையல் கலையில் கிரியேட்டிவிட்டியும் முக்கியம். உதாரணத்திற்கு நாவல் பழத்தில் டெசர்ட், பானம் எங்க மெனுவில் உள்ளது. அதேபோல் பனம்பழத்திலும் இனிப்பு வகையினை அறிமுகம் செய்திருக்கிறோம். வித்தியாசமாக உணவினை கொடுக்கும் போது மக்களும் விரும்பி சாப்பிடுவார்கள்’’ என்றார் செஃப் சீதாராமன்.
தொகுப்பு : ஆ.வின்சென்ட் பால்


