Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குழந்தைகளுக்கான உணவில் சுவை, ஆரோக்கியம், தரம் முக்கியம்!

நன்றி குங்குமம் தோழி

‘‘குழந்தைகளுக்கு நல்லதொரு ஆரோக்கியமான, தரமான உணவு வழங்க வேண்டும். அதுவும் சுடச்சுட கொடுக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்’’ என்கிறார் இளம் பெண் தொழில்முனைவோரான மீனாட்சி ரமேஷ். சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி ரமேஷ். தி.நகர் பகுதியில் கிளவுட் கிச்சன் ஒன்றை துவங்கி பள்ளிக் குழந்தைகள், அலுவலகம் செல்வோர் மற்றும் வயதான முதியவர்கள் என பலருக்கும் ஆரோக்கியமான, சுவையான உணவினை சமைத்து அவர்களின் இல்லத்திற்கே அனுப்பி வைக்கிறார். பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். சிலர் தொழில்முனைவோராக செயல்பட்டு வருகிறார்கள்.

‘‘வேலைக்குச் செல்லும் பெண்களின் முக்கியமான தேவை தங்களின் குழந்தைகளுக்கு தினந்தோறும் ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவினை கொடுக்க வேண்டும் என்பதுதான். தங்களது அனைத்து வேலைகளுக்கு நடுவே சவாலாக இருப்பதும் இந்த சமையல் வேலைகள்தான். அந்தப் பளுவினை சற்று குறைக்கும் நோக்கத்திலேயே லன்ச் பவுல் ஒன்றை துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்’’ என்கிறார் மீனாட்சி.

குழந்தைகளுக்கான உணவினை தயாரித்து அளிக்க காரணம்?

நான் அடிப்படையில் எம்பிஏ பட்டதாரி. படித்து முடித்ததும் கார்ப்பரேட் அலுவலகத்தில் மனிதவியல் துறையில் இருபத்து மூன்று வருடங்களாக பணியில் இருந்தேன். அந்த சமயம் பல்வேறு நாடுகளுக்கும், நகரங்களுக்கும் பயணம் மேற்கொள்ள வேண்டி இருந்தது. அப்போதெல்லாம் எனக்கு சவாலாக இருந்தது என்றால் எனது குழந்தைகளுக்கான உணவு தேவைகள்தான். அந்த தேவை என்னவென்று எனக்கு நன்கு தெரியும். அதுதான் இது போன்ற கிளவுட் கிச்சனை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எழக் காரணம். இதற்கென கடந்த சில வருடங்களாக இத்தொழில் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளையும் முயற்சிகளையும் முன்னெடுத்து வந்தோம்.

அதில் கிடைத்த பல்வேறு அனுபவங்களை கொண்டே இந்த லன்ச் பவுல் துவங்கி கடந்த ஒரு வருடமாக வெற்றிகரமாக நடத்தியும் வருகிறேன். தற்போது இதற்கென ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்பது எங்களது கடின உழைப்பிற்கும், தரத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றி. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் எங்களது தொடர் சேவையினை பெற்று வருகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு. என்னோடு இணைந்து எனது கணவர் ரமேஷ் இத்தொழிலுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

குழந்தைகளுக்கான உணவுகளை தயாரிப்பின் தனிச் சிறப்புகள்?

நாங்கள் ஊட்டச்சத்து மற்றும் உணவு நிபுணரின் ஆலோசனையோடுதான் ஒவ்வொரு உணவினையும் தயாரித்து வருகிறோம். நிறைய ஆய்வுகளை மேற்ெகாண்டிருக்கிறோம். அதன் அடிப்படையில்தான் பல்வேறு ஆரோக்கியமான மெனுவை தயார் செய்தோம். அதனை தரமான செஃப்கள் மூலம் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும், சூடும் சுவையும் குறையாமல் குறித்த நேரத்தில் சமைத்து அனுப்புகிறோம். தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட செஃப்கள் மற்றும் உதவியாளர்களுடன் எங்களின் கிச்சன் பணி நடைபெற்று வருகிறது. அதே போன்று சமைக்க பயன்படுத்தப்படும் மளிகைப் பொருட்கள் மற்றும் எண்ணெய்கள் என அனைத்துமே தரமானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறோம்.

குழந்தைகளுக்கான உணவினை சமைப்பதால் கூடுதல் பொறுப்பினை உணர்ந்தே சமைத்து தருகிறோம். ஐம்பதிற்கும் மேற்பட்ட மெனுவை புழக்கத்தில் வைத்துள்ளோம். ஒரு நாளைக்கு ஐந்திற்கும் மேற்பட்ட வெரைட்டிகளை எங்களிடம் ஆர்டர் செய்யலாம். அதற்கான தகவல்களை வெப்சைட்டில் அப்டேட் செய்து வருகிறோம். அதற்கேற்ப சூடாக சமைத்து பள்ளிக்கே உணவுகளை அனுப்பி தருகிறோம்.

வாடிக்கையாளர்கள் சேவையினை எவ்வாறு மேற்கொள்கிறீர்கள்?

குழந்தைகளுக்கான உணவு என்பதால் மிகத் தரமான முறையில் பேக் செய்ய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறோம். கரும்பு சக்கையில் செய்யப்பட்ட உயர்தரமான அட்டைப் பெட்டிகளில் வாழையிலையை வைத்து மிக அழகாக, நேர்த்தியாக பேக் செய்து அனுப்புகிறோம். ஒரு பேக்கிங் பாக்ஸிற்கு கிட்டத்தட்ட பதினைந்து ரூபாய் செலவாகிறது. இருப்பினும் பிளாஸ்டிக் தவிர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம். இந்த பாக்ஸினை குஜராத்திலிருந்து வரவழைத்து பயன்படுத்தி வருகிறோம். அதே போன்று சூடான உணவுகளை உடனே டெலிவரி செய்ய எங்களுக்கென தனி டெலிவரி பார்ட்னர்களை வைத்துள்ளோம்.

அவர்கள் குறித்த நேரத்தில் பேக் செய்த உணவுகளை குழந்தைகளின் பள்ளிக்கு எடுத்துச் சென்று அளித்து விடுகிறார்கள். இதனால் பெற்றோர்கள் நிம்மதியாக தங்கள் அலுவலக மற்றும் தொழிலில் இயங்க முடிகிறது. குழந்தைகளுக்கான உணவுப் பட்டியலை ஒரு மாதத்திற்கு தேர்வு செய்து கொடுத்துவிடலாம். அதற்கேற்ப உணவுகளும் டெலிவரி செய்யப்படும்.

இதர பணிகள்...

குழந்தைகளுக்கான உணவு வழங்குவதில் ஆரம்பித்து, இன்று மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொறியியல் துறை சார்ந்தவர்கள், அலுவலகம் செல்வோர், இல்லத்தரசிகள் உட்பட பலருக்கும் உணவுகளை வழங்கி வருகிறோம். அதில் குறிப்பாக வயதில் மூத்தோர் பலர் எங்களது நிரந்தர வாடிக்கையாளர்களாக உள்ளனர். வழக்கமான மெனுவை தவிர விருப்ப உணவுகளையும் சிலர் ஆர்டர் செய்கிறார்கள். விசேஷங்களுக்கு ஆர்டரின் பேரில் சமைத்து தருகிறோம். பேக்கரி அயிட்டங்களையும் கேக், பிரௌனி, டோனட் போன்ற பல அயிட்டங்களையும் ஆர்டரின் பேரில் தயாரித்து அனுப்புகிறோம்.

எதிர்கால பணிகள்...

தற்போது சென்னை முழுவதும் எங்களது ஆர்டர்களும் டெலிவரியும் இருக்கிறது. மேலும், தமிழகத்தின் சில முக்கிய நகரங்களான கோயமுத்தூர், திருச்சி, திருநெல்வேலி என பல பகுதிகளில் இத்தொழிலை சிறப்பாக துவங்கி நடத்த வேண்டும் என்கிற திட்டங்கள் இருக்கிறது. அதேபோல் பெங்களூரில் சென்னையை போலவே உணவுக்கான தேவைகள் அதிகமிருப்பதால் அங்கொரு கிளை ஆரம்பிக்கும் முன்னெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். பள்ளி மற்றும் அலுவலகங்களில் பல்க் ஆர்டர் எடுத்து செய்ய திட்டமிட்டு இருக்கிறோம்.

நிறைய ஆரோக்கியமான மெனுவை அறிமுகப்படுத்த வேண்டும். எங்களுக்கு சவாலே குழந்தைகளுக்கான உணவு என்பதால் கூடுதல் கவனமாக சமைத்து தருகிறோம். உணவினை குறித்த நேரத்தில் டெலிவரி செய்ய வேண்டும். சவால்களை திறமையாக எதிர்கொண்டு சிறப்பாக முன்னெடுத்து செல்வதே சிறந்த தொழில்முனைவோருக்கான பணி.

தொழில்முனைவோராக விரும்பும் பெண்களுக்கு சொல்ல விரும்புவது?

எந்த ஒரு தொழிலில் இறங்கும் முன்பும் சந்தை நிலவரம், கள யதார்த்தம் போன்ற பல்வேறு காரணிகளை ஆராய்ந்து ஈடுபடுவது நல்லது. தரத்திற்கும் தனித்துவத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதால் பிரான்சிஸிகளை தருவதற்கு முன்வரவில்லை. தரமே எங்களது தாரக மந்திரம்’’ என பெருமிதமாக சொல்கிறார் பெண் தொழில்முனைவோர் மீனாட்சி ரமேஷ்.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்