நன்றி குங்குமம் தோழி
2026ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டிருப்பது நீண்டகால மனித உரிமை பணிகளுக்குக் கிடைத்த உலகளாவிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
சில பெண்களின் வாழ்க்கை அவர்களுக்கான பாதையை மட்டும் உருவாக்குவதில்லை. தங்களுக்குப் பின்னால் வருகிற ஆயிரக்கணக்கான பெண்களுக்கு புதிய வழிகளைத் திறந்துவிடுகிறது. அப்படிப்பட்ட பெண்களில் ஒருவர் நவநீதம் பிள்ளை. சுருக்கமாய் நவி பிள்ளை.
அமைதிக்கான நோபல் பரிசு என்றதுமே நம் நினைவுக்கு வருவது, இரண்டு நாடுகளுக்கு இடையே நடக்கும் போரை நிறுத்தியவர்களுக்கோ அல்லது ஆயுதங்களை கீழே போட வைத்தவர்களுக்கோ என்றுதானே? ஆனால், ஒரு நீதிபதிக்கு ஒரு சட்ட வல்லுனருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதே?
அமைதி என்பது வெறுமனே தெருக்களில் குண்டுகள் வெடிக்காமல் இருப்பது மட்டுமல்ல... ஒரு சாதாரண மனிதன் அவனது இனம், தோலின் நிறம், பாலினம், சமூகப் பின்னணி காரணமாக அமைப்பு ரீதியாக ஒடுக்கப்படாமல் நிம்மதியா முழுமையான மனித மாண்போடு வாழ்வதுதான் உண்மையான அமைதி.நிறவெறி சட்டம் மனிதர்களைத் தரம் பிரித்து, அவர்களின் அடிப்படை உரிமைகளை அடியோடு பிடுங்கி எறிய, உரிமைகள் மறுக்கப்பட்ட, வெள்ளையர் அல்லாத நவநீதம் பிள்ளை, உலக நாடுகளுக்கே மனித உரிமைகளை கற்பிக்கும் நோபல் நாயகியாக தன்னை உயர்த்தி, கொடூரமான அதிகாரத்தினை, கூர்மையான சட்டத்தின் வழியாக தகர்த்தார்.
சட்டம், நீதி, மனித உரிமைகள் ஆகியவற்றைத் தனது வாழ்க்கையின் மையமாகக் கொண்டு, அதிகாரத்துக்கு முன் உண்மையும் மனித மாண்புமே உயர்ந்தவை என்பதைத் தனது செயல்பாடுகளால் எடுத்துக்காட்டினார்.ஒரு மனிதன் எந்த பேருந்தில் ஏறணும்? எந்த பூங்காவில் நடக்கணும்? எந்தப் பள்ளியில் படிக்கணும்? எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறணும் என அனைத்தையும், தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த மக்களின் தோலின் நிறமே தீர்மானிக்க, இந்த அரசியல் சதுரங்க விளையாட்டில் வெள்ளை நிற காய்களுக்கு மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்கிற விதி எழுதப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 1941ல் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் பிறந்த, இந்திய தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளையின் குடும்பம், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்க, அவரின் தந்தையோ சாதாரண பேருந்து ஓட்டுனராக இருந்தார். ஒரு பக்கம் வறுமை. மறுபக்கம் அரசே அவர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்துகிற நிறவெறிச் சட்டம்.
நிறுவன மயமாக்கப்பட்ட ஒடுக்கு முறைகள் மனிதர்களை விரக்திக்கே தள்ளி, நமக்கு ஏன் வம்பு. கிடைத்ததை வைத்து வாழ்வோம் என்கிற மனநிலையை உருவாக்கும். ஆனால், நவநீதிம் பிள்ளைக்கு இது நேர்மாறாக வேலை செய்து, தர்க ரீதியான கேள்விகளை அதிகம் எழுப்பியது.
டர்பன் நகரில் உள்ள நடால் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் சட்டப் படிப்பை முடித்தவர், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சென்று மேல் படிப்பை முடித்தார். பிறந்த நாட்டில் பொதுக் கழிப்பறையைகூட சமமாக பயன்படுத்த முடியாத நிலையில் வாழ்ந்த ஒரு பெண், உலகின் மிக உயரிய சட்டக் கல்வி நிறுவனத்தின் வகுப்பறையில் அமர்ந்து கல்வி பயில்வது நவநீதம் பிள்ளையின் மிகப்பெரிய பாய்ச்சல்.
ஹார்வர்டு படிப்பு அவருக்கு உலகளாவிய சட்ட அமைப்புகள் எப்படி செயல்படுகிறது என்கிற மிகப்பெரிய திறப்பை கொடுக்க, படிப்பை முடித்து, அமெரிக்காவிலோ, ஐரோப்பிய நாடுகளிலோ சொகுசான கார்ப்பரேட் வழக்கறிஞராக செட்டிலாகாமல், தனது இருண்ட நிறவெறி தேசத்துக்கே திரும்பி, உரிமைகள் மறுக்கப்பட்ட தனது மக்களுக்கான ஆயுதமாக சட்டக் கல்வியை மாற்றினார்.
தென்னாப்பிரிக்காவின் நாடால் மாகாணத்தில் ஒரு சட்ட அலுவலகத்தை தொடங்கினார். சட்டத்துறை என்பது வெள்ளையர்கள் குறிப்பாக ஆண்களோட கோட்டையா இருந்த காலம் அது. அதில் ஒரு இந்திய வம்சாவளிப் பெண், அதுவும் ஒரு கருப்பின மற்றும் ஆசிய மக்களுக்காக வாதாடும் ஒரு பெண் அலுவலகம் திறக்க எதிர்கொண்ட தடைகள் ஏராளம்.அலுவலகத்தை வாடகைக்கு எடுக்க முயற்சித்த போதே, வெள்ளையின கட்டட உரிமையாளர் எவரும் நவி பிள்ளைக்கு இடம் கொடுக்க தயாராயில்லை. முதலில் ஒரு சிறிய இடத்தைப் பிடித்து அலுவலகம் தொடங்கினாலும், நீதிமன்றங்களுக்குள் அவருக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தது.
வெள்ளையின வழக்கறிஞர்கள் பயன்படுத்தும் முன்பக்க வாசலை அவர் பயன்படுத்த முடியாது. அவர்கள் பயன்படுத்தும் அறைகளையும் இவர் பயன்படுத்தக் கூடாது. வழக்கறிஞராக அவர் நீதிமன்றத்துக்குள் ஒவ்வொரு நாளும் நுழைவதே ஒரு போராட்டமாக இருந்தது.நிறவெறி அமைப்பை அவர் ஒரே நாளில் நீதிமன்றத்தில் வீழ்த்த முயற்சிக்காமல், அரசின் சட்டங்களில் இருக்கிற ஓட்டைகளையும் சட்ட நடைமுறைகளையும் அவர்களுக்கு எதிராக பயன்படுத்த தொடங்கினார்.
ஒரு கைதிக்கு தரப்பட வேண்டிய அடிப்படை மனித உரிமைகள் எங்கே? ஏன் குடும்பத்தாரை அவர்கள் பார்க்கும் உரிமை மறுக்கப்படுகிறது? ஏன் அவர்கள் வழக்கறிஞரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை? என்கிற அடிப்படை சட்ட கட்டமைப்பை கேள்வி கேட்க தொடங்கினார். ஆட்கொணர்வு மனுக்கள் மூலம் சிறைக்காவலர்களை நீதிமன்ற கூண்டில் ஏற்றி சிறை நடக்கும் மனித உரிமை மீறல்களை பொது பதிவேட்டில் கொண்டு வந்தார். வழக்குகளில் முழுமையாக வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை, சிறைச் சித்திரவதைகளை அரசாங்கத்தின் ஆவணங்களில் பதியச் செய்து, அதை சர்வதேச பிரச்னையா மாற்றுவதே அவரின் உத்தியாக இருந்தது.
நவி பிள்ளை கையில் எடுத்ததோ நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்கள் அடைக்கப்பட்டிருந்த ராபர்ன் தீவு சிறைக் கைதிகளின் உரிமைகளுக்கான போராட்டத்தை. இருட்டுக்குள்ள நடக்கும் மனித உரிமை மீறல்களை நீதிமன்றம் என்கிற வெளிச்சத்துக்கு கொண்டு வருவது கடினமான காரியமாக இருந்தாலும் அதனைத் தொடர்ந்து செய்தார்.கிட்டத்தட்ட மூணு தசாப்தங்களை அந்த அமைப்புக்கு வெளியே இருந்து ஒரு சம்மட்டியை கொண்டு அடித்தபடியே இருந்தார். ஆப்பிரிக்க கண்டத்தின் நிறவெறி சட்டங்களை மட்டுமல்ல, சர்வதேச குற்றவியல் சட்டங்களில் இருந்த ஓட்டைகளையும் தன் கூர்மையான அறிவால் தைத்து சரி செய்தார்.
அநீதி இழைத்தவர்கள் அதிகாரத்தில் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்கிற நவி பிள்ளையோட சமரசம் இல்லாத சட்டப் போராட்டம் காரணமாக, எந்த சட்ட அமைப்பால் அவரும் அவருடைய மக்களும் ஒடுக்கப்பட்டார்களோ அதே தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்றத்தின் முதல் கருப்பின பெண் நீதிபதியாக 1995ல் நவநீதம் பிள்ளை நியமிக்கப்பட்டார்.நவி பிள்ளையின் பயணம் தென்னாப்பிரிக்க எல்லையோடு நிற்கவில்லை. அதே ஆண்டு ருவாண்டா சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டு தீர்ப்பாயத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
நவி பிள்ளை புகழ் உலகம் முழுவதும் பரவி, 2003ல் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாகத் தேர்வானார். 2008 முதல் 2014 வரை ஐக்கிய நாடுகள் சபையில், மனித உரிமைகள் உயர் ஆணையராகவும் பொறுப்பேற்றார். இது உலகளாவிய மனித உரிமைகளை கண்காணிக்கும் உச்சபட்ச பதவியாகும்உலகின் எந்த மூலையில மனித உரிமை மீறல்கள் நடந்தாலும் அங்கு நடக்கும் போர் குற்றங்கள் மற்றும் அரசியல் அடக்கு முறைகளுக்கு எதிரா தொடர்ந்து கேள்வி எழுப்பியவர், இறையாண்மை என்பது ஒரு நாடு தனது மக்களை பாதுகாப்பதற்கான உரிமையே தவிர, அந்த மக்களை அரசே ஒடுக்குவதற்கும், கொல்வதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு உரிமம் கிடையாது என சர்வதேச அரங்கில் வாதிட்டார்.ஒரு அரசாங்கம் தன்னுடைய சொந்த மக்களை காப்பாற்ற தவறினால் அல்லது அரசே அந்த மக்களை அழித்தால் சர்வதேச சமூகம் அங்கே தலையிட்டுதான் ஆக வேண்டும் என்கிற கொள்கையையும் வலுப்படுத்தினார்.
தென்னாப்பிரிக்காவின் மகளிர் தேசிய கூட்டணியிலும் இணைந்து பெண்களுக்கு சட்டத்தில் உரிமைகள் இருப்பது மட்டும் போதாது... அச்சமின்றி அவர்கள் குரல் கொடுப்பதற்கான சமூகச்
சூழலும் உருவாக வேண்டும் என தொடர்ந்து களப்பணி ஆற்றினார்.மனித உரிமைகளுக்கான போராட்டம் என்பது ஒரே நாளில் நடந்து முடியும் புரட்சி கிடையாது. அது சட்டத்தின் வழியாக பல்லாண்டுகள் பொறுமையாகச் செய்ய வேண்டிய நெடிய உழைப்பு. ஒரு சாதாரண பேருந்து ஓட்டுனரின் மகளாகப் பிறந்து, தன் சொந்த நாட்டிலேயே ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு பெண், தனக்கு கிடைத்த கல்வியையும், அறிவையும், தன் தனிப்பட்ட முன்னேற்றங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி சுருக்கிக் கொள்ளாமல், ஒட்டுமொத்த மனித குலத்தின் உரிமைக்கான கேடயமாக மாற்றினார்.
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்


