Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மோட்டார் ஸ்போர்ட்ஸில் சாதிக்கும் தமிழ்ப்பெண்!

நன்றி குங்குமம் தோழி

சமீபமாக தாய்லாந்தில் நடைபெற்ற பைக் சர்க்யூட் ரேஸிங்கில் ஆசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார் தமிழ்நாட்டின், சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த தொழில்முறை மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் ஜெகதிஸ்ரீ குமரேசன். FIM நடத்தும் 2026 ஆம் ஆண்டிற்கான FIM Women’s cup of circuit racing போட்டிகள் செப்டம்பர் மாதம் நடைபெற்றன. பல்வேறு நாடுகளிலிருந்தும் பைக் பந்தய வீரர்கள் பங்கேற்ற நிலையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி தொழில்முறை மோட்டார் சைக்கிள் பந்தய விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்று மூன்றாம் இடத்தை பிடித்து நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் ஜெகதிஸ்ரீ . வெற்றிபெற்றதுக்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் பேசத் தொடங்கியதில்...

“இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி ஆசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று மூன்றாம் இடம் பிடித்தது பெருமையாக இருக்கிறது. இந்த ட்ராக்கில் ரேஸிங் செய்யும் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய பெண் நான்தான். எனக்கு உறுதுணையாக இருந்த என் கோச் முகமது ஹனிஃப் மற்றும் ஒன் ரேஸிங் டீம், எனக்கு உதவிய ஸ்பான்சர்ஸ், என் குடும்பத்தினருக்கும் இந்த சமயத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இப்போது மூன்றாம் இடம் பிடித்திருக்கிறேன், ஆனால், நான் மேலும் நிறைய சாதிக்க வேண்டும். 2019ம் ஆண்டு முதல் நான் தொழில்முறை மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக பயிற்சி செய்துகொண்டிருக்கிறேன்.

முதலில் எனக்கு பைக் ஓட்ட கற்றுக்கொடுத்தது அப்பாதான். ரோட்டில் எப்படி பைக் ஓட்ட வேண்டும் என்று நான் கேட்டபோது, எந்த தயக்கமும் இன்றி என்னை பைக் ஓட்டுவதற்கு பழக்கினார். பைக் ஓட்டுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒருமுறை யதார்த்தமாக, பைக் ரேஸிங் வீரர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்ததை பார்த்ததும் எனக்கு ஆர்வமாக இருந்தது. ஒன் ரேஸிங் (Oneracing) என்கிற அந்தக் குழுவினருடன் நானும் இணைந்து கொண்டேன். முறையான பயிற்சிகளுடன் என் ரேஸிங் பயணத்தை தொடங்கினேன்.

இது வழக்கமான பைக் ஓட்டுவதை போல் அல்லாமல், நிறைய நுணுக்கங்களுடன் கையாள வேண்டும். சில காலம் பயிற்சிகளுக்கு பின்னர் தொழில்முறை விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாரானேன். ஆனால், என் கல்லூரி தேர்வுகளுக்காக அவ்வப்போது இடைவேளை எடுத்தேன். தீவிரமான பயிற்சி பெற்று மோட்டார் சைக்கிள் பந்தய போட்டிகளில் பங்கேற்று, இதுவரையில் நான்கு முறை தேசிய அளவிலான போட்டிகளில் நேஷனல் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளேன். எனக்கு 22 வயதாகிறது. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தற்போது முழு நேரமாக ப்ரொஃபஷனல் ரேஸிங் செய்து வருகிறேன்” என்றார்.

பலருக்கும் ரேஸிங் மீதான பயம் மற்றும் தவறான கண்ணோட்டம் இருப்பதை குறிப்பிடும் ஜெகதிஸ்ரீ , ரேஸிங் ஒரு முக்கியமான ஸ்போர்ட்ஸ்களில் ஒன்று என்கிறார். ‘‘ரேஸிங் என்றாலே பொதுவாக பெற்றோர்களுக்கு பயம் இருக்கத்தான் செய்யும். ஆனால், என் பெற்றோர் எனக்கு ஆதரவாக இருந்தனர். நம் நாட்டில் நம் மாநிலத்தில் பைக் ரேஸிங் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. ரேஸிங் என்றாலே பசங்க வேகமா பைக் ஓட்டிட்டு போறாங்க என்றுதான் நினைப்பார்கள். ஆனால், ரேஸிங் செய்யும் ஒருவர் பாதுகாப்பான கவசங்களுடன் முறையான பயிற்சி செய்தபின்தான் களமிறங்குவார். தொழில்முறை மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் எல்லாம், முறையான பெர்மிட் வாங்கி, முன்னேற்பாடுகள் மற்றும் அதற்கேற்ற வசதிகளுடன்தான் நடைபெறும். எனவே ரேஸிங் பற்றிய கண்ணோட்டம் மாறவேண்டும். ஒவ்வொரு நாளும் நாம் பயிற்சி எடுப்பதன் பொருட்டு திறமையுடன் பைக் ரேஸிங்கை கையாள முடியும்.

நடிகர் அஜித் கார் ரேஸிங் செய்வதால், அதுபற்றி எல்லோருக்கும் பரவலாக தெரிகிறது. ஆனால், பைக் ரேஸ் பற்றிய விழிப்புணர்வு குறைவுதான். இப்போதுதான் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பற்றி கொஞ்சம் தெரிய ஆரம்பிக்கிறது. இது ஆண்கள் அதிகம் உள்ள ஒரு துறை. ஆனால், என்னுடைய டீமில் உள்ள எல்லோரும் எனக்கு உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருக்கிறார்கள். நிதி ரீதியாக மட்டுமே எனக்கு சவால்கள் உள்ளன.

ஸ்பான்சர்கள் முன் வந்தால் உதவியாக இருக்கும். மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரொம்பவே பாதுகாப்பான ஸ்போர்ட்ஸ்தான். இதைப் பற்றின முறையான தகவல்களை தெரிஞ்சுக்கிட்டு அதை பரவலாக்கணும் அப்போதுதான் மக்களுக்கு மோட்டார் ஸ்போர்ட்ஸ் பற்றிய தெளிவு கிடைக்கும். முறையான பயிற்சிகள் எடுத்தால் யாராலும் இதை செய்ய முடியும்” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“நான் இப்போதுதான் இத்துறையில் வளர்ந்து வருகிறேன். மேலும் நான் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. மற்ற நாடுகளை சேர்ந்த வீரர்களுடன் போட்டியிடுவதே சவாலான அனுபவம்தான். ஏனெனில் அவர்கள் ப்ரீமியம் லெவலில் பயிற்சி செய்திருப்பார்கள். அவர்களின் நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ்களுக்கு நல்ல ஆதரவு இருக்கிறது. அதுமட்டுமின்றி அவர்கள் பயன்படுத்தும் பைக் டயர்ஸ், ரேஸ் மெஷின்ஸ் எல்லாம் ரொம்பவும் அட்வான்ஸ்டா இருக்கிறது.

அவர்கள் 7 முதல் 8 வயதிலேயே ரேஸிங் பயிற்சியை தொடங்கிவிடுகிறார்கள். நம் நாட்டில் 13 - 15 வயதினர்தான் ரேஸிங் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதில் பயிற்சி காலமே வேறுபடுகிறது. எனவே மற்ற ஆசிய நாட்டு வீரர்களுடன் போட்டியிடுவது சவால் நிறைந்ததாக உள்ளது. ஆன் ட்ராக்கில் போட்டியாளர்களாக இருந்தாலும், மற்ற நேரங்களில் நிறைய நுணுக்கங்களை ஒவ்வொருவரும் பகிர்வார்கள். இவ்வாறு நிறைய கற்றுக்கொள்ள முடியும். எனவேதான் இது ஆரோக்கியமான போட்டியாக இருக்கிறது.

நம் நாட்டிலும் மோட்டார் ஸ்போர்ட் ஸுக்கான ஆதரவு கிடைத்தால் திறன் பயிற்சிகளை மேம்படுத்த முடியும். சென்னையில் ரேஸிங் ட்ராக் உள்ளது. வாடகை அதிகம். லட்சக்கணக்கில் செலவாகும். எனவே நாங்கள் பயிற்சி செய்வதற்கு சிறிய கார்ட்டிங் ட்ராக் நோக்கி நகர வேண்டியுள்ளது. நான் இங்கிருந்து பெங்களூரு சென்றுதான் கார்ட்டிங் டிராக்களில் பயிற்சி செய்கிறேன். இது போன்ற சிரமங்களை தவிர்க்க நம் மாநிலத்திலேயே ட்ராக் வசதிகள் அமைக்கப்பட்டால் நன்றாக இருக்கும். நம் அரசும் மோட்டார் ஸ்போர்ட்ஸை ஆதரிக்க வேண்டும். மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளுக்காக எனக்கு ஸ்பான்சர்கள் கிடைத்து உற்சாகப்படுத்தினால், என்னால் மேலும் பல இலக்குகளை அடைய முடியும்” என்றார்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்