Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நம் கதவை தட்டும் சூப்பர் எல்நினோ!

நன்றி குங்குமம் தோழி

சூப்பர் எல்நினோ என்கிற வார்த்தையை தமிழ்நாட்டில் ஒரு சிலர் உச்சரித்து வந்த நிலையில், ‘பயமுறுத்த வரும் சூப்பர் எல்நினோ’, ‘பொசுங்கும் வாழ்வாதாரம்’, ‘பெரும் பீதியில் உலக நாடுகள்’என வெளிநாடுகளிலும் இது குறித்து அபாய மணியினை தொடர்ந்து அடித்து வந்தார்கள். ஆனாலும், நாம் இதனை கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. இதெல்லாம் அடுத்த தலைமுறை. அதற்கும் அடுத்த தலைமுறைக்கே வருமென அசட்டையாக நினைத்தோம்.

ஆனால், எல்நினோவின் விளைவுகள் இதோ தொடங்கிவிட்டன. இனி இது அடுத்த 18 மாதங்களுக்கும் நீடிக்கக்கூடும் என செய்திகள் வரும் நிலையில், வெயில் கொல்லும். சூப்பர் எல்நினோ கொல்லுமா? என்ன மாதிரிக் கொல்லும் போன்ற கேள்விகளுடன், சூழலியல் பாதுகாப்புக்கென தமிழகத்தில் இயங்கிவரும் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜனிடம் எல்நினோ மற்றும் சூப்பர் எல்நினோ குறித்து கேள்விகளை முன் வைத்ததில்...

எல்நினோ என்றால் என்ன?

என்சோ (ENSO - El Nino Southern Oscillation). அதாவது, பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலவும் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களை குறிப்பது. இதில் மூன்று நிலைகள் உள்ளன.

* எல்நினோ (கடல் வெப்பம் அதிகரித்தல்)

* லானினா (கடல் வெப்பம் குறைதல்)

* நியூட்ரல் பேஸ் (சராசரி வெப்பநிலை).

சூப்பர் எல்நினோ என்பது?

எல்நினோவில் மூன்று படிநிலைகள் இருக்கும். 0.6. மற்றும் 0.7 வரை வெப்பநிலை அதிகரித்தால் எல்நினோ. கிட்டத்தட்ட ஒன்றைத் தொட்டுவிட்டால் ஸ்ட்ராங் எல்நினோ. கடல்மட்ட வெப்பநிலை சராசரியை விட 1.5°C முதல் 1.8°C வரை அதிகரித்தால் அது ‘சூப்பர் எல்நினோ’.உதாரணத்திற்கு, 2015ம் ஆண்டு சூப்பர் எல்நினோ ஆண்டு. அப்போதுதான் சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதற்கு முன்பாக 1876ல் ஏற்பட்ட சூப்பர் எல்நினோவில் தமிழ்நாட்டில் ‘தாது வருடப் பஞ்சம்’ ஏற்பட்டு, மூன்றில் ஒருவர் உயிரிழந்தனர்.

சூப்பர் எல்நினோவால் வரும் அபாயங்கள்?

இது வெறும் சுற்றுச்சூழல் பிரச்னை மட்டுமல்ல... பொருளாதார பேரழிவும் ஆகும். 1876-ல் ஏற்பட்ட சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் சுமார் 50 மில்லியன் மக்கள் பஞ்சத்தினால் உயிரிழந்தனர்.தற்போது இந்தியாவிடம் போதிய உணவு இருப்பு, அதாவது, கிட்டத்தட்ட 600 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் கோதுமை உள்ளதால் பஞ்சம் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், இயற்கை சீற்றங்கள், திடீர் வெள்ளம் (Flash Floods), வறட்சி மற்றும் மிகத் தீவிரமான இடி, மின்னல் பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும். கடுமையான வெயில் மற்றும் வறட்சி நிலவும். இது அக்டோபர், நவம்பர் மாதங்களில் உச்சத்தை (Super El Nino status) தொட வாய்ப்புள்ளது.

சூப்பர் எல்நினோவால் ஏற்பட இருக்கும் பாதிப்புகள்?

இந்தியாவின் 75% மழைப்பொழிவைத் தரும் தென்மேற்கு பருவமழை குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. வறட்சிக்கு இடையே, மிகக் குறுகிய காலத்தில்

(உதாரணமாக 3 மணி நேரத்தில் 20 செ.மீ) அதிக மழை பொழிந்து திடீர் வெள்ளம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. சென்னை, நாகப்பட்டினம், கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகலாம்.

நம் இந்திய நாட்டில் 60 கோடி மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர். மழை குறைவால் நிலத்தடி நீர் பாதிப்படைந்து, வானம் பார்த்த பூமியான ‘மானாவரி’ பயிர்கள் சேதத்தைச் சந்திக்கும். மின்சாரத் தேவையும் பெருமளவு உயரும்.குறிப்பாக கட்டுமானத் தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள், தெருவோர வியாபாரிகள், டெலிவரி வேலை செய்கிற ‘கிக் வொர்க்கர்ஸ்’ (Gig workers) வாழ்வாதாரத்தை நேரடியாக இது பாதிக்கும். கடும் வெப்பத்தால் மக்களிடையே எரிச்சல், மனநிலை மாற்றங்கள் மற்றும் மோதல்களும் அதிகரிக்கும்.

எல்நினோவுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள்?

ஜூன், ஜூலையில் தொடங்கி 18 மாதங்கள் வரை கூட நீடிக்கலாம் என்பதால் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். காலை 11 மணி முதல் மாலை 3:30 மணி வரை தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். தாகம் இல்லாவிட்டாலும் அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.சென்னை போன்ற பெருநகரங்கள் 80 சதவிகிதமும் கான்கிரீட் மயமாக்கப்பட்டு விட்ட காரணத்தால், வீட்டைச் சுற்றி மணல் பரப்பு, நகர்ப்புறக் காடுகளை (Urban Forestry) உருவாக்கி ‘மைக்ரோ கிளைமேட்’ சூழலை ஏற்படுத்த வேண்டும். கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள சமுதாயக் கூடங்களை திறந்து வைத்து, கட்டுமானத் தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிகள், கிக் வொர்க்கர்ஸ் ஓய்வெடுக்கவும், தண்ணீர் குடிக்கவும் ஏற்பாடுகளை செய்தல் வேண்டும்.

வெப்பமண்டல மாநிலமான நம் தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகள் கோட்- சூட், டை மற்றும் ஷூ அணிவது தேவையற்றது என்பதால், பள்ளிச் சீருடைகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

எல்நினோவுக்கான அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்?

* அரசு உடனடியாக உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டி திட்டமிட வேண்டும்.

* நீர்நிலைகளை தூர்வாரித் தண்ணீரைச் சேமிப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

* மருத்துவமனைகளில் வெப்ப அலையால் (Heat waves) பாதிக்கப்படுவோருக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு பயிற்சி அளித்தல் வேண்டும்.

* தினக்கூலிகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிப்படைவோருக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணம் போல நிதி வழங்க வேண்டும்.

எங்கோ பல்லாயிரம் கிலோமீட்டர் தள்ளி பசிபிக் பெருங்கடலில் ஒரு டிகிரி வெப்பம் கூடினால், இங்குள்ள நம் நகரத்தில் வாழுகிற மனிதர்களின் கோபமும் வன்முறையும் அதிகரிக்கலாம் என்றால், மனிதர்கள் உணர்ச்சிகளுக்கும் இந்த உலகத்தோட தட்ப வெப்ப நிலைக்கும் நுட்பமான பிரிக்க முடியாத தொடர்பு இருக்கிறது என்பதும் தெளிவாகிறது. இயற்கையோடு நாம் எந்த அளவு பின்னிப் பிணைந்திருக்கிறோம் என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்