Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஏன் மாணவர்களை முழுமையான கலைஞர்களாக உருவாக்க வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

முத்தமிழ் வளர்த்த மதுரையில் வீணை, கர்நாடக சங்கீதம், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகிய அற்புதமான நான்கு கலைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார், 24 வயதே ஆன பிருந்தா. ‘பிரின்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் மியூசிக்’ என்ற பெயரில் இவர் நடத்திவரும் இசைப் பயிற்சி பள்ளியில் சிறுவர் கள் முதல் நடுத்தர வயதுள்ள பெண்கள் வரை பயிற்சி பெற்று வருகிறார்கள்.

‘‘என்னோட சொந்த ஊர் பரமக்குடி. அப்பா நகைத் ெதாழில் செய்து வருகிறார். அம்மா இல்லத்தரசி என்றாலும், தையல் கலை நிபுணர். வீட்டில் இருந்த படி உடைகளை தைத்து தருகிறார். ஒரு அக்கா, அவருக்கு திருமணமாகிவிட்டது.

நானும் அக்காவும் உயர் பள்ளி படிப்பிற்காக மதுரைக்கு வந்தோம். அதனுடன் இருவரும் முறைப்படி கர்நாடக இசை மற்றும் வீணை வாசிப்பில் பயின்ேறாம். அதில் பட்டமும் பெற்றிருக்கிறோம். இருவரும் சேர்ந்து கச்சேரிகள் எல்லாம் செய்திருக்கிறோம். எங்களை ‘வீணை இரட்டையர்கள்’ என்று அழைப்பார்கள்.

நான்கு வயதில் நான் கர்நாடக சங்கீதம் பயில ஆரம்பித்தேன். அதேபோல் ஏழாம் வகுப்பு படிக்கும் போது வீணையும் முறைப்படி பயில துவங்கினேன். அதை முழுமையாக முடித்து மாணவர்களுக்கு வீணை பயிற்சி அளித்து வருகிறேன். நான் மதுரையில் உள்ள அனைத்து புகழ்பெற்ற கோயிலிலும் வீணை கச்சேரி செய்திருக்கிறேன். தற்போது என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு அந்த வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறேன். அவர்கள் கச்சேரி செய்வதைப் பார்க்கும் போது மனசுக்கு அப்படி ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும்’’ என்றவர், கலைப்பணியில் சில தர்மசங்கடங்களையும் சந்தித்துள்ளார்.

‘‘என்னிடம் பயிலும் திறமையான மாணவர்களை தேர்வு செய்து கச்சேரிக்கு அழைத்து செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால், அதில் சிலருக்கு உடல் நலம் சரியில்லாமல் போயிடுச்சு. கடைசி நேரத்தில் என்ன செய்வதுன்னு அறியாது திகைத்து கலங்கி நின்றுவிட்டேன். உடனே என்னுடைய மற்ற மாணவர்கள் சிலரை அழைத்து அவர்களை கொண்டு கச்சேரியை சிறப்பாக நடத்தி முடித்தேன். அதேபோல் மறுமுறை வீணை கச்சேரிக்காக எல்லா ஏற்பாடும் செய்தாயிற்று. ஆனால், எனக்கு டைபாய்டு காய்ச்சல் வந்துவிட்டது.

நிகழ்ச்சியை ரத்து செய்ய முடியாது. காய்ச்சலுடன் அந்தக் கச்சேரியை சிறப்பாக முடித்தேன். பலரும் பாராட்டவும் செய்தார்கள். மற்ெறாரு முறை கச்சேரியில் வீணையில் உள்ள நான்கு கம்பியில் ஒன்று சட்டென்று அறுந்துவிட்டது. மூன்று கம்பிகள் கொண்டு வீணையை மீட்டி அனைவரையும் அசந்து போக வைத்துவிட்டேன். ஒரு முறை மதுரை கோயிலில் நடைபெற்ற என் வீணை கச்சேரியை ரசித்த ஒரு இளம் பெண் தன் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை எனக்க பரிசாக அணிவித்தார். ஆனால், அவர் நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர்.

அவர் வீட்டில் கஷ்டப்பட்டுதான் அந்த சங்கிலியை வாங்கிக் கொடுத்திருப்பார்கள். அதனால் நான் அந்தப் பெண்ணிடம் ‘உங்களின் பாராட்டே போதும்’ என்று அவர் அணிவித்த சங்கிலிைய அவருக்கே அணிவித்துவிட்டேன். நான் முறைப்படி மிருதங்கம் மற்றும் பரதம் பயிலவில்லை. ஆனால், என்னுடைய கலைப் பள்ளியில் அதில் திறமையானவர்களை என் மாணவர்களுக்கு குருவாக நியமித்திருக்கிறேன். என் மாணவர்கள் இங்கு அனைத்தும் பயின்று முழுமையான கலைஞர்களாக உருவாக வேண்டும்.

மேலும், இளம் பெண்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. ஆன்லைனிலும் வெளிநாட்டில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். அதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மேலும், வசதி இல்லாத குழந்தைகளுக்கு இலவச பயிற்சி அளித்து அவர்களையும் உயர்த்த வேண்டும் என பல எதிர்கால திட்டம் உள்ளது’’ என்றார் பிருந்தா.

தொகுப்பு: விஜயா கண்ணன்