Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சமூக சேவை, இலக்கிய பணி என் இரு கண்கள்!

நன்றி குங்குமம் தோழி

நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதிய எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்குவது மட்டுமின்றி மறைந்த தன் தந்தையின் நினைவாக ‘என்.கே.கிருஷ்ணன் மெமோரியல் டிரஸ்ட்’ அறக்கட்டளையை தொடங்கி அதன் மூலம் பல்வேறு சமூக சேவைகளையும் இலக்கிய பணிகளையும் செய்து வருகிறார், ஓய்வு பெற்ற வங்கி பணியாளரான ரோகிணி ஜெகன்னாதன். தன் சேவைகள் குறித்து அவர் மேலும் விளக்கியபோது...

“2012ல் என்.கே. கிருஷ்ணன் மெமோரியல் அமைப்பு தொடங்கப்பட்டது. என் தந்தையின் திடீர் மறைவுக்குப் பிறகு, வீட்டில் அவர் சேகரித்து வைத்திருந்த சுமார் 10,000 அரிய புத்தகங்களை பாதுகாக்கவும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்தவும் இந்த அறக்கட்டளை உருவாக்கினோம். தற்போது இந்த அறக்கட்டளை தனது 15-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துச் செயல்பட்டு வருகிறது. என் கணவர் ஜெகன்னாதன் அறக்கட்டளை நிறுவனராக பொறுப்பில் உள்ளார்.

நான் உடனிருந்து எல்லா உதவிகளையும் செய்து வருகிறேன். அறக்கட்டளையில் அன்னதானம், நூல் பதிப்பு, நான் எழுதிய புத்தகங்களை இலவசமாக வழங்குவது, சொற்பொழிவுகள் நிகழ்த்துவது, பெண்கள் மற்றும் முதியவர்களின் நலனில் அக்கறையோடு செயல்பட்டு பல நற்பணிகளை செய்து வருகிறோம். கிழக்குத் தாம்பரத்திலுள்ள வள்ளலார் சபையில் தொடர்ந்து இலவச அன்னதான நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சீர்காழியில் அக்குபிரஷர் சிகிச்சை முகாம் மற்றும் இலவசப் புத்தகங்கள் விநியோகம் போன்ற சமூக நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்களின் நலனுக்காகப் பல்வேறு உதவிகளையும் அறக்கட்டளை சார்பாக செய்து வருகிறோம். அறக்கட்டளையில் நடைபெறும் அன்னதானம், மற்ற நிகழ்வுகளின்போது நான் எழுதிய சில புத்தகங்களும் இலவசமாக வழங்கப்படுகிறது.

என் தாத்தாவின் பெயர் ரா.நாராயண ஐயங்கார். அவரை ரா.நா என்று அழைப்பார்கள். ஒரு பிரபல எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் திகழ்ந்தவர். இவர் எமர்சனின் கட்டுரைகளை

தமிழில் மொழிபெயர்த்ததோடு, ‘ஜெய்ஹிந்த்’, ‘ஹிந்துஸ்தான்’ மற்றும் ‘சுதந்திர சங்கு’ ஆகிய மூன்று முன்னணிப் பத்திரிகைகளின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர், பாபு ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜர் போன்ற தலைவர்களுடன் பரிச்சயமானவர். தியாகி ரா.நா.வின் மகன் வழிப்பேத்தி தான் நான். சுதந்திரப் போராட்ட அனுபவங்களையெல்லாம் அவர் எங்களுக்கு சொல்வார். என் தாத்தாவை தொடர்ந்து, நானும் எழுத்துப் பணியை தொடர்கிறேன்.

நான் வங்கி மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். கணிதம், மொழிபெயர்ப்பு, ஆன்மீகம், சொந்தக் கதைகள் மற்றும் ஈசாப் நீதிக்கதைகள் போன்ற சிறுவர் கதைகள் தொடர்பான பல புத்தகங்களை எழுதியுள்ளேன். இயக்குனர் மிஷ்கின் பங்கேற்ற விழாவில் ‘‘புத்தகங்களே சிறந்த நண்பர்கள்” என்ற கருத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தினோம். மேலும், அறக்கட்டளை சார்பில் வள்ளலார் குறித்து வீரரகு எழுதிய புத்தகமும் வெளியிடப்பட்டது. எண்களின் வரலாறு, பையன், எண்களின் சரித்திரம் போன்ற நான் எழுதிய நூல்களுக்கு தமிழ் வளர்ச்சி துறையால் பாராட்டு சான்றிதழும் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

‘சுதந்திரப் போரில் பங்குபெற்ற எழுத்தாளர்’ என்னும் தலைப்பில் என் தாத்தாவைப் பற்றி கட்டுரை எழுதி வெளியிட்டேன். வண்ண முகத்திரை, வான் நிலாவும் மண்ணுலக வாழ்வும் எனும் பெயரில் சோமர்செட் மாம் அவர்களின் நாவல்களை மொழிபெயர்த்துள்ளேன். இவ்வாறு நான் எழுதிய மற்றும் மொழிபெயர்த்து வெளியிட்ட எண்ணிக்கை நூற்றுக்கணக்கானவை. சிறுவர்களுக்காக பாட்டி சொன்ன கதைகள், பல நீதிக் கதைகளையும், சில சிறுகதைகளையும், சில ஆன்மிகக் கதைகளையும் என் சொந்த கற்பனையில், நான் வாழ்க்கையில் பார்த்தவற்றையும் சந்தித்தவர்களைப் பற்றியும் எழுதியுள்ளேன்.

என்னுடைய சமூக மற்றும் இலக்கியப் பணிகளுக்காகச் செஞ்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் எனக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. எனக்கு ஓய்வு கிடைக்கும் நேரத்தை எல்லாம் செலவிட்டு புத்தகங்களை எழுதியும், அவற்றை பரா மரித்தும், சமூக நலப் பணிகளை முன்னெடுத்தும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன்” என்றார்.

தொகுப்பு: ஆர். ஆர்