Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சமூக சேவைதான் வாழ்வின் நோக்கம்!

நன்றி குங்குமம் தோழி

சமூக சேவகி சந்தியா

ஏழை எளிய மக்களின் குறைகளை கண்டறிந்து, அவர்களின் வாழ்வியல் ஆதாயத்தை உருவாக்குவது, சிறு தொழில் பயிற்சிகள் அளிப்பது, தொடர்ந்து அவர்கள் தொழில்களை திறம்பட நடத்த உதவுவது, அவர்களுக்கு விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது, சாதித்த பெண்களுக்கு இலவசமாக விருதுகள் வழங்கி கௌரவப்படுத்துவது என்பதை கடந்த பல ஆண்டுகளாக செய்து வருகிறார் சென்னையை அடுத்த திருநின்றவூர் பகுதியை சேர்ந்த சந்தியா. திருத்தணி முதல் சென்னை வரை இவரால் பலரும் பயன் பெற்று வருகிறார்கள்.

மற்றவர்களின் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சி என வாழ்ந்து வரும் சந்தியா இவை அனைத்தையும் யாரிடமும் எந்த உதவியும் பெறாமல் தானே முன் நின்று சொந்த முயற்சியில் தன் கணவருடன் இணைந்து செய்து வருகிறார். சமூக சேவை செய்வதே வாழ்வின் நோக்கமாக வாழ்ந்து வரும் இவர் தனது சேவைகள் மற்றும் திட்டங்கள், அதற்கான செயல்பாடுகள் குறித்து நிறைய எதிர்கால திட்டங்களை வைத்திருக்கிறார்.

சமூக சேவைக்கான ஆர்வம்...

எனக்கு இயல்பிலேயே சமூக சேவை செய்வதில் ஆர்வம் இருந்தது. அதன் முதல் கட்டமாக ஏழைப் பெண்களுக்காக இலவச தொழிற்பயிற்சி வகுப்புகளை நடத்தினேன். இதன் மூலம் பல பெண்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தர முடிந்தது. இந்தப் பயிற்சியினால் இன்று வரை பெண்கள் பலனடைந்து வருகிறார்கள். பயிற்சி அளிப்பது மட்டுமில்லாமல், பொருட்களை தயாரிக்கவும் அதனை சந்தைப்படுத்துவது குறித்தும் உதவிகள் செய்து வருகிறோம்.

இந்தப் பயிற்சி அவர்களுக்கு ஒரு பக்கபலமாக இருந்து வருகிறது. நான் சென்னை செவ்வாப்பேட்டை அரிமா சங்கத் தலைவராகவும் செயல்பட்டு வருவதால், பெண்களுக்கான பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் சேவைகள் செய்ய மேலும் உந்துதல்கள் கிடைக்கிறது. எங்களின் சங்கம் வாயிலாக ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் இதர பொருட்களை வழங்கி வருகிறோம். இதனுடன் எங்களின் ட்ரீம்ஸ் அறக்கட்டளை வாயிலாகவும் கல்வி, மருத்துவம், சட்ட ஆலோசனைகள், இலவச டியூசன் வகுப்புகள் இயங்கி வருகிறது.

திருநின்றவூர் முதல் திருத்தணி வரை ஏறக்குறைய ஒவ்வொரு கிராமங்கள் என 120 கிராமங்களில் சுமார் அறுபது பேருக்கு இலவச தொழிற்பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறோம். இதில் பயன் பெற்ற பெண்கள் தற்போது தொழில் முனைவோராக செயல்பட்டு வருகிறார்கள். மேலும், கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு இலவச கறவை மாடு, விவசாயிகளுக்கு தேவையான உழவு மாடுகளும் வழங்கி வருகிறோம்.

அறக்கட்டளையின் நோக்கங்கள்...

எங்களின் முக்கிய நோக்கமே ஏழை மற்றும் ஆதரவற்றப் பெண்களுக்கு தேவைப்படும் தொழிற்கல்வி பயிற்சிகள் அளித்து அவர்களுக்கு நிலையான வருமானத்தை ஏற்படுத்துவதோடு வாழ்வாதாரத்தினை மேம்படுத்த வேண்டும். ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வியறிவு குறித்த தேவையான விழிப்புணர்வு தந்து அவர்களது வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட வழிவகை செய்ய வேண்டும். அதற்காகவே கடந்த 13 வருடங்களாக நானும் எனது கணவரும் உழைத்து வருகிறோம்.

எங்களது அறக்கட்டளை மூலமாக சட்ட ஆலோசனை, கல்வி மையம், தொழிற் பயிற்சி மையம், ஸ்போர்ட்ஸ் அகாடமி, மருத்துவ முகாம் அனைத்தும் இலவசமாக கொடுப்பது மட்டுமில்லாமல், கிராமத்து மக்களுக்கு சட்டம் குறித்து போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பெண்கள் தொழில் தொடங்க வங்கிகளில் கடனுதவி பெறவும் உதவுகிறோம்.

2011ல் இருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை முன்னெடுத்து வருகிறேன். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நேரத்தில் தினமும் 500 பேருக்கு உணவுகளை சமைத்து வினியோகம் செய்தோம். இவ்வாறு ஒவ்வொருவரின் தேவை அறிந்து அதற்கான நலத்திட்டங்களை எங்களின் அறக்கட்டளை சார்பாக செய்து வருகிறோம்.

நான் இந்த துறைகளில் வெற்றியடைய எனது கணவரும் எனது குடும்பமும்தான் முக்கியமான காரணம். வாழ்வின் எல்லா கட்டங்களிலும் ஏதேனும் தடைகளோ, பிரச்னைகளோ வரலாம். அதனை வெற்றிகரமாக உடைத்தெறிந்து சாதிக்க பெண்கள் முன்வர வேண்டும். ஒரு பெண் முன்னேறினால் அந்த வீடும் ஊரும் ஏன் நாடே முன்னேறி விடும் என்று கூறும் சந்தியா தணிகைவேல், மதர் தெரசா, சேவை செம்மல், கொற்றவை, ஸ்டார் ஐகான் போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.

தொகுப்பு: தனுஜா