நன்றி குங்குமம் தோழி
“சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்கள், ரீல்ஸ், நண்பர்கள், டிராவல் மெமரிஸ் இவைதானே இருக்கும்?” என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அந்தத் தளத்தை வேறு கோணத்தில் பார்க்கும் ஒரு புதிய தலைமுறை உருவாகி வருகிறது. தற்போது சமூக வலைத்தளம் என்பது வெறும் சோஷியல் நெட்வொர்க்கிங் செயலி மட்டுமல்ல... அது பலருக்கும் போர்ட்ஃபோலியோ, கேலரி, விசிட்டிங் கார்டு, மார்க்கெட்டிங் பிளாட்ஃபார்ம், பர்சனல் ப்ராண்டாகவும் செயல்படக்கூடிய ஒரு டிஜிட்டல் ஸ்பேஸாக மாறிவருகிறது.
இன்று ஒரு புகைப்படக் கலைஞர் தனது சிறந்த புகைப்படங்களை ஆல்பமாக வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல் ஓவியர் தனது படைப்புகளை கேலரியில் மட்டும் காட்சிப்படுத்த வேண்டியதில்லை. ஃப்ரீலான்ஸராக வேலை செய்பவர்கள் தங்களின் க்ளையண்ட்களை நேரில் சந்தித்து தனது திறமையை விளக்க வேண்டியதில்லை. அவர்களின் சமூக வலைத்தள பக்கங்களே அவர்களின் திறன்களையும் வேலைகளை யும் எடுத்துச் சொல்கிறது. உதாரணமாக, ஒரு புகைப்படக் கலைஞர் எடுக்கும் திருமண புகைப்படங்கள், போர்ட்போலியோக்கள், ஸ்ட்ரீட் போட்டோகிராபி, ஃபேஷன் ப்ராஜெக்ட்ஸ் என அவரின் படைப்புகளை தொடர்ந்து பகிரும் போது, அவரின் திறமை, ஸ்டைல் என அனைத்தையும் வெளிப்படுத்திடலாம்.
அவர் எந்த வகையான லைட்டிங் பயன்படுத்துகிறார், எந்தவிதமான புகைப்படங்களில் ஆர்வம் கொண்டிருக்கிறார் என்பதையும் ஒரு வாடிக்கையாளராலும் நிறுவனத்தாலும் சில நிமிடங்களில் புரிந்துகொள்ள முடியும். பயோடேட்டா உங்கள் திறமையை சொல்கிறது என்றால், சமூக வலைத்தள பக்கம் அதை நேரடியாகக் காட்டுகிறது. போட்டோகிராபி மட்டுமின்றி ஃபேஷன் டிசைனிங், பிலிம் மேக்கிங், இலஸ்ட்ரேஷன், மேக்கப், உணவு, ஃபிட்னஸ் என அனைத்து தொழில்களுக்கும் சமூக வலைத்தளம் குறிப்பாக இன்ஸ்டாகிராம் ஒரு போர்ட்ஃபோலியோவாக செயல்பட்டு வருகிறது.
உணவுத் துறையிலும் சமூக வலைத்தளங்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒரு உணவகத்தின் மெனுவில் உள்ள உணவின் பெயரைப் படிப்பதைவிட, அது தயாராகும் முறையை ஒரு அழகான ரீலில் பார்ப்பது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உணவுக்குத் தேவையான பொருட்களை தேர்வு செய்வது முதல் இறுதியாக ப்ளேட்டிங் செய்வது வரை அனைத்தையும் கன்டென்ட் ஆக மாற்ற முடியும். ஒரு சிறிய ஹோம் பேக்கர் கூட இன்ஸ்டாகிராம் மூலம் தான் தயாரிக்கும் கேக்ஸ் வகைகளை ஷோகேஸ் செய்து ஆர்டர்களை பெற முடியும். ஒரு ஓவியக்கலைஞர் தனது பெயின்டிங்கை விற்க முடியும்.
சமூக வலைத்தளங்கள் ஒரு கலைஞரின் படைப்புகளை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்லும் வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் பின்தொடர்பவர்கள் கூட நாளடைவில் வாடிக்கையாளர்களாக மாறுகின்றனர். வாடிக்கையாளரை நேரில் சந்தித்து, “நான் இப்படிச் செய்வேன்” என்று விளக்குவதற்குப் பதிலாக, ஒரு ரீல்ஸ் அவர்களை பற்றி தெளிவாக காட்டிவிடுகிறது. சமூக வலைத்தள பக்கங்கள் ஒரு மினி போர்ட்ஃபோலியோவாக மாறிவருகிறது.
சரியான டிஜிட்டல் காட்சிப்படுத்துதல் இருந்தால், வேலை அவர்களைத் தேடி வருகிறது. இன்று பல இளைஞர்கள் தங்களுடைய திறன்களை ஆன்லைனில் பகிர ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக குறைவான வேலை அனுபவம் கொண்டவர்கள் தங்களின் அனுபவத்தில் இது போன்ற ப்ராஜெக்ட்டுகளை செய்திருக்கிறேன் என்று குறிப்பிடும் போது ஒரு நல்ல அபிப்ராயத்தை உருவாக்குகிறது.
ஒருவருக்கு மூவாயிரம் பின்தொடர்பவர்கள் மட்டுமே இருந்தாலும், அதில் அவரின் வேலையை விரும்புபவர்கள் இருந்தால், அதுவே அவருக்கு மிகப்பெரிய பிசினஸ் வாய்ப்பாக மாறலாம்.
மாறாக, லட்சக்கணக்கான பின்தொடர்பவர்கள் இருந்தாலும், பிசினஸாக மாறவில்லை எனில் அதன் ப்ரொபஷனல் வேல்யூ குறைவாக இருக்கலாம். எனவே நம்பகத்தன்மை மற்றும் நிலைப்பாடு இரண்டுமே இதில் முக்கியம். இன்ஸ்டாகிராம் சிலருக்கு சோஷியல் மீடியா என்றாலும், சிலருக்கு அதையும் தாண்டி நன்மையளிக்கிறது. திறமையை வெளிப்படுத்துகிறவர்களுக்கு அடுத்த வேலை வாய்ப்பினை கொடுக்கும் திறவுகோலாகவும் இருக்கிறது.
தொகுப்பு: ஆர்.ஆர்


