நன்றி குங்குமம் தோழி
நான்கு சுவர்களுக்குள் ஒரு நந்தவனம்
வீடு வாங்க நாம் ஒரு பட்ஜெட் நிர்ணயித்திருப்போம். ஆனால், நாம் நினைத்ததை விட ஒரு மடங்கு அதிகமாக செலவழிக்க நேரிடும். முன்பெல்லாம் ‘சொந்த மண்’ இருக்க வேண்டும் என்றுதான் யோசித்தார்கள். ஆனால், காலத்தின் ஓட்டத்தில், அடுக்குமாடிகள் அழகழகாக காட்சியளிக்க ஆரம்பித்த பின், அதுவும் ஒரு குடும்ப அந்தஸ்தாக மாறிவிட்டது. இயந்திரமயமான காலகட்டத்தில், பணத்தை ஈட்டவே நாம் ஓடி உழைக்க வேண்டியுள்ளது. வீட்டை பராமரிப்பது என்பது மிகவும் கடினமாக ஆகிவிட்டது. அடுக்குமாடிக் கட்டடங்கள்
பராமரிப்பதில் சுமையை குறைப்பதால் வசதிக்கேற்ற இடங்களை, நம் போக்குவரத்திற்கு ஏற்றவாறு காணப்படும் இடங்களை தேடி படையெடுக்கிறோம்.
உங்கள் வீடு பெரியதா, சிறியதா என யாரும் கேட்பதில்லை. மாறாக வசதியாக உள்ளதா என்பதுதான் கேள்வி. இடம் சிறியதாக இருந்தாலும், அழகாக இருப்பதைத்தான் அனைவரும் விரும்புகிறார்கள். உதாரணத்திற்கு, புடவை விலை குறைவாக இருந்தாலும் அதற்காக அணியும் ஜாக்கெட் அதன் அழகை வெளிப்படுத்துவது போல, சிறிய பொருட்கள் கூட வீட்டை அழகுற மாற்றிவிடும். பொருட்கள் வைக்குமிடம், வைத்திருக்கும் விதம், அதன் தோற்றம் அனைத்திற்கும் சரியானதொரு ஈர்ப்பும் உண்டு.
வீட்டுக்கு வரும் விருந்தினரை மரியாதையுடன் அழைத்து ஒரு டம்ளர் நீர் தருகிறோம். அதே டம்ளரை ஒரு சிறிய ‘டிரே’யில் வைத்துத் தரும் பொழுது அது மிகவும் மரியாதைக்குரியதாக நினைக்கத் தோன்றுகிறது. இரண்டு பிஸ்கெட்டுகளை தட்டில் வைத்து தரும்போது கிடைக்கும் மரியாதை கையில் தரும்போது கண்டிப்பாக கிடைக்காது. அதுபோல் சிறிய சில விஷயங்களை செய்வதன் மூலம் நம் இருப்பிடத்தை அழகாக, ஆரோக்கியமாக, இன்பம் தரும் வகையில் மாற்ற முடியும்.
வீட்டிலுள்ள பெரிய பொருட்களோ அல்லது விலை உயர்வான பொருட்களோ மட்டும் போதிய அழகை தராது. ஒரு பொருள் சரியான இடத்தில் நம் கண் பார்வையில் படும்படி அமைந்து விட்டால் அது ‘பளிச்’சென காணப்படும். உதாரணத்திற்கு, ஒரு செயற்கை மரத்தினை அறையின் நடுவில் வைக்க முடியாது. மற்றப் பொருட்களின் அழகை மாற்றி விடுவதோடு, போக்குவரத்திற்கும் இடைஞ்சலாக இருக்கும். ஒரு ஓரத்தில் அலங்கரிக்கும் பொழுது, மரத்தின் அழகு கூடுவதோடு, அறையின் தோற்றமும் மாறும். பொறுமையோடு, ஒவ்வொரு பொருளையும் பார்த்துப் பார்த்து காட்சியாக்கலாம். நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எப்படி வைத்தால் பொருளின் அழகும், மதிப்பும் கூடும் என்கிற கணக்கீடு சரியானால் அமைப்பும் சரியாகும்.
அழகழகான உயரமான விளக்குகளை அழகாகக் காட்ட ஒரே சைஸில் இரண்டு ‘ஸ்டூல்’, அதன் மேல் அழகியதொரு நாப்கின் விரித்து அதன் மீது இருபுறம் விளக்குகளை வைக்கும் பொழுது அதன் மதிப்பு மேலும் கூடும். வெல்வெட் கார்ப்பெட்டுகள் மிதியடி வகையில் கிடைக்கின்றன. அவற்றை நம் ரசனைக்கேற்றபடி சுவற்றில் மாட்டலாம். செல்லுமிடமெல்லாம் பொருட்களை வாங்கி வந்து, அப்படியே அலமாரிகளில் அடக்கி விட்டால் அழகாகாது. நிறைய ஓவியங்களுடன், கலைத்திறனும் கொண்ட ஒரு அழகிய விளக்கை அலமாரிக்குள் மூடிவைத்து விட்டால் கெடாமல் அப்படியே இருக்கும். அதே வேலைப்பாடுகள் கொண்ட விளக்கை ஒரு சிறிய ‘டீபாய்’ அல்லது ‘ஸ்டூல்’ மேல் வேலைப்பாடுகள் கொண்ட துணி விரித்து வைக்கும் பொழுது, வருபவர் கண்களில் தனியாகத் தெரியவரும். பொருட்களை காட்சியாக்குவதை விட, எப்படிக் காட்சியாக்குகிறோம் என்பதுதான் முக்கியம்.
வீடு சுகாதாரத்துடன் இருப்பதும் அழகுதான். சில இடங்களில் ‘மியூசிக்’ கேட்பதற்காக பெரிய பெரிய ‘செட்’ அமைத்திருப்பார்கள். தூசி படக் கூடாது என்பதற்காக ‘டவல்’ போட்டு மூடிவைப்பார்கள். விலை உயர்ந்த ‘செட்’ வாங்கும் போது அதை காட்சிப்படுத்த கைவேலைப்பாடுகள் கொண்ட நாப்கின்கள் கொண்டு மூடலாம். கைவேலைப்பாடுகளுக்கு எப்பொழுதுமே தனி மவுசுண்டு. குறைந்த விலையில், மலிவானப் பொருட்களை கூட மதிப்பாக காட்சிச் செய்யும் அலங்கார முறைதான் இவை. ‘எம்பிராய்டரி’, ‘பெயின்ட்’, ‘கட்ஒர்க்’ என பல வடிவங்களில், டிசைன்களில் கிடைக்கின்றன.
முன்பெல்லாம் இவை வெறும் காட்டன் துணிகளில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், இப்பொழுது சிந்தடிக், பிளாஸ்டிக் போன்ற வகைகளிலும் வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன. ‘பிளாஸ்டிக்’கில் அழகிய ‘கட் ஒர்க்’ செய்யப்பட்டவை சாப்பாட்டு மேசைகளுக்காகவே கூட கிடைக்கின்றன. நம் அறையின் சுவர் நிறத்திற்கு ஏற்ற
வண்ணத்தில் தேர்ந்தெடுக்கலாம். ஆன்லைனிலும் கிடைக்கின்றன. வீட்டிற்குள் நம் இடம் அழகாக இருக்கிறதோ இல்லையோ ஆரோக்கியமாக இருக்க சிறிய பொருட்களின் மீது கூட நம் கவனம் பட வேண்டும். வீட்டை மாற்ற முடியாது. ஆனால், சிறிய பொருட்கள் மூலம் ஓரளவு அழகாகவும் சுகாதாரமாகவும் காட்ட முடியும்.
கமகமவென சாம்பார் மேலேயுள்ள கொத்தமல்லியும், தாளித்த கடுகும் சாப்பிட வேண்டும் என்று தூண்ட செய்யும். அதுதான் அழகான நாப்கின்களின் வேலையும். சில வீடுகளில் கிழிந்த சோபாவை மறைக்க ‘கட் ஒர்க்’ செய்யப்பட்ட டிசைன் துணிகளை போட்டு மூடிவைப்பர். ‘சோபா’ பின்புறம் போட ‘வெல்வெட்’ நாப்கின்களும் கிடைக்கின்றன. இதற்காக நாம் தினசரி பணம் கொடுத்து வாங்க வேண்டியதில்லை. தோட்டத்தில் கிடைக்கும் பூக்கள் இலைகளைக் கொண்டே தயாரித்து அலங்கரிக்கலாம்.
பெரிய சிலைகள் போன்ற பொம்மைகள், மரப்பொருட்கள், நம் புராதனப் பொருட்கள் அழகிற்கு வைக்கும் போதும் அப்படியே வைத்து விடாமல், அழகிய ஃபேன்சி துண்டு, சிறிய பெயின்ட் செய்யப்பட்ட பாய், வேலைப்பாடு - கட் ஒர்க் செய்யப்பட்ட நாப்கின் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். நல்ல படங்கள் வரையப்பட்ட ‘டேபிள் மேட்’டுகள் கூட கிடைக்கின்றன. மரத்தினாலான ‘ஷோகேஸ்’ என்றால் தட்டுக்களில் பொருட்களை அடுக்கலாம்.
பழைய வீடுகளாக இருந்தால், ‘சிமென்ட்’ தட்டுக்களாக இருக்கும். நிறைய அழகழகான பிரின்டில் பிளாஸ்டிக் ‘ஷீட்’டுகள் கிடைக்கின்றன. சுவர் வண்ணத்திற்கேற்றவாறு வாங்கி அளவெடுத்து சரியான ‘சைஸில்’ போடலாம். இப்பொழுதெல்லாம் அலமாரிகளில் ஒட்டும் படியான வசதி வந்துவிட்டது. எங்கு தேவையோ அங்கு நல்ல டிசைன், அழகிய வண்ணத்தில் ஒட்டவும் செய்யலாம். பழமையை புதுமையாகக் காட்டவும், அழகை சிறப்பாகக் காட்டவும் வழிகள் பல உள்ளன.
அழகிய நாப்கின்கள் விரிப்பதற்கு மட்டுமல்ல, விலையுயர்ந்தப் பொருட்களை மூடி அழகுபடுத்தவும் பயன்படலாம். ‘மியூசிக் சிஸ்டம்’ முதல் ‘டி.வி.’ வரை தூசிபடாமல் இருப்பதற்காக முன்பெல்லாம் பயன்படுத்தி வந்தோம். இப்பொழுதோ வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்திற்கும் ‘மூடும் கவர்’ வந்தாகிவிட்டது. குழந்தைகள் என்றாலே மேலும் கீழும் சாப்பாட்டை உதிரிப்போட்டுத்தான் சாப்பிடுவார்கள். டிஷ்யூ பேப்பரும் வாங்கும் மளிகைப் பொருட்களோடு சேர்த்து வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஒரு கண்ணாடி தட்டிலோ, ஒரு கண்ணாடி டம்ளரிலோ, பேப்பரை நாலாக முக்கோண வடிவில் அடுக்கி வைத்தால் பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.
ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில்தான் இப்படியிருக்கும் என்பதில்லை. நம் வீட்டு சமையலறை, சாப்பாட்டு மேசையும் இவ்வாறு அலங்கரிக்கலாம். சில வீடுகளில் வேலை முடித்து கையை அலம்பிவிட்டு, துடைக்க தகுந்த நாப்கின்கள், துண்டுகள் அடுக்கி வைத்திருப்பார்கள். டின்னர் செட் அடுக்குமிடத்தில் துணி நாப்கின்களை அடுக்கி வைத்து காட்சிப்படுத்தலாம். சிறு பிள்ளைகள் கூட துணி நாப்கின் விரித்து, அதில் தட்டு வைத்து சாப்பிடும் பொழுது வெளியில் விழாது. நாப்கின்களை துவைத்து மடித்து வைத்து விடலாம். பள்ளி செல்லும் பிள்ளைகள் சாப்பாட்டு நேரம் வந்தவுடன், முதலில் ஒரு துண்டை விரிப்பார்கள். பின் சாப்பாட்டு டப்பாவை திறந்து சாப்பிடுவார்கள். இத்தகைய பழக்கம் வெளியில் மட்டுமில்லாமல், வீடுகளிலும் சொல்லித் தரும் போது, அவர்களின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும். ஒரு இடத்தில் பயன்படுத்தும் நாப்கின்களை மற்றொரு உபயோகத்திற்காக எடுக்காமல், தனித்தனியாக வைப்பது நல்லது.
சமையலறையை பொறுத்தவரை, தரை துடைப்பதற்கு, பாத்திரம் துடைக்க, கை சுத்தம் செய்து கொள்ள என தனித்தனியாக வைத்துக் கொள்வதோடு, தினமும் அவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும். ‘மைக்ரோவேவ்’ போன்ற உபகரணங்களை அழகிய நாப்கின் போட்டு மூடி மேலே மலர்க் கொத்துகள் வைக்கலாம். மருந்து அலமாரிகள், எண்ணெய் வைக்கும் ‘டிரே’க்கள் போன்றவற்றில் கூட நாப்கின் விரித்து அடுக்கலாம். ‘திவான்’ போன்ற ‘செட்’களில் கீழ் முழுவதும் நல்ல சுருக்கங்கள் தொங்கும் படியான டிசைன்கள் அமைக்கலாம். வெவ்வேறு நிறங்கள் கொண்ட பர்னிச்சர்களாக இருப்பின், ‘ஆஃப் ஒயிட்’ அல்லது ‘கிரீம்’ நிறத்தில் ஒரே மாதிரியான விரிப்புகள் போட்டு ரம்மியமாகக் காட்ட முடியும். அதே போல அழகழகான குஷன் கவர்கள் கூட ‘வெல்வெட்’ முதல் அனைத்து ரகங்களிலும் கிடைக்கின்றன.
ஒரு சில வீடுகளில் பொருட்களே நிறைய இருக்காது. ஆனால், வீடு அழகாய் தோன்றும். விழாக்களில் பரிசு கொண்டு வரும் ‘ட்ரே’யில் கூட அழகாக அலங்கரித்து எடுத்து வருவார்கள். ஒரு புதிய கடை திறப்பு விழாவிலும் ரிப்பன் வெட்டுவதற்கான ‘கத்தரி’யைக் கூட, தட்டில் வைத்து மரியாதையுடன் வழங்குவார்கள். சிறிய பொருள்தானே என்று நினைக்காமல், கலையம்சத்துடன் நோக்கினால், ஒவ்வொன்றிலும் அழகு இருக்கிறது. காலத்திற்கேற்ற ‘கிச்சன் நாப்கின்’கள், அலங்கார நாப்கின்கள், பர்னிச்சருக்கான விரிப்புகள் என அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. சரியாக பயன்படுத்தவும் பராமரிக்கவும் தெரிந்தால் போதும்.
தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீ நிவாசன்


