Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கோடையில் சருமப் பராமரிப்பில் கவனம் தேவை!

நன்றி குங்குமம் தோழி

‘‘பெண்களும் அழகும் பிரிக்க முடியாத ஒன்று. முன்பெல்லாம் வெளியே வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமே அழகுக்கு முக்கியத்துவம் தந்து வந்தார்கள். ஆனால், இன்று வீட்டில் உள்ள பெண்களும் தாங்களும் அழகாக இருக்க வேண்டும் என்று மெனக்கெடுக்கத் துவங்கிவிட்டனர். காரணம், சோசியல் மீடியாவில் ஆதிக்கம் செலுத்தும் அழகு குறிப்புகளும் அழகு சாதனப் பொருட்களும்தான். இன்று பிரபல அழகு சாதன நிறுவனங்களும் விளம்பரம் செய்ய இன்ஃப்ளூயன்சர்களை பயன்படுத்துகிறார்கள்.

பிரபலங்கள் மற்றும் நடிகைகள் சொல்கிறார்கள் என்று தங்களுக்கு பொருந்தாத சருமப் பராமரிப்பு பொருட்களை வாங்குகிறார்கள். அதை பயன்படுத்துவதால், சரும பாதிப்பு மட்டுமில்லாமல் மலட்டுத்தன்மை, கிட்னி பிரச்னை, கேன்சர் போன்ற பலவிதமான நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும், அந்தந்த காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப நம்முடைய சருமத்தை பாதுகாப்பது அவசியம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்கிறார் ‘லாக்மே அகாடமி’ யின் மேலாளர் மாலினி.

சென்னையில் அண்ணா நகர், தி.நகர், அடையாறு ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து பயிற்சி மையங்களின் மேலாளராக இவர் பணிபுரிந்து வருகிறார்.‘‘நான் ஊட்டச்சத்து துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறேன். படிப்பு முடிச்சிட்டு பல்வேறு இடங்களில் உணவு ஆலோசகராக வேலை பார்த்து வந்தேன். 2018ல் நான் லாக்மேவில் பயிற்சிகள் குறித்து ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் துறையில் சேர்ந்தேன்.

லாக்மேக்கு இந்தியாவில் 132 கிளைகள் உள்ளன. சுதந்திரம் அடைந்த போது முன்னாள் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்திய பெண்கள் ஏன் வெளிநாட்டிலிருந்து அழகு சாதனங்களை வாங்க வேண்டும். அவை வெளிநாட்டைச் சேர்ந்த பெண்களின் நிறத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டவை. நாம் நம் இந்திய பெண்களின் நிறத்திற்கு ஏற்ப அழகு சாதனங்களை தயாரிக்க வேண்டும் என்று டாடா நிறுவனத்திடம் உரையாடியுள்ளார். அப்படி பெண் கடவுள் லட்சுமி பெயரில் உருவாகி இப்போது ‘லாக்மே’ என்ற பிராண்டாக மாறியுள்ளது. பின்பு டாடா நிறுவனத்தினர் இதனை இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்திற்கு விற்று விட்டார்கள்’’ என்று தன் பேச்சைத் தொடங்கினார் மாலினி.

‘‘இந்த நிறுவனம் பெண்களுக்கான அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வரவேற்புள்ள நம்பிக்கையான பிராண்ட். அதில் எங்களின் சலூன் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். ஆனால், நாங்க பெண்களை அழகுப்படுத்தும் சாதனங்கள் தயாரிப்பது மட்டுமில்லாமல் ஒரு பெண்ணை எவ்வாறு அழகாக மாற்றலாம் என்று பயிற்சியும் அளித்து வருகிறோம். அது குறித்து பலருக்கு தெரிவதில்லை. எங்க அகாடமியில் 15 நாட்கள் பயிற்சிகள் முதல் ஒரு வருட அட்வான்ஸ்டு காஸ்மெட்டாலஜி வரை கற்றுத் தருகிறோம்.

எட்டு தொழில்சார் படிப்புகளுடன் குறுகிய கால பயிற்சிகளும் உள்ளன. ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நாங்கள் பயிற்சி அளித்துள்ளோம். ஒரு வகுப்புக்கு 10 நபர்கள் மட்டுமே அனுமதிக்கிறோம். அப்போதுதான் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்த முடியும். எங்களிடம் பயிற்சி பெற்றவர்களில் பலர் சொந்தமாகவும் தனியார் நிறுவனங்களிலும் வேலை செய்றாங்க. வெளிநாடுவாழ் இந்தியர்களும் எங்களிடம் பயிற்சி பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று பார்லர் ஆரம்பித்துள்ளார்கள்’’ என்றவர், தங்களிடம் பயிற்சி பெற்றவர்களின் திறனை பரிசோதித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பினையும் ஏற்படுத்தி தருவதாக கூறினார்.

‘‘இன்று பெற்றோர் பலர் தங்கள் பிள்ளைகளுக்கு அழகியல் சார்ந்த பயிற்சிகளை பரிந்துரைக்கிறார்கள். அதற்கு சமூகவலைத்தளம் ஒரு முக்கிய காரணம். சில பெண்கள் கல்லூரியில் படிக்கும் போதே பகுதி நேரமாக அழகுக் கலையினை பயில்கிறார்கள். டாக்டர்ஸ், வழக்கறிஞர்கள், பொறியியல் பட்டதாரிகள், ஐ.டி ஊழியர்களும் இந்த துறைக்கு மாற முன்வந்துள்ளனர். சமீபத்தில் மேற்கண்ட துறையை சார்ந்த ஆண்கள் பலர் எங்க அகாடமியில் சிகை அலங்காரப் பயிற்சிகள் பெற்று தனிப்பட்ட முறையில் வளர்ச்சி அடைந்து வருகிறார்கள்’’ என்று பெருமையுடன் கூறும் மாலினி, மாணவர்களுக்கு ஆளுமை மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த பயிற்சியும் அளித்து வருகிறார்.

காஸ்மெட்டாலஜிஸ்ட் வர்ஷித்தா பேசும் போது, ‘‘நான் லாக்மேயில் காஸ்மெட்டாலஜி பயிற்சி முடித்தேன். தற்போது சருமப் பராமரிப்பு பயிற்சியாளராகவும் பணிபுரிகிறேன். பெண்கள் எல்லோரும் சருமப் பராமரிப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அதைத்தான் எங்களின் பயிற்சி மையத்தில் நாங்க வலியுறுத்தி வருகிறோம். பெண்கள் முதலில் தங்கள் சருமத்தின் தன்மையை அறிய வேண்டும்.

காலை எழுந்தவுடன் முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது எண்ணெய் பசையுடன் காணப்பட்டால் அவர்களின் சருமம் எண்ணெய் பசையான சருமம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல் வறட்சியாக இருந்தால் அது வறட்சியான சருமம் என்பதையும் அறியலாம். தற்போது கோடைகால விடுமுறையில் எல்லோரும் சுற்றுலா செல்வார்கள். குறைந்தபட்சம் பக்கத்தில் உள்ள இடங்களுக்காவது செல்வது வழக்கம். வெளியே செல்லும் போது ஆண், பெண் யாராக இருந்தாலும் கண்டிப்பாக சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். எனக்கு பழக்கமில்லை என்று ஒதுங்கினால் அதிக வெப்பத்தால் மங்கு உருவாக வாய்ப்புள்ளது.

இன்று மாசுபாடான சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்தால் ஓசோன் பாதிக்கப்பட்டு சூரிய வெப்பத்தில் புற ஊதாக் கதிர்களின் தாக்கம் அதிகம் உள்ளது. அதிலிருந்து எல்லோரும் கண்டிப்பாக தப்பித்து தங்கள் சருமப் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக கோடைகாலத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லோரும் அவரவர் வேலைக்கு ஏற்றார் போல் சன் ஸ்கிரீன் கிரீம்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். அலுவலகம் செல்வோர் கண்டிப்பாக 50 +++ SPF கிரீம்களை பயன்படுத்த வேண்டும். டெலிவரி மற்றும் எக்ஸ்கியூட்டிவ் வேலை செய்பவர்களுக்கு 80 ++ SPF கிரீம்கள். வீட்டுக்குள் இருப்பவர்களும் 25 ++ பயன்படுத்தலாம்.

வெளியில் செல்லும் போது ஒவ்வொரு தடவையும் பயன்படுத்த வேண்டும். சன்ஸ்கிரீன் பயன்பாடு மட்டுமில்லாமல் அனைவரும் சருமப் பராமரிப்பினை முறையாக பின்பற்ற வேண்டும். 18 வயதிற்குப் பிறகு சோப்பிற்கு பதில் ஃபேஸ்வாஷ் உபயோகிக்க வேண்டும். முகத்தை நன்கு கழுவிய பிறகு மாய்ஸ்ரைசர், சன் ஸ்கிரீன் அப்ளை செய்யலாம். இரவில் படுக்கும் முன் சருமத்திற்கான சீரம்களை பயன்படுத்தினால் சருமம் பாதிப்படையாமல் பார்த்துக் கொள்ளலாம்’’ என்றவர், அழகு சாதனங்களை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

‘‘மார்க்கெட்டில் பல்வேறு பிராண்டுகள் உள்ளன. அதன் நம்பகத்தன்மையை ்அறிந்து பயன்படுத்த வேண்டும். அதிக விலையுள்ள பிராண்டுகள் நல்ல பலனை தரும் என்பது அர்த்தமில்லை. குறைந்த விலையிலும் தரமான பொருட்கள் உள்ளன. சருமப் பராமரிப்பு என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்பதால் சரும நிபுணரின் ஆலோசனை பெற்று அவர்களின் சருமத்தின் தன்மைக்கேற்ப அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

நண்பர்கள் மற்றும் சோஷியல் மீடியாவை பார்த்து பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இது முற்றிலும் ஆபத்தானது. குறிப்பாக பெண்களுக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அதேபோல் உடனடியாக பலனை தரும் பொருட்களும் ஆபத்தானவை. அவை சருமத்திற்கு நிரந்தர பாதிப்பினை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. தரமில்லாத கிரீம்களால் அலர்ஜி ஏற்படுவது மட்டுமில்லாமல் உடல் உள்ளுறுப்புகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு சரும புற்றுநோய் ஏற்படவும், சிறுநீரக பாதிப்பும் ஏற்படக்கூடும். என்னுடைய அனுபவத்தில் பலர் அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்று அதிர்ச்சியூட்டினார் வர்ஷித்தா.

செய்தி: கலைச்செல்வி