Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பொக்கிஷம்!

நன்றி குங்குமம் தோழி

சூரியனின் உக்கிரத்தை கிரகித்துக் கொண்ட ஆற்று மணல் அதை கொதி மணலாய் பிரதிபலிக்க, ‘அப்பப்பா! என்ன வெயில்’ என்றவாறே உறவினர் கூட்டம் நடையில் வேகத்தைக் கூட்ட, ரஞ்சினியால் அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. காலையில் குளிர்ச்சியாய் தங்களை தாங்கிக் கொண்ட ஆற்றங்கரை மணல் வெயிலின் தாக்கத்தை எதிரொலிக்க, செருப்பணிந்த கால்கள் மண்ணில் புதைய, சூடு தாங்காமல் தவித்தது. கட்டியிருந்த கனமான பட்டுப்புடவை வியர்வையில் கசகசக்க, சந்தனப்பூச்சோடு தோளில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையோடும், வியர்வையோடும் திண்டாடித்தான் போனாள்.

“இந்த அய்யனார் ஏன் இந்த ஆற்றங்கரையில் வந்து கோயில் கொண்டார்? ஏதேனும் சாலையோரத்தில் அல்லது ஊருக்குள் அமர்ந்திருந்தால் என்னவாம்? இப்படி ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அதுவும் ரோட்ல இருந்து ரெண்டு கிலோ மீட்டர் தூரத்தில்தான் வந்து உட்காரணுமா? நடக்கவே முடியல. மூச்சு வாங்குது” - தனது ஆதங்கத்தை சற்றும் பிசகாமல் தன் நாத்தனார் உமா சொல்ல, முன்னே சென்ற அவளது அத்தை குரல் கொடுத்தாள்.“ஏண்டிம்மா? வயசுப் பொண்ணு உனக்கே மூச்சு வாங்குதா? நாங்கள்லாம் நாலஞ்சுமைல் தூரம் நடந்து வந்துதான் இவருக்கு பொங்கல் வெப்போம். இப்பவாச்சும் கம்மாக்கரை வரை சிமென்ட் ரோடு போட்டிருக்கு. சொகுசா கார்ல வந்து இறங்கிடுறீங்க! பூசை சாமான்களையும் காரே சுமந்திட்டு வந்திடு. அந்தக் காலத்துல காரும் கிடையாது. ரோடும் கிடையாது. ஆளுக்கொரு சாமானை கையில தூக்கிட்டு நடந்தே வந்திட்டு போவோம்.

இப்ப உள்ள குமரிகளுக்கு நடக்க அவ்வளவு கஷ்டமா இருக்கு. என்னத்த சாப்பிடுறீங்களோ தெரியல!” - தன் பெரிய சரீரத்தோடு மூச்சி வாங்க பேசிக்கொண்டே முன்னேறிய அத்தையிடம் வாயாடிக் கொண்டே உமாவும் சென்று விட, ரஞ்சினி தொடர்ந்து நடக்க முடியாமல் நின்று விட்டாள்.வெயிலின் தாக்கத்தால் நா வறண்டு போக, தோளில் சரிந்த குழந்தையை நிமிர்த்திக் கொண்டே, ெபரிது பெரிதாய் மூச்சை இழுத்து விட்டு சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள, சற்று முன்னரே குத்தப்பட்டிருந்த காது தாயின் தோளில் உரசிவிட, தூங்கிக் கொண்டிருந்த குழந்தை சத்தமாய் அழத் துவங்கியது.

குழந்தையின் அழுகுரலில் முன்னே சென்று கொண்டிருந்த கார்த்திக் திரும்பினான். தூரமாய் நின்றிருந்த மனைவியை கண்டதும் கையிலிருந்த பைகளை தம்பியிடம் ஒப்படைத்து விட்டு வேகமாய்

மனைவியை நெருங்கினான்.“என்ன ரஞ்சி நின்னுட்ட?”

“முடியலங்க! ரொம்ப டயர்டா இருக்கு. சரிடா சரிடா… அழாதே தங்கம்” - என்றவாறு குழந்தையை சமாதானம் செய்ய, அது இன்னும் அழுதது.“என் தங்கப்பட்டு எதுக்கு அழுது? அப்பாகிட்ட வாங்க. வாங்கடா தங்கம்?” - கார்த்திக் இருகரம் நீட்டி அழைக்க, கண்ணீரோடு தந்தையிடம் தாவியது.“காது வலிக்குது போலிருக்குங்க. இந்த பட்டு சாரி வேற சரசரன்னு இருக்கு. குழந்தைக்கு கஷ்டமாய் இருக்கு போலிருக்கு.”“என்கிட்ட தந்திருக்கலாமில்ல?”

“நீங்கதான் கடகடன்னு முதல் ஆளாய் கிளம்பிட்டீங்களே? புள்ளையோட இந்த வெயிலில் எப்படி நடப்பாள்னு யோசிச்சீங்களா? ஒரு வாட்டியாவது திரும்பிப் பார்த்தீங்களா?” - என்ற மனைவியின் வார்த்தையில் வலி தெரிய, குழந்தையை தோளில் கிடத்திக் கொண்டே மன்னிப்பு கோரினான்.“ஸாரிம்மா! நீ உமாகூட பேசிட்டு வர்றேன்னு நான் பாட்டுக்கு முன்னால போயிட்டேன். ஸாரி! பாப்பா என்கிட்ட இருக்கட்டும். நீ வா!” - என்ற கணவனோடு இணைந்து நடக்கையில் முன்னே சென்றவர்கள் குரல் கொடுத்தனர்.“என்ன கார்த்தி உனக்கு மட்டும் நிலா காயுதா? இவ்வளவு மெதுவா வர்றீங்க?”

“நீங்க நடங்க பெரியம்மா! நாங்க மெதுவா வர்றோம்.”“ம்… ம்… இந்தக் காலத்து புள்ளைகளுக்கு கூச்ச நாச்சமே இல்லாமல் போச்சு.”“ஏம்மா அப்படிச் சொல்ற?”“பின்னே? எனக்கு நாலு புள்ளைக. நாலு பேருக்கும் இதே குலதெய்வம் கோயில்ல வந்துதான் மொட்டை போட்டு காது குத்தினோம். அப்பல்லாம் இப்படி காரு வண்டி கிடையாது. வீட்ல இருந்தே நடந்துதான் வரணும். உங்கப்பன் வேட்டியை மடிச்சுக் கட்டிட்டு விறுவிறுன்னு நடந்து போயிடுவாரு. நான்தான் இடுப்புல ஒன்னு கையில ரெண்டுன்னு பிடிச்சிக்கிட்டு போவேன். இவளைப் பாரு. பெத்த ஒத்தப் புள்ளையை தூக்க முடியாமல் புருஷனைக் கூட்டி வெச்சிக்கிட்டா!”“ம்மா? குழந்தை அழுததாலதானே அண்ணன் போனாரு?” கையில் சுமையோடு கேட்ட மகனின் முகத்தில் இடித்தாள் சிவகாமி.

“புள்ள அழுதால் பெத்தவ பார்த்துக்க மாட்டாளா? பொதுமாடு மாதிரி உன் கையில சுமையை கொடுத்திட்டு ஓடுறான்? நாங்கள்லாம் புள்ள பெத்து வளர்க்கலையா? இப்ப உள்ளவளுக டிப்-டாப்பா உடுத்தணும். மகாராணி மாதிரி வலம் வரணும்னுதான் ஆசைப்படுறாளுக. புள்ளைக்கு சாப்பாடு கொடுக்குறது, வாயைக் கழுவி விடுறதுன்னு எல்லா வேலைகளையும் புருஷன்மார்தான் செய்யுறானுங்க.”“செய்யட்டுமே பெரியம்மா!

அவன் புள்ளைக்குத்தானே செய்யுறான்?”“பிறகு பொம்பளைங்க நாம எதுக்கு இருக்கோம்? இந்த வேலையைக் கூட செய்யமுடியாதவ என்ன பொம்பளை? நாங்கள்லாம் நாலஞ்சு புள்ளைகளை பெத்துகிட்டு வீட்டு வேலைகளை செய்யலையா? இப்ப உள்ளவளுங்க என்னமோ அதிசயமாய் புள்ளையப் பெத்துக்குற மாதிரி அலுங்காமல் குலுங்காமல் இருந்துக்கிறாளுக. இந்தப் பயல்களும் பொண்டாட்டிக்கு சேவை செய்துட்டே இருக்கானுங்க”-என்ற சிவகாமியின் பேச்சு தங்களை நெருங்கிவிட்ட ரஞ்சினியால் தடைபட்டது.

கூப்பிடும் தூரத்தில் தங்களை பின் தொடர்ந்தவர்களது காதில் தங்களது உரையாடல் விழாமல் இராது என்று தெரிந்தே பேசுகிறார் என்பதை அவள் உணராமல் இல்லை.“எம் புருஷன் எனக்கு உதவி செய்தால் உனக்கு ஏன் எரிகிறது? உன் புருஷன் உன்னை நான்கு பிள்ளைகளோடு நடக்கவிட்டால் நீ அவனை அல்லவா கேள்வி கேட்டிருக்க வேண்டும்? இது உனக்கும் புள்ளைதானே? ரெண்டு புள்ளைகளை தூக்கிட்டு வாவென்று சொல்லியிருக்க வேண்டும்!

அதை விடுத்து என்னை எதற்கு உறவினர் முன்னிலையில் விமர்சனம் செய்கிறாய்?” - எனக் கேட்கலாம்தான். ஆனால், தன் மாமியாரின் உடன் பிறந்தவள். வீட்டின் மூத்த பெண்மணி. தங்கையின் பேத்திக்கு முடிகாணிக்கை செலுத்துவதற்காக இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே குடும்பத்துடன் வந்து நிற்பவள். கோயில்… பூசை… வேண்டுதல்… விருந்து என எல்லாம் நல்லபடியாய் நடந்தேறிவிட்டது. இன்றோ நாளையோ ஊருக்குக் கிளம்பிவிடுவார்கள்.

இந்த சமயத்தில் ஏதேனும் கேட்டு வைத்து அனைவருக்கும் மனக்கசப்பை ஏற்படுத்துவானேன்? என்ற நினைப்போடு காதுகேளாதது போல் வந்தாலும் ரஞ்சினியின் மனதில் லேசாய் ஏக்கம் எழுந்தது.இத்தனை சம்பாஷணைகளும் தன் கணவன் காதிலும் விழுந்திருக்கும் தானே? என் மனைவியை ஏன் குறை சொல்கிறாய் பெரியம்மா என ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே? கோபமாக வேண்டாம்! குழந்தை என்னிடம் இருக்கத்தான் விரும்பும் பெரியம்மா என சாதாரணமாய் கூட சொல்லியிருக்கலாமே? மருமகள் கேட்டால் குற்றமாகிவிடும்! மகன் கேட்டிருக்கலாமே… என்னதான் அணுசரனையான கணவனாய் இருந்தாலும் உறவினர்கள் முன் தன்னை விட்டுக் கொடுக்காமல் இருக்கவில்லையே.

வீடு வந்து சேர்ந்த பிறகும் கூட ரஞ்சினியால் மனதை தேற்றிக்கொள்ள முடியவில்லை. அதிகாலையில் எழுந்தது முதல் தொடர்ச்சியாய் வேலை செய்தது… அலைச்சல் என அவளது உடலை வாட்ட குழந்தையின் பசியாற்றி விட்டு கூடத்தில் அமர்ந்து உறவினர்களோடு அரட்டையடித்துக் கொண்டிருந்த கணவனை நெருங்கினாள்.

“ஏங்க! குழந்தையை கொஞ்சம் பார்த்துக்கிறீங்களா?”“குடும்மா!”“ரொம்ப தலைவலிக்குதுங்க! ஒரு பத்து நிமிஷம் படுத்துக்கிறேன்.”“படுத்துக்கோ! தங்கக்குட்டி! அப்பாகிட்ட வாங்க” - என்றவாறே குழந்தையை வாங்கிக் கொள்ள, மீண்டும் குறைபட்டுக் கொண்டாள் சிவகாமி.“என்ன கார்த்தி? வீடு நிறைய உறவுக்காரங்க இருக்கோம். உன் பொண்டாட்டி என்ன படுக்கப் போறேன்னு சொல்றா. நீயும் போய் படுன்னு சொல்ற?”“ஏன் பெரியம்மா? இப்ப எதுவும் வேலையில்லையே? கோயில்லயே எல்லோரும் சாப்பிட்டுட்டோம்.

இனி ஈவினிங்தானே காபி டிபன் சாப்பிடப் போறோம்? பாவம்! காலையில நாலுமணிக்கெல்லாம் எழுந்துட்டா. டயர்டா இருப்பாளே. கொஞ்சம் தூங்கி எழட்டும்!”“நல்லா இருக்குப்பா! ரொம்ப நல்லா இருக்கு. உன்னை மாதிரி ஒருத்தன் கிடைச்சா எவதான் தலையில ஏறி உட்கார மாட்டாள்? பார்வதி! உம்புள்ள எப்படி இப்படி பொண்டாட்டி தாசனா மாறினான்?”-சிவகாமி கேலியாய் தன் தங்கையிடம் கேட்க, முகம் கன்றிப்போய் நின்ற மனைவியை மென்மையாய் ஏறிட்டான் கார்த்திக்.

“ரஞ்சி! நீ ேபாய் ரெஸ்ட் எடு.”

“இ… இல்…ல… இருக்கட்டும்!”

“போம்மா! ராத்திரி கூட நீ சரியாய்

தூங்கல. போய் படுத்துக்கோ! பாப்பா அழுதால் எடுத்திட்டு வர்றேன்.”

“ம்” - கலங்கத் துவங்கிய கண்களோடு ரஞ்சினி தன் அறைக்குள் நுழைய, குழந்தையை தோளில் இடத்தியவாறே சிவகாமியிடம் திரும்பினான் கார்த்திக்.“பெரியம்மா! நீங்க எனக்கு இன்னொரு அம்மா மாதிரி. அப்படித்தான் நினைச்சிட்டு இருக்கோம். தயவு செய்து இனியொரு முறை என் மனைவி மனசு சங்கடப்படுற மாதிரி பேசாதீங்க.”“என்ன? என்ன சொன்ன? பார்வதி! உம்புள்ள என்ன சொல்றான்னு கேட்டியா?”“அவன் சொன்னதில் எந்தத் தப்பும் இல்லையேக்கா?” - பார்வதி நிதானமாய் கேட்க, சிவகாமியின் முகம் சினந்தது.

“என்ன? தப்பு இல்லையா?”“ஆமாக்கா! எம்புள்ளைக்கு எல்லா நல்ல பழக்கங்களையும் சொல்லிக் குடுத்து வளர்த்திருக்கேன். உம் புருஷனும் என் புருஷனும் நம்மளை எப்படியெல்லாம் அலட்சியமாய் நடத்தினாங்கன்னு சொல்லியிருக்கேன். உனக்கு மனைவியாய் வரப்போற பொண்ணை எந்த சூழ்நிலையிலும் யார் முன்னிலையிலும் அலட்சியப்படுத்தாதே… அவமானப்படுத்தாதே… விட்டுக் கொடுக்காதேன்னு சொல்லித்தான் வளர்த்தேன். மனைவியை அவளது உணர்வுகளை மதிக்கச் சொல்லித்தந்தேன். எம்புள்ளை என் வார்த்தைகளை மதித்து வளர்ந்தவன். அவன் எதுவும் தப்பாய் பேசமாட்டான்.”“அப்போ… நான் பேசுறதை தப்புன்னு சொல்றியா?”“தப்புதான் பெரியம்மா!”“கார்த்திக்?”

“இது எங்க குழந்தை பெரியம்மா! இதை வளர்க்க வேண்டியது, பார்த்துக்க வேண்டியது நானும்தானே? குழந்தையை பத்து மாசம் அவ மட்டும்தானே சுமந்தாள் பெரியம்மா? அந்த பத்து மாதமும் அவ என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தாள்? வாந்தி, மயக்கம், தலைசுற்றல்னு அஞ்சு மாசம் சாப்பிடக்கூட முடியாமல் அவதிப்பட்டாள். ஊசி, மருந்து, மாத்திரை, ஸ்கேன், ப்ளட் டெஸ்டுன்னு எல்லாத்தையும் அவமட்டும்தான் தாங்கினாள். நாளாக ஆக நடக்கவோ, படுக்கவோ, தூங்கவோ முடியாமல் அவ எவ்வளவு கஷ்டப்பட்டாள்னு எனக்குத்தான் தெரியும். என்னால அவளுக்கு அனுசரணையாய் இருக்க முடிஞ்சதே தவிர அவ சுமையை பகிர்ந்துக்க முடியல.

இந்தக் குழந்தை… என் மனைவி எனக்கு தந்த பொக்கிஷம் பெரியம்மா. நாலு வருஷம்…நாலு வருஷம் நான் பட்ட கஷ்டத்துக்கும், ஏக்கத்துக்கும் என் மனைவி தந்த பரிசு. அதை நான் சந்தோஷமாய் சுமக்கிறேன் பெரியம்மா. இதுக்காகத்தானே நாலு வருஷமாய் ஏங்கினேன். குழந்தையை அவதான் குளிக்க வைக்கிறாள். சாப்பாடு கொடுக்கிறாள்! சுத்தப்படுத்துறா! ஏதோ கொஞ்ச நேரம் நான் பார்த்துக்கிறேன். இதுக்கு நீங்க தந்த பேரு பொண்டாட்டி தாசன்?உங்க மனசைத் தொட்டு சொல்லுங்க பெரியம்மா. நீங்க நாலு புள்ளைகளையும் இழுத்திட்டு நடந்து போகும் போது கையை வீசிகிட்டு முன்னால போன பெரியப்பாவை பார்த்து, “என்ன மனுஷன் இவன்’ னு உங்க மனசுக்குள்ள முனகியிருக்க மாட்டீங்க?” - கார்த்திக்கின் கேள்வியில் தடுமாறினாள் சிவகாமி.

“கண்டிப்பா உங்க மனசு கொதிச்சிருக்கும். என் மனைவி மனசு அப்படி கொதிக்கக் கூடாதுன்னு நினைச்சேன். சிசேரியன் பண்ணிய உடம்போடு எவ்வளவோ வேலை செய்கிறாள்? வீட்ல கெஸ்ட் வந்தால் எவ்வளவு வேலையிருக்கும்? அதையெல்லாம் முகம் சுளிக்காமல் செய்தாளே? அவளது உடல் நிலையையும் நான் பார்த்துக்கணுமே! போய் ரெஸ்ட் எடுன்னு சொன்னது அவ்வளவு பெரிய தப்பா? ஏன் பெரியம்மா இதே வார்த்தையை உமாவின் கணவன் அதாவது, உங்க மருமகன் சொல்லியிருந்தாலும் அவருக்கும் இந்தப் பெயரை வெச்சிருப்பீங்களா?”

“கார்…த்திக்?”“அதென்ன பெரியம்மா? மகளுக்கு உடம்பு நோகும்! மருமகளுக்கு நோகாதா?”“விடுண்ணா! அம்மா குணம் அவ்வளவுதான்! இப்படிப் பேசி பேசித்தான் அண்ணனும் அண்ணியும் தனியாப் போயிட்டாங்க. இன்னும் திருந்தின பாடில்ல!” - என்றாள் உமா வருத்தமாய்.

“தப்பு பெரியம்மா! கணவன்-மனைவியோ… மாமியார்-மருமகளோ ஒருத்தருக்கொருத்தர் அன்பாய் அனுசரணையாய் இருந்துட்டா அந்த உறவுக்குள்ள ஒரு நாளும் விரிசல் விழாது. உறவு பலப்படும். குடும்பம் சந்தோஷமாய் இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்க!” அறைக்குள் படுத்திருந்த ரஞ்சினியின் கண்களில் நீரும், முகத்தில் புன்னகையும் ஒரு சேரத் தோன்றின. இவனல்லவா கடவுள் எனக்களித்த பொக்கிஷம்?தன்னை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காத தன் கணவனை எண்ணி… இத்தனை அருமையான பிள்ளையை வளர்த்து தனக்கு பரிசளித்த மாமியாரை நினைத்து அவளது மனம் நிறைந்து போனது. அதுவரை மனதில் தேங்கியிருந்த வருத்தம் மறைந்து போக, நிம்மதி உணர்வோடு சுகமாய் கண்களை மூடிக் கொண்டாள்.

தொகுப்பு: சொ. கலைவாணி சொக்கலிங்கம்