Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சிறுகதை-கடந்து போகும் மேகங்கள்...

நன்றி குங்குமம் தோழி

அந்த தீம் பார்க்கே அல்லோலகல்லோலப்பட்டது என்று சொன்னால், அது மிகையல்ல. 35 ஆண், பெண்கள். எல்லோரும் இள வயதினர். ரசனை மிக்கவர்கள். ஐ.டி. கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள். உற்சாகத்திற்கு கேட்கவா வேண்டும்? எந்தவொரு கேளிக்கை விளையாட்டு ரைடுகளையும் அவர்கள் விடவில்லை. அதிலும் எழிலினி தனித்து தெரிந்தாள். 29 வயது பெண். பெயருக்கேற்ற படி, மிக எழிலாக மஞ்சள் நிற சுடிதாரில் தங்கம் போல் ஜொலித்துக் கொண்டிருந்தாள்.

‘‘ஓய், எல்லோரும் வாங்கப்பா. இங்க இருக்கிற ரைடுகள் எல்லாம் போதும். இப்ப நாம ஃபன் பண்ணலாம்...” கைகளை தட்டி நண்பர்களின் கவனத்தை ஈர்த்த தாமரையைச் சுற்றி நண்பர்கள் அமர்ந்தனர்.‘‘இங்க பாருங்கப்பா, இது கொஞ்சம் பழைய விளையாட்டுதான். ஆனால், மஜாவா இருக்கும், என்ன சொல்றீங்க?

30 சின்ன துண்டு பேப்பர்ல வரிசையா சில டாஸ்க்கை எழுதி, இதோ இந்த டப்பால போடுவோம். யார் யார் கையில் என்ன சீட்டு கிடைக்குதோ, அதை படிச்சுட்டு, அதிலிருக்கிற டாஸ்க்கை செய்யணும்...” தாமரை சொல்லி முடிக்க, அனைவரும் ஏக மனதாக ஏற்றுக்கொண்டனர்.முதலில் லிஸிக்கு பாட்டு பாடச் சொல்லி டாஸ்க் வர, அவள் ‘‘ஐயய்யோ, எனக்கு பாட வராதுப்பா” என்று ஓடப் பார்க்க, பிடித்திழுத்து வந்து அவளை பாட வைக்க, கீச்சுக் குரலில் அவள் பாடியதை கேட்டு, கூட்டம் விழுந்து, விழுந்து சிரித்தது.

அடுத்து இருவர் இருவராக கால்களை கட்டி, நொண்டியடித்தல், பின்புறமாக ஓடும் ரன்னிங் ரேஸ், குட்டிக்கரணம் அடிப்பது, தலையில் ஒரு பாத்திரத்தை வைத்து நடனமாடச் சொல்வது, ஒரு நடிகரை போல் மிமிக்ரி செய்ய வைப்பது, ஒரு நிமிடத்திற்கு, ஒரு அரசியல்வாதி போல் பேசுவது, தரையில் படுத்து நீச்சல் அடிப்பது... இப்படி பல பல டாஸ்க்குகள், அனைவரும் சிரித்து சிரித்து கண்களில் கண்ணீர். எழிலினியின் முறை வந்தது.

அவள் சீட்டை எடுக்க, அவளுக்கு ‘‘செம குத்து டான்ஸ் ஒன்று ஆடவும்” என்று வர, அவர்களின் கைத்தட்டலில் அந்தப் பிரதேசமே அதிர்ந்தது. எழிலினி கொஞ்சம் கூட தயங்கவில்லை. தன் துப்பட்டாவை மார்பின் குறுக்காக முடிச்சிட்டுக் கொள்ள, அதற்குள் விநாயக் தன்னுடைய கைப்பேசியில் ‘‘ரஞ்சிதமே, ரஞ்சிதமே” பாடலை ஒலிக்க விட, அடுத்த நொடி, தன் குத்து டான்ஸை தொடங்கினாள் எழிலினி. உடனே அவர்கள் எழுப்பிய விசில் சப்தம் காதைக் கிழித்தது.

ஒரு வழியாக அனைவரும் வீட்டிற்குச் செல்ல ரெடியானார்கள். அவர்கள் கம்பெனி பஸ்ஸில் இரண்டிரண்டு பேர்களாக அமர, எழிலினியின் அருகில் அமர்ந்தான் அவளுடைய டீம் லீடர் வினயன்.‘‘எழிலினி, பட்டைய கிளப்பிட்ட நீ. நீ பரதநாட்டியம் கத்துக்கிட்டவள்னு எல்லோருக்கும் தெரியும். ஆனா, இந்த பாட்டுக்கு நீ இப்படி ஆடுவன்னு எதிர்பார்க்கவே இல்லப்பா, சான்ஸே இல்ல...!”‘‘தேங்க்யூ வினயன்...”‘‘அது எப்படி எழில், நீ எது செய்தாலும் அதில் கலக்கற? வேலைல எப்பவும் பர்ஃபெக்‌ஷன், நீ கொண்டு வர லஞ்ச் பாக்ஸை பார்த்தா, விதம் விதமா மணக்கும். நான் உன்னை பார்த்து பிரமிச்சு போயிட்டேன்.

நீ வேலைக்கு சேர்ந்த இந்த ஒரு வருஷத்துல நானும் உன்னை தொடர்ந்து கவனிச்சுக்கிட்டுதான் வரேன். உண்மையை சொல்லணும்னா, நான் உன்னை காதலிக்கவே தொடங்கிட்டேன்...”அவன் பேசியது காதில் விழ விழ, ஸ்தம்பித்து அமர்ந்திருந்தாள் எழிலினி. அவளுக்கு என்ன சொல்வதென்று சட்டென்று தோன்றவில்லை. அனிச்சையாக ஜன்னல் வழியாக வெளியில் பார்த்தவள், அட, நம்ம அம்மா வீட்டு அருகிலா வந்திருக்கிறோம்? இப்போது இருக்கும் மூடில் வீட்டுக்குப் போகாமல், அம்மா வீட்டிற்கு போனால், கொஞ்ச நேரம் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தால் மனசு சரியாகும் என்று நினைத்தவாறே, ‘‘டிரைவர் கொஞ்சம் நிறுத்துங்க, எங்க அம்மா வீடு இங்கே தான் இருக்கு, நான் இங்கேயே இறங்கிக்கிறேன்” என்று சொல்ல, ‘‘எழிலினி, ஐ மிஸ் யூ சோ மச்” என்று அவளுடைய கையை பற்றினான் வினயன். அவன் கையிலிருந்து தன் கரங்களை விடுவித்துக் கொண்டு, எல்லோருக்கும் பொதுவாக ‘‘பை” சொல்லி விட்டு பஸ்ஸை விட்டு இறங்கி அம்மா வீட்டை நோக்கி நடந்தாள் எழிலினி.

சமீப காலமாக அலுவலகத்தில் வினயன் தன்னை பார்க்கும் பார்வையில் இருந்த மாற்றத்தை எழிலினி உணர்ந்திருந்தாலும், இவ்வளவு வெளிப்படையாக அவன் பேசுவான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. உண்மையில் அவளுக்கும் அவனிடம் ஒரு ஈர்ப்பு இருந்ததை அவள் உணர்ந்தே இருந்தாள். வீட்டிற்குள் நுழைய, ஹாலில் யாரையும் காணோம். சமையலறையில் விளக்கெரிய, அம்மா அங்குதான் இருப்பாளென்று தன் கைப்பையை ஹால் சோஃபாவில் வைத்து விட்டு, சமையலறைக்கு செல்ல, அங்கேயும் அம்மாவை காணோம். அப்பாதான் அங்கு நின்று, காஃபியை கலந்து கொண்டிருந்தார். அப்பாவாவது காஃபி கலப்பதாவது? ஆச்சரியத்துடன், ‘‘அப்பா, அம்மா எங்கேப்பா?” என்று வினவினாள் எழிலினி.

‘‘அட, எழிலினியா? வாம்மா, அம்மா உள்ளே படுத்திருக்கிறாள்...” படுக்கையறைக்குள் கையில் காஃபியுடன் அப்பா செல்ல, கட்டிலில் காலில் பேண்டேஜ் கட்டுடன் அம்மா உட்கார்ந்திருந்தாள்.

‘‘அம்மா, என்ன ஆச்சும்மா?’’ ‘‘அது ஒன்னும் இல்லைடி. காலையில் கட்டிலை விட்டு கீழே காலை வைக்கும் போது, தூக்க கலக்கத்தில் கால் ஸ்லிப் ஆயிடுச்சு. லேசா சுளுக்கு தான். 4 நாளில் சரியாயிடும்னு இந்த பேண்டேஜை கட்டி விட்டுட்டு, டாப்லெட்ஸும் குடுத்துட்டு போனார் டாக்டர். சரி, நீ என்ன இந்த நேரத்தில் இங்கே வந்திருக்க?” என்றாள்.‘‘இரு எழில், நான் உனக்கு காஃபி கொண்டு வரேன்” என்று அடுக்களையை நோக்கி நகர்ந்த அப்பாவை, அப்பாவா இதெல்லாம் பண்றார்? என்று ஆச்சரியமாக பார்த்த எழிலினியிடம் அம்மா, ‘‘என்னடி, என்ன விஷயம்?” என்றாள்.

‘‘அம்மா, எனக்கு கொஞ்ச நாளா மனசே சரியில்லைம்மா... எதுவுமே பிடிக்கல. வாழ்க்கையே வெறுமையா இருக்கு...”‘‘என்னடி சொல்ற? மாப்பிள்ளையோடு ஏதாவது சண்டை போட்டியா?” ‘‘அப்படி போட்டா கூட பரவாயில்லையே!”‘‘அம்மா, கல்யாணத்துக்கு முன் நான் இங்கே இருக்கும் போதே ரொம்ப ஆர்வமா, விதம் விதமா சமைப்பேன் இல்ல? நீ, அப்பா, நம்ம சொந்தக்காரங்க எல்லோரும் அதை ரொம்ப பாராட்டுவீங்க. ஆனா, சுந்தர் ஒருநாள் கூட என் சாப்பாட்டை புகழ்ந்து ஒரு வார்த்தை சொன்னதில்லை. ஏதாவது நல்ல நாள் வந்ததுனா, நான் எல்லோருக்கும் டிரெஸ் எடுக்கணும்னு சொன்னா, பணம் எவ்வளவு வேணும்னு கேட்டு அதை குடுப்பாரு. நான் அத்தை கூட போய் எல்லாம் வாங்கிகிட்டு வருவேன்.

தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தா, குயிலி முழிச்சிருந்தா, அவகூட கொஞ்ச நேரம் விளையாடுவார். அப்புறம் டிவில செய்திகளை பார்ப்பார். என்கிட்ட பொதுவா அத்தை எப்படி இருக்காங்க, ஏதாவது விசேஷ செய்தி இருக்கா, பணம் ஏதாவது வேணுமா? இப்படி ஃபார்மலா பேசிட்டு தூங்கப் போயிடுவார். எங்களுக்குள் இப்பல்லாம் வேறு பேச்சுவார்த்தையே இல்லம்மா. குயிலி பிறந்த போது, நான் என் முழு கவனத்தையும் அவ மேல திருப்பியதால், நான் அவரை கண்டுக்கறதில்லைன்னு தெரிஞ்சு, அதை நிறுத்திக்கிட்டார். பிறகு கொஞ்சம் கொஞ்சமா அவருடைய பிசினஸ்ல மூழ்கிட்டார்ம்மா. நானும் குழந்தையை வளர்ப்பதிலேயே கவனமா இருந்ததால, அவரின் இந்த விலகல் எனக்கு பெரிசா தெரியல. அப்புறம் குயிலி ஸ்கூலுக்கு போகத் தொடங்கிய பிறகு, ஒரு வெறுமைய உணர்ந்தேன்ம்மா. என் வெறுமையை போக்கிக்க, இந்த வேலையில் சேர்ந்தேன்.”

‘‘அப்புறம் ஆபீஸ்ல எல்லோரும் நான் வேலை செய்யும் நேர்த்திக்காக, என் பழகும் தன்மைக்காக, நான் கொண்டு போகும் உணவின் ருசிக்காக என்று என்னை பாராட்டும் போது, எனக்கு இவர் ஒருநாள் கூட இப்படி என்னை பாராட்டலயேன்னு ஏக்கமா இருக்கும்மா. இப்ப ஒரு 6 மாசமா எங்க டீம் லீடர் வினயன் என் ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் அப்படி என்னை கொண்டாடறாரும்மா. உண்மையை சொல்லணும்னா, எனக்கும் அவர் மேல ஒரு ஈர்ப்பு வந்திடுச்சும்மா” என்று திரும்பி வரும் போது பஸ்ஸில் நடந்ததையும் விவரித்தவள், ‘‘எனக்கு இப்ப தப்பு பண்ணிடுவேனோன்னு பயமா இருக்கும்மா” என்று நா தழுதழுக்க கூறினாள்.

அப்போது அப்பா காஃபியுடன் உள்ளே நுழைய, இருவரும் அமைதியாயினர். காஃபியை வைத்த அப்பா, ‘‘நீங்க பேசிண்டிருங்க, நான் கொஞ்ச நேரம் டிவி பார்க்கிறேன்” என்று வெளியேறினார்.

‘‘முதலில் நீ இந்த காஃபியை குடி...” ‘‘நீ பேசி முடிச்சுட்டல்ல? இப்ப நான் சொல்றதை கொஞ்சம் கேளு. நாம் மாப்பிள்ளையை மட்டும் இதில் தப்பு சொல்வது கொஞ்சம் கூட நியாயமில்லை எழில்...”‘‘அப்ப, நான்தான் தப்பு செஞ்சதா சொல்றியாம்மா?”‘‘இதில் யாரையும் நான் குறை சொல்லலை எழில். குழந்தை பிறந்தவுடன், நீ உன் முழு நேரத்தையும் அவகிட்ட செலவழிக்க, மாப்பிள்ளை தன் பிசினஸில் கவனத்தை திருப்பினார். அப்ப கூட அவர் எந்த சந்தர்ப்பத்திலும் உன்னை குறை கூறல. தவறான வழிக்கும் போகல. ஏன்னா, ஒரு இளம் தாயா உன் உணர்வுகள் எப்படி இருக்கும்னு அவர் புரிஞ்சுண்டார்.

இன்னிக்கு காலையில எனக்கு அடி பட்டவுடன், டாக்டர் வந்து போன உடனேயே, அப்பா மாப்பிள்ளைக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார். அப்ப மாப்பிள்ளை, ‘மாமா, எழில் பாவம். தினமும் வீடு, ஆபீஸ்னு ஒரே இயந்திரத்தனமா வேலை பார்க்கிறா. இன்னிக்குதான் அதிசயமா, அவ ஆபீஸ் நண்பர்கள் கூட தீம் பார்க் போக கிளம்பிக்கிட்டிருக்கா. அவ கிட்ட மாமி காலில் அடிபட்டுண்ட விஷயத்தை சொன்னா, அவ பிக்னிக்கை கேன்சல் பண்ணிடுவா’ன்னு சொன்னார்.

அப்புறம் நீ கிளம்பி போன கொஞ்ச நேரத்தில் ஹோட்டலில் டிஃபனை வாங்கிண்டு நேரா இங்க வந்தாரு. ‘மாமி, நீங்களும், மாமாவும் இங்க தனியா இருக்கறது எனக்கு மனசுக்கு கவலையா இருக்கு. எங்க அம்மா எங்க கூட இருக்கற மாதிரி, நீங்களும் அங்கே வந்துட்டா, ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கலாம்’னு சொன்னார். அதுக்கு அப்பா, ‘இப்ப நாங்க தெம்பாத்தான் இருக்கோம் மாப்பிள்ளை, அப்புறம் எங்களுக்கு தனியா இருக்க முடியாத காலத்துல நாங்க எங்க போவோம், அங்க தானே வருவோம்? நாங்க இப்பதான் எங்களுக்காக வாழறோம்.

இதுவரை உங்க மாமிக்குனு நான் எதுவும் செய்ததில்லை. இப்ப தான் சின்னச் சின்ன காரியங்கள், காய் நறுக்குவது, மிக்ஸில சட்னி அரைப்பது, காஃபி போடுவது, துணிகளை மடிப்பது, ரெண்டு பேரும் மார்க்கெட் போய் காய் வாங்குவது, ஒன்னா கோயிலுக்கு போவது, காலாற நடைப்பயிற்சி, சொந்தக்காரங்க, நண்பருங்க வீட்டு கல்யாணத்துக்கு போவதுன்னு இருக்கோம்’னு சொன்னார். மாப்பிள்ளையும் அதை மகிழ்ச்சியா ஒத்துக்கிட்டார்.

ஒன்னு தெரிஞ்சுக்கடீ. மனைவியை நேசிக்கிறவங்களுக்குதான் மனைவியின் பிறந்த வீட்டினர் மீது அக்கறை இருக்கும். மாப்பிள்ளை உன்னை நல்லா புரிஞ்சுக்கிட்டதுனாலதான் உன்னை சுதந்திரமா வேலைக்கு போவது, உன் விருப்பப்படி உடை வாங்குவது, உடுத்துவது, உன் இஷ்டப்படி குடும்பத்தை நடத்துவதுன்னு உனக்கு பரிபூரண சுதந்திரத்தை வழங்கியிருக்கார்...”‘‘அம்மா, அப்ப நான்தான் தப்பு பண்ணிட்டேனா..?’’ ‘‘நீயும் தப்பு எதுவும் பண்ணலைடீ.

ஆங்கிலத்தில் இதை 7th year itch என்று சொல்வாங்க. அதாவது, குடும்பம் நடத்தும் தம்பதியர் ஒரே விதமான வாழ்க்கை முறையில் தங்கள் வாழ்நாளை நகர்த்தும் போது, ஒரு சலிப்பு தட்டும். ஒரு டைவர்ஷன் தேவைப்படும். அப்போது அவர்களுக்கு மண வாழ்க்கையை தாண்டிய ஒரு உறவில் நாட்டம் ஏற்பட வாய்ப்பிருக்கு. கணவன்-மனைவிக்கு இடையே இருக்கும் புரிதல் ஒன்றே அதை வர விடாமல் தவிர்க்கும் சக்தி. வீட்டில் சோஃபா உறையை மாற்றிப் போடுவது போல, தம்பதிகள் மனம் விட்டு பேசுவது, தங்களுக்கே என்று தனிப்பட்ட நேரத்தை உருவாக்கி மகிழ்ச்சியாக இருப்பது, எங்கேயாவது டூர் போவது என்று தங்கள் தாம்பத்தியத்தை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ள வேண்டும். முக்கியமா, பெண்கள் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை பற்றி குறையா, வெளியில், குறிப்பா ஆண்களிடம் பேசவே கூடாது.

மாப்பிள்ளையிடம் மனம் விட்டு பேசு. உன் செயல்களால் அவர் உனக்கு எவ்வளவு முக்கியம் என்று உணர்த்து. நான் உனக்கு அதிகம் சொல்ல வேண்டாம். நீ புத்திசாலி, எப்படி உன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்வது என்று உனக்கு நிச்சயம் தெரியும். நிறைய நேரம் வேலை பார்க்கும் ஒருவன் கிட்ட ஏற்படற ஒரு சின்ன கவனச் சலனம் உனக்கு வந்திருக்கு. இருந்தாலும், உன்னுடைய அற நெறி, அவன் உன்னுடைய கையை பிடித்த கணத்தில், ஒரு அருவெறுப்பை உன்னுள் விதைத்தது.

வினயனை போன்ற நகர்ந்து போகும் மேகங்களை நீ புறக்கணித்து கடந்து போனாலே போதும். கொஞ்சம் இடம் கொடுத்தால், அது உன்னை அழித்து விடும்.”அம்மா ஒரு புன்சிரிப்போடு நிறுத்த, வெளியில் நிறுத்தப்பட்ட சுந்தரின் பைக் சத்தம் இனிமையாக காதில் விழ, கணவனை எதிர்கொள்ள, தெளிந்த முகத்துடன் வாசலை நோக்கி விரைந்தாள் எழிலினி.

தொகுப்பு: வி.ஜி.ஜெயஸ்ரீ