Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சிறுகதை-அம்மாவுக்கு எழுதிய கடிதம்!

நன்றி குங்குமம் தோழி

வீட்டின் முன்அறையிலிருக்கும் ஜன்னலுக்கு பக்கத்தில், நாற்காலியில் அமர்ந்தபடி சூடான தேநீரை சுவைத்துக் கொண்டிருந்தாள் அமுதா. இப்படி மாலை நேரத்தில் ஏகாந்தமாக பழைய நினைவுகளை அசை போட்டுக்கொண்டே தேநீரை பருகுவது அவளுடைய வழக்கம். சில நேரங்களில் அந்த நினைவுகளின் தாக்கத்தால் உண்டாகிற மன அழுத்தத்திலிருந்து விடுபட, அதை ஒரு கடிதமாக அவளுடைய அம்மாவுக்கு எழுதுவதும் உண்டு.

அவளுக்கு அருகேயிருந்த மேசையின் மீது, அவளுடைய பழைய டைரி இருந்தது. கையிலிருந்த தேநீர் குவளையை, மேசையின் ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, அந்த டைரியின் ஒரு பக்கத்தைத் திறந்து, அவள் கடிதம் எழுதத் தொடங்கினாள்.‘அன்புள்ள அம்மாவுக்கு’ என்று எழுதத் தொடங்கியதும், அவளுடைய அம்மாவுக்கு அவள் எழுதுகிற இந்த கடிதம், எத்தனையாவது கடிதம்?! என்று யோசித்தாள். அதை அவளால் சொல்ல முடியவில்லை. ஆனால், இதுவரை அவள் எழுதிய கடிதங்கள் எல்லாமே அவளுடைய அம்மாவுக்கு மட்டுமே என்பது மட்டும் அவளுக்குத் தெரியும்.

‘‘அம்மா, என் மனசுக்குள்ள இருக்கிற உணர்ச்சிகளை, எனக்கு உன்னைத் தவிர வேற யாரோடவும் பகிர்ந்துக்க தோணியதில்லை! அதுக்கு காரணம், உன் அளவுக்கு என்னை முழுமையாக புரிந்துகொள்ளக்கூடிய யாரையும் நான் இதுவரை சந்திக்கவே இல்லை!” என்று அவளுக்குள் மெல்ல பேசிக்கொண்டாள்.அமுதாவின் கண்களில் மெல்லிய கண்ணீர் படலம் பரவ... எழுதுவதை நிறுத்தினாள். அவளுடைய கண்களில் திரண்ட கண்ணீர், அவளது பார்வையை மறைத்தது. அவள் மனதுக்குள் பழைய நினைவுகள் உருளத் தொடங்கியது.

மற்ற பெண்களைப் போலவே அமுதாவும், சிறு வயதில் ஓடி ஆடி, உற்சாகமாக பேசி, சிரித்து மகிழ்ந்த காலம் இருந்தது. ஆனால், அந்த சுதந்திரமெல்லாம், அவள் பெரிய மனுசியாகிற வரையில் மட்டுமே! அதுவரை அவளுடைய தொடர்பிலிருந்த தோழிகள், மெல்ல மெல்ல விலகி போயினர். ஒரு சிலர் அருகில் இருந்தாலும், முன்பு போல அவர்களுக்கிடையே இருந்த நெருக்கமான சந்திப்புகள் குறைந்து போனது. அதனால் அவளுடைய தனிமைக்கு ஆறுதலாக, அம்மாவின் அரவணைப்பு அவளுக்குத் தேவையாக இருந்தது. சந்தோஷமோ, சுகமோ, துக்கமோ… சக தோழியைப்போல அம்மாவிடம்தான் அவற்றை பகிர முடிந்தது.

அம்மாவின் சமையல் ருசித்தது. அம்மாவோடு இருந்த ஒவ்வொரு மணித்துளியும், அவளுடைய மனதில் இனம் புரியா சந்தோஷத்தை தந்தது. அம்மாவுக்கு உதவியாக உறவுகளுக்கு கடிதம் எழுதுகிற பொழுது, அம்மாவிடம் இருந்த அந்த ஞானம், அறிவு, தெளிவு எல்லாம் அவளுக்கும் கைவரப்பெற்றது.அவளை சிறுவயதிலிருந்தே கடிதம் எழுத வைத்தது அம்மாதான். ‘‘எழுத்து ஒரு உயிர்ப்புள்ள விஷயம். அதை எழுத எழுத மன அழுத்தம் குறையும். முக்கியமாக தன்னம்பிக்கை அதிகமாகும்” என்று அவளின் பதின்ம வயதில் அம்மா சொன்னது அவளுடைய மனதில் பதிந்துவிட்டது. அதற்குப்பிறகு, இன்று வரையிலும் அவளுடைய கையால் பொறுமையாக கடிதங்களை எழுதுகிற போது, அது அவளுக்கு ஒரு பெரிய ஆறுதலாக, தேறுதலாக இருக்கிறது.

அவள் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து, அந்த ஜன்னலின் வழியே தெரிந்த ஆகாயத்தைப் பார்த்து, ‘‘அம்மா!” என்று ஒருமுறை வாய்விட்டு அழைத்தாள்.‘‘நான் எழுதுகிற கடிதங்களை படிக்கவோ, பதிலுக்கு எனக்கு ஆறுதல் சொல்லவோ, நீ இப்போது இந்த உலகில் இல்லை. இருந்தாலும், என்னுடைய இந்தக் கடிதங்களின் வழியே நான் உன்னோடு பேசுவதும், அதனூடே நீயும் ஒரு ஆசுவாசத்தை எனக்குத் தருவதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் என்னோட வாழ்க்கையை உயிரோட்டமாக வாழ என்னால் முடிகிறது.’’மானசீகமாக அம்மாவிடம் பேசிக்கொண்டே, மீண்டும் அந்தக் கடிதத்தை எழுதத் தொடங்கினாள்.

‘‘எனது பன்னிரண்டு வயது வரை, உன்னோடு ஒரு இளவரசி போல வாழ்ந்த அந்த வாழ்க்கையை, இன்று நாற்பது வயதை தாண்டிய பிறகும் என்னால் மறக்க முடியவில்லை! அந்த வயதில் ‘ நீ என் கூடவே எப்போதுமே இருக்க வேண்டும்!’ என்று நான் கேட்டபோது, பதிலுக்கு ‘நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை! உன்னை கைவிடுவதுமில்லை!’ என்று இயேசு பிரானின் வாசகத்தை சொல்லி விட்டு, சிரித்த உன் முகத்தை அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.

நான் கல்லூரியில் சேர்ந்த போது, அங்கேயே விடுதியில் தங்கிப் படிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. ‘அமுதா, அங்கே மனக்குழப்பமோ, இன்னலோ வந்தால் பயப்படாதே! அதை சமாளிக்க முயற்சி செய். அந்த அனுபவத்தை எல்லாம் ஒரு கடிதத்தில் எழுதி எனக்கு அனுப்பு. நாம துன்பப்படுகிற பொழுது , அழுது புலம்புவதை விட அதை கடிதமா எழுதுறபோது, மனசில இருக்கிற பாரம் பாதியாக குறையும்!’அப்போது, ஒரு தீர்க்கதரிசிப் போல், நீ சொன்னதை நான் இப்ப வரைக்கும் செய்து கிட்டுதான் இருக்கேன்.” அம்மா சொன்ன வார்த்தைகளை நினைக்கும் போது, மனசு கனத்து , திரும்பவும் அவள் கடிதம் எழுதுவது தடைப்பட்டது.

அவளுடைய அம்மாவை விட்டு விட்டு, அந்த விடுதியில் எப்படி இருக்கப்போகிறேன் என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். அடுத்த ஒரு வாரத்திலேயே அம்மாவுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று, மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக கேள்விப்பட்டு அங்கே போனாள். ஏதோ ஒரு அரிய வகை நோயின் தாக்கத்தில் அம்மா இருக்கிறாள். அவள் பிழைப்பது கடினம் என்று கேள்விப்பட்டதும், அமுதா கவலையோடு அம்மாவை கவனித்தாள். அப்போதும் அம்மாவிடம் ஒரு தன்னம்பிக்கையின் ஒளியை அவளால் பார்க்க முடிந்தது. ஆனால், அம்மாவுக்கு அவளைப் பற்றித்தான் அதிக கவலை என்பதும் அவளுக்குப் புரிந்தது.

அந்த சமயத்தில்தான், அமுதா தனக்காக ஒரு முதல் கடிதத்தை கடவுளுக்கு எழுதினாள். அதை கடவுளின் படத்திற்கு அருகில் வைத்து, பிரார்த்தனை செய்தாள். ஆனால், கடவுளோ, அம்மாவின் வேதனையை குறைப்பதற்காக, அவரிடத்தில் அம்மாவை அழைத்துக் கொண்டார். கண்களிலிருந்து கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு, அவள் மீண்டும் எழுத ஆரம்பித்தாள்.

‘‘அம்மா, என்னை விட்டு நீ போன பிறகு, இந்த உலக வாழ்க்கையின் உண்மையான உருவத்தை கண்டு கொண்டேன். அப்பா, அவருடைய வயதான காலத்திற்கு ஒரு துணை தேவை என்று, மறுமணம் செய்து கொண்டார். ஆனால், உன்னுடைய இடத்தில் இன்னொரு தாயை வைத்துப் பார்க்க விருப்பமில்லாததால், அவர்களிடமிருந்து விலகி இருக்கத் தொடங்கினேன். நீயில்லா வெறுமை என்னை வாட்டி வதைத்தது. அப்போது எனது இரண்டாவது கடிதத்தை எழுதினேன்.

உனக்கு கடிதம் எழுதுவது போல நினைத்து, எனது டைரியின் பக்கங்களில் என் மன வேதனைகளை பகிர்ந்து கொண்டேன். நான் கல்லூரிப் படிப்பை முடித்த உடனே… அப்பா, அவர் பெற்ற கடனை கழிக்க, எனக்கு மாப்பிள்ளை தேடினார். பின்பு அவர் தேர்ந்தெடுத்த வரனுக்கு, திருமணம் என்கிற பெயரில் கழுத்தில் தாலியை கட்டிக்கொண்டு மனைவியானேன்.

அந்த மண வாழ்க்கையிலும், எனக்கு குழந்தை பெற்றுத்தர இயலாது என்ற காரணத்தைச் சொல்லி, ஏற்கனவே அவனுடன் தொடர்பில் இருந்தவளை இரண்டாந்தாரமாக கொண்டு வர விரும்பினான் என் கணவன். அவனுடைய உண்மையான நோக்கம், ஒரு குழந்தை பாக்கியம் மட்டுமே அல்ல என்று புரிந்த போது, ‘என்னுடைய வாழ்க்கைப் பாதையில் வந்த ஆண்கள் எல்லாம் சுயநலவாதிகளாக இருக்கிறார்களே!’ என்று வருத்தப்பட்டேன். அவனையும் விட்டு விலகி வந்து, நாலு சுவர்களுக்குள் முடங்கிய பொழுது… மூன்றாவது முறையாக உனக்கு என் மனக் குமுறல்களை கடிதமாக எழுதி கொட்டித் தீர்த்தேன்.

உன் ஆன்மா எனக்குள் ஒரு உந்துசக்தியை தந்து, என்னை சுதந்திரமாக செயல்பட வைத்திருக்கிறது. இப்போது எனக்கான ஒரு பாதையை உருவாக்கி, அதில் நான் தன்னம்பிக்கையோடு பயணம் செய்து கொண்டிருக்கிறேன்...” இப்படி அமுதா எழுதிக்கொண்டிருக் கிற நேரத்தில், அவளுடைய வீட்டின் கதவை யாரோ தட்டுகிற சப்தம் கேட்டது. உடனே அவள் அந்த டைரியை மூடி வைத்து விட்டு, எழுந்து போய் கதவைத் திறந்தாள்.

வெளியே ‘‘குட் ஈவினிங் மிஸ்” என்று ஒருமித்தக் குரலில் சத்தம் எழுப்பியபடி நான்கைந்து குழந்தைகள் நின்றிருந்தனர். அமுதாவும் பதிலுக்கு புன்னகையோடு ‘குட் ஈவினிங்’ சொன்னாள்.

அந்தக் குழந்தைகள், அமுதா வேலை பார்க்கும் பள்ளியில் படிக்கின்ற மாணவ, மாணவிகள். அவளிடம் டியூஷன் படிக்க அவர்கள் வந்திருந்தனர். அவர்களை எல்லாம் உட்காரச் சொல்லிவிட்டு அமுதா, அவளுடைய டைரியில்…‘‘அம்மா, எனக்கு குழந்தை பாக்கியமில்லை என்று சொன்னார்கள். ஆனால், பல குழந்தைகளோடு வாழுகின்ற பாக்கியம் எனக்கு கிடைச்சிருக்கு. இதுவே மனசுக்கு நிறைவா, சந்தோஷமாக இருக்கு” என்று குறிப்பிட்டு அந்தக் கடிதத்தை நிறைவு செய்தாள்.

தொகுப்பு: பாரதிமணியன்