Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சிறுகதை-பாலை மனங்கள்

நன்றி குங்குமம் தோழி

இரண்டு வருடங்களுக்குப் பிறகு ரவி ஊருக்கு வருகிறான்.ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாய் கடந்த வேதனை வித்யாவுக்கு.ஊருக்குக் கிளம்புவதால் முடிக்க வேண்டிய வேலைகளில் ரவி இருக்க, அவனிடம் சரியாக பேசமுடியாத ஏக்கம் மனதை அழுத்த, இரவெல்லாம் அவள் தூங்கவில்லை. நினைவின் ஒவ்வொரு அணுவும் அவனுக்கான தேடலை சுமந்திருக்க… தன் உயிரை சுமந்து வரும் கணவனை காணும் அந்த நொடிக்காக… உடம்பெல்லாம் கண்ணாகக் காத்திருந்தாள்!

ராஜி… ஏற்கனவே வந்தாயிற்று. தான் கேட்ட படி அண்ணன் வாங்கி வருபவைகளை அப்படியே அள்ளிக் கொண்டு அடுத்த நாளே காணாமல் போய் விடுவாள். இது வழக்கம். “அம்மா… நானும் ஏர்போர்ட்டுக்கு வரேன்மா’’ என்று அம்மாவிடம் கொஞ்சிக் கொண்டிருந்தாள் ரமா. அவள் திருமணத்துக்குத்தான் ரவி வருகிறான்.

‘‘கல்யாணப் பொண்ணு வெளியே எல்லாம் அலையக் கூடாது. உங்க அண்ணியோட நீயும் வீட்டில் இரு...’’ மாமியார் சொல்ல, வித்யா அதிர்ந்து போனாள்.

நான் வீட்டிலா..? என்ன அநியாயம் இது? அவர் என்னைத்தானே முதலில் தேடுவார்? மனம் பதறியது.வித்யா வந்தால் ரவி அவளை மட்டுமேதான் பார்ப்பான். பேசுவான். அப்புறம் அவன் கவனம் வேறு எங்கும்… யாரிடமும் போகாது என்பதாலேயே இந்த கூட்டுச் சதி என்பது பாவம் அவளுக்கு புரியவில்லை.

முதல் முதலில் ரவி வீட்டுக்கு அழைத்து வந்த அன்று வித்யாவைப் பார்த்ததும்… “இப்படி ஒரு பாவமான முகத்தை வைச்சுக்கிட்டு என் பையனை எப்படியோ மயக்கி… இவளைத் தவிர யாரையும் கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொல்ல வைச்சுட்டாளே…” என்று ரவியின் அம்மா மனதில் விழுந்த வெறுப்பின் விதை வளர்ந்து மரமானதே தவிர, அவள் நல்ல குணங்களை பொறுமையை பார்த்தும் கொஞ்சமும் குறையவில்லை.

ராஜியின் கல்யாணக் கடன், ரமாவின் கல்யாணம் என வரிசையாய் நின்ற பணச் சுமைகள் எல்லாம் ரவியின் தலையில்!! அவன் வேலை வருமானம் எல்லாம் சாதகமாக இருக்க, ஒரு நல்ல வசதியான வீட்டுப் பொண்ணாப் பார்த்து அவனுக்கு கல்யாணம் பண்ணி வீட்டின் நிலைமையை மாற்றிவிடலாம்... ரமாவையும் கரையேற்றி விடலாம் என்ற கனவில் இருந்தவளுக்கு ரவியின் இந்த முடிவும்… அதன் மூலம் வந்த வித்யாவும் பிடிக்காமல் போனது.

படிக்கும் போதே அப்பாவை இழந்தாலும், வித்யாவின் அம்மா அப்பாவுக்கும் மேலாய் அவளை தாங்கிப் பிடிக்க வைத்தாள். நல்ல படிப்பு, அதற்கேற்ற வேலை.வித்யாவின் சின்ன உலகம். அன்பான அம்மா வீடு, ஆபீஸ் எனஅழகாய் இருந்தது. அவள் அம்மாவை கேன்சர் எனும் கொடிய விலங்கு கழுத்தை நெறிக்கும் வரை.அம்மா மீண்டு வர வேண்டும் என்று தவம் போல் அவள் வாழ்ந்ததை, அவளுடன் வேலை பார்த்த அத்தனை பேரும் வியந்து பார்க்க, அப்படி தினம் தினம் பார்த்தவன் ரவி. தனி ஒருத்தியாய் மன திடத்துடன் அவள் சோதனைகளை சந்தித்த விதம், தன்னலம் கொஞ்சமும் இல்லாத அந்த அன்பு எல்லாம் அவனை அவள் பக்கம் இழுக்க, முதலில் நட்பாய் நீண்ட கரம், வாழ்வு முழுக்கத் தொடரும் நேசக்கரமாய் அவளை இறுகப் பிணைத்துக் கொண்டது.

அன்பின் மொத்த உருவமாய் நின்றவளுக்கு துளி அன்பும் தர யாருமில்லை. தனிமையில் தவித்தவளுக்கு, அவன் கொட்டிய அன்பு மழையில் நனையாமல் தள்ளி நிற்க மனமில்லை.

வந்த கொஞ்ச நாளிலேயே வீட்டில் உள்ளவர்களை புரிந்து கொண்டிருந்த வித்யா… எதுவானாலும் ரவி இருக்கிறான் என்றிருந்த போதுதான் எதிர்பாராமல் வந்தது ரவியின் வெளிநாட்டு வாய்ப்பு. “கடனெல்லாம் சீக்கிரம் அடைச்சிடலாம். நமக்குன்னு ஒரு குட்டி விது வரணும். இரண்டே வருஷம்டா. இங்கேதான் எல்லோரும் உங்கிட்டே நல்லா அன்பா இருக்காங்களே. போகவா விது. உன் சம்மதம் இல்லாமப் போகலை” என ரவி கெஞ்சும் குரலில் கேட்டபோது, அவளாலும் மறுக்க முடியவில்லை.

“விது… விதுன்னு ஒரேடியா உருகுறனே. ரவி முன்னால மட்டும் அவளை எதுவும் ெசால்லிடாதீங்கடி... அவ சந்தோஷமா இருக்கான்னு அவனை நம்ப வைச்சுட்டா போதும். கொஞ்சம் சந்தேகம் வந்தாக்கூட இவ அவனை இழுத்துட்டு தனியாப் போயிடுவா. அப்புறம்… ரமா உன் கல்யாணம் எல்லாம் கனவுலதான்...’’ ஊரிலிருந்து ரவி பேசும் போதும் கூடவே நின்று விட்டு அதன்பின் அம்மாவும் பெண்களும் பேசுவதைக் கேட்டவளின் மெல்லிய மனம் சிதைந்து போனது. எத்தனை அன்பைக் கொட்டினாலும் சில பாலை மனங்களில் ஈரம் ஒட்டாது என புரிந்து கொண்டவளுக்கு அன்புக் கணவனிடம் சொல்லி அவன் மனதையும் காயப்படுத்த பிடிக்கவில்லை. ஏற்கனவே தன்னை பிரிந்திருக்கும் வலியில் தவிப்பவன், எப்போதும் சந்தோஷமாக இருப்பதாக அவனிடம் காட்டும் நடிப்பில் கை தேர்ந்துவிட்டாள்.

“உன்னை விட்டுட்டு எப்படிடா இருப்பேன்’’ என்று முதலில் அவன் வெளிநாடு கிளம்பிய போது கதறி அழுதவள் இவள்தானா… பணம் இப்படியா பெற்ற அம்மாவைக்கூட மாற்றும் என்ற வெறுப்பு வரும் படி அம்மாவின் ஆசைகள் கடல் அலைகளாய் முடிவில்லாமல் நீண்டது. மாடி வீடு, பெரிய கார், ராஜியின் மாப்பிள்ளைக்கு பிசினஸ் ஆரம்பிக்க என ரவியின் வெளிநாட்டு வாசம் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே போனதில் ரவி நொந்து போனான். இப்படி பணம் பணம் என்று இருப்பவர்களுக்கும் விதுவுக்கும் துளியும் ஒத்துப் போகாதே என்ற கவலையில்… வீட்டில் அவள் நிலை பற்றிய சந்தேகம் பெரிதானது.

போன முறை அவன் வந்த போதே விது அவனிடம் இயல்பாகவே இல்லை என்ற சந்தேகம் வந்தது. சிரிக்கக்கூட பயந்தாள். ரமா இருக்கிறாள் என்ற பொய்க் காரணத்தைச் சொல்லி அவள் தப்பித்தாலும் எங்கே போனாலும் ராஜியிலிருந்து அத்தனை பேரும் கூடவே வந்ததும் வித்யாவுக்கு எல்லோரும் சேர்ந்து இருந்தாத்தான் பிடிக்கும் என்று வலியச் சொன்ன அம்மாவின் வார்த்தைகளும் அவன் ஐயத்தை இன்னுமே அதிகமாக்கின.

வாங்கி வந்த சாமான்களில் ஒரு சின்ன சாக்லேட் கூட விதுவுக்குக் கிடைக்கவில்லை. எதற்கும் வாயே திறக்காத விதுவின் மேல் இன்னும் காதல் அதிகமானது. அவர்கள் தனியறையில் இருக்கும் போதும் அவளையும் மீறி மனைவியின் கண்கள் கதவுப்பக்கம் அடிக்கடி போவதைக் கண்டு கொண்டவனுக்கு வித்யா எதுவும் சொல்லாமலேயே அவள் தன் வீட்டில் இருக்கும் நிலைமை கண்ணாடி போல் தெளிவானது. மனம் உருவி விட்டது. வீடியோ காலில் கூட பொதுவாகப் பேசுவதும், வீட்டார் பற்றிக் கேட்கும் போது சொல்லி சொல்லி வைத்தது போல ஒரே பதிலைத் தருவது. ஒரு மனைவியாய் தன்னிடம் ஆசையாக பேசக் கண்களும், மனமும் இதழ்களும் துடித்தாலும் அதைத் தடுக்க செய்யும் முயற்சி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் புரிந்து கொண்டவன், இனி ஊருக்கு வரும்போது ஒப்பந்த முறிவுடன்தான் வர வேண்டும் என்ற உறுதி எடுத்தான்.

தன் மேல் கொண்ட அன்புக்காக மனதில் வலிகளை சுமப்பவளுக்கு மருந்தாக அவளுடன் இருக்க வேண்டும் என்று அவன் எடுத்த முடிவை யாரிடமும் சொல்லாமல் கிளம்பிப் போனான். நடுவில் வர அவன் நினைத்த போதும் வர விடாமல், ‘‘ரமாவுக்குக் கல்யாணம் கூடி வரும் போல் உள்ளது. அப்போ வந்தால் போதும். எதுக்கு வீண் செலவு’’ என்று அவன் ஆசையில் வெடி வைத்துவிட்டாள் அம்மா. அதுதான் இந்த நீண்ட இடைவெளி.

இனி போகப்போவதில்லை என்ற கடிதத்துடன் வந்து இறங்கியவன் கண்கள் அவனின் தேவதையை காணாமல் கலங்கிப் போயின. “உனக்குப் புடிச்சதெல்லாம் செய்யணும்னு சமையல் கட்டிலேயே இருக்காடா... அதான் வரலை...” அந்த பொய்யை தாங்க முடியாமல்… சீட்டில் சாய்ந்து கண்களை மூடியவன் மனம் முழுதும் விது… விதுதான். ஆரத்தி எடுத்த தட்டுல உங்க ஊர்க் காசுலதான் போடணும் என்ற ராஜி. ரமாவின் அமர்க்களம் முடிந்து உள்ளே நுழைந்தவன்…

சமையல் அறை வாசலில் மோன நிலையில் இருந்த விதுவைக் கண்டு, ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டான். இரண்டே வருடம்... இரு வருடங்கள்தானா இவளை விட்டு இருந்தேன். எத்தனையோ காலங்கள் ஆன உணர்வில் ஒரு நொடி கூடக் கண்கள் அவளை விட்டு திரும்பவில்லை. அவளின் நீர் தளும்பி நின்ற கண்களும் அவனை அப்படியே அள்ளிக்கொள்ள உடலும் மனமும் தவிக்க… ஹால் முழுக்க இறைந்து கிடந்த அவன் பெட்டிகளை துழாவிக் கொண்டிருந்தார்கள் அவன் அன்பு தங்கைகளும், பெற்ற அம்மாவும்.

அப்படியே உட்கார்ந்து விட்டவன் கைகளில் காபியை தந்த அந்தக் கரங்களில் முகத்தை புதைத்துக் கொண்டு கதற வேண்டும் போலிருந்தது. அவனுக்கு பேசினால் உடைந்து விடுவாள். அவள் மட்டுமல்ல... தானும்தான்! பார்வையை மட்டும் அவளிடம் வைத்தபடி காபியைக் குடித்தவன், “கொஞ்ச நேரம் படுக்கிறேன்மா. விது என் கூட வா...” தயக்கமே இல்லாமல் அவளையும் கையோடு இழுத்துக் கொண்டு அறைக்குள் நழைந்தவன். “சாரி விது. சாரிடா. இப்பவும் உனக்குன்னு கொடுக்க எங்கிட்டே எதுவும் இல்லடா…’’ என்று கைகளை விரிக்க… அவசரமாய் அவன் வாயை மூடியவள், அவனை அப்படியே கட்டிக் கொண்டாள். “நீங்க மட்டும் போதும், எனக்கு ரவிதான் வேணும். சுட்டு விரலால் அவன் நெஞ்சைத் தொட்டுக் காட்டியவள், அவன் காதுகளில் ரகசியம் பேசிக் கண்ணீருடன் கட்டிக்கொண்டாள். “விது கான்ட்ராக்ட் முறிச்சுட்டேன். மெதுவா சொல்லலாம்னு இருந்தேன். முடியலடா... அழாதே, ப்ளீஸ்” இன்னும் இறுக்கமாய்க் கட்டிக் கொண்டவள்…

ரமாவுக்கு செய்யறதெல்லாம் தனக்கும் வேணும்னு ராஜி சண்டை போட்டதும், உங்களை இன்னும் இரண்டு வருஷம் அங்கேயே இருக்க வைக்க உங்க அம்மா எப்பவும் போல் ஏற்கனவே திட்டம் போட்டுட்டாங்கன்னு எப்படி ரவி உங்ககிட்டே இப்போ சொல்றது. “வித்யாவின் மனக்குமுறல் அவள் கண்களில் சத்தமில்லாத அருவியாய் இறங்கி ரவியின்

நெஞ்சில் வழிய, பாலையின் வெப்பத்தை விட தகித்தது அந்தச் சூடு.

கண்ணீரின் கனல். இளமையான அன்பு மனைவியுடன் தனக்கென அழகிய சிறு கூடு. குஞ்சுகள் என்று விரியும் அவர்களின் அழகான கற்பனை மலரை கருணையே இல்லாமல் கருக வைத்துக் கொண்டிருந்தது. கருகும் வாசமோ கண்ணீரின் ஈரமோ… வெளியே பொருட்களை எண்ணிக் கொண்டிருக்கும் வறண்ட மனங்களில் என்றும் படியாது.

தொகுப்பு: யசோதா சுப்ரமணியன்