Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சிறுகதை-அய்யா சாமியும், அனந்தா சாரியும்!

நன்றி குங்குமம் தோழி

காலை மணி 10. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஏகப்பட்ட இளைஞர்கள் கூட்டம். எல்லோரும் கிரிக்கெட் மட்டையுடனும், பந்துடனும் வந்திருந்தனர். கண்களில் ஏகப்பட்ட கனவுகள். ஆடுகளத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டும் பெருமூச்சு விட்டுக் கொண்டும் இருந்தனர். பலர் உறவினர் வீட்டில் இரவே வந்து தங்கி விட்டனர். சிலர் காலையில் வந்து இறங்கி நேராக இங்கு வந்துவிட்டனர்.

டீ காபிக் கூட இங்குதான். இங்கு ஏன் இவ்வளவு கூட்டம்? ஒன்றும் இல்லை... தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு வீரர்களை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். கம்பெனியில் ஆடியவர்கள், யுனிவர்சிட்டியில் பங்கு பெற்றவர்கள், டிவிஷனில் ஆடியவர்கள், அண்டர் 19ல் பங்கு பெற்றவர்கள் என்று பலர் வந்து இருந்தனர். கல்லூரிப் போட்டியில் ஆடியவர்கள் கூட இருந்தனர். எல்லோரிடமும் சர்டிஃபிகேட், பேப்பர் கட்டிங் என்று ஏகப்பட்ட ஆதாரம் இருந்தது. அந்தக் கூட்டத்தில் திடீரென்று “டேய் அனந்தா சாரி” என்று குரல் ஒலித்தது. அனந்தா சாரி திரும்பிப் பார்த்தான். அங்கு அய்யா சாமி நின்று கொண்டிருந்தான். ஓடி வந்து கட்டிக் கொண்டான்.

“டேய் எப்படிடா இருக்கே? உன்னைப் பார்த்து எத்தனை நாள் ஆச்சு? இப்ப என்ன பண்ற... இங்க ஏன் வந்தே” என விசாரித்தான் அய்யா சாமி. “இந்த செலக்‌ஷனுக்குத்தான் வந்தேன். இப்ப நான் மதுரை TVS-யில் வேலை செய்யறேன். நீ என்ன பண்றேன்னு” பதிலுக்கு கேட்டான்.

“இப்ப நான் இண்டியன் பாங்கில் வேலை செய்யறேன். செங்கல்பட்டில் இருக்கேன். நானும் இதுக்குத்தான் வந்து உள்ளேன். பல மேட்ச்சுகளில் ஆடி வருகிறேன். எங்க பாங்க் அணியில் பல மேட்ச் ஆடி வருகிறேன். ஆமா! நீ எங்க விளையாடின?” எனக் கேட்டான்.“நான் எங்க கம்பெனிக்கு ஆடினேன். உன்னை மாதிரி நானும் டிவிஷனிலும் ஆடி வருகிறேன். யுனிவர்சிட்டியில் ஆடி உள்ளேன். நீ என்ன பேட்டிங்கா, இல்ல பௌலிங்கா!” என கேள்வி கேட்டான். “நான் பேட்டிங்தான். மிடில் ஆர்டர் தான். அதுதான் எனக்குப் பிடிக்கும்.

நீ எப்படி?” என்றான். “நான் பௌலர். மித வேகப்பந்து வீச்சுதான். பல விக்கெட் எடுத்துள்ளேன். நம்பிக்கையோடு வந்துள்ளேன்.”“சரி வா மணி ஆயிற்று. அதோ செலக்டர் வந்துவிட்டனர். போய் ஒழுங்காக செய். போகும் போது என்னை கட்டாயம் பார்த்து விட்டு போ” என்று இருவரும் பிரிந்தனர்.

அய்யா சாமியும், அனந்தாசாரியும் சாதாரண நண்பர்கள் கிடையாது. ஒண்ணாங் கிளாஸில் இருந்து SSLC வரை மயிலாடுதுறை நகராட்சி பள்ளியில் படித்தவர்கள். இருவரும் குத்தாலத்தை சேர்ந்தவர்கள். பின் அய்யா சாமி மயிலாடுதுறை AVC கல்லூரிக்குப் போய் டிகிரி சேர்ந்தான்.அனந்தா சாரி சிதம்பரம்

அண்ணாமலையில் சேர்ந்து படிப்பை முடித்தான். இருவரும் கல்லூரிகளிலேயே கிரிக்கெட் ஆடி உள்ளனர். இப்போது அனந்தா சாரி மதுரையில் வேலை செய்யறான். அய்யா சாமி செங்கல்பட்டில் பேங்கில் இருக்கிறான்.

இருவரும் பலநாள் கழித்து சந்தித்துக் கொள்கிறார்கள். உள்ளே வீரர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களுடைய பேப்பர் கட்டிங்கையும், சர்டிஃபிகேட்டுகளையும், மெடல்களையும் சோதித்து பார்த்துக் கொண்டிருந்தனர். உடல் தகுதியை முக்கியமாக சோதனை செய்து பார்த்தனர். மணி 3 ஆயிற்று. ஒவ்வொரு வீரரும் சோகமாகவும், வருத்தமாகவும் வெளியே வரத் தொடங்கினர். ஆம். அவர்கள் தேர்வு செய்யப்படாதவர்கள்தான்.

இடைவேளை கூட இல்லாமல், சாப்பாடு சாப்பிடாமல் இருந்ததால் மட்டும் அல்ல... தேர்வு செய்யாதது கூட சோர்வுக்குக் காரணம். சோக முகத்துடன் அனந்தா சாரி வெளியே வந்தான். நண்பனுக்காக காத்திருந்தான். சிறிது நேரத்தில் அய்யா சாமியும் வருத்தமாகவும், கோபமாகவும் வந்தான். இருவரும் எதிரே இருந்த டீக்கடைக்கு சென்றனர்.

“ஏன்டா அனந்தா! நீ செலக்ட் ஆகலியா! பௌலிங் ஒழுங்கா செஞ்சியானு” கேட்டான்.

“எல்லாம் ஒழுங்காத்தான் போட்டேன். ஒரு Google போட்டேன். Short Ball ஒன்று போட்டேன். ஏன் பேட்ஸ்மேனை போல்டு கூட பண்ணேன்... என்ன பிரயோஜனம்? ஒன்றும் இல்ல” என்று அழுதான்.“அதில் பாருடா! அந்த செலக்டர் முதல்ல என்னைப் பாராட்டி சொன்னாருடா! நல்லா போட்டேன்னு கூட பேசினார்டா. ஆனா, அதற்கப்புறம் சிரிச்சுக்கிட்டே என் முதுகை லேசாக தடவினாருடா. எனக்கு கூச்சமா போச்சு.

அவர் கையில் அது பட்டுச்சு. என்ன அய்யரான்னு கேட்டாருடா? இல்ல அய்யங்கார்ன்னு சொன்னேன். சரி ஏதோ ஒண்ணு. ஆக மொத்தம் அய்யருதானேன்னு கேட்டாருடா. ‘ஆமாம்’ என்றேன். ‘ஏன் தம்பி உங்க ஆளுங்கதான் ரொம்ப நாட்களாக ஆடுறாங்க. நீங்களே எத்தனை நாட்கள் ஆடுவீங்க. மத்தவங்களுக்கு சான்ஸ் கொடுங்க. அவங்களும் பிழைச்சுப் போகட்டும்’ன்னு. சொல்லி எனக்கு பாயின்ட் குறைச்சுப் போட்டு விட்டாருடா. என் திறமைக்கு மரியாதை இல்லாம போச்சு” என்று சொல்லி அழுதவன்...“ஏண்டா நாங்கதான் பாவப்பட்ட ஜென்மம்... கிடைக்கல. உனக்கு என்ன ஆச்சு?” என்றான்.

“அட ஏண்டா கேட்கறே... நானும் உன்னை மாதிரி நன்னாத்தான் விளையாடினேன். ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடிச்சேன். அந்த ஒரு சிக்ஸும் ஆப் சைடில் அடிச்சேன். அந்த ஃபோர் பௌலர் தலைக்கு மேல அடிச்சேன். என்ன பிரயோஜனம்? அந்த செலக்டர் சிரித்துக் கொண்டே என் அருகில் வந்து என் முதுகை தடவினாருடா. உன்னை மாதிரி எனக்கும் கூச்சமாய் போயிடுச்சி. அவர் கையில் அது கிடைக்கல. ஏன்னா அது அங்க இல்ல.

அது ேபாடுற ஆள் நான் இல்ல. எந்த ஊர்? அப்பா, அம்மா என்ன செய்யறாங்கன்னு கேட்டாருடா! நான் ஆடுதுறையிலிருந்து வருகிறேன். நான் ஒரே பிள்ளை. அப்பா விவசாயி. வயல், தோட்டத்துலே வேலை செய்யறாரு. நானும் அப்பப்ப அவருக்கு துணையாக வேலை செய்வேன். நான் என்ன விளையாட்டு விளையாடுகிறேன் என்றே தெரியாது. ஆனா, என் பேரை பேப்பரில் பார்த்தா சந்தோஷம் கொள்வார் என்று வெளிப்படையாக சொன்னேன். அதையே அவர் எனக்கு எதிராக திருப்பி விட்டாருடா!”

“இங்க பாருங்க தம்பி. நீங்க விவசாயக் குடும்பம். நீங்க எதுக்கு இங்க வர்றீங்க. அப்பாவுக்கு துணையாய் இருங்க. அது மட்டும் அல்ல, நீங்க எல்லாம் இங்கு வந்தா, விவசாயத்தை யார் காப்பாத்தறது. உணவுப் பஞ்சம் வராதா. நீங்க மக்களுக்கு படி அளிக்கும் பகவான். இங்கே வராதீங்க... உங்களால்தான் உலகம் சுற்றுகிறது என்று பாயின்ட் குறைச்சுப் போட்டு என்னை செலக்ட் செய்யலடா” என விரக்தியோடும், வெறுப்பாகவும் சொன்னான்.

‘‘இங்க பார் அய்யா சாமி. இந்த உலகம் இருக்கே... மேலே இருக்கிறவனை காலை புடிச்சு இழுக்கும். கீழே உள்ளவன் மேலே வந்தா கையை தட்டி கீழே தள்ளும். இது தாண்டா நம்ம ஊர் அரசியல். ஒரு விஷயத்துல நமக்கு ஏமாற்றம் கொடுத்தது நமது முதுகுதாண்டா!’’ என்று வெறுப்பாக சிரித்தான். ‘‘ஆமாம் அதுதான் உண்மை. உனக்கு முதுகில் இருந்தது. எனக்கு இல்ல. அதுதான் நமது எதிர்காலத்தை தீர்மானம் செய்தது” என ஆமோதித்தான். மெயின் ரோடு வந்தனர் இருவரும். “இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில்” என்று விளம்பரம் போர்டில் அப்துல் கலாம் முழங்கினார். “இல்ல சார்... இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் முதுகில்” என இருவரும் உரத்தக் குரலில் கூவினர்.

தொகுப்பு :ஆர்.சேஷாத்திரி