Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விடை பெற்ற விடிவெள்ளி! பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி

நன்றி குங்குமம் தோழி

“எனக்கு எழுபத்தெட்டு வயதாகி விட்டது... போதும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நான் பாடிவிட்டேன். இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுப்போம்... புதியவர்கள் பாடட்டும்... நாம் கேட்போம்... எனக்கும் கொஞ்சம் ஓய்வு வேண்டும்” என்று 2016ல் பின்னணி பாடல்கள் பாடுவதிலிருந்து விலகி நின்ற பாடகி ஜானகி அம்மா, 2018ல் கிராமத்துக் கதை பின்னணியில் உருவான ‘பண்ணாடி’ என்ற படத்தில் ‘உன் உசுரு காத்துல...’ என்ற பாடலை சந்தோஷம், சோகப் பின்னணியில் இரண்டு பாடல்களாக பாட வைத்தார் படத்தின் இசையமைப்பாளர் ராஜேஷ் ராமலிங்கம்.

‘தென்னிந்தியாவின் இசையரசி’ என்று அழைக்கப்படும் ஜானகி அவர்கள் இசைப் பயணம் 1957ல் ‘விதியின் விளையாட்டு’ படத்தில் இருந்து ஆரம்பமானது. நான்கு தேசிய விருதுகளும், 33 மாநில விருகளையும் பெற்றுள்ளார். இதுவரை 48 ஆயிரம் பாடல்களை 17 மொழிகளில் பாடியுள்ளார். ஜானகி அவர்களுக்கு திரைத்துறையில் புகழைப் பெற்றுத் தந்தது ‘கொஞ்சும் சலங்கை’ படத்தில் அவர் பாடிய ‘‘சிங்கார வேலனே தேவா” என்ற பாடல்தான்.

‘கொஞ்சும் சலங்கை’ படத்தின் இசை அமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு அன்றைய புகழ் பெற்ற நாதஸ்வரக் கலைஞரான காருக்குறிச்சி அருணாசலத்தின் மிக நுணுக்கமான ஸ்வரஸ்தாளங்களுடன் இணைந்து இழையும் குரலுக்காக பொறுத்தமான பாடகியை தேடினார். கடைசியாக ஜானகி அவர்களின் குரல்வளம் சுப்பையா நாயுடுவுக்கு திருப்தியைத் தர ‘சிங்கார வேலனே தேவா...’ பாடல் இன்றைக்கும் உயர்ந்து நிற்கிறது.

ஜானகி அவர்கள் பின்னணி பாடலுக்காக தேசிய விருதுகள், மாநில விருதுகளை பலமுறை பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசிடமிருந்து கலைமாமணி விருதும், கர்நாடக அரசிடமிருந்து கர்நாடக இராஜயுத்சவா விருதும் பெற்றார். பலவிதமான பாடல்களை தன்னுடைய இனிமையான குரலால் மயக்கிய ஜானகி அவர்கள் பாட ரொம்பவே கஷ்டப்பட்ட பாடல் ‘ஹேமவதி’ என்ற கன்னடப் படத்தில் உள்ள ‘‘ஷிவா ஷிவா என்னதா நாழிக யேகே” என்ற பாடல். ‘தோடி’, ‘அபோகி’ ராகங்களில் அமைந்த அந்த சிக்கலான பாடலுக்கு இசை அமைத்தவர் எல். வைத்யநாதன். ‘‘இந்தப் பாடலை ஜானகி அம்மா தவிர வேறு யாராலும் இத்தனை பிரமாதமாகப் பாடியிருக்க முடியாது” என்று அந்தப் பாடல் ெவளியான போது கூறியிருந்தார் பின்னணிப் பாடகியான சித்ரா அவர்கள்.

ஜானகி அவர்கள் பிறந்தது, ஆந்திர மாநி லம், குண்டூர் மாவட்டம், பள்ளபட்லா என்ற கிராமத்தில். மூன்று வயதிலேயே இசையால் ஈர்க்கப்பட்டு பத்து வயது வரை இசை பயின்றார். இவரின் தாய்மாமன் டாக்டர் சந்திரசேகர், ‘‘ஜானகி சென்னைக்குச் சென்றால் திரைப் படங்களில் பாட வாய்ப்புகள் கிடைக்கும்” என்று வழிகாட்டியதால், ஜானகி அவர்கள் குடும்பத்துடன் சென்னைக்கு இடம் மாறினார். மாமாவின் சிபாரிசில் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் கோரஸ் பாட வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு கிட்டியது. 25 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் கொங்கணி, துளு, சௌராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.

1992ல் இலங்கை சென்றிருந்த போது இவருக்கு ஞான கான சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களை தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். மௌனப் போராட்டம் என்ற தெலுங்குப் படத்திற்கு முதன் முதலில் இசையமைத்தார். 2013ல் ஜானகி அவர்களுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. மிகவும் தாமதமாக விருதினை அளித்ததால் அதை ஏற்க மறுத்துவிட்டார். மேலும், தென்னிந்திய கலைஞர்களுக்கு தகுந்த அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

பல்துறை பாடகர்களில் ஒருவரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோருடனான இவரது கூட்டணி அதிகம் பேசப்பட்டது. 1960, 1970, 1980களில் பி.பி.னிவாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.யேசுதாஸ், பி.ஜெயச்சந்திரன், இராஜ்குமார் ஆகியோருடன் அதிக எண்ணிக்கையில் திரைப்பாடல்கள் பாடியுள்ளார்.

குரலை மாற்றிப் பாடுவது ஜானகி அவர்களுக்கு கை வந்த கலை. ‘ருசி கண்ட பூனை’ படத்தில் ‘‘கண்ணா நீ எங்கே...” பாடலை படத்தில் நடித்த குழந்தைக் குரலில் ஜானகி பாடினார். இந்தப் பாடலை பாடியது மட்டுமில்லை, எழுதியதும் அவர்தான். மெல்லிசை மேடைகளில் குழந்தைகளுக்காக இவர் எழுதி இசை அமைத்து பாடிவந்த அந்த பாடலைத் தான் இளையராஜா அவர்கள் சில மாற்றங்கள் செய்து பயன்படுத்திக் கொண்டார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடப் படங்களிலும் குழந்தை நட்சத்திரங்களுக்கு மழலைக் குரலில் பல பாடல்களை பாடியுள்ளார்.1969ல் நிலவில் மனிதன் கால்பதித்த போது பின்னணிப் பாடகர் பி.பி.நிவாஸ் அவர்கள் “Man to Moon’, ‘Moon to God’ என்ற இரு ஆங்கிலப் பாடலை எழுதி இசை அமைத்து இசைத்தட்டாக அன்றைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனுக்கும் நீல் ஆம்ஸ்ட்ராங்குக்கும் அனுப்பி வைத்தார். அதில் ‘Moon to God’ பாடலை ஸ்ரீ நிவாஸ், ஜானகி அவர்களுடன் சேர்ந்து பாடியிருந்தார்.

இசை நிகழ்ச்சியாகட்டும், ஸ்டுடியோவில் பாடும் போதாகட்டும், இவரின் கையில் கைக்குட்டை எப்போதும் இருக்கும். இந்த விசித்திரப் பழக்கத்தை எஸ்.பி.பாலசுப்ரமணியன் உட்பட பலரும் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். ஒருமுறை, எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள், ஜானகி அம்மாவின் கைக்குட்டையை மறைத்து வைக்க... கைக்குட்டை இல்லாமல் அவரால் பாட முடியவில்லை. இதைக் கவனித்த பாலு, கைக்குட்டையை ஜானகி அவர்களிடம் கொடுத்த அடுத்த நிமிடம் கீத மழை பொழிந்துவிட்டார்.

மகன் முரளி கிருஷ்ணாவுடன் ஹைதராபாத்தில் வசித்து வந்தார். மாரடைப்பில் மகன் இறந்ததும் தனக்குப் பிடித்தமான மைசூருக்கு இடம் மாறினார். மைசூரில் தன்னுடைய ரசிகர் வீட்டில் வாடகைக்கு தன் கடைசி காலத்தினை கழித்துள்ளார். அவர் இல்லை என்றாலும் அவரின் குரலால் தென்னிந்திய இசை உலகில் மற்றும் ரசிகர்களின் இதயங்களில் அழியாத முத்திரையாக பதிந்துள்ளார்.

தொகுப்பு: கண்ணம்மா பாரதி