Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சிந்தனையில் மாற்றம் பள்ளிக்கான வெற்றி!

நன்றி குங்குமம் தோழி

இது வழக்கமான பள்ளி இல்லை. நான்கு சுவர்களால் ஆன கட்டிடத்தின் உள்ளே அமர்ந்து மட்டுமே இவர்கள் பாடங்கள் கற்பதில்லை. மாறாக இயற்கையுடன் இயைந்த இயல்பான சூழலில் நேரடி அனுபவங்கள் மூலம் கல்வியை கற்கின்றனர். ஆம், விவசாயத்தை முதன்மையாகக் கொண்டு செயல்படும் இந்தியாவின் முதல் வேளாண்மை சார்ந்த பள்ளியாக ‘தி குட் ஹார்வெஸ்ட் ஸ்கூல்’ அமைந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் என்கிற மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தப் பள்ளி சிறுமிகளுக்கான தொடக்கப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

காலைப் பொழுதில் பள்ளி வளாகத்துக்குள் நுழையும் சிறுமிகள், புத்தகப் பையை மட்டும் சுமந்து வருவதில்லை. கைகளில் சிறிய தோட்டக் கருவிகளையும் வைத்திருக்கின்றனர். வகுப்பறையில் ஆசிரியர் சொல்லும் ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்ற பாடத்தையும் கவனிக்கிறார்கள். அதே சமயத்தில் வயலில் ஒரு விதை எப்படி முளைக்கிறது என்பதையும் நேரடியாகக் கற்றுக்கொள்கிறார்கள். கல்வி, விவசாயம், சுற்றுச்சூழல், பெண்கள் முன்னேற்றம் ஆகிய நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டு இப்பள்ளி இயங்குகிறது. 50,000 சதுரடி பரப்பளவிலான நிலத்தில் மாணவிகள் நேரடி அனுபவத்தின் மூலம் சிறந்த விவசாய முறைகளை கற்றுக்கொள்கின்றனர். நாற்றங்கால், விதை வங்கி, கால்நடைகளும் இங்கு உள்ளன.

இந்த புதுவிதமான சிந்தனை 2016ம் ஆண்டில் லக்னோவை சேர்ந்த அஷிதா மற்றும் அனிஷ் நாத் என்ற தம்பதியினரால் தொடங்கப்பட்டது. அனிஷுக்கு விவசாயத்தில் ஆர்வமுள்ளதால் தனது கார்ப்பரேட் வேலையை விட்டு விட்டு, உன்னாவ் பகுதியில் நிலத்தை வாங்கி விவசாயத்தை தொடங்கியுள்ளார். ஆனால், விவசாயிகள் பணத்தேவை ஏற்படும்போது நிலத்தை விற்றுவிடுகிறார்கள் என்பதை கண்டறிந்ததும், கிராமத்தில் விவசாயம் பாதிக்கப்படாமல் இருக்க, வேளாண் அறிவியல் மையத்தின் நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் விவசாயிகளுக்கு அறிவியல்பூர்வமான மற்றும் முறைப்படுத்தப்பட்ட அணுகுமுறையை அறிமுகப்படுத்த முன்வந்தார்.

இம்முயற்சியின் தாக்கம் குறைவாகவே இருந்துள்ளது. அதே சமயம் லக்னோவில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த அஷிதா உன்னாவ் பகுதியில் நிலவும் கல்வியின் பின்தங்கிய நிலையையும் கவனித்துள்ளார். எனவே, இருவரும் இணைந்து சிறார்களுக்கான ஒரு பள்ளியை இங்கு அமைக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். வழக்கமான கல்விமுறை மட்டுமில்லாமல் அத்துடன் குழந்தைகளை வாழ்க்கைக்கு தயார்படுத்தும் பல்வேறு காரணிகளையும் சேர்த்து கற்பிக்க சிந்தித்துள்ளனர்.

இந்தியாவின் வடக்கு பகுதிகளில் பெரும்பாலான பெற்றோர்கள் ஆண் பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குவதில் முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஆனால், பெண் பிள்ளைகள் வீட்டு வேலைகள் அல்லது விவசாய பணிகளில் உதவியாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறார்கள். இப்பகுதியில் பெரும்பாலான சிறுமிகள் அத்தகைய சூழலில்தான் வளர்ந்திருக்கிறார்கள் என்பதையும் கருத்தில்கொண்டு, அவர்களுக்கு செம்மையான மற்றும் மேம்படுத்தப்பட்ட முறையில் விவசாயத்தை கற்பிப்பது, அவர்களை வாழ்க்கைக்கு தயார்படுத்துவதோடு மட்டுமில்லாமல், விவசாயிகளான அவர்களின் பெற்றோர்களுக்கும் மதிப்புமிக்க தகவல்களை கற்றுத்தர முடியும்.

இதனால் அவர்கள் கல்வி கற்பதையும் ஊக்குவிக்க முடியும். மேலும், சிறுமிகள் பாதுகாப்பாக உணரக்கூடிய ஒருவரையொருவர் மதிக்கக்கூடிய ஒரு சூழலில் படிக்க வேண்டும் என்பதையும் இத்தம்பதி விரும்பினர். கிராம மக்கள் மற்றும் கிராமத் தலைவரின் ஆதரவுடன், ஏற்கனவே விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட நிலத்தில் 2016ம் ஆண்டு, அஷிதா-அனிஷ் இருவரும் ஆசிரியர்களாகவும் பத்து மாணவர்களுடன் இந்தப் பள்ளியை தொடங்கியுள்ளனர்.

ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கணினி போன்ற வழக்கமான பாடங்கள் இங்கு கற்பிக்கப்படுகின்றன. ஆனால், பாடம் முடிந்தவுடன் மாணவிகள் வயலுக்குச் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மண்ணின் தன்மையை அறிதல், விதைகளை தேர்வு செய்தல், இயற்கை உரம் தயாரித்தல், நீர் மேலாண்மை, காய்கறி மற்றும் தானியப் பயிரிடும் முறைகள், பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றான இயற்கை வழிகள் போன்றவற்றை நேரடி அனுபவமாக கற்றுக்கொள்கின்றனர்.

காளான் வளர்ப்பு குறித்த பயிலரங்கிற்கு சிறுமிகளை லக்னோவிற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்தக் கிராமத்தை தாண்டி ஒரு உலகம் இருக்கிறது என்பதை சிறுமிகள் வியப்புடன் அறிந்து கொள்கிறார்கள். இங்கு சிறுமிகளுக்கு பாடம் கற்பிக்க தன்னார்வலர்களும் வருகின்றனர். வாரத்தில் ஐந்து நாட்கள் செயல்படும் இப்பள்ளியில், மாணவிகளுக்கு மதிப்புக்கூட்டப்பட்ட கல்வி மற்றும் வாழ்க்கைத்திறன்களை வழங்குவதையே தம்பதிகள் வாழ்நாள் இலக்காக கொண்டுள்ளனர்.

தலைமைத்திறன், குழுவாகச் செயல்படுதல், பிரச்னைகளை தீர்க்கும் திறன், சுற்றுச்சூழல் பொறுப்பு, ஆரோக்கியம், ஊட்டச்சத்து போன்ற வாழ்க்கைத் திறன்களும் கற்றுத்தரப்படுகின்றன. காலநிலை மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை, உணவுப் பாதுகாப்பு போன்ற சவால்களை உலகம் இன்று எதிர்கொண்டிருக்கும் வேளையில், இந்தப் பள்ளி சிறுமிகளுக்கு அந்தச் சவால்களை புரிந்துகொள்ளும் கல்வியை வழங்குகிறது. சிறுமிகள் கற்றுக்கொள்ளும் மாற்றம் ஒரு குடும்பத்தின் பழக்கத்தையும் ஒரு கிராமத்தின் சிந்தனையையும் மாற்ற தொடங்கினால், அதுவே இப்பள்ளியின் மிகப்பெரிய வெற்றியாக அமையும்.

தொகுப்பு: ஆர்.ஆர்