நன்றி குங்குமம் தோழி
"Nearbuy"வழிகாட்டும் Apps...
கோவிட் காலத்திற்குப் பிறகு உணவு முதல் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை ஆன்லைனில் நாம் வாங்க துவங்கிவிட்டோம். அதற்காக பல செயலிகள் இருந்தாலும் பல சலுகைகளுடன் அனைத்து சேவைகளை கொடுத்து வருகிறது ‘Nearbuy’ என்ற செயலி!பொதுவாக உணவுக்கு, வீட்டுக்கான பொருட்கள் வாங்குவதற்கு என தனித்தனி செயலிகள் உள்ளன. ஒவ்ெவான்றையும் நாம் தனித்தனியாக நம்முடைய செல்போனில் டவுன்லோட் செய்ய வேண்டும்.
ஆனால், நியர்பை செயலி மூலம் உணவு மட்டுமில்லாமல் சலூன், ஸ்பா, திரைப்படங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்ற அனைத்து சேவைகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக இவை அனைத்தும் சலுகை மற்றும் குறைந்த விலையில் எங்கெல்லாம் கிடைக்கும் என்பதை இந்தச் செயலி நமக்கு தெளிவாக குறிப்பிட்டு காட்டும்.
உள்ளூர் வணிக நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களை டிஜிட்டல் முறையில் இணைக்கும் ஒரு தளமாக Nearbuy செயலி செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களது இருப்பிடத்தைச் சுற்றியுள்ள உணவகங்கள், சலூன்கள், ஸ்பாக்கள், உடற்பயிற்சி மையங்கள், திரைப்படங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை தேடிக் கண்டறிய முடியும்.
ஒரே இடத்தில் பல நிறுவனங்களின் சேவைகள் மற்றும் அவற்றுக்கான சலுகைகளை பார்க்க முடிவதால், ஒவ்வொரு நிறுவனத்தையும் தனித்தனியாகத் தேடும் நேரமும் குறையும். இந்தச் செயலியின் பயன்பாடு எளிமையான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் பயனர் தங்களுடைய இருப்பிடம் அல்லது நகரத்தைத் தேர்வு செய்து தங்களுக்கு அருகிலுள்ள சேவைகளை தேடலாம். பின்னர் அதில் குறிப்பிட்டுள்ள சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். சில நிறுவனங்கள் தள்ளுபடி கூப்பன்களை வழங்குவார்கள். அதனை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான சேவைகளை தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
Nearbuy-ல் அதிகம் கவனம் பெறும் பிரிவுகளில் ஒன்று உணவு. அருகிலுள்ள உணவகங்கள், உணவு தொடர்பான சலுகைகளை பயணிகள் கண்டறிய வசதி செய்துள்ளது. உணவுகள் மட்டுமில்லாமல் சலூன், ஸ்பா, அழகு நிலையம், உடற்பயிற்சிக் கூடங்கள், ஷாப்பிங் என பல அம்சங்கள் குறித்த சலுகைகளை இதில் தெரிந்துகொள்ள முடியும்.
இதனால் தனிப்பட்ட தேவைகளுக்கு மட்டுமின்றி, குடும்பத்துடன் வெளியில் செல்லும்போதும் நண்பர்களுடன் பொழுதுபோக்கை திட்டமிடும்போதும் மிகவும் பயனுள்ளதாக அமையும். வழக்கமான கட்டணத்தை விட குறைந்த விலையில் ஒரு பொருள் கிடைக்கும் போது அந்த வாய்ப்பினை நாம் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாமே.
சலுகைகள் பயனாளர்களுக்கு நன்மை என்றாலும் பயன்படுத்தும் முன்பு அதன் விதிமுறைகளை கவனமாக பார்த்து செல்லுபடியாகும் காலம், குறைந்தபட்ச கொள்முதல் தொகை, முன்பதிவு தேவையா, பயன்படுத்த முடியாத நாட்கள் உள்ளனவா, ரத்து செய்வது, பணத்தை திரும்ப பெறுவது என அனைத்தும் குறித்து கவனமாக பார்க்க வேண்டும். மேலும், முழுமையான நிபந்தனைகளை படிப்பது நல்லது.
வாடிக்கையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் இடையே இந்தச் செயலி ஒரு பாலமாக செயல்படுகிறது. மேலும், வணிகர்கள் புதிய வாடிக்கையாளர்களை சென்றடைய உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் நமக்குத் தேவையான ஒரு சேவை எங்கே கிடைக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதுடன், அதனை சிறந்த விலையில் பெறுவதும் முக்கியமாகிவிட்டது. அந்த வகையில், இருப்பிடத்தை மையமாகக் கொண்டு அருகிலுள்ள வணிகங்கள் மற்றும் சேவைகளை தேடவும், அவற்றுக்கான சலுகைகளை பெறவும் இந்தச் செயலி அமைந்திருப்பது அதன் தனிச்சிறப்பு.
தொகுப்பு: மகி


