Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தங்கப் பதக்கத்தை விடப்பெரியது தன்னம்பிக்கை!

நன்றி குங்குமம் தோழி

‘‘உடலுக்கு வலிமை, உள்ளத்திற்கு ஒழுக்கம், அறிவுக்கு ஆற்றல்... இவை ஒன்றாக இணைந்தால்தான் ஒரு முழுமையான வாழ்க்கை உருவாகும். அத்தகைய குடும்பச்சூழல் அமைந்திருப்பது எனக்கு மிகப்பெரிய வரம்’’ என்கிறார் பீச் வாலிபால் வீராங்கனை, அரசு தணிக்கைத் துறையின் உதவி ஆய்வாளர் தீபிகா. 2026ம் ஆண்டு செப்டம்பர் 4 முதல் 6ம் தேதி வரை மத்திய ஆசிய வாலிபால் சங்கம் சார்பில் பூடானில் நடைபெற்ற சர்வதேச பீச் வாலிபால் போட்டியில் முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கமும், ஒரு லட்சம் பரிசுத் தொகையும் பெற்றவரிடம் பேசியதிலிருந்து...

‘‘முசிறி அருகேயுள்ள மேலவடுகப்பட்டி என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தேன். விளையாட்டை என்னுள் விதைத்தவர் உடற்கல்வி இயக்குநரான என் தந்தை. அம்மா பள்ளி ஆசிரியர். ஒருவர் உடலைப் பயிற்றுவித்தார். மற்றொருவர் அறிவை வளர்த்தார். நான் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை முசிறியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 11, 12 ஆம் வகுப்பு ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தேன்.

இதனைத் தொடர்ந்து இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பும் முடித்தேன். என்னுடைய மூத்த சகோதரி, கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றுகிறார். இரண்டாவது சகோதரி மருத்துவர். ஒரே குடும்பத்தில் நிர்வாகம், மருத்துவம், விளையாட்டு என வெவ்வேறு துறைகளில் நாங்க பயணிக்கிறோம். காரணம், எங்க ஒவ்ெவாருவரின் கனவுக்கு என் பெற்றோர் மதிப்பு கொடுத்துள்ளனர்.

பீச் வாலிபால், கடற்கரை மணலில் நடைபெறும் விளையாட்டு. மணலில் ஓட வேண்டும், குதிக்க வேண்டும், விழ வேண்டும், மீண்டும் எழ வேண்டும். பந்தின் வேகத்தை கணிக்க வேண்டும். எதிரணியின் அசைவைக் கண்காணிக்க வேண்டும். சில நொடிகளில் முடிவெடுக்க வேண்டும். வெயில் கொளுத்தினாலும் விளையாட வேண்டும். காற்று மாறினாலும் ஆட்டத்தை மாற்ற வேண்டும்.

கடற்கரையின் மணல் கால்களைத் தாங்குவதில்லை. ஓட நினைத்தால் இழுக்கும். பாய நினைத்தால் பதற வைக்கும். அந்த மணலையே மைதானமாக்கி, வெயிலையும் வியர்வையையும் வெற்றிக்கான வேள்வியாக்கி, பந்தை இலக்காகவும் பதக்கத்தைப் பயனாகவும் மாற்ற வேண்டும். இதுதான் பீச் வாலிபாலின் சவால். அந்த சவாலினை என்னுடைய சாதனையாக மாற்ற நினைத்தேன்.

பெண்கள் விளையாட்டில் முன்னேறுவதற்கு சில சமயங்களில் சமூகத் தடைகள் இருக்கலாம். குடும்பப் பொறுப்புகள் இருக்கலாம். நேரப் பற்றாக்குறை இருக்கலாம். பாதுகாப்பு குறித்த அச்சங்கள் இருக்கலாம். ஆனால், வாய்ப்பும் ஆதரவும் கிடைத்தால் பெண்கள் எந்தத் துறையிலும் உயர முடியும். குறிப்பாக அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் விளையாட்டிலும் தொடர்ந்து சாதிக்க வேண்டுமானால், நேர மேலாண்மை மிக முக்கியம்.

பணியையும், பயிற்சியையும் சமநிலைப்படுத்த வேண்டும். அலுவலகக் கடமைகள் ஒரு பக்கம். போட்டி அட்டவணைகள் மறுபக்கம். பயணம் ஒரு பக்கம். உடல் மறுபக்கம். இந்த அனைத்தையும்

ஒருங்கிணைக்க வேண்டிய சூழல் இருக்கிறது. அதனால் சாதனைகளை வெறும் விளையாட்டு திறமையின் அடிப்படையில் மட்டும் பார்க்காமல், நேரத்தைத் திட்டமிடும் திறன், பொறுப்புணர்வு, தொடர்ச்சியான முயற்சி எல்லாம் இருக்க வேண்டும்.

வெற்றியின் பாதையில் ஒரு தங்கம் அடுத்த தங்கத்திற்கான கதவைத் திறக்கிறது. ஒரு தேசிய வெற்றி அடுத்த சர்வதேச இலக்கை நோக்கிச் செலுத்துகிறது. சர்வதேச அனுபவம் இன்னும் உயர்ந்த போட்டிகளுக்கான கனவை உருவாக்குகிறது. பல உயரங்கள் காத்திருக்கின்றன. அந்த உயரங்களை அடைய திறமைக்கும், அனுபவத்துக்கும் துணையாக தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் முக்கியமானவை. நேற்று வென்றது வரலாறு, இன்று வெல்வது நிகழ்வு.

நாளை வெல்ல வேண்டியது இலக்கு என்ற எண்ணத்தோடு பயணம் தொடர வேண்டும். தங்கப் பதக்கத்தை விடப் பெரியது தன்னம்பிக்கை. எனக்கு ஊக்கமளித்து வெற்றிப் பாதையை நோக்கி பயணிக்க உதவிய என் பயிற்சியாளர்கள் பத்மா, லதா, மைதிலி, மகேஸ்வரி அவர்களின் பங்களிப்பு எனக்கு ஊக்கமாகவும், உந்து சக்தியாகவும் இருந்தது’’ என்றவர் பீச் வாலிபால் போட்டியில் பல பதக்கங்களை வென்றுள்ளார்.

தொகுப்பு: பொ.ஜெயச்சந்திரன்