Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஸிமா சட்டர்ஜி

நன்றி குங்குமம் தோழி

நான் முதல்வன்

அங்கக வேதியியல் (ஆர்கானிக் கெமிஸ்ட்ரி) மற்றும் மூலிகை மருந்துகள் கண்டுபிடிப்பில் சாதனைகள் பல புரிந்தவர் அஸிமா சட்டர்ஜி. மூலிகை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு புதிய மருந்துகளின் உருவாக்கத்துக்கு வழிவகுத்தவர். இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றில் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி இவரே ஆவார்.தமது வாழ்நாளில் சுமார் நாற்பது வருடங்களை புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகளிலும், புற்றுநோய் தாக்கும் செல்களின் வளர்ச்சிக்கெதிரான மருந்துகளை உருவாக்குவதிலும் செலவிட்டார். இவரது ஆராய்ச்சிகளின் விளைவாக வின்க்ரிஸ்டைன் மற்றும் வின்ப்ளாஸ்டைன் ஆகிய இரண்டு மருந்துகள் புற்று நோய்க்கு எதிராக தயாரிக்கப்படுகின்றன. வேப்ப மரத்தில் இவர் செய்த ஆராய்ச்சிகளின் விளைவாக அதிலிருந்து பூச்சிக்கொல்லிகளும் மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

மார்சிலியா மைன்யூடா என்ற தாவரத்தில் இருந்து ‘ஆயுஷ்-56’ என்ற வலிப்பு நோய் எதிர்ப்பு மருந்தையும், அல்ஸ்டோனியா ஸ்காலரிஸ், ஸ்வர்த்தியா சிராட்டா, பிக்ரோர்பிசா குர்ரோவா மற்றும் சீசல்பின்னா கிறிஸ்டா ஆகிய தாவரங்களில் இருந்து மலேரியா எதிர்ப்பு மருந்தையும் வெற்றிகரமாக உருவாக்கினார். இந்தியாவில் இருக்கும் மூலிகைகள் பற்றி 400க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் இருந்த மேற்குவங்காளத்தில் 23.9.1917 தேதியன்று நடுத்தரக் குடும்பம் ஒன்றில் இவர் பிறந்தார். இவரது தந்தை இந்திர மோகன் சட்டர்ஜி மருத்துவராவார். தாயார் கமலாதேவி சட்டர்ஜி இல்லத்தரசி. இளம் வயதில் இருந்தே அஸிமாவுக்கு மருத்துவ குணம் கொண்ட செடி, கொடிகள் மீது அதிக ஆர்வம் இருந்தது.

பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட அந்தக் காலத்திலேயே படித்து முன்னேறியவர். 1936 ஆம் ஆண்டில் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் வேதியியலில் பட்டப் படிப்பை முடித்தார். 1938 ஆம் ஆண்டில் வேதியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1940ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். 1944ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் அங்கக வேதியியல் (ஆர்கானிக் கெமிஸ்ட்ரி) பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார். அடுத்த வருடம் வேதியியல் நிபுணரான பரதானந்தா சட்டர்ஜி என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஜூலி என்ற மகள் இருக்கிறார்.

புற்றுநோயை தடுக்கும் வின்கா ஆல்கலாய்ட்ஸ் (Vinca alkaloids) எனப்படும் வேதிப் பொருட்களின் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கினார். இந்த வேதியியல் பொருட்கள் பற்றிய ஆராய்ச்சிகளை அமெரிக்காவில் இருக்கும் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். பின்னர் இந்தியா திரும்பிய இவர், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ரீடர் பதவியேற்றார். அவர் பணிபுரிந்த காலகட்டத்தில் ஆராய்ச்சிப் பணிகளுக்கு அரசு நிதி கிடைப்பதில் சிரமம் இருந்தது.

தம்முடைய சொந்தப் பணத்தைச் செலவு செய்து மூலிகை மாதிரிகளை ஆய்வு செய்வதற்காக வெளிநாடுகளுக்கு அவற்றை அனுப்பி வைத்திருக்கிறார். பொருளாதாரச் சிக்கல்கள் ஒருபுறம் என்றால் நான்கு மாத இடைவெளியில் தந்தையையும் கணவரையும் பறிகொடுத்துள்ளார். அது இவரின் உடல்நலத்தினை பாதித்தது. அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு தமது ஆராய்ச்சிகளை தொடர்ந்தார். 1960 ஆம் ஆண்டு, இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் ஃபெல்லோ என்ற அந்தஸ்தை அடைந்தார்.

1961 ஆம் ஆண்டு, ஷாந்தி ஸ்வரூப் பட்னாகர் பரிசைப் பெற்றார். இந்தப் பரிசைப் பெற்ற முதல் பெண்மணி இவர்தான். தொடர்ந்து 67ல் ஜவஹர்லால் நேரு ஃபெல்லோஷிப் இவருக்குக் கிடைத்தது. 1972 ஆம் ஆண்டு, இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவால் இயற்கைப் பொருள் வேதியியலில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியை தீவிரப்படுத்துவதற்கான சிறப்பு உதவித் திட்டத்தின் கெளரவ ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். 1975 ஆம் ஆண்டு, பத்மபூஷண் விருதளித்து இந்திய அரசு இவரை கௌரவித்திருக்கிறது. ஃபெல்லோ

ஆஃப் தி நேஷனல் சயின்ஸ் அகாடமி அங்கீகாரமும் பெற்றிருக்கிறார்.

ஃபாரின் ஃபெல்லோ ஆஃப் தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் எஞ்சினீயரிங் சயின்சஸ் அங்கீகாரமும் இவரை வந்தடைந்தது. நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக 1982 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 1990 மே மாதம் வரை பணியாற்றியிருக்கிறார். 1997 ஆம் ஆண்டு, ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCF) விருதும்

2000வது ஆண்டில், இந்தியன் கெமிக்கல் சொசைட்டியின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் இவரைத் தேடி வந்தன.

கல்கத்தா பல்கலைக்கழகத்தின் லேடி பிராபௌர்ன் கல்லூரியில் வேதியியல் துறை ஒன்றையும் ஆரம்பித்தார். கல்கத்தாவின் பிரேம்சந்த் ராய்சந்த் ஸ்காலர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இந்தியன் சயின்ஸ் காங்கிரஸ் அசோசியேஷன் என்ற அமைப்பின் ஜெனெரல் பிரசிடென்ட் என்ற பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவரே ஆவார். பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியிருக்கின்றன.

சர் சி.வி.ராமன் விருது மற்றும் பி.சி.ராய் விருது இவர் பெற்றிருக்கிறார். 22.11.2006 அன்று இவர் தமது 89வது வயதில் கொல்கத்தா நகரில் காலமானார். இவரது பெயராலேயே அஸிமா சட்டர்ஜி வேதியியல் துறை என்பதைக் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். அஸிமா சட்டர்ஜி விருது என்ற ஒன்றை ஏற்படுத்தித் தகுதியுள்ள பெண் விஞ்ஞானிகளுக்கு அளித்து வருகிறார்கள்.

தொகுப்பு: லதானந்த்