Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

காதலர்கள் விரும்பும் சீக்ரெட் கேண்டில்!

நன்றி குங்குமம் தோழி

திருமணம், காதுகுத்து, பிறந்தநாள், திருமண நாள் என எந்த விழாவாக இருந்தாலும், பரிசு தருவது இயல்பு. சிலர் பணமாக கொடுப்பார்கள். சிலர் தங்களின் நினைவாக ஒரு நல்ல பரிசினை வழங்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்காகவே பலவிதமான பரிசுகளை அவரே தன் கைப்பட செய்து கொடுக்கிறார் சென்னையை சேர்ந்த ஐஸ்வர்யா. இவர் ஐஷுஸ் ஆர்ட் மேஜிக் என்ற பெயரில் ஆன்லைன் முறையில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பரிசுப் பொருட்களை கஸ்டமைஸ் செய்து விற்பனை செய்து வருகிறார்.

‘‘சொந்த ஊர் திருச்சி. திருமணத்திற்குப் பிறகு சென்னையில் செட்டிலாயிட்டேன். நான் இயற்பியலில் முதுகலைப் பட்டம் மற்றும் பி.எட்டும் முடிச்சிருக்கேன். சில காலம் ஆசிரியராகவும் வேலை பார்த்தேன். அந்த சமயத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், என்னால் தொடர்ந்து பணியில் ஈடுபட முடியவில்லை. கொரோனா காலத்தில் எல்லோரும் வீட்டில் முடங்கி இருந்த காலம். அந்த சமயத்தினை நான் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள விரும்பினேன்.

சின்ன வயசில் இருந்தே எனக்கு கலை மேல் தனிப்பட்ட ஈடுபாடு இருந்தது. அது குறித்து பயிற்சி எடுக்க விரும்பினேன். கொரோனா காலத்தில்தான் ஆன்லைனில் பயிற்சி அளிப்பது அதிகரிக்க ஆரம்பித்தது. நானும் தஞ்சாவூர் ஓவியம் குறித்த பயிற்சியினை மேற்கொண்டேன். அதைத் தொடர்ந்து மண்டலா, ரெசின் ஆர்ட் என ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டேன்’’ என்றவர் இதையே பிசினஸாகவும் மாற்றியுள்ளார்.

‘‘கற்றுக் கொண்ட கலையில் அழகான பரிசுப் பொருட்கள் செய்து என் தோழிகள், உறவினர்களுக்கு அளித்தேன். அவர்கள் அதைப் பார்த்து ஆர்டர் கொடுக்க ஆரம்பித்தார்கள். அதன் பிறகு இதை பிசினஸாக செய்யலாம் என்று திட்டமிட்டேன். என் கணவரிடம் சொன்ன போது அவர்தான் எனக்கு முழு ஊக்கம் அளித்து பிசினஸ் துவங்க உதவினார். ஆர்டருக்கு ஏற்ப தயார் செய்வதுதான் என் வேலை. அதற்கான மார்க்கெட்டிங், பேக்கிங் அனைத்தும் என் கணவர் பார்த்துக் கொள்கிறார். மேலும், நான் இதனை தனியாக செய்து வருவதால், அவர் எனக்கு முழு சப்போர்ட்டாக இருக்கிறார். ஆர்டர் அதிகரிக்க ஆரம்பிச்சதும் ஒரு பிராண்டாக மாற்ற நினைத்தேன். ஐஷுஸ் ஆர்ட் மேஜிக் என்ற பெயரில் இன்ஸ்டாவில் பதிவு செய்தேன்’’ என்றவர் அவர் தயாரிக்கும் பரிசுப் பொருட்கள் குறித்து விவரித்தார்.

‘‘வண்ண வண்ண புள்ளிகளை கொண்டு வரைவதுதான் மண்டலா ஓவியம். பொதுவாக ஒரு சின்ன வட்டம் வரைந்து அதைச்சுற்றி பல புள்ளிகள் வைத்து ஓவியமாக வரைவார்கள். சிலர் உருவங்களை மண்டலா கலைக் கொண்டு வரைவாங்க. நான் இரண்டையும் இணைத்து செய்ய விரும்பினேன். நடுவில் வட்டத்திற்கு பதில் பிள்ளையார், சாய்பாபா, அனுமார் என தெய்வங்களின் ஓவியத்தை வரைந்து அதைச்சுற்றி மண்டலா புள்ளிகள் கொண்டு வரைந்தேன். பார்க்கவே வித்தியாசமாக இருந்ததால் பலரின் விருப்பமாக மாறியது. என்னுடைய ஒவ்வொரு படைப்பினையும் நான் இன்ஸ்டாவில் பதிவு செய்வேன்.

அதைப் பார்த்து எனக்கு மண்டலா பயிற்சி அளித்தவர் ஆன்லைன் டுடோரியல் முறையில் பயிற்சி அளிக்க வாய்ப்பு கொடுத்தார். அதாவது, நாம் நேரடியாக பயிற்சி அளிக்க மாட்டோம். மாறாக பயிற்சியினை வீடியோவாக பதிவு செய்து அதை ஆன்லைனில் வெளியிட வேண்டும். மண்டலா ஓவியத்தில் ஒவ்வொரு நிலையினையும் தனிப்பட்ட வீடியோவாக எடுத்து பதிவு செய்ய வேண்டும். பயிற்சி பெற விரும்புபவர்கள் கட்டணம் செலுத்தி அந்த வீடியோவினை பார்த்து கற்றுக் கொள்ளலாம். இதுபோல் பலவிதமான மண்டலா ஓவியங்கள் குறித்த வீடியோ பதிவு செய்திருக்கிறேன்’’ என்றவரின் அடுத்த பிராஜக்ட் பேப்ரிக் பெயின்டிங்.

‘‘எனக்கு ஓவியங்கள் வரைய பிடிக்கும். கேன்வாஸில் பெயின்டிங் செய்வேன். அதையே துணியில் வரைந்து கொடுக்க ஆரம்பித்தேன். பிளைன் நிற புடவையினை கொடுத்தால், அதில் அழகாக டிசைன் செய்து தருவேன். சிலர் புடவை முந்தானையில் மட்டும் பெயின்டிங் செய்ய சொல்வார்கள். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸும் செய்கிறேன். யசோதா கிருஷ்ணர் ஓவியத்தை புடவை முந்தானையில் வரைய சொல்லி வாடிக்கையாளர் கேட்க வரைந்து கொடுத்தேன். இதைத் ெதாடர்ந்து கேண்டில் வொர்க் ஷாப்பில் கேண்டில் செய்யவும் கற்றுக் கொண்டேன். இதில் சென்டெட் கேண்டில், சீக்ரெட் கேண்டில், ஸ்வீட் கேண்டில் என பல டிசைன்களில் வடிவமைத்து தருகிறேன்.

சீக்ரெட் கேண்டில்களை காதலர்கள் மற்றும் தம்பதியினர்தான் அதிகம் விரும்புகிறார்கள். தன் மனதுக்குப் பிடித்தவருக்கு சீக்ரெட் செய்தியினை இதில் எழுதி வைக்க வேண்டும். கேண்டில் உருகும் போது அந்த செய்தி வெளிப்படும். சர்ப்பிரைஸ் கொடுக்கவும், காதலை வெளிப்படுத்த இந்த சீக்ரெட் கேண்டில் பலரின் விருப்பமாக இருக்கிறது. அதே போல் பார்க்க ஒரிஜினல் இனிப்பு பதார்த்தங்கள் போல் இருக்கும். திருமண வரவேற்பில் அலங்கரித்து வைக்க ஆர்டர் செய்கிறார்கள். லட்டு, ஜாங்கிரி, காஜுகத்திலி என பிடித்த இனிப்புகளை கேண்டிலில் வடிவமைக்கலாம்’’ என்றவர், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தீபாவளி, புத்தாண்டு போன்ற நாட்களில் பரிசுப் பொருட்களும் தயாரித்து தருகிறார்.

‘‘பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்து தீபாவளி மற்றும் புத்தாண்டு போன்ற தினங்களில் பரிசுகள் கொடுப்பது வழக்கம். அவர்களுக்கு ஏற்ப பரிசு களை கஸ்டமைஸும் செய்து தருகிறேன். இப்போது ரெசின் நகைகள் டிரெண்டாகி வருகிறது. பொதுவாக ரெசின் ஆர்ட்டில் ஒருவரின் புகைப்படம் அல்லது குழந்தையின் ஒரு வருட பொருட்கள், தங்களின் திருமண மாலையில் உள்ள பூக்கள் கொண்டு நினைவு பரிசாகத்தான் செய்து வருகிறார்கள். நான் அதில் நகையினை வடிவமைக்கிறேன். வாடிக்கையாளர் ஒருவருக்கு அழகான செயினை டிசைன் செய்து கொடுத்தேன். அதனைத் தொடர்ந்து பிரேஸ்லெட், கம்மல் என அனைத்தும் வடிவமைத்து தருகிறேன். பார்க்க ரிச்சாகவும், புதுவிதமாகவும் இருப்பதால், Genz தலைமுறையினர் பலரும் இதை விரும்புகிறார்கள்’’ என்றவர், மண்டலா குறித்த பயிற்சியினை மட்டும் ஆன்லைன் முறையில் தொடர்ந்து வருகிறார்.

‘‘2023ல் ஆரம்பித்தோம். இன்று வரை நான் மட்டுமே செய்து வருகிறேன். உடன் யாரும் துணைக்கு வைத்துக்கொள்ளவில்லை. ஆர்டரின் பேரில் செய்வதால், தற்போது ஆட்கள் தேவைப்படவில்லை. பேக்கிங் என் கணவர் பார்த்துக் கொள்கிறார். ஒருவர் 200 ரோஜா பூக்கள் வைத்து கப் கேண்டில் கேட்டார். சிலர் பொம்மைகள் வைத்து கேட்பார்கள். கேண்டில் அனைத்து விழாவுக்கும் ஏற்ற பரிசு.

திருமணம், பிறந்தநாள் முதல் புதுமனை புகுவிழா வரை அனைத்திற்கும் பரிசாக அளிக்கலாம். சிலர் இதனை ரிட்டர்ன் கிஃப்டாகவும் கொடுக்கிறார்கள். கிறிஸ்துமஸ் தினத்தில் கிறிஸ்துமஸ் ட்ரீ, சாண்டா கிளாஸ், ஜிஞ்சர் பிரெட் போலவும் கேட்கிறார்கள். மேலும் மண்டலாவில் கீசெயினும் செய்து தருகிறேன். தற்போது வீட்டில் இருந்தபடிதான் செய்கிறேன். வரும் காலத்தில் சிறிய அளவில் கடை அமைத்து அதில் விற்பனை மற்றும் தயாரிக்க தனிப்பட்ட யூனிட் இரண்டும் அமைக்கும் எண்ணம் உள்ளது. மேலும், ரெசின் நகையில் புது டிசைன்களை உருவாக்க இருக்கிறேன்’’ என்றார் ஐஸ்வர்யா.

தொகுப்பு: ஷன்மதி