நன்றி குங்குமம் தோழி
நீட் எதிர்ப்புப் போராட்டமும்! ‘ஆசாதி’ முழக்கமும்!
அனிதா போன்ற எளிய மாணவி களின் மரணம் தமிழக இளைஞர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை வன்முறையை ஏவி கைது செய்தபோது, அதற்கு ஆதரவாய் சென்னையிலும் மாணவர்கள் போராட்ட களங்களில் இறங்கி முழக்கங்களை முன் வைத்தனர்.சென்னையில் நிகழ்ந்த மாணவர்களின் நீட் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களில் ‘ஆசாதி’ முழக்கத்தை முன்னெடுத்த திவ்யதர்ஷினியும் ஒருவர்.
தொடக்கத்தில், தென்சென்னை அகில இந்திய மாணவர் பெருமன்றம் (AISF) தோழர்களுடன் இணைந்து பெசன்ட் நகர் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி வழிப் போராட்டம் ஒன்றை நடத்தினர். எதிர்பார்த்ததை விட நூற்றுக்கும் மேற்பட்ட எளிய மக்களும் மாணவர்களும் இதில் திரள, தொடர்ந்து சிஜேபி (CJP) நடத்திய பனகல் மாளிகை போராட்டத்தில், காவல்துறை நெருக்கடி கொடுத்தபோது, பாதுகாப்பான இடமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை தலைமையகமான ‘பாலன் இல்லம்’ தேர்வு செய்யப்பட்டது.
பாலன் இல்லத்தில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்க மாணவர்களை ஒருங்கிணைத்து, முன்னாள் மாணவர் போராட்டங்களின் முக்கிய முழக்கமான உருது மொழியின் முழக்கமான ‘ஆசாதி’ என்ற கோஷத்தை உரத்தக் குரலில் எழுப்பி முழக்கமிட்டவர்களில் திவ்யதர்ஷினியும் ஒருவர்.
‘ஆசாதி’ என்றால் தமிழில் விடுதலை எனப் பொருள். உருது மற்றும் இந்தி மொழியில் ஆசாதி என இருந்த விடுதலை முழக்கத்தை திவ்யதர்ஷினி தமிழில் மொழிபெயர்த்து, ‘உரக்கச் சொல்லு ஆசாதி, நாங்கள் பணியமாட்டோம் ஆசாதி, நாங்கள் அஞ்சமாட்டோம் ஆசாதி, நாங்கள் நிறுத்த மாட்டோம் ஆசாதி’ என்று மாணவர்களை, தமிழிலேயே முழங்கச் செய்தவர். திவ்யதர்ஷினியின் இந்த முழக்கம் மாணவர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியதுடன், பலரின் கவனம் ஈர்த்தது.
பெண்களின் சமூகப் பங்களிப்பும், போராட்டக் குணமும் வெறும் மேடைப் பேச்சுகளோடு நின்றுவிடாமல், களத்தில் இறங்கிச் செயல்படும் ஆற்றலாக மாறுவதை இன்று பல இளைய தலைமுறையினர் நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய படியே, முற்போக்குக் கருத்துக்களையும் எளிய மக்களுக்கான சேவையையும் தன் வாழ்வியலாகக் கொண்டு களத்தில் இறங்கி பணியாற்றுபவர் திவ்யதர்ஷினி. அவரிடத்தில் பேசியதில்...
‘‘தமிழ்நாடு எப்போதும் இந்தித் திணிப்பிற்கு எதிராகவும், மாநில சுயாட்சிக்காகவும் வலுவாக நிற்கும் பின்னணியைக் கொண்டது. இருப்பினும், நீட் தேர்வுக்கு எதிராக வட இந்தியாவில் பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசத்தில் லட்சக்கணக்கான எளிய மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடியபோது, அவர்களோடு நாம் கொண்டுள்ள சமூக ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தவே ‘ஆசாதி’ முழக்கத்தை பயன்படுத்தியதாக கூறிய திவ்யதர்ஷினி, துபாயில் உள்ள இந்தியன் ஹை ஸ்கூலில் பள்ளிப் படிப்பை முடித்த என்.ஆர்.ஐ மாணவி’’ என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
‘‘துபாயில் படிக்கும் போதே மாணவர்களுடன் இணைந்து சமூக அறிவியல் வகுப்புகளிலும், தனிப்பட்ட விவாதங்களிலும், பெண்கள் உரிமை, சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களை பேசுவதில் ஆர்வம் காட்டி வந்தேன். துபாயில் நான் படித்த சி.பி.எஸ்.இ பள்ளிச்சூழல் கண்டிப்பானதாக இருந்தபோதிலும், புனைவுக் கதைகள் அல்லாத புத்தகங்களை வாசிப்பது, பல்வேறு சமூக விழிப்புணர்வைத் தரும் புத்தகங்களை வாசிப்பது, அது குறித்து விவாதிப்பது என்பதே பள்ளியில் மாணவர்களின் வழக்கமாக இருந்தது.
பள்ளிப் படிப்பை முடித்து, சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் முடித்தேன். கல்லூரியில் படிக்கும் போதே, தமிழ் மன்றம், ஆளுமை மேம்பாட்டுக் கழகம், இலக்கியக் கழகம் போன்ற பல்வேறு மாணவர் அமைப்புகளில் என்னை தீவிரமாக இணைத்துக் கொண்டு செயலாற்றினேன்.
பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கும் சென்று எளிய மக்களுக்கு உதவி வந்ததுடன், பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு (Scribe) உதவுவது போன்ற சமூகப் பணிகளிலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.
கல்லூரி இறுதியாண்டின் போது நண்பர்களோடு இணைந்து இந்திய சமூகக் கலாச்சாரக் கூட்டமைப்பில்(ISCF) என்னை இணைத்துக் கொண்டேன். இது தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட முற்போக்கான கலாச்சார-அரசியல் அமைப்பாகும். இதன் வழியாக கலை, இலக்கியம், நாடகங்கள் மற்றும் பாடல்கள் போன்ற எளிய வடிவங்கள் மூலமாக, இளைஞர்களிடம் சமூக விழிப்புணர்வை எளிதாகக் கொண்டு சேர்க்க முடிந்தது.ISCF அமைப்பு மூலம் இந்திய கம்யூனிச இயக்கத் தோழர்களுடனான தொடர்பும் கிடைத்தது. தொடர்ந்து கம்யூனிச இயக்கத்திலும் இணைத்துக்கொண்டு, கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் நலம் சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வருகிறேன்.
கல்லூரி நாட்களிலேயே பெரியார் இலவச பாடசாலை மூலமாக, அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு தன்னார்வலராக பாடம் சொல்லிக் கொடுத்ததுடன், மந்தவெளியில் இயங்கி வரும் ‘ஜீவா கல்வி மையம்’ மூலமாக அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு படிப்புடன் விளையாட்டு, நடனம், பாட்டு, பேச்சுத்திறன் மற்றும் புத்தக வாசிப்பு போன்ற திறன்களை இலவசமாகக் கற்றுக்கொடுக்கின்ற மையமாகவும் கொண்டு செல்கிறோம்.
அதேபோல், அரக்கோணத்தில் இயங்கி வரும் ‘அம்பேத்கர் பகுத்தறிவு பாடசாலை’யினை, குழந்தைகளின் பகுத்தறிவை வளர்க்கும் இலவச கல்வி மையமாக இயக்கி வருகிறோம். மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி குழந்தைகளுக்கும், ஆங்கிலப் பேச்சுத்திறனை (Spoken English) கற்றுக்கொடுக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளோம். இயக்கத் தோழர்களோடு இணைந்து, சென்னை மாநகராட்சியில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு தொழிற்சங்கங்களை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்’’ என்கிற திவ்யதர்ஷினியின் சமூகப் பொறுப்புணர்வு அவரது சொந்த வாழ்க்கையிலும் எதிரொலித்துள்ளது. ஆம்! அண்மையில்தான் திவ்யதர்ஷினி வாஞ்சிநாதன் சித்ரா என்ற தோழரை தனது வாழ்க்கை இணையராகத் தேர்ந்தெடுத்து இல்லற வாழ்வில் இணைந்துள்ளார்.
மென்பொருள் நிறுவனத்தின் குளிரூட்டப்பட்ட அறையில் கைநிறையச் சம்பளம் பெற்றுக்கொண்டு, சமூகப் பிரச்னைகளில் இருந்து ஒதுங்கி வாழும் நுகர்வோர் கலாச்சாரத்தையும், அந்த சொகுசு வாழ்க்கையையும் தாண்டி, உழைக்கும் மக்களின் துயரங்களையும், மாணவர்களின் கல்வி உரிமைகளையும் தனது சொந்தப் பிரச்னையாகக் கருதி, களத்திற்கு வரும் திவ்யதர்ஷினி போன்ற பெண்களே இந்தச் சமூக மாற்றத்தின் உண்மையான தூதுவர்கள்.
திவ்யாவின் இந்தப் பயணம் சமூகப் போராட்ட களத்தில் நிற்கும் அத்தனை பெண்களுக்கும் பெரும் உந்துசக்தியாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
‘‘நாங்கள் பணிய மாட்டோம் ஆசாதி, நாங்கள் அஞ்ச மாட்டோம் ஆசாதி என்று மாணவர்களை, தமிழிலேயே முழங்கச் செய்தவர்!
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்




