Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

சேமிப்பு மற்றும் முதலீட்டுச் செயலி Bachatt App

நன்றி குங்குமம் தோழி

வழிகாட்டும் Apps....

இந்தியாவின் நடுத்தரக் குடும்பங்கள், சிறு வணிகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு நவீன டிஜிட்டல் சேமிப்பு மற்றும் முதலீட்டுச் செயலி. மாதச் சம்பளம் வாங்குபவர்கள், தினசரி வருமானம் ஈட்டும் சிறு கடைக்காரர்கள், வியாபாரிகள் மட்டுமில்லாமல் இல்லத்தரசிகளும் சேமிக்க இந்த ஆப் உதவுகிறது.

பொதுவாக வீட்டில் அம்மாக்கள் அஞ்சறைப் பெட்டியிலோ அல்லது பருப்பு டப்பாக்களிலோ 50 ரூபாய், 100 ரூபாய் என ஒளித்து வைத்திருப்பார்கள். இது ஒரு வகையான சேமிப்பு. திடீரென்று செலவு ஏற்படும் போது அந்தப் பணம் நமக்கு உதவும். அடுப்படியில் உள்ள பருப்பு டப்பாக்களில் உள்ள பணத்திற்கு ஒரு சிறிய தொகை வட்டியாக கிடைத்தால் நல்லது தானே. அப்படிப்பட்ட வசதிகளை இந்த ஆப் செய்து தருகிறது.

முதலில் உங்களின் செல்ஃபோனில் ப்ளேஸ்டோர் மூலம் இந்த ஆப்பினை டவுன்லோட் செய்ய வேண்டும். அதன் பிறகு அதில் உங்களின் ஆதார் எண் மற்றும் பான் விவரங்கள் குறிப்பிட வேண்டும். இதன் மூலம் நீங்கள் குறிப்பிடும் வங்கிக் கணக்கு அதில் இணைக்கப்படும். அதில் இருந்து தினமும் ஒரு சிறிய தொகை இந்த ஆப்பில் சேமிப்பாக வைக்கலாம். தேவைப்பட்டால் ஆட்டோ-பே முறை மூலமாக யுபிஐயில் (Gpay, Phone pay) மூலம் ஒரு தொகையினை குறிப்பிட்ட நாளில் இந்த ஆப்பில் சேமிப்பாக கழிக்கும் படி அமைக்கலாம். இந்த ஆட்டோ-பே முறையினை தேவைப்படும் போது நீக்கவும் செய்யலாம்.

பணத்தை இதில் சேமித்து வைப்பது மட்டுமில்லாமல் அதனை SEBI அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட லிக்விட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யவும் இந்த ஆப் வழிவகுத்து தருகிறது. மேலும், டிஜிட்டல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளியில் மியூச்சுவல் ஃபண்ட் முறையில் முதலீடும் செய்து கொள்ளலாம். மியூச்சுவல் ஃபண்ட் முறையில் சேமித்தல் பாதுகாப்பானதா என்ற எண்ணம் ஏற்படும். SBI, ICICI போன்ற இந்தியாவின் முன்னணி மற்றும் பாதுகாப்பான நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படுகிறது. மேலும், உங்களின் சேமிப்பினை வட்டியுடன் வார இறுதி அல்லது விடுமுறை நாட்களிலும் உங்கள் வங்கிக் கணக்கிற்கு உடனடியாக பெற முடியும்.

மேலும், உங்களின் தினசரி சேமிப்பை எப்போது வேண்டுமானாலும் மாற்றியமைக்கவோ, முழுமையாக ரத்தும் செய்யலாம். இதற்கு எந்தவித அபராதக் கட்டணமும் விதிக்கப்படுவதில்லை. உங்களின் சேமிப்பு பணம் நேரடியாக முதலீட்டு நிறுவனங்களுக்கு செல்வதால், சேமிப்பு பணத்திற்கான சிறந்த வட்டியும் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் கிடைக்க வழிவகுக்கிறது. அதே சமயம் வட்டித் தொகை சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது என்பதால், நல்ல ெதாகை சேமிப்பில் இருக்கும் போது அதை உடனடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம்.

இந்த ஆப் பெண்களின் நிதிச் சுதந்திரத்திற்கும், குறிப்பாக பெண்கள் கையாளும் பாரம்பரியச் சேமிப்பு முறைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கும் பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கிறது. வீட்டில் சும்மா இருக்கும் பணத்திற்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதால், பணத்தின் மதிப்பு வளரத் தொடங்கும். இல்லத்தரசிகள் மற்றும் சுயதொழில் செய்யும் பெண்களுக்கு ஏற்றது. சுயதொழில் செய்யும் பெண்களுக்கு நிலையான வருமானம் இருக்காது.

வியாபாரம் நன்றாக இருக்கும் நாட்களில் இந்த ஆப்பில் சேமிப்பதால் திடீர் தேவைகளுக்கு இந்த சேமிப்பு கை கொடுக்கும். ஒருநாளைக்கு வெறும் ரூ.51 இருந்தாலே சேமிப்பைத் தொடங்கிவிடலாம். இதனால் அவசர காலங்களில் யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியம் இருக்காது. டிஜிட்டல் முறையில் தங்கத்தை சேமிக்கும் போது, பிற்காலத்தில் அதனை பணமாக்கி நகையாக மாற்றிக் கொள்ளலாம். சுருக்கமாகச் சொன்னால், இந்த ஆப் பெண்களின் சிறு சேமிப்புகளை பாதுகாப்பதுடன் வளர்க்கவும் உதவுகிறது. பெண்களுக்கு பொருளாதார ரீதியாக பாதுகாப்பையும் வழங்குகிறது.

தொகுப்பு: மகி