Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குங்குமப்பூவே... கொஞ்சு புறாவே!

நன்றி குங்குமம் தோழி

இயற்கை 360°

ஒரு பெண் கருத்தரித்தவுடன் பரிந்துரைக்கப்படும் இயற்கை உணவுகளில் முக்கியமானது குங்குமப்பூ!“குங்குமப்பூ சாப்பிட்டால் அம்மாவுக்கும் குழந்தைக்கும் நல்லது. சுகப்பிரசவம் நடக்கும். குழந்தையும் நிறமாகப் பிறக்கும்” என்ற நம்பிக்கை பலகாலமாக நம்மிடையே வேரூன்றியிருக்க, இதன் உண்மை நிலை அறிந்திட, “உலகின் பணக்காரப் பூ” என்ற பெருமை கொண்ட குங்குமப்பூ குறித்து தெரிந்துகொள்வோம் வாருங்கள்!

கேசர், கேசரி (Kesar), ஜாஃப்ரான் (Zafran) குங்குமப்பூவு, குங்குமா எனப் பல்வேறு மாநிலங்களிலும் பலவாறு அழைக்கப்படும் ‘Saffron’ எனப்படுகிற குங்குமப்பூவின் தாவரப்பெயர் Crocus sativus. தோன்றிய இடம் யூரேசியா எனப்படும் பண்டைய பெர்சியா. ஆங்கிலச் சொல்லான Saffron, ‘Zafran’ எனும் அரபு மொழியிலிருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. Zarferaan என்பது, பெர்சிய மொழியில் தங்க முலாம் பூசிய எனப் பொருள். அரபு மொழியில், மஞ்சள் நிறத்தைக் குறிப்பது. பெயருக்கு ஏற்ப, உணவுடன் சேர்த்ததும், தங்க மஞ்சள் நிறத்தை உணவில் தருகிற குங்குமப்பூ, உணவுக்கு ஒரு நிறமி மட்டுமே.

மத்தியத்தரைக்கடல் நாடுகளில் தொடங்கி, உலகெங்கும் 3500 ஆண்டுகளுக்கும் மேலாய் மருந்தாகவும், உணவுக்கான நிறமியாகவும், வாசனைப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதிலுள்ள சாஃப்ரனால் (Safranal), பிக்ரோ-க்ரோசின் (Picrocrocin), க்ரோசின் (Crocin), க்ரோசெட்டின் (Crocetin) தாவரச்சத்துகள் குங்குமப்பூவிற்கு நிறத்தையும், சினியோல் (Cineole), பைனீன் (Pinene), ஜெரனியோல் (Geraniol), சாஃப்ரனால் (Safranal) போன்றவை பிரத்யேக மணத்தையும், கரோட்டினாய்டுகள், லைக்கோபீன், ஜியா-ஸாந்தின், வைட்டமின் A, B, C, பொட்டாசியம், கால்சியம், செலீனியம், மாங்கனீஸ், துத்தநாகம் ஆகிய கனிம சேர்மங்கள், 30க்கும் மேலான தாவரச்சத்துகள், பல்வேறு மருத்துவ குணங்களை குங்குமப்பூவிற்கு தருகின்றன.

இதில் நமது முதல் கேள்வியான, ‘‘குங்குமப்பூ சாப்பிட்டால், குழந்தைக்கு நல்லதா டாக்டர்..?” என்ற கேள்விக்கான பதில், குங்குமப்பூ ஒரு உணவு நிறமி மட்டுமே. அது குழந்தையின் நிறத்தை எக்காலத்திலும் மாற்றாது. குழந்தையின் நிறத்தைத் தீர்மானிப்பது மரபணுக்கள் மட்டுமே. குங்குமப்பூவில் உள்ள செரட்டோனின் பாலுடன் சேர்த்து பருகப்படும்போது அது தாயின் உடல் சோர்வுகளை நீக்கி, மன அழுத்தத்தையும் குறைத்து, நல்லுறக்கத்தை தருவிக்கிறது என்பதே உண்மை. இந்த நேர்மறை விளைவுகள், பிரசவ காலத்திற்கும் பொருந்தும் என்பதால், இதனை உட்கொள்ளும் கர்ப்பிணிகளுக்கு, சுகப்பிரசவம் ஆகாது என்றாலும், வலிகளை நீக்கி இயற்கைக்கு வழிநிற்கும் என்பதே உண்மை.

கர்ப்பப்பை வாய் விரியும் தன்மையை குங்குமப்பூ அதிகரித்து, பிரசவத்தை எளிதாக்குகிறது என்பதால் நிறை மாதத்தில் குங்குமப்பூவை தினசரி உட்கொண்டனர் பண்டைய பெர்சியப் பெண்கள். ஆனால், இதற்கான தரவுகள் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. ஆய்வில் மட்டுமே உள்ளது. ஆக, கர்ப்ப காலத்தில் தாயின் ஆரோக்கியமும் சேயின் ஆரோக்கியமும் வெவ்வேறில்லை என்பதால், குங்குமப்பூவை மிதமாக உணவில் சேர்ப்பது தவறில்லை என்பதே இதற்கான பதில்.தாய்-சேய் நலம் மட்டுமன்றி, பல்வேறு மருத்துவ குணங்களும் குங்குமப்பூவில் நிறைந்திருப்பதால், வைட்டமின் A மற்றும் கரோட்டினாய்டுகள், கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ‘Saffron Pill’ என்பது மேற்கத்தியர்களிடையே பிரபலமானதொரு கண் நோய் மருந்தாகும். Macular Degeneration என்கிற ஒளிச்சிதைவு கண் நோய், கண்புரை நோய், மாலைக்கண் நோய், கண் அழுத்த நோய் (glaucoma), வாழ்க்கை முறை நோய்க் காரணங்களால் ஏற்படும் பார்வையிழப்பில் இருந்தும் பாதுகாப்பளிக்கின்றன.

மூளைத்தேய்வு நோய்களான அல்சைமர், பார்க்கின்சன், வலிப்பு, பக்கவாதம் ஆகியவற்றின் அறிகுறிகளைக் குறைக்கவும், தூக்கமின்மையைப் போக்கவும் உதவும் இந்த குங்குமப்பூவின் தாவரச்சத்துகள் இதய நோய், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, பற்சிதைவு, வயிற்று அழற்சி, கௌட் நோய், நாள்பட்ட குடல் மற்றும் கல்லீரல் நோய்கள் மற்றும் மார்பகம், கருப்பை, ப்ராஸ்டேட் உள்ளிட்ட புற்றுநோய்களின் தாக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.

மேலும் சரும அழகிற்கும், கூந்தல் அழகுக்கும், வயோதிகத்தைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. பெண்களின் மாதவிடாய், பிசிஓடி பிரச்னைகளை மட்டுப்படுத்தி, கருவுறுதல் விகிதத்தை அதிகப்படுத்துகிறது. போதை பொருள் தாக்கத்திலிருந்து மீளவும், ஆண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டவும், Erectile Dysfunction எனும் விறைப்புத்தன்மை குறைபாடுகளுக்கும், விந்தணு குறைபாடுகளுக்குமான தீர்வாக ஆயுர்வேத மருத்துவம் குங்குமப்பூவைக் கொண்டாடுகிறது.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது குங்குமப்பூவிற்கும் பொருந்தும். அதிகளவிலான, அதாவது, 4 முதல் 5 கிராம் அளவிலான பூவை உணவில் சேர்த்தால் தலைச்சுற்றல், வாந்திபேதி,

ரத்தக்கசிவு தொடங்கி உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்பதால், அதிகபட்சம் 1.5 கிராம் அளவினைத் தாண்டக் கூடாது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். தங்கத்தைக் காட்டிலும் மதிப்பு மிக்க குங்குமப்பூவை ‘சிவப்புத் தங்கம்’ என்றே ஈரானியர்களும் ஜப்பானியர்களும் அழைக்கின்றனர். கிரேக்கர்களும், ரோமானியர்களும், வாசனைப் பொருளாக மட்டுமன்றி, மது போதையை குறைக்கும் மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர்.

பெர்சியாவில் அரசவைகளின் கம்பளங்கள், மெத்தை விரிப்புகள், நல்லடக்க சீலைகளில் குங்குமப்பூ நார்கள் சேர்த்து நெய்யப்பட்ட தகவல்கள் இருக்கின்றது. மாமன்னர் அலெக்சாண்டர், ஆசியப் படையெடுப்புக்குப் பிறகு, காயங்களை ஆற்ற குங்குமப்பூ பயன்படுத்தி குளித்ததாகவும், பேரழகி கிளியோபாட்ரா தன் குளியலுக்கும், எகிப்திய ஃபரோக்களின் முக அழகிற்கும், குங்குமப்பூ பயன்படுத்தப்பட்டது எனவும் வரலாற்றின் பக்கங்களில் கூறப்பட்டுள்ளது.

ராஜ உணவென போற்றப்படும் குங்குமப்பூ, கிரேக்க, ஆஸ்திரிய, இத்தாலிய, ஸ்பானிஷ், அரேபியன், பெர்சியன், ஆப்கானிஸ்தான் என அனைத்து உணவு வகைகளிலும் இடம்பிடித்துள்ளது. இந்திய உணவு மற்றும் இனிப்புகளில் கட்டாயம் குங்குமப்பூ சேர்க்கப்படுவது போல, சவூதி அரேபியர் அருந்தும் காஃபியில் ஏலக்காயுடன் குங்குமப்பூ நிச்சயம் இடம்பெறும்.

கிழங்குகள் மூலம் விளையும் இந்தத் தாவரத்திற்கு, மிதமான சீதோஷ்ண நிலை, மிதமான தண்ணீர், மண் வளம் மற்றும் சூரிய ஒளி போன்றவை தேவை. உலகளவில் ஈரான், கிரேக்கம், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் காஷ்மீரில் பெருமளவு விளைவிக்கப்படுகிறது.

ஊதா பூக்கள் மலரும் வசந்தகாலத்தில், பசுமை கலந்த அடர் சிவப்பு நிறத்தில், கொத்துக் கொத்தான நார்களாகத் தோற்றம் தரும் குங்குமப்பூவின், ஊதா நிற க்ராக்கஸ் (Crocus) மலர்கள் பறிக்கப்பட்டு, உள்ளிருக்கும் சிவப்பு சூலகத் தண்டு மற்றும் சூலகமுடியான Style, stigma போன்றவை மீண்டும் கைகளால் பிரிக்கப்படுகின்றன. ஒரு க்ராக்கஸ் மலரில், மூன்று குங்குமப்பூ நார்கள் மட்டுமே கிடைக்கும். இந்த ஜாஃப்ரான் எனும் கேசரி இந்தியா வந்தடைந்த வரலாறும் அழகானது. சூஃபி துறவிகள் தங்களது காஷ்மீர் பயணத்தின்போது உடல் நலிவுற, அவர்களது நலிவைப் போக்கி பயணத்தைத் தொடரச் செய்த குறுநில மன்னருக்கு அவர்கள் அளித்த பரிசே, க்ராக்கஸ் எனப்படும் குங்குமப்பூவின் கிழங்குகள். அப்படித் தொடங்கிய இதன் பயணம், காஷ்மீரின் பாம்போர் நிலங்களான புல்வாமா, பட்காம், ஸ்ரீ நகர், கிஷ்ட்வர் மாவட்டங்களில் செழித்து, உலகின் பெருமளவு இங்கு விளைவிக்கப்படுகிறது.

கைகள் மூலமாக 85,000 மலர்களிலிருந்து ஒரு கிலோ குங்குமப்பூ நார்களும், வெறும் 200 கிராம் உலர்ந்த குங்குமப்பூவும் கிடைக்கப் பெறுகிறது. அதாவது, ஒரு பவுண்ட் குங்குமப்பூவை சேகரிக்க, 14,000 பூக்கள் தேவைப்படுகின்றன என்பதே உண்மை. தங்கத்தைவிட, கூடுதலான இதன் விலை மதிப்பின் காரணமாக, கலப்படங்களும் வருகிறது. இதில் தேங்காய்த் துருவல், மஞ்சள் நார்கள், மெல்லிய பருத்தி நூல்களில் சிவப்பு நிறத்தை சேர்த்து, குங்குமப் பூவை கலப்படப் பொருளாய் பயன்படுத்துகின்றனர்.

தண்ணீர் அல்லது பாலில் குங்குமப்பூவைக் கரைத்தால் மினிமினுப்புடன் ஆழ்ந்த மஞ்சள் நிறம் உண்டாகும். இதுவே கலப்படம் இல்லாத உண்மையான குங்குமப்பூ என்பதை அறிய உதவும்.தனது நிறத்தால் மட்டுமன்றி தனது இயல்புகளாலும் சூரியனை, வெற்றியை, புனிதத்தன்மையைக் குறிக்கும் குங்குமப்பூ, நமது நாட்டில் தியாகத்தையும், தேசப்பற்றினையும் சேர்த்தே காட்டுகிறது. “குங்குமப்பூவே...கொஞ்சு புறாவே’’ என கொண்டாடப்படும், விலைமதிப்பு மிக்க இந்தப் பூக்கள் தரும் பயன்கள் விலைமதிப்பற்றவை என்ற புரிதலுடன் இயற்கை பயணம் நீள்கிறது.

(இயற்கை பயணம் நீளும்!)