நன்றி குங்குமம் தோழி
ஒரு சொட்டு ரத்தம் கூட தரையில் சிந்தாமல் ஒரு மனிதனை முழுமையாக முடக்க முடியும் என்கிற யதார்த்தம் நம்மை நிஜமாகவே பதை பதைக்க வைக்கிது.‘‘என் பெயர் ஜானகிராமன். உடுமலைப்பேட்டையில் வசிக்கும் எளிய குடும்பம் என்னுடையது. அப்பா மில் தொழிலாளி. அம்மா வீட்டு வேலைகள் செய்பவர். வறுமை அப்படிங்கறது எங்கள் குடும்பத்தில் நிரந்தரமான ஒரு விஷயமாகவே இருந்திருக்கு.வறுமை காரணமாய் எனக்கும் வேலைக்கு போக வேண்டிய நிலை. அதனால் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே காலையில பள்ளி, மாலையில் வேலைன்னு, மெடிக்கல் ஷாப், கண்ணாடி கடை என பகுதி நேரமாக வேலைக்கு போக ஆரம்பித்தேன்.
ஒரு கட்டத்துல அந்தப் படிப்பையும் தொடர முடியாம பத்தாம் வகுப்போட ஸ்கூல் படிப்பை முழுமையா நிறுத்திட்டு முழுநேரமாக மெடிக்கல் ஷாப் வேலையில இறங்கினேன். அஞ்சு வருஷம் தொடர்ந்து அங்கேயே வேலை. வெறும் மருந்து எடுத்து கொடுக்கிற வேலையா மட்டும் அதை நான் பார்க்கல. என்னோட தொடர்ச்சியான உழைப்பால. ஒவ்வொரு மருந்தும் எதுக்காக பயன்படுத்தப்படுது... அதோட கெமிக்கல் நேச்சர் என்ன என்பதை நுணுக்கமா கவனிக்க ஆரம்பித்தேன்.
ஒரு கட்டத்தில், ஒரு சர்ஜரிக்கு என்னென்ன எக்யூப்மென்ட்ஸ் தேவைப்படும் என்பது துல்லியமாக எனக்கு தெரிய ஆரம்பித்தது. ஒரு பெரிய ஹாஸ்பிட்டலுக்குத் தேவையான ஒட்டுமொத்த அறுவை சிகிச்சை உபகரணங்களையும் தனியாளா கையாளும் அளவுக்கு எனக்கு நிபுணத்துவம் கிடைத்தது.உடுமலைப்பேட்டையில் ஒன்பது கிளைகளை வைத்துள்ள ஒரு பெரிய மெடிக்கல் ஷாப் ஓனர் என் திறமையை நேரில் பார்த்து அவரது கடையில் எனக்கு வேலை கொடுக்க, 10 வருடம் அவரிடம் இன்சார்ஜ், சேல்ஸ்மேன் என பல்வேறு பொறுப்புகளில் வேலை செய்தேன். காலையில 7 மணிக்கு கடைக்கு போனா ராத்திரி 12 மணிக்குதான் வேலை முடியும். 17 மணி நேர உழைப்பு அது.
இப்படியாக சுமார் 19 வருஷங்களை மெடிக்கல் ஷாப்பிலேயே கழித்ததுக்குப் பிறகு, எனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்க நினைத்து, சொந்தமாக ஒரு மெடிக்கல் ஷாப்பை எனக்கே எனக்குன்னு
தொடங்கினேன்.ஒரு சாதாரண கூலித் தொழிலாளி மகனாக, எந்த பின்புலமும் இல்லாமலே என் உழைப்பால் தொழிலதிபராக நான் உயர்ந்த தருணம் அது. 2013ம் வருடம், பிப்ரவரி மாதம் திருமணமும் எனக்கு நடந்தது. அப்போது எனக்கு 27 வயது. வாழ்க்கையில, எல்லாமே எனக்கு ரொம்ப சரியா போயிட்டு இருக்குன்னு நான் மகிழ்ச்சியா இருந்த தருணம் அதுவே கடைசி. வாழ்க்கையில நல்லவிதமாக நாம செட்டில் ஆயிட்டோம்னு நான் நினைத்த அதே வருடம் செப்டம்பர் மாதம் மிகக் கொடூரமான அந்த விபத்து எனக்கு நடந்தது.
ஆம். என்னோட உறவினர் ஒருவரோடு டூவீலர்ல பின்னால் அமர்ந்து போகும்போது, எதிரே வந்த ஒரு அரசுப் பேருந்து எங்கள் மேல் மோதி விபத்தை ஏற்படுத்த, வண்டி ஓட்டிய உறவினருக்கு ஒரு சின்ன கீறல்கூட உடலில் இல்லை. ஆனால், பின்னாடி அமர்ந்திருந்த எனக்கோ ஸ்பைனல் கார்டில் பலத்த அடி.விபத்து நடந்த இடத்தில் ஒரு சொட்டு ரத்தம் இல்லை. என் உடம்புக்கு வெளிய எந்தக் காயமும் இல்லை. சுத்தி இருந்த மக்கள் ‘‘எழுந்துருங்க தம்பி, உங்களுக்கு ஒன்னும் இல்ல. நல்லாதான் இருக்கீங்க...’’ அப்படீன்னு சொல்றாங்க. ஆனா, என்னால என் இடுப்புக்கு கீழே எந்த உறுப்பையும் அசைக்க முடியல.ஸ்பைனல் கார்ட் இன்சுரி அப்படிங்கறது கண்ணுக்குத் தெரியாத பூகம்பம் மாதிரி. வெளியே பார்க்க நல்லா இருக்க மாதிரி தோன்றும். ஆனா, அடித்தளம் முழுமையா நொறுங்கி இருக்கும். விபத்து நடந்த உடனே என்னை உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு போறாங்க. அந்த அரசு மருத்துவமனையில் இருந்த ஒரே ஒரு ஸ்கேன் மெஷினும் வேலை செய்யல. 10 நாள் எந்த சிகிச்சையும் இல்லாமல், ஸ்கேன் கூட எடுக்கப்படாமல் மருத்துவமனை படுக்கையிலேயே கிடந்தேன்.
இடுப்புக்கு கீழே சுத்தமாக உணர்வில்லை. பிறகு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போக என் உண்மையான நிலை அப்போதுதான் எனக்கு தெரிய வருது. தண்டுவடம் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. இனி நான் படுக்கையிலதான் இருக்கணும். எழுந்து நடக்க முடியாது என டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.உடல் ரீதியா நான் முடங்கிப் போனேன் என்பதைத் தாண்டி எனக்கு நடந்த உணர்வுபூர்வமான மற்றும் பொருளாதார ரீதியான இழப்புகள் ஒரு மலையையே சாய்த்து விடும் அளவுக்கு மிகப் பெரியதாக வலித்தது. எனக்கு கல்யாணமான பத்தே மாசத்தில் என்னோட அம்மாவும் இறந்து போறாங்க. விபத்து நடந்து ஓராண்டு கடக்கும் நிலையில், என் மனைவியும் விவாகரத்து பெற்று விலகிவிடுகிறார்.
ஒரு மனிதன் தன் உடம்போட கட்டுப்பாட்டை இழக்குறதை விட தன்னை சுற்றியுள்ள உறவுகள் தன்னை விட்டு விலகிப் போறத பார்க்கறதுதான் உண்மையான மரண வலி. அந்த உணர்வுபூர்வமான தனிமை ஒருபுறம். பொருளாதார நெருக்கடி மறுபுறமும் என என்னை தொடர்ந்து அழுத்துகிறது.மருத்துவச் செலவுகளுக்காகவும் அன்றாடத் தேவைகளுக்காகவும் 19 வருஷங்களாக சிறுகச் சிறுக சேர்த்த பணத்தில் உருவான என்னுடைய சொந்த மெடிக்கல் ஷாப்பை விற்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுது.
ஒரு பத்துக்கு பத்து அறைக்குள், என் சொந்த அக்காவின் கவனிப்பில், என் ஒட்டுமொத்த வாழ்க்கையும் முடங்க, சுமார் நான்கு வருடங்கள் அந்த அறைக்குள்ளேயே படுத்த படுக்கையாய் கிடந்தேன். ஒரே இடத்தில படுத்ததில் முதுகுப் பகுதியில படுக்கை புண் வந்து உடம்பை மோசமாக பாவிக்க, வலியும் வேதனையும் தாங்க முடியாத நிலையில், கத்தியை எடுத்து என் கைகளை அறுத்து சுமார் ஏழு முறை தொடர்ச்சியாக தற்கொலைக்கு முயன்றேன்.
ஒரு காலத்தில தினமும் 17 மணி நேரம் ஓடியாடி உழைத்தவன். நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களை கையாண்டவன் நான். இன்றைக்கு எல்லாத்துக்கும் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலை. ஒரு மனிதன் தன்னை விட மோசமா பாவிக்கப்பட்ட ஆனால், வாழ்க்கையில் சாதித்துக் காட்டிய முன்னுதாரணங்களை பார்க்கும் போது ஏற்படுற தாக்கம் அளப்பரியது. 2017ம் வருடம் அது. தென்காசியில உள்ள அமர்சேவா சங்கம் சென்று, அங்கு ராமகிருஷ்ணன் மற்றும் சங்கர் ராமன் ஆகியோரை சந்திக்கிறேன்.
ராமகிருஷ்ணன் கழுத்துக்கு கீழே எந்த உறுப்பும் செயல்படாத நிலையில குவார்ட்டர் பிளேஜ் நிலையில் இருப்பவர். சங்கர்ராமன் தசை சிதைவு நோயால வீல்சேரில் இருப்பவர். கழுத்துக்கு கீழே எந்த உறுப்பும் செயல்படாத ஒருவரே இவ்வளவு பெரிய நிறுவனத்தை நடத்தி நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு உதவி செய்யும்போது, கைகள் நன்றாக இருக்கின்ற என்னால் ஏன் எதுவும் முடியாது என்கிற கேள்வி அந்த நிமிஷமே எனக்குள் எழுந்தது.
அமர்சேவா சங்கத்தில், மருத்துவ ரீதியாக உதவிகள் பல எனக்கு கிடைத்தது. படுக்கை புண்ணுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு, காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.மறுபிறவி மாதிரி அங்கேயே தங்கி, வீல் சேருக்கு எப்படி மாறுவது, தன்னுடைய அன்றாட தேவைகளை நானே எப்படி கவனித்துக் கொள்வது போன்ற எல்லாவற்றையும் பயிற்சி எடுக்கிறேன். இந்த நிலையில், எனக்கு ஏற்பட்டது அரசுப் பேருந்து விபத்து என்பதால், நான் தொடர்ந்த வழக்கில் 70 லட்ச ரூபாய் எனக்கு நிவாரணமாகக் கிடைத்தது.
அதில் வழக்குச் செலவு, வாங்கிய கடன்கள் எல்லாம் போக, மீதியிருந்த ரூபாயில் சொந்தமா வீடு ஒன்றும் வாங்கினேன். சொந்த வீடு, பாதுகாப்பான சூழ்நிலையை எனக்கு உருவாக்கி கொடுக்க, மீண்டும் என் மெடிக்கல் ஷாப் தொழிலை கையில் எடுக்காமல், முழுநேர சமூக சேவைக்கு என்னை ஒப்புவித்தேன். மெடிக்கல் ஷாப்பினை மீண்டும் ஆரம்பிப்பது, இழந்த பழைய வாழ்க்கையின் நிழலைத் துரத்துவதற்கு சமம். அந்த பழைய ஜானகிராமன் இப்போது இல்லை. பத்துக்கு பத்து அறையில அவன் பட்ட வேதனையும், உதவ ஆளின்றி தவித்த நொடிகள் இதெல்லாம் எனக்கு ஒரு புதிய அடையாளத்தை கொடுத்தது.
தன்னை போல வேறு யாரும் அந்த இருட்டில் கிடந்து தவிக்கக் கூடாது அப்படிங்கிறதுதான் ஜானகிராமனின் புதிய வாழ்க்கையின் நோக்கமாக மாறியது...’’‘அன்பால் இணைவோம்’ அப்படிங்கிற 100 பேர் கொண்ட ஒரு வாட்ஸப் குழுவை உருவாக்கியதுடன், ‘டாக்டர் நெட் இந்தியா’ அமைப்புடன் இணைந்து பல்வேறு சேவைகளை செய்கிறார். ‘தாயுமானவர் அறக்கட்டளை’ என்ற பெயரில் டிரஸ்ட் ஒன்றையும் ஆரம்பித்து, டிரஸ்ட் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர்கள் வழங்குவது, டயப்பர் வழங்குவது, மலைவாழ் குழந்தைகளுக்கு படிப்பு செலவு, கேன்சர் நோயாளிகளுக்கு மருந்து வாங்கி கொடுப்பதென ஜானகிராமனின் சேவை பட்டியல் நீள்கிறது.
தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளுக்கு 150க்கும் மேற்பட்டவர்களுக்கு புத்தாடை மற்றும் உணவுப் பொருட்கள் வழங்குவதையும் தொடர்ந்து செய்து வருகிறார் இவர். மற்றவருக்கு உதவுவது என்பது, அவருக்கு அவரே செய்து கொள்கிற உளவியல் சிகிச்சை மாதிரி.‘‘விபத்துக்கு முன் நான் நல்லா இருந்திருந்தா என் குடும்பத்தை மட்டும் பார்த்திருப்பேன். இன்று என்னால பல நூறு பேருக்கு உதவ முடியுது. விபத்துக்கு முன்பு நான் இருந்ததை விட பல மடங்கு சந்தோஷமா இப்போ இருக்கிறேன்’’ என்கிற, 41 வயது ஜானகிராமனின் தன்னலமற்ற சேவைகளைப் பாராட்டி ஐஐடி மெட்ராஸ், தமிழக அரசு விருதுகள் உட்பட 17 விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டிருக்கு.
உண்மையான மீண்டெழுதல் அதாவது, ரெசிலியன்ஸ் என்பது நாம இழந்த பழைய வாழ்க்கைக்கு திரும்பி செல்வதில்லை. அந்த இழப்பில் இருந்து ஒரு புதிய மனிதராக உருவெடுப்பது.
தன் இளமைக் காலம் முழுவதையும் ஒரு மெடிக்கல் ஷாப்பின் சேல்ஸ் கவுண்டருக்கு பின் நின்று மக்களின் உடல் வலியை போக்க மருந்துகளை வினியோகம் செய்த மனிதர், இன்று மக்களின் மன வலியை போக்க தன்னம்பிக்கையை வினியோகம் செய்து கொண்டிருக்கிறார்.
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்


