Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரேவதியின் வாய்மை வென்றது!

நன்றி குங்குமம் தோழி

“சரியில்லாத, நியாயமற்ற, நீதியற்ற ஒன்றைக் காணும்போது, நீங்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் எதாவது சொல்ல வேண்டும், செய்ய வேண்டும்” எனும் ஜான்லூயிஸ் கூற்றினை நினைவு

கூரும்படி அமைந்துள்ளது தலைமைக் காவலர் ரேவதியின் செயல்.2020ம் ஆண்டு தமிழ்நாட்டின் தூத்துக்குடி, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகிய தந்தை - மகன் கொலை வழக்கு குறித்து நாம் அறிந்திருப்போம். இந்த வழக்கில் தொடர்புடைய 9 குற்றவாளிகளுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் மிக முக்கிய திருப்புமுனையாக இருந்தவர் தலைமைக் காவலர் ரேவதி. பொதுவாக காவல் துறையினர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் முழுமையான உண்மைகள் வெளிச்சத்திற்கு வருவது கடினம். ஆனால், காவலர் ரேவதி எடுத்த துணிச்சலான நிலைப்பாடு இந்த வழக்கில் நீதி கிடைக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ரேவதி இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படுகிறார். காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தின் போது ரேவதி அங்கு இரவு நேரப் பணியில் இருந்தவர் என்பதால், நேரிடையாக நடந்தவற்றை பார்த்துள்ளார்.

விசாரணையின் போது பல அதிகார அழுத்தங்களை மீறி சாட்சியமாக இருந்து உண்மையை வெளிப்படுத்தினார். ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்பதை குறிப்பிடும் ரேவதி நீதி வெல்ல துணைபுரிந்துள்ளார். விசாரணையின் தொடக்கத்திலேயே தன் குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்க கோரியதால் 2020ம் ஆண்டு முதலே அவருக்கு காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. “இத்தகைய கொடூரத்தை நான் என் வாழ்வில் கண்டதில்லை.

காவலர் முத்துராஜ், தந்தையான ஜெயராஜை தாக்குவதை பெனிக்ஸ் தடுத்தபோது, ​​காவல்துறையின் அத்துமீறல் தொடங்கியது” என்றவர், தந்தை மற்றும் மகனை காவலர்கள் சித்ரவதை செய்வதை தடுக்க முயன்றுள்ளார். அவர்கள் மறுத்துவிடவே, ஒரு கட்டத்தில் காவலர்களின் கொடூரத்தையும் பாதிக்கப்பட்டவர்களின் அலறல்களையும் தாங்க முடியாமல் அவர் அந்த அறையை விட்டு வெளியேற வேண்டியிருந்துள்ளது.

“நான் உண்மையை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால், நீதிமன்றம் அதை நிச்சயமாக கண்டுபிடித்திருக்கும், நானும் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டிருப்பேன். உண்மையை வெளிப்படுத்த நான் சந்தித்த இன்னல்களைப் பற்றி எனக்கும் கடவுளுக்கும்தான் தெரியும். தண்டனை பெற்ற காவலர்களின் குடும்பங்களுக்காக நான் வருந்துகிறேன். ஆனால், அவர்கள் கொடூரமாக நடந்திருக்கக்கூடாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மை சம்பவத்தை விளக்கி, சக காவலர்களை குற்றவாளிகளாக கண்டறிய உதவி செய்து, நீதிக் கிடைப்பதில் பங்களிப்பு செய்ததன் மூலம் தன் துணிச்சல் மற்றும் நேர்மையை வலுப்படுத்தியுள்ளார். பலரின் பாராட்டுகளை பெற்று வரும் அவருக்கு பதவி உயர்வு வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு: ஆர்.ஆர்