Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பசுமையின் பிரதிபலிப்பு!

நன்றி குங்குமம் தோழி

நான்கு சுவர்களுக்குள் நந்தவனம்

அழகான வடிவங்கள் மற்றும் நிறங்களில் பூக்கள் பலவிதங்களில் உள்ளன. பூக்களை பிடிக்காதவர்கள் உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படி ஒரு அழகை பிரபஞ்சம் கொடுத்துள்ளது. அதனால்தான் நாம் நல்ல காரியங்கள் மட்டுமில்லாமல் இறந்தவர்களை பூக்கள் கொண்டு மரியாதையோடு விடை கொடுக்கிறோம். நம் வீடு அடுக்குமாடிக் கட்டடமோ, பங்களாவோ, குடிசையோ எதுவாக இருந்தாலும் நம் இடத்தை சொர்க்கமாக மாற்றிக் காட்டுவது பசுமையான செடிகள்தான். சிறிய வீட்டில் அமைக்கப்படும் தோட்டமே அவ்வீட்டை அழகாக காட்டும்.

மண்ணற்ற தரைப்பகுதியிலும் செடிகளை வளர்க்க புதிய முறைகள் கையாளப்படுகின்றன.

மாடி சுவரையொட்டி, வெயில் படும் ஓரங்களில் உட்புறம் குட்டிச் சுவர் போன்று அமைத்து அங்கு தொட்டிகளை வைக்கலாம். பாத்தி போன்று அமைத்து, உரமண் நிரப்பியும் வளர்க்கலாம். நிழலாக காணப்படும் பகுதியில் அத்தகைய சூழலில் வளரக்கூடிய செடிகளை வைக்கலாம். மண் நிரப்பி செடிகள் வைக்க முடியாதவர்கள் தொட்டிகளை பயன்படுத்தலாம். தொட்டிகள் கூட தரையில் அழுக்கடையாமல் பாதுகாப்பாக உள் அடங்குமாறு வைக்கப்படுகிறது. பூமி வெப்பம் அடையாமல் இருப்பதற்கு நாம் இயற்கையை காக்க வேண்டும் என்பதால், செடிகள் வளர்ப்பதும் அவசியமாகிறது.

ஒரு பெரிய இடத்தை இரண்டாக பிரிக்க அழகான அடர்த்தியான ஒரே அமைப்புக் கொண்ட செடிகளை அடுக்கி வைத்தால் போதும். அழகுடன் அறையும் பிரித்தது போல ஆகும். பார்க்கவும் அழகாக இருக்கும். செடிகள் அலங்காரம் தனி வீடுகளிலும், பெரிய இடங்களிலும்தான் செய்ய முடியும் என்பது கிடையாது. சூரிய வெளிச்சம் படும் இடங்களில் பூச்செடிகள், கொடிகள் வளர்க்கலாம். தனி வீடுகளில் மரங்கள் வைத்திருப்பார்கள். அந்தப் பகுதி நிழலாக இருக்கும்.

அங்கு வளரக்கூடிய குரோட்டன்ஸ் வகைகளை வளர்க்கலாம். வீட்டின் முன்புறத்தில் பசுமைப்புற்கள் தரை போடலாம். ஒரு பக்கம் முழுவதும் பூச்செடிகளும் மறுபக்கம் குரோட்டன்ஸ் வகைகளும் கூட வைக்கலாம். முன்புறத்தில் செடிகள் பூத்துக்குலுங்குவதைப் பார்க்கும் பொழுது கண்களுக்கு விருந்து, வீடும் அழகாகத் தெரியும். வருடம் முழுவதும் பூக்கக்கூடிய செடிகளை முன் வரிசைகளிலும், சீசனில் பூக்கும் செடிகளை பின் வரிசைகளிலும் வைக்கலாம். ஒரே மாதிரி செடிகளை இரு ஓரங்களிலும் சமமாக வைக்கலாம். செடிகள் வைத்து அலங்கரிப்பதிலும், ஒரு ரசனை உண்டு. வண்ணமயமான நிறங்களில் காணப்படும் ‘குரோட்டன்ஸ்’களை இடையிடையே வைத்து அலங்கரிக்கலாம். அல்லது தனி ஒரு வரிசை ஒதுக்கலாம்.

செடிகளை அப்படியே விட்டு விடாமல் அதை ஆரோக்கியத்தோடு பாதுகாக்க வேண்டும். செடிகளுக்கு தேவையான தண்ணீர் அவசியம். தொட்டிகள் வைப்பதெற்கென மூங்கில் தட்டுகள், கூடைகள், டெரகோட்டா அலங்காரத் தொட்டிகள், மெட்டல், பிளாஸ்டிக் என பல வகைகளில் கிடைக்கின்றன. வெளியே மணல் தெரியாமல், தண்ணீர் சிந்தாமல் அழகுற வைப்பதற்கு ஏற்றவை. அடிபாகமே தெரியாமல், மேலேயுள்ள பாகம் மட்டும் தெரிவது போல் வைத்துவிட்டால் போதும். தரையே வீணாகாது. பெரிய தொட்டியை அப்படியே ஒரு பித்தளை பாத்திரத்திற்குள் கூட வைத்து விடலாம்.

நிறைய நட்சத்திர ஹோட்டல்களில் பித்தளை பாத்திரத்தில் செடிகளை வைத்திருப்பதை பார்த்திருப்போம். அதை வீடுகளில் மாடிப்படிகளில் செய்யலாம். பெரிய சமையலறைகளாக இருந்தால், அங்கு கூட அழகிய கண்டெய்னர்களில் மணி பிளாண்ட் வகைகளை வளர்க்கலாம். வீட்டின் முகப்பிலேயே அழகிய செடிகளை வைத்து வளர்க்கும் பொழுது, அவை வருபவரை வரவேற்பது போல இருக்கும். நடை பாதையிலும், படிக்கட்டுகளிலும் செடிகள் வைக்கும் போது வரவேற்பறையில் தொட்டிகள் வைக்கும்போது, ஒரே மாதிரியான, ஒரே அளவு கொண்ட செடிகளை வைக்கலாம். அவ்வாறு வைக்கும் போது அவ்வப்போது செடிகளை சூரிய ஒளியில் சிறிது நேரம் வைத்து பிறகு உள்ளே வைக்கலாம்.

தண்ணீர் வசதி இல்லை, அதனால் செடிகள் வைக்க முடியவில்லை என்று யாருமே சொல்ல முடியாது. காரணம், எப்படிப்பட்ட தண்ணீருக்கும் வளரக்கூடிய பல்வேறு விதமான செடிகள் உள்ளன. அடுக்கு மாடி வீடுகளிலும் நான்கு செடிகளாவது வைக்கவே இன்று விரும்புகிறார்கள். அடிக்கடி வெளியூர் செல்பவர்கள் கூட தண்ணீர் விட முடியவில்லையே என்று யோசிக்கத் தேவையில்லை. அதிகம் தண்ணீர் தேவைப்படாத செடிகளான சப்பாத்திக்கள்ளி வகை செடிகள் எத்தனை நாட்களானாலும் வாடிப்போகாது. மேலும், செடிகளுக்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் பாய்ச்சுவது போல் உபகரணங்களும் மார்க்கெட்டில் உள்ளது. அதையும் பயன்படுத்தலாம். செடிகளை வீட்டிற்குள் மட்டுமில்லை பாத்ரூமிலும் வளர்க்கலாம்.

நல்ல ரசனை மற்றும் கலையம்சத்துடன் வீட்டை அலங்கரிக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கு பெஸ்ட் சாய்ஸ் செடிகள்தான். வீட்டிற்குள் ஒரு பாசிடிவ் வைப்ரேஷனை கொடுக்கும். அடுக்கு மாடி வீடாக இருந்தாலும் மொட்டை மாடியில் நமக்கான ஒரு இடத்தில் எப்பொழுதும் பூ பூக்கும் செடிகளை வளர்க்கலாம். தற்போது மொட்டை மாடிகளில் தற்சமயம் காய்கறித் தோட்டங்கள் கூட வைக்கப்படுகின்றன.

இடத்துக்கேற்ற தடுப்புகள் அமைத்து செடிகள் வளர்ப்பதும் ஒரு அழகு. செடிகள், நடுவில் ரெடிமேட் லான்கார்ப்பெட் போட்டு, அதன் மேல் ஒரு நீர்வீழ்ச்சி வைத்து விளக்கு அலங்காரம் செய்துவிட்டால் அந்த இடமே பார்க்க பார்ட்டி செய்யும் இடமாக மாறிவிடும். இயற்கைைய நேசித்து பாதுகாப்பதின் மூலம் பூமி குளிர்ச்சியடைகிறது. வீட்டில் ஆரம்பிக்கும் இயற்கை அழகு நாட்டையும் அழகாக்கிக் காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

தனி வீடாக இருந்தால் அனைத்து செடிகளும் வைப்பது சாத்தியம். அடுக்குமாடியில் வசிப்பவர்களுக்கு நினைத்ததை செய்வது சிரமம். புல் தரையை உருவாக்க இப்பொழுது ‘லான் கார்ப்பெட்டுகள்’ ரெடிமேடாகக் கிடைக்கின்றன. வேண்டிய அளவில் அதனை பொருத்திக் கொள்ளலாம். மொட்டை மாடியில்லாதவர்கள் தங்கள் ‘பால்கனி’யை இது போல் அலங்கரித்துக் கொண்டாடலாம். செடிகளுக்கு ஏற்ப தொட்டியினையும் பெயின்ட் செய்து வந்தால் பார்க்க அழகாக இருக்கும். சிவப்பு பெயின்ட், பசுமையான செடிகளுக்கும் நல்லதொரு கலர் காம்பினேஷன். மணிபிளாண்ட்டை தொட்டியில் அடர்த்தியாக வளரவிட்டு மேலிருந்து கீழ்வரை படர விடலாம்.

தனி வீட்டின் முன்புறத் தோட்டங்களில் செடிகளுக்கு நடுவே நமக்குப் பிடித்த சிலைகள் ஏதேனும் வைக்கலாம். அடர்த்தியான புல் வகைகளை அழகிய ‘ஷேப்’பில் வெட்டி விடலாம். பொதுவாக, நாம் ‘பார்க்’கில் யானை, குதிரை போன்ற உருவங்களில் கூட அடர்த்தியான புல் வகைச் செடிகளை வெட்டி வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். தோட்டக்காரர் உதவியோடு நம்

ரசனைக்கேற்றவாறு அமைக்கலாம். மேலை நாடுகளில் கோடைக் கொண்டாட்டம் மாலை முதல் இரவு வரை அவரவரின் வீட்டுத் தோட்டத்தில் நடைபெறும். ஏ.சி.யில் அமர்ந்து ஆடம்பர உணவை உண்டாலும், இயற்கையை அனுபவித்து எளிய உணவை குடும்பத்துடன் ரசிக்கும் குதூகலமே தனிதான்.

மனிதரின் தோற்றத்தை சில சமயம் அடையாளங்கள் மூலம் குறிப்பிடுவோம். அது போல் ஒருவரின் வீட்டை அவர்களின் தோட்டம் அழகாக எடுத்துக்காட்டும். தோட்டத்தினை நமக்கு முடிந்த பட்ஜெட்டில் அமைத்துக் கொள்ளலாம். இயற்கையை நேசிப்பவர்கள் அனைவருமே முதலில் தோட்டத்திற்கு முக்கியத்துவம் தருவது வழக்கம். கிச்சன் கார்டன் என்று சொல்லக்கூடிய காய்கறித் தோட்டம் இப்பொழுது அனைவராலும் விரும்பப்படுகிறது.

வெண்டை, கத்தரி, தக்காளி, பச்சைமிளகாய், கீரை போன்றவை சீக்கிரத்தில் பலன்தரக்கூடியவை. புடலை, அவரை, வெள்ளரி போன்றவற்றிற்கு பந்தல் அமைப்புத் தந்துவிட்டால் போதும். தினமும் நம்முடைய உணவிற்கு ஒரு காய்கறியினை பயன்படுத்திக் கொள்ளலாம். நம் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப காய்கறிகளை வளர்க்கும் ேபாது அது நல்லதொரு சூழலைத் தருகிறது. போன்சாய் முறையில் பெரிய மர அமைப்புகள் கொண்ட செடிகளை வளர்ப்பது இன்று பலரும் விரும்புகிறார்கள். பூக்கள் சொரியும் பெரிய மரங்கள் கூட போன்சாய் முறையில் பயிரிடப்படுகிறது. கொஞ்சமாக மாடியில் இடம் இருந்தால் சிமென்ட் பெஞ்சுகள் அமைத்து பல்வேறு வண்ணங்களில் தொட்டிகள் வைக்கலாம். இரண்டு மூன்று ‘சிமென்ட்’ பெஞ்சுகள் அமைத்து விட்டால், ஒவ்வொன்றிலும் ஒருவகை செடிகளை வைத்து அழகாக்கலாம்.

‘இக்ஸோரா’ என்று சொல்லும் செடிகள் பல்வேறு நிறங்களில் பூக்கள் கொத்துக் கொத்தாக பூக்கும். பார்க்கும் போது கண்களுக்கு விருந்தாக அமையும். செம்பருத்தியிலும் பல்வேறு வண்ணங்கள் இருப்பதால், பூச்செடிகளை விரும்புபவர்கள் வரிசையாக மலர்த்தோட்டம் வைக்கலாம். இடையிடையே அடுக்குமல்லி, நந்தியாவட்டை போன்றவற்றையும் வளர்க்கலாம். நித்திய மல்லி கொடி வைத்தால் கூட தினமும் மலரின் மணம் தோட்டத்தையே மணக்க வைக்கும்.

இருக்குமிடத்தை நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொண்டால் அதையே குட்டி தோட்டமாக மாற்றிவிடலாம். பீங்கான் மற்றும் டெரகோட்டா தொட்டிகள் வினோதமான வடிவங்களில் கிடைக்கிறது. கலைநயம் கொண்ட தொட்டிகளில், பல்வேறு வண்ணப்பூக்களை வளர்க்கும் போது பார்க்கும் போது தனித்துவமாக தெரியும். பசுமை காணப்படாவிட்டால் நம் இடமும் பளிச்சிடாது. வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது போல் செடிகளும் நம் வீட்டின் ஒரு பகுதியில் இருப்பதுதான் அழகு. நந்தவனம் என்றாலே, இயற்கைக் கொஞ்சும் இடம்தானே! வீட்டில் எங்கு வேண்டுமானாலும் செடிகள் வைக்கலாம். நம் குடும்ப உறுப்பினர் போல நினைத்து பராமரித்து வந்தால் இயற்கை போற்றப்படும், வீட்டின் அழகும் பாராட்டப்படும்.

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீ நிவாசன்