Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விவசாயிகளால் கிடைத்த அங்கீகாரம்!

இளங்கலை வேதியியலில் பட்டம்... விதைப்பந்து, மரம் நடுதல், குளம் தூர்வாருதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். பாரம்பரிய அரிசிகளை விவசாயிகளிடம் நேரடியாகப் பெற்று தமிழகத்தில் மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என வெளிநாட்டிற்கும் சப்ளை செய்கிறார். பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். இவை அனைத்திற்கும் சொந்தக்காரர்தான் கோவை பொன்னையா ராஜபுரம் பகுதியில் வசித்து வரும் விஜயஸ்ரீ.

‘‘பூமியில் பெண்களாகப் பிறந்து விட்டோம். குழந்தைகளை பெற்று விட்டோம் என்றில்லாமல், நம்மால் முடிந்த இயற்கை சார்ந்த களப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதனால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இயற்கையை பாதுகாக்க நண்பர்களுடன் களப்பணியில் இறங்கினேன். பள்ளி, ஆசிரமம், குளம், கோயில் போன்றவற்றில் மரம் நடுவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட துளசி செடிகளை வழங்கி இருக்கிறேன். குளங்களை சுற்றி மரங்களை நட்டு அதை தினமும் பராமரித்து, கண்காணித்தும் வருகின்றேன். குளங்களை சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளையும் மேற்கொண்டு வருகிறேன். இது குறித்து பல இடங்களில் விழிப்புணர்வு, கண்காட்சிகளும் நடத்தி இருக்கிறேன்.

பட்டப்படிப்பு, வேதியியல் படித்ததால் என்னவோ ரசாயனங்கள் சேர்த்த பொருட்களை வாங்கக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் ஊறியிருந்தது. அதனால் இயற்கை சார்ந்த பொருட்களை தேடித் தேடி, என் குடும்பத்திற்கு பயன்படுத்த ஆரம்பித்தேன். கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் படும் துன்பத்தைப் பார்த்த போது, ஏன் நாம் இயற்கை சார்ந்த பொருட்களையும், விவசாயிகளையும் தேடக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்படித்தான் பாரம்பரிய அரிசி விற்பனையை ஆரம்பித்தேன். முதலில் என் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விற்கத் தொடங்கினேன்.

மெல்ல மெல்ல இயற்கை விவசாயிகளின் கருத்தரங்கம், மாநாடு என பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று நேரடியாக கலந்து கொள்ள ஆரம்பித்தேன். அதன் மூலம் பல இயற்கை விவசாயிகளின் அறிமுகம் எனக்கு கிடைக்க ஆரம்பித்தது. இயற்கை உணவுகள் நம்முடைய உடலுக்கு நன்மை தரக்கூடியது. ஆனால், மக்களுக்கு அதன் நன்மைகள் பற்றி தெரிவதில்லை. அதனால் ஒவ்வொரு அரிசியின் நன்மைகளைப் பற்றி மக்களிடம் எடுத்துக்கூறி விற்பனை செய்ய ஆரம்பித்தேன்’’ என்றவர், அரிசியாக மட்டுமில்லாமல், அதனை மதிப்புக்கூட்டும் பொருளாகவும் விற்பனை செய்ய துவங்கியுள்ளார்.

‘‘ஆரம்பத்தில் பாரம்பரிய அரிசிகளில் மதிப்புக்கூட்டுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்வது பெரிய சவாலாக இருந்தது. வீட்டில் வைத்துதான் விற்பனை செய்தோம். மக்கள் நம்பி வாங்க முன்வருவார்களா என்று பயந்தேன். அதிக முதல் போடுவதற்கும் தயக்கமாக இருந்தது. இருந்தாலும் என் மேல் எனக்கு நம்பிக்கை இருந்தது. வித்தியாசமான உணவுகளை அறிமுகம் செய்தேன். அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தேன். இரண்டு பேர் என்று என்னுடைய வாடிக்கையாளர் வட்டம் ஆரம்பித்து தற்போது 500க்கும் மேற்பட்டோர்கள் என்னிடம் பொருட்களை வாங்குகிறார்கள்’’ என்றவர், 30க்கும் மேற்பட்ட இயற்கை வேளாண் சார்ந்த விருதுகளை பெற்றுள்ளார்.

‘‘இயற்கை விவசாயத்தின் அடுத்த கட்டமாக விதைப்பந்து, குளம் தூர்வாருதல், மரக்கன்றுகளை நடுதல் போன்ற வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தேன். விதைப்பந்து நடுவது பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. தொலைக்காட்சி, கைப்பேசி, இணையத்தில் இன்று மக்கள் மூழ்கிப் போய் இருக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. இன்றைய இளைஞர்கள் இது போன்ற இயற்கை சார்ந்த வேலைகளில் ஈடுபட வேண்டும். மேலும், அதிக ரசாயனம் கொண்ட பொருட்கள் பயன்படுத்தாமல், நம்முடைய சுற்றுப்புறச்சூழலை மாசில்லாமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அதன் முதல் கட்டமாக விதைப்பந்துகளை நட்டு வருகிறேன். திருமண நாள், பிறந்தநாள், உலக வன நாள் போன்ற எண்ணற்ற தினங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று மரக்கன்று நடுவிழா நிகழ்வை தொடர்ந்து செய்து வருகிறேன்.

துளசி செடி அதிகாலையில் அதிக அளவில் ஓசோன் வெளியிடுகிறது. இது வளிமண்டலத்தை பாதுகாக்கிறது. அதனால்தான் துளசி மாடங்களை கோயிலில் விநியோகித்து, நடுவதிலும் ஆர்வம் காட்டினேன். அறநிலையத்துறை, தனியார் கோயில்கள் அனைத்திலும் அனுமதி கிடைத்தால் அங்கும் நடுவதற்காக ஆயுத்தமாக இருக்கிறேன். குளங்கள் பொறுத்தவரை பல நாட்கள் சுத்தம் செய்யப்படாமல், தூர்வாராமல் இருக்கும். அதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசும்.

காரணம், மக்கள் எந்தவொரு விழிப்புணர்வும் இல்லாமல் குளங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுகிறார்கள். மேலும், இதில் சாக்கடை தண்ணீரும் கலப்பதால், துற்நாற்றம் ஏற்படுகிறது. ஒரு குளம் சுத்தம் செய்த போது, அடுத்த குளத்தினை சுத்தம் செய்யவே முடியாது என்று சில நேரங்களில் நினைக்க தோன்றும். ஆனால், குளங்களில் மக்கள் பூஜை புனஸ்காரம் என்ற பெயரில் பல கழிவுகளை கலக்கிறார்கள்.

இதைப் பற்றிய விழிப்புணர்வை ஒவ்வொரு வருடமும் நான் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன். என்னுடைய இந்தப் பயணத்திற்கு என் குடும்பம் மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறார்கள். அதனால் என்னால் முடிந்த வரை சுற்றுச்சூழலின் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் அதை பாதுகாக்கவும் செய்வேன்’’ என்றார் விஜயஸ்ரீ.

தொகுப்பு: பொ.ஜெயச்சந்திரன்