Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வானத்தின் ராணி!

நன்றி குங்குமம் தோழி

வெறும் 5,600 ரூபாய் முதலீட்டில் ஒரு விமான நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வர முடியுமா? கனிகா டெக்ரிவால் 22 வயதில் புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தனக்கென்று ஒரு பிராண்டை உருவாக்கியுள்ளார். ‘வானத்தின் ராணி’ என்ற பட்டத்திற்கு முற்றிலும் தகுதியானவர். புற்றுநோய் தாக்கத்திலிருந்து விடுபட்டு வெற்றிகரமாக புதிய வாழ்க்கையைத் தொடங்கிய கனிகா. ‘ஜெட்ஸெட்கோ’ என்ற இந்தியாவின் முதல் தனியார் ஜெட் மற்றும் ஹெலிகாப்டர் வாடகை சேவை நிறுவனத்தை தொடங்கினார்.

இந்த வணிக வெற்றி, கனிகாவை ஹுருன் பட்டியலில் இந்தியாவின் இளம் பெண் தொழில் முனைவோராக இடம்பெறச் செய்துள்ளது. தற்போது தன் 14 ஆண்டு சொந்த உழைப்பினால் கனிகாவின் நிறுவனம் 420 கோடி ரூபாய் மதிப்புக் கொண்டதாக மாறியுள்ளது. மேலும், இவரின் ஜெட்ஸெட்கோ முதல் விமான குத்தகை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெட்ஸெட்கோவின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான கனிகா டெக்ரிவால், தனது தனித்துவமான தொழில்முனைவு முயற்சியால் இந்திய தொழில் துறையில் தனித்து நிற்கிறார். ‘‘நான் இந்த நிறுவனத்தை 2014ல் தொடங்கினேன். அப்போது எனக்கு வயது 21. நான் விமானியாக வானில் பறக்க வேண்டும் என விரும்பினேன். வணிகத்தை உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் மார்வாரி குடும்பத்தைச் சேர்ந்தவள்.

நான் விமானம் ஓட்டப் போகிறேன் என்றதும் எங்க வீட்டில், ‘என்ன டிரைவர் ஆகப் போறியா..? அதெல்லாம் வேண்டாம்’னு அனுமதி தரவில்லை. அப்போதுதான் எனக்கு இந்த வித்தியாசமான யோசனை உதித்தது. வாடகைக்கு டாக்ஸி ஓட்டுவது போல, விமானத்தை வாடகைக்கு டாக்ஸி போல் ஓட்டினால் என்ன என்று தோன்றியது. தனியாருக்குச் சொந்தமான ஜெட் விமானங்களை வாடகைக்கு எடுத்து பயனாளர்களுக்கு வாடகைக்கு விட திட்டமிட்டேன். அதன் படி 2014ல் என் நிறுவனத்தை துவங்கினேன்.

‘மூலதனம் இல்லாமல், முதலீடு செய்யாமல் விமானத் தொழிலை எப்படி நடத்தி வெற்றி பெற்றீர்கள்’ என்று பல தொழில் நிறுவனர்களும், முனைவோரும் என்னிடம் கேட்க மறப்பதில்லை. உண்மையில் இந்தத் தொழிலில் எனது முதலீடு 5,600 ரூபாய் மட்டுமே. எனது பயணத் தொடக்கம் எளிதாக அமையவில்லை. வாழ்க்கையின் நடுவே இரண்டாம் நிலை ஹாட்ஜ்கின் லிம்போமா, அதாவது, நிணநீர் முனைகளை பாதிக்கும் ஒரு வகை புற்றுநோய் எனக்கு இருப்பதாக கண்டறியப்பட்டது.

அது என்னுடைய தொழிலுக்கு பெரிய தடையாக மாறியது. ஒரு தொழில் நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற கனவில் நான் வெற்றிப் பெற, நான் வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. உயிர் பிழைப்பதற்காகக் கொடிய நோயுடன் பெரிய போராட்டமே நடத்தினேன். மருத்துவ சிகிச்சை, எனது அசைக்க முடியாத மன உறுதி காரணமாக புற்றுநோயை வென்றேன். அதன் பிடியில் இருந்து விடுதலை பெற்றவுடன் முன்பை விட மன வலிமை பெற்றவளாக மாறினேன். வாழ்க்கையில், தொழிலில் எப்படிப்பட்ட சவால்களையும் சந்திக்க முடியும் என்ற தைரியம் எனக்குள் பிறந்தது.

விமானப் போக்குவரத்து ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த துறை. அதில் எந்த அனுபவமும் இல்லாமல் அறிமுகமாகி பிடித்து நிற்பது சாதாரண விஷயமில்லை. அந்த மாதிரியான சூழ்நிலையில் விமானத் தொழிலை வெற்றிகரமாக நடத்துவது எவ்வளவு சிரமமாக இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. நான் என் தொழிலை தொடங்கிய போது, தொழில் குறித்த புரிதல் என்னுடன் பயணித்தவர்களிடத்தில் இல்லை. 21 வயது பெண் என்பதால், பிறருக்கு என்னிடம் நம்பிக்கை ஏற்படவில்லை என்பதுதான் உண்மை. முதலீட்டினை சேகரிக்க ஒவ்வொருவரையும் சந்தித்து அவர்களின் படிகளை ஏறினேன். ஆனால், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற முடியாமல் ஏமாற்றம்தான் கிடைத்தது. இறுதியாக 2014ல், சுதீர் பெர்லா என்பவருடன் இணைந்துதான் இந்த நிறுவனத்தைத் தொடங்கினேன்.

இன்று, எங்கள் நிறுவனம் ஒரு வாடகை விமான நிறுவனம் மட்டுமல்ல... பெரிய அளவில் விமானங்களை நிர்வகிக்கும் சக்தியாக உருவாகியுள்ளது. பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த பிறகு, இன்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகளை எனது நிறுவனம் கையாண்டுள்ளது. 6000க்கும் அதிகமான விமானங்களை இயக்கியுள்ளது. மேலும், ஒன்பது தனி விமானங்களையும் இரண்டு ஹெலிகாப்டர்களையும் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தனி ஜெட் விமானக் குழுமங்களில் ஒன்றையும் நிர்வகித்து வருகிறது. செங்குத்தாகப் புறப்படும் புது ரக விமானங்களுடன் விமானப் போக்குவரத்தின் அடுத்த சகாப்தத்திற்குத் தயாராகி வருகிறது” என்கிறார் கனிகா.

தொகுப்பு: கண்ணம்மா பாரதி