Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

துண்டு துணிகளில் பர்ஸ், கீ செயின், பாவாடை சட்டை!

நன்றி குங்குமம் தோழி

டெக்ஸ்டைல் கழிவுகள் என்பது ஆடைகள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தையல் கடைகளிலிருந்து குப்பைத் தொட்டிக்கு போகும் துண்டு துணிகள். ரெடிமேட் கார்மென்ட்டில் மீதியாகும் துண்டு துணிகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன. மாறாக சிறிய அளவில் இயங்கும் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் சிறு தையல் கடைகளால் அவ்வாறு செய்ய முடிவதில்லை. காரணம், பெரிய நிறுவனங்களில் ஒரு வகை பேப்ரிக் துணிகளை வெட்டினால் அவை மட்டும் மீதமாகும். மறுசுழற்சிக்கு அனுப்பவும் எளிது. ஆனால், மற்ற சிறு நிறுவனங்கள் மற்றும் தையல் கடைகளில் ஒரே வகையான துணிகளை வெட்டுவதில்லை. அனைத்து வகை துணிகளும் கலந்திருக்கும். பலவகை துண்டு துணிகளை ரீசைக்கிள் கம்பெனிகள் ஏற்பதில்லை. விளைவு அவை குப்பைத் தொட்டியில் கொட்டப்படுகின்றன. இதனால், மண் வளம் பாதிக்கும் அபாயம் பெருகியுள்ளது.

காட்டன் துணிகள் சில மாதங்களில் மக்கிவிடும். பாலியஸ்டர் 200 ஆண்டுகள் ஆனாலும் மக்காது. இவை அனைத்தும் பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்படுத்தும் அதே மாதிரியான பாதிப்பை தான் உருவாக்கும் என்கின்றனர் ‘ஈக்கோ தோழி’ குழுவினர். இவர்கள் Pre-Consumer Waste எனப்படும் தயாரிப்பு நிறுவனங்களில் மீதியாகும் சிந்தடிக் துணிகள் மேலாண்மைக்கான சிறந்த பணிகளை செய்து வருகின்றனர். இதன் அமைப்பாளர் மற்றும் இயக்குநரான பிரியாவிடம்

பேசியதிலிருந்து…

‘‘நான் குமாரபாளையத்துல கார்மென்ட் டெக்னாலஜி 3 வருட டிப்ளமோ படிச்சேன். சொந்த ஊர் சேலம் மாவட்டம் மேட்டூர். படிப்பு முடிஞ்சதும் கார்மென்ட் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அங்கு ஏற்றுமதி, இறக்குமதி, துணிகளின் ரகம், ஆடை தயாரிப்பு என அனைத்தும் கற்றுக் கொண்டேன். அதில் கிடைத்த அனுபவம் கொண்டு திருப்பூரில் 2008ம் ஆண்டு சொந்தமாக தொழில் துவங்கினேன். முதலில் ஜாக்கெட்களுக்கு ஆரி எம்ப்ராய்டரி வேலைப்பாடுதான் செய்து வந்தேன். ஆரம்பத்தில் கடைகளில் வரும் ஆர்டர்களை மட்டுமே நான் எடுத்து செய்து வந்தேன். அதாவது, மொத்த விற்பனை கடைகளுக்கும் பிளவுஸ், புடவைகளுக்கு ஆரி வேலைப்பாடு செய்து கொண்டிருந்த போது பெண் குழந்தைகளின் பாவாடை, சட்டைகளை தைத்துக் கொடுக்க ஆரம்பிச்சேன். இன்று வரை நான் மொத்த விற்பனைகளுக்கு மட்டுமே செய்து தருகிறேன். ரீடெய்ல் வாடிக்கையாளர்களுக்கு செய்வதில்லை. ரீடெயிலில் வருமானம் அதிகம் இருந்தாலும் வேலை பளு அதிகம் இருக்கும்’’ என்றவர், தன் தொழிலை விரிவுப்படுத்திய விவரத்தைப் பகிர்ந்தார்.

‘2011ல் மத்திய அரசின் PMEGP திட்டத்தில 10 லட்சம் கடன் வாங்கி அதில் இயந்திரங்களை பெற்று தொழிலை விரிவுப்படுத்தினேன். மிஷின் எம்ப்ராய்டரியில் செலவு அதிகம் என்பதால் முழுதும் கை வேலைப்பாடுதான் செய்கிறோம். தற்போது பதினைந்து வருடங்களாக ஆரிவொர்க் பாவாடை, சட்டைகள் தைக்கும் தொழில் மற்றும் பிரைடல் ஆரி வேலைகள் வெற்றிகரமாக நடந்து வருகிறது.

நாங்கள் செய்யும் தையல் வேலையில் நிறைய துண்டு துணிகள் தேங்கும். அது பெரிய இடத்தை அடைத்துக் கொண்டிருந்தது. இந்த துணிகளை எவ்வாறு டிஸ்போஸ் செய்வதுன்னு தெரியல. மற்ற தையல் நிறுவனங்கள், கடைகள் என்ன செய்கிறார்கள் என்று விசாரித்தேன். நிறம் மற்றும் ரகத்திற்கு ஏற்ப துணிகளை பிரித்து ரீசைக்கிளுக்கு அனுப்புவதாக கூறினார்கள். சிலர் குப்பைத் தொட்டி, வற்றிப்போன கிணறுகளில் போட்டுவிடுவதாக கூறினார்கள். இதைக் கேட்ட போது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. மறுசுழற்சி முறை இருந்தாலும் அதை முறைப்படுத்த யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே உண்மை. உணவு வீணாவதை பேசும் போது அதை உற்பத்தி செய்யும் விவசாயியை பற்றி பேசுகின்றோம். உணவைப் போலதான் துணி உற்பத்தி செய்வதும் விவசாயிடமிருந்துதான் தொடங்குகிறது என்பதை மறந்துவிடுகிறோம். உணவு வீணாகி மண்ணில் கொட்டினால் கூட பாதிப்பில்லை. ஆனால், சிந்தடிக் துணிகள் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. லாபம் தரும் தொழில் என்றாலும் இயற்கையை பலவிதங்களில் பாதிக்கிறது. இந்த விஷயத்தை கையில் எடுத்து இதனை முறைப்படுத்த நினைச்சேன்.

துணி தயாரிப்பு நிறுவனங்களை அணுகினேன். அவர்களுக்கும் இது குறித்த வருத்தம் இருந்ததால் என் முயற்சிக்கு உதவ முன்வந்தார்கள். அதன் முதற்கட்டமாக கடந்த மே மாதம் Eco Thozhi குழுவை தோழிகள் ஜெயலட்சுமி, திலகம் என நாங்க மூவரும் சேர்ந்து உருவாக்கினோம். சுஜாதா, பத்மாவதி, சுந்தர பிரபா இவர்கள் எங்களின் ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றுகிறார்கள்’’ என்றவர், தொடர்ந்து அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கத்

தொடங்கினார்.

‘‘இன்று பிசினஸ் கூட சமூகவலைத்தளங்களில்தான் நடக்கிறது. அதனால் துண்டு துணிகள் சேகரிப்பு பற்றி வீடியோவினை நாங்க வெளியிட்டோம். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என பல மாநிலத்தில் தையல் கடை மற்றும் துணி நிறுவனம் வைத்திருக்கும் 1500 பேர் எங்களின் குழுவில் இணைந்தார்கள். அவர்களை நாங்க தன்னார்வலர்களாக சேர்த்தோம். அவர்கள் தங்களிடம் இருக்கும் வேஸ்ட் துணிகள் தீர்ந்தால் போதும் என்ற மன நிலையில் இருந்தனர். அவர்களிடம் இருந்து நாங்க துண்டு துணிகளை பெற்ற போது அவற்றில் காபி, டீ கறைகளுடன் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தன. அவ்வாறு கொடுத்தால் ஏற்க மாட்டோம் என்று சொன்ன பிறகு நல்ல துணிகளை கொடுக்க ஆரம்பித்தார்கள். தன்னார்வலர்கள் துண்டு துணிகளை ஒவ்வொரு பகுதியில் இருந்தும் பெற்று அதனை சேகரிப்பு மையத்திற்குக் கொண்டு வருவார்கள். பிறகு பணியாளர்களை வைத்து துணி வகைகள் மற்றும் நிறத்தின் அடிப்படையில் தரம் பிரிப்போம். பிறகு அவற்றை துணி பைகள், கீ செயின், பர்ஸ், கிளிப்புகள், ஹேர் பேண்டுகள், வாசல் தோரணம், டைனிங் டேபிள் மேட்ஸ் என தயாரித்தோம். இந்த துண்டு துணிகளை பயன்படுத்தி ஆடைகள் தயாரிப்பது தற்போது பிரபலமடைந்து வருவதால் குர்தா, பிளவுஸ்கள், புடவைகள், பாவாடை சட்டைகளும் தயாரிக்கிறோம்.

நாங்க தயாரித்த உடைகளை இன்ஸ்டா பக்கத்தில் போட்ட போது மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. சில துணிகளை ரிட்டன் கிஃப்ட் தரும் பைகளாக தயாரிக்கிறோம். ஃபேஷன் டெக்னாலஜி மாணவர்களும் எங்களிடம் துணிகளை வாங்கி பிராஜட்களுக்கு பயன்படுத்துகின்றனர்’’ என்ற தோழிகள் மூவரும் தங்களின் சொந்த பணத்தைதான் முதலீடாக செய்துள்ளார்கள்.‘‘நாங்க இதுவரை 5 டன் துண்டு துணிகளை சேகரித்துள்ளோம். அதில் 1 டன் ரீசைக்கிளுக்கு தரம் பிரித்து தந்துவிட்டோம். மீதம் 4 டன்களில் 300 கிலோவிற்கு ஆடைகள், மற்ற பொருட்களாக உருமாற்றியிருக்கிறோம். எந்தத் தொழிலிலும் சவால் இருக்கும். எங்களுக்கு இதனை செய்ய ஆட்கள் கிடைப்பதே பெரிய போராட்டமாக இருக்கிறது’’ என்று பேசத் துவங்கினார் திலகம்.

‘‘ஆட்கள் பற்றாக்குறை காரணமாக மகளிர் சுய உதவிக்குழுக்களை நாடியுள்ளோம். குறிப்பாக கிராமப்புற மகளிருக்கு தையல் கற்றுக் கொடுத்து இந்த துண்டு துணிகளை வைத்து மேற்கண்ட தயாரிப்புகளை செய்ய இருக்கிறோம். திறன் பயிற்சி நிறுவனம் துவங்கும் எண்ணமும் உள்ளது. நாம் உடுத்தி பயன்படுத்திய துணிகள் போஸ்ட் கன்சியூமர் வேஸ்ட் என்ற பெயரில் நிறைய துணிகள் குப்பைகளாக வருகின்றன. அதனை முறைப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசாங்கம் பெரிய அளவில் முயற்சி எடுத்து வருகிறது. ஆனால், பிரிவேஸ்ட்டுக்கு இது போன்ற முயற்சிகள் எதுவும் இல்லை. இந்திய மக்கள் பெரும்பாலும் சிந்தடிக் துணிகளையே பயன்படுத்துகின்றனர். காரணம், விலை குறைவு. மேலும், எல்லோரையும் கவரும் வகையில் இருக்கும். நீடித்து உழைக்கும். காட்டன் துணிகள் விலை அதிகமாக இருப்பதால் பயன்பாடு குறைவு. இதனால் சிந்தடிக் துணிக் கழிவுகளே அதிகம் வெளியேறுகின்றன. இதனை கவனிக்காமல் விட்டால் பிளாஸ்டிக் வேஸ்ட்டுக்கு நிகரான பிரச்னைகளை உருவாக்கும் அபாயம் உள்ளது.

நாங்கள் துண்டு துணிகளை அழகான பொருட்களாக மாற்ற தயார். சேகரிக்க, பிரிக்கத்தான் ஆட்கள் வேண்டும். இதனை நாங்கள் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சேர்க்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். தோழிகளான நாங்க வெவ்வேறான துறையில் இருந்தாலும் மண் வளத்தை காப்பாற்றும் சமூகத்தின் மாற்றத்திற்கான சிறிய முயற்சியை எடுத்துள்ளோம். அரசாங்கத்தின் அங்கீகா ரம் மற்றும் உதவி கிடைத்தால் அதை நாங்க அடையாளமாக மாற்றுவோம்’’ என்கின்றனர் ‘ஈக்கோ’ தோழிகள்.

தொகுப்பு: கலைச்செல்வி