Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அதிகரிக்கும் Doom Scrolling எச்சரிக்கும் உளவியலாளர்!

நன்றி குங்குமம் தோழி

ஒரு முக்கியமான விஷயத்தை பார்க்க கையில் மொபைலை எடுத்தால், அந்த வேலை முடிந்ததும் நேராக சோசியல் மீடியா ஆப்ஸ்களில் நுழைகிறோம். அங்கு ஏதோவொரு காமெடி ரீல் பார்த்துவிட்டு வெளியே வராமல் இன்னும் ஒரே ஒரு ரீல், போஸ்ட் பார்த்து ரிலாக்சேஷன் செய்துகொள்ளலாம் என்று நம்மை சமாதானம் செய்துவிட்டு, அளவுக்கு அதிகமான நேரம் கடந்து போவதை கூட அறியாமல், டூம் ஸ்ரோலிங் செய்கிறோம்.

இவ்வாறு சமூக ஊடகங்களின் அளவுக்கு அதிகமான பயன்பாடு, மனிதனின் மனநலத்திலும், நடத்தைகளிலும் பல்வேறு உளவியல் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. எந்த வயதினரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. தொடர்ச்சியான ஆப்ஸ் பயன்பாடு உளவியல் ரீதியாக எவ்வாறெல்லாம் பாதிக்கிறது, அதன் தீவிரம் மற்றும் கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து நம்மிடம் பகிர்கிறார், உளவியல் நிபுணர் மஞ்சு சரவணா.

“சோஷியல் மீடியா பொறுத்தவரையில் ஒரு சில நேர்மறையான விஷயங்கள் இருந்தாலும், எதிர்மறையான விஷயங்கள் குறித்து நாம் விவாதிக்க வேண்டும். இதனால் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதை பார்க்கிறோம். முதலில் குழந்தைகளுக்கு மொபைலை அறிமுகம் செய்வதே பெற்றோர்கள்தான். வயதான பெரியவர்களும் உடன் யாரும் இல்லாத காரணத்தால், உணர்வுபூர்வமான சார்ந்திருத்தலுக்கு மொபைலை தேர்ந்தெடுக்கிறார்கள். சிலர், பார்க்கும் எல்லாவற்றையும் தங்களுடைய வாழ்க்கையுடன் ஒப்பிடுகிறார்கள். வெற்றி, தோல்வி, உறவுகள், சூழ்நிலைகள் என எல்லாவற்றையும் பார்க்கும்பொழுது ‘ஏன் என் வாழ்க்கை மட்டும் சந்தோஷமா இல்லை’ என்று நினைத்து இன்ப்ளூவென்ஸ் ஆகிறார்கள்.

சோசியல் மீடியாக்களின் பாசிட்டிவான விஷயம் என்றால், பிசினஸ் செய்பவர்களுக்கு மார்க்கெட்டிங் செய்யவும் உதவியாக இருக்கிறது. ஆனால், அதை பார்க்கும் ஆடியன்ஸ் கட்டுப்பாடாக இருப்பதில்லை. ஒரு பொருள் அல்லது சேவை எல்லோரிடமும் சென்று சேருவதற்கான இடமாக சோசியல் மீடியா இருந்தாலும், அதற்காக முழு நேரமும் பொருளை ப்ரொமோட் செய்வதையே பார்த்துக்கொண்டிருக்க முடியாது இல்லையா? இரண்டு மணி நேரம் படம் பார்க்கும்போது கூட குறிப்பிட்ட நேரம் மட்டுமே விளம்பரங்களை பார்க்கிறோம். இன்று பல மணி நேரங்கள் நாம் பார்க்கும் எல்லா கன்டென்ட்களிலும் ஏதோவொரு ப்ரோமோஷன் இருக்கிறது. காலை முதல் இரவு வரை பல மணி நேரங்களை செலவிட்டு விளம்பரங்களை பார்ப்பது தேவைதானா என்பதை யோசித்து பாருங்கள்.

தொடர் பயன்பாட்டி னால் பாதிக்கப்பட்டபின் உளவியல் பிரச்னைகளோடு என்னிடம் வருபவர்களில் பெரும்பாலும் சிறுவர்கள்தான். பதினோரு வயதிலேயே சோசியல் மீடியாவுக்கு அடிமையாகிவிடுகிறார்கள். ஆன்லைன் வகுப்புகள் என்று தொடங்கி, தேவையை தாண்டி நிறைய ஆப்ஸ்களை பயன்படுத்த தொடங்குகிறார்கள். சக வயதினரிடையே, ‘அவனிடம் மொபைல், இன்ஸ்டா அக்கவுன்ட் இருக்கிறது.

நானும் பயன்படுத்த வேண்டும்’ என்கிற ‘பியர் ப்ரஷர்’ ஏற்படுகிறது. நண்பர்களுக்கிடையே உரையாடலின் போது ஒரு ரீல் பற்றி பேசி, ‘நீ அதை பார்த்தாயா’ என்று கேட்கும்போது, ‘ஒருவேளை நாம் அதை பார்த்திருக்காவிட்டால், நான் மட்டும் மிஸ் பண்ணிட்டேனே’ என்கிற தாழ்வுமனப்பான்மை ஏற்படுகிறது. அந்தக் காலத்தில் உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்கென்று நியூஸ் இருந்தது. இன்று அதையும் சேர்த்து எல்லாவற்றையும் சோஷியல் மீடியாவிலேயே தெரிந்துகொள்கிறோம்” என்றவர் உளவியல் ரீதியான பாதிப்புகளை விளக்கினார்.

“பெரும்பாலும் பிரச்னைகளோடு என்னை சந்திக்க வருபவர்கள் கூறுவது, கவனத்தை ஒருமுகப்படுத்த முடிவதில்லை, தொடர்ந்து நீண்ட நேரம் ஒரு விஷயத்தை கவனத்துடன் செய்ய முடிவதில்லை என்பதுதான். ஏனெனில் ஒரு விஷயத்தை நாம் பார்க்கும்போது, நம் மூளைக்கு அதை ப்ராசஸ் செய்து உள்வாங்கிக்கொள்ள குறிப்பிட்ட நேரம் தேவை. ஆனால், டூம் ஸ்க்ரோலிங் செய்யும்போது, உருப்படியான தகவல்களைதான் பார்க்கிறோம் என நினைத்து, மூளை அதை உள்வாங்கிக்கொள்ள தயாராக இருக்கிறதா இல்லையா என்பதைகூட அறியாமல், ஒவ்வொரு நிமிஷமும் புதுசு புதுசாக தகவல்களை கொடுத்துக்கொண்டே இருந்தால் மூளை அதை ப்ராசஸ் செய்து சோர்வடைந்துவிடும்.

மூளைக்கு இதை பழக்கிவிட்டதால், 30 நிமிஷத்துக்கு மேல் எதிலும் கவனம் செலுத்தி படிக்க முடிவதில்லை என்கின்றனர். மாணவர்கள் மட்டுமின்றி, அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கும் இதே பிரச்னைதான். மூளைக்கு ஓய்வே கொடுக்காமல் இருப்பது மிகப்பெரிய பாதிப்பாக மாறிவருகிறது. இனி வரும் தலைமுறை குழந்தைகள் கவனக்கூர்மை, பொறுமை இல்லாமல் கஷ்டப்படுவார்கள். ஒரு படம் பார்க்கும்போது இடையில் மொபைலை எடுக்காமல் முழு கவனத்துடன் பார்த்து முடிப்பவர்கள் இன்று எத்தனை பேர்? இடையில் மொபைலை எடுத்து ஸ்க்ரோல் செய்யாமல் இருக்க முடிவதில்லை. இதனாலேயே படம் பார்க்க தியேட்டர் போய்விடுகிறோம்.

வீட்டில் பார்த்தால் மொபைலை எடுப்பதால் படம் பார்த்த திருப்தி ஏற்படுவதில்லை என்கின்றனர். இரண்டு மணி நேரம் எந்த தொந்தரவும் இன்றி படம் பார்ப்பதை நம் மூளை இயல்பாக எடுத்துக்கொள்கிறது. பல தலைமுறைகளாக அப்படித்தான் பழகியிருக்கிறோம். ஆனால், இப்போது டூம் ஸ்க்ரோலிங் செய்து பழகிவிட்டதால் எல்லாமே மாறிவிட்டது. சிலரால் மற்ற மனிதர்களிடம் நீண்ட நேரம் கவனத்துடன் பேசக்கூட முடிவதில்லை. பத்து நிமிட உரையாடலில், ஐந்து நிமிடங்கள்தான் தொடர்ந்து பேசவோ, கேட்கவோ முடிகிறது.

பிறர் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்ப்பதும், உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு எளிமையான கிராமத்து வாழ்க் கையில் தான் சந்தோஷமாக இருப்பதை காட்டுகிறவர்களும், ஒவ்வொரு மாதமும் ஒரு நாட்டுக்கு ட்ரிப் செல்வதை காட்டுகிறவர்களும் இருக்கிறார்கள். இரண்டையும் பார்க்கும் மற்ற மனிதர்கள் எதில் வேண்டுமானாலும் இன்ப்ளூவென்ஸ் ஆகலாம். சோஷியல் மீடியா அல்காரிதமும் அப்படித்தான் இருக்கிறது. ஒருவன் வாழ்க்கையில் என்ன தேடுகிறான் என்பதை அதுவே சொல்லிவிடுகிறது. எனவே ஸ்ரோல் செய்வதை மாற்ற முடியாவிட்டாலும், அட்லீஸ்ட் அல்காரிதமை சேஞ்ச் பண்ணுங்க. நாம் எதை பார்க்கணும், பார்க்கக்கூடாது என்பதை நாம் முடிவு எடுத்துவிட்டால், எல்லாமே சரியாக மாறிவிடும். ஆனால், கட்டுப்பாடு இல்லையென்றால் சோஷியல் மீடியா நம்மை கன்ட்ரோல் செய்துவிடும்.

உறவு களில் இது பெரிய சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இன்ப்ளூவென்ஸர்களை பார்த்துவிட்டு, ‘என் கணவர் இதுபோல என்னிடம் நடந்துகொள்வதில்லை, மனைவி இதுபோல் இல்லை, இவர்களை போல் என் குழந்தை நான் சொல்வதை கேட்பதில்லை’ என்று உறவுகளுக்குள் குறைகளை சொல்லி எதிர்பார்ப்புகளை திணிக்கிறார்கள். இன்ஸ்டாகிராம் டெஸ்டினேஷன் வெட்டிங், இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் என்று பெயர் வைத்து சோஷியல் மீடியா அடிப்படையிலேயே வாழ்வை நடத்துகிறார்கள்.

தூங்க போகும் நேரத்தில் மொபைல் பார்க்கும் மோசமான நிலை இன்று எல்லோரிடமும் இருக்கிறது. கண்ணை மூடி ஏதோ ஒரு நல்ல விஷயத்தை நினைத்துக்கொண்டால், அப்படியே தூங்கிவிடுவோம். இப்போது நிலைமையே வேறு. டூம் ஸ்க்ரோலிங் செய்து பார்த்த அத்தனையும் அடுத்தடுத்து வந்து போகும், கண்ணை மூடியும் மெண்டல் ஸ்க்ரோலிங் செய்கிறார்கள். பாஸ்ட், ப்ரெசென்ட், ஃப்யூச்சர் என்று மூளை எல்லாவற்றையும் நினைத்து ஸ்க்ரோலிங் மோடில் இருக்கும். இன்சோம்னியா எனும் தூக்கமின்மை பிரச்னை அதிகமாகிடுச்சு” என்றவர், மிதமிஞ்சிய சோஷியல் மீடியா பழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை பகிர்ந்தார்.

“ஒரு உளவியலாளராக என்னுடைய முதல் அட்வைஸ் புத்தகங்கள் படிக்க தொடங்குங்கள். மனிதர்களுடன் அதிகம் பழகுங்கள். முகம் பார்த்து பேசுவது, பழகுவதை விட சோஷியல் மீடியா உரையாடல் அதிகம் பலனளிக்கப் போவதில்லை. ஸ்க்ரீன் டைமை குறைத்து டிஜிட்டல் டீடாக்ஸிபிகேஷன் செய்யுங்கள். வாழ்க்கையில் இருக்கும் வெறுமையை நிரப்பவே பலரும் மொபைலை வைத்துக்கொள்கிறார்கள்.

கார்டானிங், ஆர்ட், குக்கிங் போன்ற பிடிச்ச விஷயங்களை மனப்பூர்வமாக செய்யுங்கள். வெளியில் பார்க்கும் அழகான காட்சிகளை கண்களால் ரசியுங்கள். மொபைலில் படம் எடுத்து சோஷியல் மீடியாவில் போடவேண்டும் என்ற அவசர நிலையிலேயே இருக்காதீர்கள். உங்க பெர்சனாலிட்டியை உருவாக்க வேண்டியது நீங்கதான், சோஷியல் மீடியா இல்லை” என்ற அறிவுரைகளின் படி பேசி முடித்தார்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்