நன்றி குங்குமம் தோழி
பழங்காலத்தில் மனிதர்கள் மரமேற பல்வேறு வழிமுறைகளை கையாண்டார்கள். அதே முறையினை பின்பற்றி ஒரு கம்பம் அமைத்து அந்த விளையாட்டிற்கு மல்லர் கம்பம் எனப் பெயரிடப்பட்டது. சோழர்களும், பல்லவர்களும் மல்லர் விளையாட்டை போற்றிப் பாதுகாத்தனர். அவர்களின் அரசவையில் தலைசிறந்த மல்லர்கள் இருந்தனர்.
தமிழகத்தில் மண்ணோடும், மக்களோடும் வேரூன்றி இணைந்திருந்த மல்லர் கம்பம், முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் படையெடுப்புக்குப் பிறகு மண்ணையும் மக்களையும் விட்டு விலகிச் சென்றது. அதன் பிறகு மராட்டியர்கள் இந்த விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்த மல்லர் விளையாட்டு இன்றளவும் பிரபலமாக உள்ளது. 10-க்கும் மேற்பட்ட மாநில அரசுகள் இந்த மல்லர் விளையாட்டை அரசு விளையாட்டாக அங்கீகரித்துள்ளன.
தற்காலத்தில் கோயில் விழாக்களில் விளையாடும் வழுக்கு மரம் அக்காலத்தில் சோழர்கள் விளையாடிய மல்லர் கம்பத்தின் மறு உருவமாகும். வட மாநிலங்களில் மால்காம் என்ற பெயரில் விளையாடப்படுகிறது. மல்லர் விளையாட்டு, நிலைக்கம்பம், தொங்கு கம்பம், கயிறு விளையாட்டு என மல்லர் கம்பம் கொண்டு பல விளையாட்டுகள் விளையாடப்படுகிறது. நிலைக்கம்பம், பருமனான மரத்தை நட்டு அதில் ஏறி பலவித ஆசனங்கள் செய்வது.
தொங்கு கம்பம், மரத்தை கயிற்றில் கட்டி எண்ணெய் பூசி வீரதீர விளையாட்டு ஆடுவது. கயிறு விளையாட்டு, கம்பத்திற்கு பதில் கயிற்றில் ஏறி ஆசனம் செய்வது. இந்த மல்லர் கம்பத்தின் அனைத்து பிரிவிலும் தனக்கான ஒரு அடையாளத்தினை ஏற்படுத்தி வருகிறார் திருச்சியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி ஸ்ருதிகா. சித்த மருத்துவரான ஸ்ருதிகாவின் தாய் சுகன்யா அவரின் விளையாட்டு பயணம் குறித்து நம்மிடம் பகிர்ந்தார்.
‘‘ஸ்ருதிகாவிற்கு 5 வயதாக இருக்கும் போதே, விளையாட்டில் ஆர்வம் இருப்பதை கண்டறிந்தேன். அதனால் ஜிம்னாஸ்டிக் பயிற்சியில் சேர்த்தேன். அதன் பிறகு மால்கம், யோகா, கிக் பாக்ஸிங் என பல பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மால்கம் நான்கு ஆண்டுகள் பயிற்சி பெற்றும் போட்டிகளில் கலந்து கொள்ள இயலவில்லை. அதனால் ஸ்ருதிகா மன
உளைச்சலுக்கு தள்ளப்பட்டார். அவரின் நிலையை மாற்ற கிக் பாக்ஸிங் மாஸ்டரை சந்தித்து பேசினேன். 15 நாட்கள் பாக்ஸிங் பயிற்சி மேற்ெகாண்டு, திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றாள். அவளின் திறமையை பாராட்டிய பயிற்சியாளர், மால்கம் விளையாட்டுப் பயிற்சியை தொடர்ந்து கொடுக்கச் சொல்லி அறிவுறுத்தினார்’’ என்றவர், தற்போது ஸ்ருதிகா தினமும் கடுமையாக பயிற்சியினை மேற்கொண்டு வருவதாக கூறினார்.
‘‘மல்லர் கம்பம் பயிற்சியில், தசைகள் மற்றும் மூளையில் உள்ள செல்களுடன் இணைந்து ஒரு நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்தும். இதனால் எந்த இடத்தில் இறுக்க வேண்டும், எந்த இடத்தில் தளர்த்த வேண்டும் என்பதை கவனமாக செயல்படுத்த வேண்டும். முறையான பயிற்சி நம்முடைய மூளை கவனம் சிதறாமல் ஒரு நிலையில் போக்கஸ் செய்ய உதவும். விளையாட்டு அவசியம் என்றாலும் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். இரண்டுக்குமான நேர அட்டவணையை கடைபிடித்தால்தான் கல்வி மற்றும் விளையாட்டு இரண்டிலும் ஜொலிக்க முடியும்.
ஆரம்பத்தில் என் மகள் மல்லர் கம்பம் பயிற்சியில் ஈடுபட்ட போது, அவளால் போட்டியில் விளையாட முடியாமல் போனது. காரணம், என் மகள் இந்த விளையாட்டிற்கு தகுதியானவர் இல்லை என்று கூறி நிராகரித்துவிட்டார்கள். ஆனால், இன்று அதே விளையாட்டில் இரண்டு தங்கப் பதக்கங்களை வாங்கிய தருணம் என்னால் மறக்கவே முடியாது. அதற்கு அவளின் கடுமையான உழைப்பு தான் காரணம். காலை, மாலை என கடலூரில் இருந்து புதுச்சேரி சென்று பயிற்சியினை மேற்கொண்டாள். கோடை விடுமுறையில் கூட விடுமுறையை உல்லாசமாக கொண்டாடாமல், பயிற்சியில் கவனம் செலுத்தினாள். மல்லர் கம்பம் மட்டுமில்லாமல் கிக் பாக்ஸிங்கிலும் இரண்டு தங்கப் பதக்கங்கள் அவளின் முயற்சிக்கு கிடைத்த வெற்றிகள் என்றுதான் சொல்லணும்.
வாழ்க்கையில் பெரும்பாலும், குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளுக்கு படிப்பு, தூக்கம், உணவு ஆகிய மூன்றும்தான் மிக முக்கியமாக இருக்கும். பெற்றோர்கள் எப்படியோ பள்ளிக் கட்டணம் செலுத்தி விடுகிறார்கள். படிப்பு எவ்வாறு முக்கியமோ அதேபோல் விளையாட்டு துறையும் ஒவ்வொரு குழந்தைக்கும் அவசியம். எந்த விளையாட்டை எடுத்துக் கொண்டாலும், அதில் நாம் சிறந்து விளங்க வேண்டும்’’ என்றார் சுகன்யா.
தொகுப்பு: பொ.ஜெயச்சந்திரன்



