நன்றி குங்குமம் தோழி
பொதுவாகவே கனரக இயந்திரங்கள், கற்கள் போன்ற கடினமான துறைகளில் பெண்களை காண்பது அரிது. அதுவும் கிரானைட் போன்ற தொழிற்துறையில் ஆண்களே அதிகம் ஆதிக்கம் செலுத்தி வந்த வேளையில் சமீபகாலமாக பெண்களும் இத்துறையில் நுழைந்து சாதிக்க தொடங்கியுள்ளனர். நவீன தொழிற்நுட்பத்தின் வருகையாலும் பெண்களுக்கே உள்ள முறையான மேலாண்மை திறன் மற்றும் ரசனையாலும் இத்துறையும் பெண்கள் வசமாகியுள்ளது என்றே சொல்லலாம். இவ்வகையில் ஆண்களுக்கு நிகராக கிரானைட் துறையில் முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறார் சௌந்தர்யலஷ்மி. இவர் ‘ஸ்டோன் அண்ட் சோல்’ என்ற பெயரில் கிரானைட், மார்பில்ஸ் போன்ற கற்களாலான அழகான தனித்துவமான வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரித்து விற்பனையில் களைக்கட்டி வருகிறார்.
‘‘நான் கோபிச் செட்டிப்பாளையத்தில் தான் பிறந்து வளர்ந்தேன். கோவையில் பிஎஸ்சி விஷூவல் கம்யூனிகேஷன் முடிச்சேன். படிப்புல நான் டாப்பர். அப்பா அம்மாக்கு சேலம்தான் சொந்த ஊர். அப்பா சொந்தமாக கிரானைட் தொழில் செய்து வந்தார். சிறு வயதில் இருந்தே கிரானைட் மார்பிள் கற்கள்தான் என்னை சுற்றி இருக்கும். அதை பார்த்து பார்த்து வளர்ந்ததால் கிரானைட் கற்கள் மேல் எனக்கு தனிப்பட்ட மோகம் ஏற்பட்டது என்று தான் சொல்ல வேண்டும். அப்பா என்னை குவாரி மற்றும் தொழிற்சாலைக்கு எல்லாம் உடன் அழைத்து செல்வார். அங்கு போகும் போது அங்குள்ளவர்கள் ‘பொம்பள பசங்க இங்கெல்லாம் வரக்கூடாது’னு சொல்வாங்க. ஏன் என்று எனக்குப் புரியல.
அதனாலயே எனக்கு அந்தத் தொழிலில் உணர்வுப்பூர்வமான ஈர்ப்பு ஏற்பட ஆரம்பித்தது. அப்பாவும் நான் இந்தத் தொழிலில் ஆர்வமாக இருப்பதை புரிந்துகொண்டார். 9ம் வகுப்பு படிக்கும் போதே குவாரி முதல் பேக்டரி வரை என்னென்ன வேலை செய்வாங்கன்னு நான் தெரிந்து கொண்டேன்’’ என்றவர் கிரானைட் கற்களுடனான தன் வாழ்வு நகர்வினைப் பகிர்கிறார்.
‘‘அப்பா கிரானைட்டில் வீட்டிற் குத் தேவையான ஸ்லாப்கள், சமையல் மேல் தரைக்கல், சிங்க், மார்பில், டைல்ஸ் போன்ற கற்களை உற்பத்தி செய்யும் தொழிலைத்தான் இன்று வரை செய்து வருகிறார். கொரோனாவால் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. கடினமான சூழலில்தான் எனக்கும் திருமணமானது. திருமணத்திற்குப் பிறகு நான் அமெரிக்கா சென்றுவிட்டேன். அங்கு சில மாதங்கள் இருந்தேன்.
அங்குள்ள கடைகளில் கிரானைட் மற்றும் மார்பில்களிலும் சின்னச் சின்ன அளவிலான பொருட்கள் அதிக விலையில் இருப்பதை பார்த்தேன். அவை ஒவ்வொன்றும் அழகான வடிவங்களில் இருந்தன. அதை நம்ம ஊரில் செய்து குறைந்த விலையில் தர முடியுமேன்னு சிந்தித்தேன். ஊர் திரும்பிய பிறகும் என்னுடைய மனதில் கிரானைட் என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது.
கோபிச்செட்டிப் பாளையத்தில் என் தோழி வித்யா பொருளுக்கான கண்காட்சியினை ஏற்பாடு செய்வாள். பல்வேறு ஸ்டால்களை அமைக்கும் ஒருங்கிணைப்பு வேலையைச் செய்து வந்தாள். அவள் தான் என்னை கண்காட்சியில் ஸ்டால் வைக்க சொன்னாள். அதில் கிரானைட் பொருட்களை விற்பனைக்காக வைக்கவும் செய்ய சொன்னாள். நான் எங்க வேலையாட்களிடம் சொல்லி நான் அமெரிக்காவில் பார்த்த டிசைன்கள் மற்றும் வீட்டிற்குத் தேவையான சின்னச் சின்ன வீட்டு உபயோகப்பொருட்களான குழிக்கல், ஸ்டூல், புக் ஸ்டாண்டு, பாட்டில் ஹோல்டர், ஊதுவர்த்தி ஸ்டாண்டு போன்றவற்றை செய்ய சொல்லி அதை கண்காட்சியில் வைத்தேன். மேலும் எங்க கடையில் விற்பனையாகாமல் இருந்த அம்மிக்கல் போன்றவற்றையும் அங்கு டிஸ்பிளேக்காக வைத்தேன். ஆச்சரியம் என்னவென்றால், நான் கஷ்டப்பட்டு செய்யச் சொன்ன மாடல் பொருட்கள் எல்லாம் விற்பனையாகவில்லை. மாறாக அங்கு வந்தவர்கள் அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்றவற்றை தான் வாங்கிச் சென்றார்கள். பலர் ஆர்டர்களும் கொடுத்தார்கள்.
இந்த வகை பொருட்களைத்தான் தேடுவதாகவும் குறைந்த விலையில் இருக்கிறது என்றும் கூறினார்கள். அப்பதான் இந்தப் பொருட்களுக்கு இன்றும் மக்க ளிடம் மதிப்பு இருப்பதை நான் உணர்ந்தேன். அந்த நிகழ்ச்சிதான் எனக்கான பிசினஸ் அடையாளத்தை உருவாக்கி வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது’’ என்றார் சௌந்தர்யா.‘‘பொருட்காட்சிக்கு பிறகு கிரானைட் உற்பத்தி பொருட்களில் மாற்றம் மற்றும் டெவலப் செய்ய நினைத்தேன். அப்பா கூட குவாரிக்கு போய் அங்குள்ள சின்னச் சின்ன கற்களாக குறிப்பாக வீணாகப் போகும் கற்களைதான் நான் கொண்டு வருவேன். அதனை தொழிற்சாலை ஆட்களிடம் கொடுத்து பொருட்களை செய்ய வைத்தேன். ஒவ்வொன்றும் அழகான, நேர்த்தியான வடிவம் பெற்றன.
இவை அனைத்தையும் இயந்திரம் இல்லாமல் கைகளால் வடிவமைப்பதால் வேலைப்பாடு அதிகம். ஆட்டாங்கல் போன்ற பொருட்கள் எல்லாம் எடை அதிகமாக இருக்கும். இப்படியாக பொருட்கள் எல்லாம் செய்ய ஆரம்பித்து கடந்த 2025ல் ‘ஸ்டோன் அண்ட் சோல்’ என்ற பெயரில் கடையினை அமைத்தேன். படிப்படியாக பிசினஸ் வளர்ந்தது. ஆன்லைனிலும் ஆர்டர்கள் வர ஆரம்பித்தன. சில சமயம் ஷிப்பிங் செய்யும் போது பொருட்கள் உடைந்து போயின. அதற்கான காரணத்தை கண்டறிந்து, பேக்கேஜிங் முறையினை மாற்றி அமைத்தோம். ஒரே நாளில் 800 ஆர்டர்கள் வர ஆரம்பித்தன. இதெல்லாம் நாங்களே எதிர்பார்க்காதது. நம் பாரம்பரிய பொருட்களையே கொஞ்சம் டிசைன் மாற்றி செய்கிறேன். புதுப்புது பொருட்களை அறிமுகப்படுத்தி வருகிறேன். நாளுக்கு நாள் புதுசு புதுசா கொடுத்தாதான் இந்தத் தொழிலில் நிலைத்து நிற்க முடியும்’’ என்றார்.
‘‘இன்ஸ்டாவில் என் பொருட்களை நானே விளம்பரம் செய்தேன். பொருட்களின் தனித்துவம், நன்மைகள் பற்றி வீடியோ வெளியிட்டேன். மிக்சியில் அரைப்பதைவிட கிரானைட் அம்மிக்கல், ஆட்டுக்கல்லில் அரைக்கும் போது உணவின் இயற்கையான சுவை மாறுவதில்லை. இவற்றைப் பயன்படுத்தினால் சமையலில் நிச்சயமாக புதிய சுவையை உணர முடியும். வடிவங்கள், நிறங்கள் எல்லாமே புதியதாக இருப்பதால் அதிகமாக விரும்புகிறார்கள். தற்போது சென்னையிலும் கிளையைத் துவங்கியுள்ளோம். வரலஷ்மி கிரானைட்ஸ் என்ற பெயரில் சேலத்தில் இரண்டு தொழிற்சாலைகளையும் ஏற்றுமதிக்கு கோயம்புத்தூரில் ஒரு தொழிற்சாலையையும் நிர்வகித்து வருகிறோம்’’ என்றவர், இந்தத் தொழிலில் தான் சந்தித்த சவால்களை பகிர்கிறார்.
‘‘நான் இந்த துறைக்கு வந்த பிறகு புதுப்புது பொருட்களை விற்பனைக்கு வைத்த போது ஏற்கனவே சேலத்தில் இந்த துறையிலிருந்தவர்கள் பலர் என்னை மிரட்ட ஆரம்பித்தார்கள். எனக்கு கற்களை தரக்கூடாது என்று குவாரி ஓனர்களிடம் கூறினார்கள். இதனால் ஆர்டர்கள் எல்லாம் கைவிட்டுப் போனது. உள்ளூர் ஆட்களும் அவர்களுக்கு பயந்து எனக்கு பொருட்கள் தர மறுத்தார்கள். தொழிற்சாலையிலும் வேலை செய்ய விடவில்லை. ஒரு கட்டத்தில் தொழிலை விடலாம்னுக் கூட தோணுச்சு. ஆனால், இரண்டு குவாரி ஓனர்கள் கற்களை தருவதாக கூறினார்கள். அப்பாவும் எப்பவும் கூடவே இருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக எதிர்ப்புகள் குறைய ஆரம்பித்தது.
எனக்கான இடத்தைப் பிடித்தேன். தொழிலில் நேர்மையாக வரவு செலவுகளில் சரியாக இருப்பதால் குவாரி ஓனர்கள் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறாங்க. என் ஆசையே
இந்தியாவில் என் பொருட்களை பிராண்டாக மாற்ற வேண்டும். காலத்தால் அழியாத கைவினைப் பொருட்களுக்கான அடையாளமாக என் தயாரிப்புகள் இருக்க வேண்டும். அதை நோக்கியே உழைக்கிறேன்’’ என்ற சௌந்தர்யலஷ்மி ‘யுவசக்தி’ விருதைப் பெற்றுள்ளார்.
தொகுப்பு: கலைச்செல்வி


