நன்றி குங்குமம் தோழி
வார்த்தைகளால் புரிய வைக்க முடியாததை ஒரு புகைப்படம் எடுத்துக்காட்டும் என்று சொல்வார்கள். மூன்றாவது கண்ணாகிய கேமராவால், படம் பிடிக்கும் புகைப்பட கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் சென்னையில் புகைப்பட போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து புகைப்பட கலைஞர்களும் இதில் கலந்து கொண்டு தங்களின் புகைப்படங்களை பதிவு செய்யலாம்.
சிறந்த புகைப்படங்களுக்கு விருதுண்டு. இந்தப் போட்டியினை 2019ம் ஆண்டு முதல் சென்னை போட்டோ பினாலே (CPB) என்ற அமைப்பு நடத்தி வருகிறது. முழுக்க முழுக்க புகைப்பட கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் துவங்கப்பட்ட இந்த அமைப்பு ஒவ்வொரு வருடமும் அவர்களின் திறமைக்கு விருதளித்து ஊக்குவித்து வருகிறது. அமைப்பின் செயல்பாடு மற்றும் இந்த வருட போட்டி குறித்து பகிர்ந்தார் அமைப்பின் இயக்குனரான வருண் குப்தா.
‘‘இசைக் கலைஞர்களுக்காக ஒவ்வொரு வருடமும் சென்னையில் மார்கழி மாதக் கச்சேரி நடைபெறும். அதேபோல், புகைப்படத் திருவிழா அமைக்கவே சென்னை போட்டோ பினாலே துவங்கப்பட்டது. இதன் மூலம் புகைப்பட கலைஞர்களை கவுரவித்து அவர்களுக்கு விருதளிக்க திட்டமிட்டோம். முதல் வருடம் பிரபல ஆங்கில பத்திரிகை, புகைப்பட நிருபர்களுக்காக விருதை ஏற்று நடத்தியது. அதன் பிறகு CPB இதனை நடத்தி வருகிறது. இதன் மூலம் புகைப்பட நிருபர்களுக்கு மட்டுமில்லாமல் மற்ற துறை புகைப்பட கலைஞர்களுக்கும் அங்கீகாரம் கொடுத்து வருகிறோம்.
இந்த வருடமும் போட்டிக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் 30ம் தேதி வரை வரவேற்கப்படுகிறது. இந்தப் போட்டியில் வளர்ந்து வரும் திறமையான புகைப்பட கலைஞர்கள் முதல் ஏற்கனவே தங்களின் தடம் பதித்த அனைவரும் பங்கேற்கலாம். பொதுவாக போட்டி என்றால் சிறந்த புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளிப்பார்கள். ஆனால், CPBயில் அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கொடுப்பது மட்டுமில்லாமல், அவர்களின் படைப்புகளை பார்வையிட கண்காட்சி வைக்கப்படும். மேலும், புகைப்படங்கள் குறித்து விவாதங்களும் நடைபெறும். இந்த வருடம் மேலும் பல சுவாரஸ்யமான அம்சங்களையும் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதன் மூலம் இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும் புகைப்படங்கள் சொல்ல இருக்கும் கதையினை கேட்க நான் ஆவலாக இருக்கிறேன்.
இந்தப் போட்டியில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. தனிப்பட்ட தலைப்பும் இல்லை என்பதால் இயற்கை, வைல்ட் லைஃப், போர்ட்ரெயிட், லேண்ட்ஸ்கேப், பொருட்கள் என அவர்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்ததை படம் பிடித்து Chennai Photo Biennale Foundation என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இந்தப் போட்டியின் விதிகள், விண்ணப்பிக்கும் முறைகள் அனைத்தும் இணையத்தில் குறிப்பிட்டிருக்கிறோம். போட்டிக்கு விண்ணப்பிக்கப்பட்ட புகைப்படங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்டவை பின்னர் அறிவிக்கப்படும்.
இன்று செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட படங்கள் அனைத்து தளங்களையும் ஆக்கிரமித்து வருகிறது. மக்களும் அதையே விரும்புகிறார்கள். ஆனால், புகைப்பட கலைஞர்களால் படம்பிடிக்கப்பட்ட இயல்பான படங்களுக்கு எந்தக் காலத்திலும் மதிப்புண்டு. அத்தகைய புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த வாய்ப்பினை அனைத்து புகைப்பட கலைஞர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார் வருண் குப்தா.
தொகுப்பு: ரிதி


