Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஒவ்வொரு நூல் இழையிலும் மக்களின் நம்பிக்கை உள்ளது!

நன்றி குங்குமம் தோழி

‘‘இ ந்தியாவில் பல்வேறு வகையான பருத்தி சேலைகள் கிடைக்கின்றன. டண்ட் காட்டன், சில்க் காட்டன், கைத்தறி காட்டன் ஆகியவை அவற்றுள் முக்கியமானவை. அதிலும் தமிழ்நாட்டின் கைத்தறி காட்டன் வகைகளான சுங்குடி காட்டன், காஞ்சி காட்டன் மற்றும் செட்டிநாடு காட்டன் உலகப்புகழ் பெற்றவை. முன்பெல்லாம் வயதானவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், உயர் அதிகாரிகள் மட்டுமே இந்த சேலைகளை உடுத்தி வந்தார்கள்.

ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களின் தாக்கத்தால் இளந்தலைமுறை பெண்களையும் இப்புடவைகள் கவர்ந்து வருகின்றன.ஜார்ஜெட், சிப்பான், கிரேப், பாலிஸ்டர் சில்க், நைலான் என சிந்தடிக் ரக சேலைகள் அணிவகுத்தாலும் கைத்தறி காட்டன் சேலைகளில் உள்ள அழகும், நேர்த்தியும் தனிதான். அணிந்தவருக்கு சுகமான அனுபவத்தை தரும் கைத்தறி சேலைகளின் உற்பத்தி கதைகள் சாதாரணமானது இல்லை. மிகவும் ரணமானது.

நாங்கள் குடும்பமாக எங்க குலத்தொழிலை மீட்டெடுத்தோம்’’ என்கிறார் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செட்டிநாடு காட்டன் கைத்தறி உற்பத்தியாளரான சோவியா ராமர். இவர் ‘பிரகாஷ் டெக்ஸ்’ என்ற பெயரில் செட்டிநாடு காட்டன், காஞ்சி காட்டன் சேலைகள், குழந்தைகளுக்கான காட்டன் பாவாடை சட்டைகள் ஆகியவற்றை மொத்தமாக உற்பத்தி செய்கிறார்.

‘‘எங்க ஊர் தி.சுப்புலாபுரம் என்ற சிறிய கிராமம். அம்மா, அப்பாவுக்கு நாங்க மூணு பொண்ணுங்க. நான் கடைசி பொண்ணு. எங்க ஊர்ல பொண்ணுங்கள படிக்க வைக்க மாட்டாங்க. ஆனா, எங்க அம்மா, அப்பா ரெண்டு பேரும் கைத்தறியில சொற்ப கூலிக்கு வேலை பார்த்து, நாங்களும் அந்த நிலைக்கு வந்திடக்கூடாதுன்னு எங்கள போராடி படிக்க வச்சாங்க.

கைத்தறியில், ஒரு நாளைக்கு ஒரு சேலைதான் நெய்ய முடியும். இப்ப இருக்கும் டெக்னாலஜிலாம் அப்ப இல்லை. பருத்தி, பட்டு எந்தப் புடவைகளாக இருந்தாலும், கையால் மட்டும் தான் நெய்வாங்க. அந்தக் காலத்துல ஒரு சேலைக்கு இருபது ரூபாய்தான் கூலி கிடைக்கும். அம்மா, அப்பா சம்பாத்தியம் எங்க மூவரையும் படிக்க வைக்கவும், குடும்பச் செலவிற்கும் பத்தல. அதனால ஒரு கட்டத்தில் பெரிய அக்கா எங்களுக்காக படிப்பை பாதியில் விட்டு வீட்டிலேயே தறி போட்டு வேலை செய்ய ஆரம்பிச்சாங்க. நாங்க ஸ்கூலுக்கு போகும் வரை அக்காவுக்கு சின்னச் சின்ன வேலைகளான வைண்டிங் போன்றவற்றை செய்து கொடுப்போம்’’ என்று தங்கள் இளம் வயதில் கடந்து வந்த கடினமான பயணத்தைப் பகிர்ந்தார் சோவியா.

‘‘நான் +2 முடித்த பிறகு சேலத்தில் உள்ள மத்திய அரசின் இந்திய கைத்தறி தொழிற்நுட்ப கல்லூரியில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி படிச்சேன். சிறு வயதிலிருந்தே கைத்தறி தொடர்பான அறிவு இருந்தாலும், மூன்று வருட கல்லூரியில் டெக்ஸ்டைல் தொடர்பான பல நுணுக்கங்கள், தொழில் தொடங்குவதற்கான அறிவு ஆகிய அனைத்தும் கிடைத்தன. இன்று வரை அங்குள்ள ஆசிரியர்களுடன் நான் தொடர்பில் இருக்கிறேன்.

எப்போ எந்த உதவி தேவை என்றாலும் நான் அவர்களைதான் நாடுவேன். படிப்பு முடித்தவுடன் கரூரில் 2 வருடங்கள் வேலை பார்த்தேன். பிறகு திருமணம், குழந்தைகள்னு சென்னையில் வசித்தோம். கணவர் தனியார் கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சில காரணங்களால் அவரின் நிறுவனம் மூடப்பட்டது. அவருக்கு வேலை இல்லை. குழந்தைகள், குடும்பத்தை எப்படி சமாளிப்பதுன்னு புரியல.

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு இருப்பதால், அங்க செல்லச் சொல்லி எங்க வீட்டில் சொன்னாங்க. ஆனால், என் கணவருக்கு அதில் உடன்பாடு இல்லை. சொந்த ஊரில் சொந்தமாக தறி போடலாம்னு முடிவு செய்து சென்னையில் இருந்து எங்க ஊருக்கே சென்றுவிட்டோம். எங்க வீட்டில் மட்டுமில்லை என் மாமனார், மாமியார் இருவருமே தறி வேலை செய்து வந்தாங்க. அதனால் வெளிநாட்டில் ஒரு கூலியாக வேலை செய்வதை விட குடும்பமாக வேலை செய்யலாம்னு முடிவு செய்தோம்.

வீட்டில் ஆரம்பத்தில் ஒத்துக்கொள்ளவில்லை. அவர்களிடம் பேசி புரிய வைத்தோம். 2016ல் ‘பிரகாஷ் டெக்ஸ்’ உருவானது. என் அப்பா, அம்மா, மாமனார், மாமியார் என அனைவருமே கைத்தறியில் ஈடுபட ஆரம்பிச்சோம். என் மாமனார் தறியில் மேஸ்திரியா வேலை பார்த்து வந்தார். அவருக்கு தறி குறித்த நுணுக்கங்கள் தெரியும் என்பதால் அழிந்து வந்த நிலையில் இருந்த எங்களின் குலத்தொழிலை மீட்டெடுத்தோம்’’ என்று பூரிக்கிறார் சோவியா ராமர்.

‘‘எங்க இருவரின் வீட்டில் தறி வேலையில் ஈடுபட்டு இருந்ததால், வீட்டில் இருந்த மூணு தறியில் ஆரம்பிச்சோம். இப்போ 25 தறி மிஷின்கள் வைத்து வேலை செய்கிறோம். பருத்தி ஆடைகளை மட்டுமே உற்பத்தி செய்கிறோம். காரணம், உடுத்தறவங்களுக்கும் மண்ணுக்கும் எந்த பாதிப்பையும் எங்க தயாரிப்புகள் தரக்கூடாது. மண்ணுலயிருந்து எடுக்கறது மண்ணுக்கே உரமாக வேண்டும்னு எங்க வீட்டு பெரியவங்க சொல்வாங்க. அதை மனசுல வெச்சுதான் நாங்க இந்த வேலையில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றவர் சிந்தடிக் ஆடைகளை தயாரிக்கவே கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்.

‘‘நூலில் இருந்து பருத்தி சேலை உருவாக எட்டு படிநிலைகள் உள்ளன. வெள்ளை நூலினை வாங்கி அதில் சாயங்கள் ஏற்றுவோம். அடுத்து கஞ்சி பசை தடவ வேண்டும். பிறகு நூலாக சுற்றி, வார்பின் செய்த பின் சேலையின் பார்டருக்காக ஜக்கார்ட் டிசைன்களை பயன்படுத்துவோம். அதன் பிறகுதான் தறியில் நூலினை ஏற்றுவோம். சாதாரணமாக இயந்திரத்தில் ஒரு நாளைக்கு நான்கு சேலைகள் நெய்யலாம். கைகளால் நெய்தால், ஒரு சேலை மட்டும் தான் உருவாக்க முடியும். மிஷினைவிட கைகளால் நெய்வது மிகவும் நேர்த்தியாக இருக்கும். ஆனால், குறைந்த அளவில் தான் சேலைகள் மற்றும் ஆடைகளை தயாரிக்க முடியும்.

பண்டிகை காலம் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆர்டர்கள் வரும்போது மிஷின்களிலேயே நெய்துவிடுகிறோம். இயந்திரத்தில் நெய்யப்பட்டாலும் பார்க்க கைத்தறி புடவைகள் போலதான் இருக்கும். வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியாது. அந்தளவிற்கு எங்கள் நெசவாளர்களின் வேலைப்பாடு இருக்கும். பெண் குழந்தைகளுக்கான பாவாடை, சட்டை போன்ற ஆடைகளும் தயாரிக்கிறோம். மொத்தமாகவும் சில்லறையாகவும் சேலைகளை ஜவுளி நிறுவனங்களுக்கும் விற்பனை செய்கிறோம்’’ என்றவர், பெண்களுக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி தங்களுடன் இணைந்து பயணிக்க உதவி வருகிறார்.

‘‘கொரோனா காலத்தில் மறுவிற்பனையாளர்களுக்கு வாய்ப்பினை தந்தோம். இன்று 600க்கும் மேற்பட்டோர் எங்களால் வருமானம் பார்க்கின்றனர். இதில் பலர் பெண்கள். இந்தியா மற்றும் உலகளவிலும் வர்த்தகம் செய்கிறோம். நான் டிசைன்களை பார்த்துக் கொள்கிறேன். என் கணவர் மெட்டீரியல் பர்ச்சேஸ் மற்றும் மார்க்கெட்டிங் பார்த்துக் கொள்கிறார். தறிகள் எங்கள் வீட்டு பெரியவங்களின் பொறுப்பு. இந்திய அளவில் டெல்லியில் நடைபெற்ற கைத்தறி மேம்பாட்டுக்குழு நடத்திய கருத்தரங்கில் தமிழ்நாட்டு சார்பில் பங்கேற்ற 10 நபர்களில் நானும் ஒருவர்.

அந்த கருத்தரங்கில் கைத்தறி நெசவாளர்களுக்கான திட்டங்கள், சலுகைகள், கடன் வசதிகள், தொழிற்நுட்பம் ஆகியவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. அதை எங்கள் தொழிலில் புகுத்தி வளர்ச்சி அடைய செய்ய வேண்டும். எங்கள் குடும்பத்தைப் போலவே எங்கள் கிராமத்தில் உள்ள மற்றவர்களுக்கும் தொழில் வாய்ப்பு வழங்கி வருவதால் அவர்களும் பொருளாதார

ரீதியில் வளர்ச்சி காண்பதை காணும் போது பெருமையாக இருக்கிறது. சிறுவயதில் நாங்கள் பட்ட கஷ்டத்தை மற்றவர்கள் அனுபவிக்கக் கூடாது’’ என்றவர், பிரகாஷ் டெக்ஸின் பெருமைக்குரிய புதிய அறிமுகமாக ‘ஜனனம்’ பற்றிக் கூறுகிறார்.

‘‘எங்களின் தயாரிப்பினை அனைத்து வயதினரும் அணியலாம். எந்தவித ஒவ்வாமையும் ஏற்படுத்தாது. முழுக்க முழுக்க பருத்தி ஆடைகள் மட்டுமே தயாரிக்கிறோம். எங்களின் அடுத்த முயற்சி 0-12 மாதங்களில் உள்ள குழந்தைகளுக்கான ஆடைகள். சின்னக் குழந்தைகளுக்கான ஆடைகள், டவல்கள், போர்வைகள், படுக்கை விரிப்புகள் அனைத்தும் பருத்தியில் கொடுக்க இருக்கிறோம். நிறங்களும் செயற்கை சாயம் ஏற்றாமல் காய்கறிகள், பூக்களைக் கொண்டு இயற்கை நிறமிகளை பயன்படுத்த இருக்கிறோம்.

அந்த பிராண்டுக்கு ‘ஜனனம்’ என்று பெயர் சூட்டியுள்ளோம். விரைவில் அந்த தயாரிப்புகள் வெளிவரும். கொரோனா போன்ற நெருக்கடியான காலங்களில் சமூக வலைத்தளங்கள் மூலமாகவே நாங்கள் அடையாளப் படுத்தப்பட்டோம். அவற்றை சரியாக பயன்படுத்தினால் முன்னேறலாம். எங்கள் ஒவ்வொரு நூல் இழையிலும் தரத்துடன் மக்களின் நம்பிக்கையும் இருக்கிறது’’ என்கிறார் பெருமையுடன் சோவியா ராமர்.

தொகுப்பு: கலைச்செல்வி