Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

PCOS PMOS ஆக மாறியது!

நன்றி குங்குமம் தோழி

சமீபகாலமாக, பெண்களிடையே அதிகம் பேசப்படும் உடல்நலம் சார்ந்த விஷயமாக PCOS இருந்து வருகிறது. ஆனால், சமீபத்திய ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இந்த நிலைக்கு PMOS (Polyendocrine Metabolic Ovarian Syndrome) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது வெறும் பெயரளவு மாற்றம் மட்டுமல்ல, இந்த உடல்நிலை குறித்த ஒரு புதிய பார்வையை நமக்கு வழங்குகிறது.

பல ஆண்டுகளாக, மில்லியன் கணக்கான பெண்கள் இந்நிலையை PCOS அல்லது PCOD என்றே அறிந்திருக்கிறார்கள். இந்தச் சொற்கள் பெரும்பாலும் ஒழுங்கற்ற மாதவிடாய், ஹார்மோன் சமநிலையின்மை, முகப்பரு, உடல் எடை அதிகரிப்பு மற்றும் கருவுறுதல் தொடர்பான சிக்கல்களுடன் தொடர்புடையவை. தற்போது, ​​இந்த நிலை எல்லோராலும் புரிந்துகொள்ளப்படும் விதத்தில் மாறியுள்ளது.

PMOS, வெறும் சினைப்பை நீர்க்கட்டிகளைப் பற்றியது மட்டுமல்ல, அது உடல் முழுவதையும் பாதிக்கும் ஒரு சிக்கலான ஹார்மோன் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறு என்பதை மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர். இந்தப் பெயர் மாற்றம் இந்த உடல்நிலை உள்ளவர்களுக்கும், இந்நிலையை கண்டறிதலுக்கும், நீண்டகாலப் பராமரிப்புக்கும் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்வதற்காக, மகளிர் நல மருத்துவரான டாக்டர் டெல்ஃபின் சுப்ரியா அவர்களுடன் உரையாடினோம்.

PMOS பெயர் மாற்றத்திற்கான காரணம் என்ன?

முன்பு PCOD அல்லது PCOS என்று அழைக்கப்பட்ட போது, அது சினைப்பையில் இருக்கும் நீர்க்கட்டிகளை மட்டுமே மையப்படுத்தியதாக இருந்தது. ஆனால், உண்மையில் பல பெண்களுக்கு ஸ்கேன் செய்து பார்க்கும்போது அதில் நீர்க்கட்டிகள் இல்லாமலேயே அறிகுறிகள் இருக்கலாம் அல்லது கட்டிகள் இருந்தும் அறிகுறிகள் தென்படாமலும் இருக்கலாம். இதில் நிறைய ஹார்மோன் சமநிலை இருக்கும். மேலும், இந்நிலை மெட்டபாலிக் தொடர்பான பிரச்னைகளை கருத்தில் கொள்ளாததால் இப்போது இந்நிலை பாலிஎண்டோகிரைன் மெட்டபாலிக் ஓவரியன் சிண்ட்ரோம் என பார்க்கப்படுகிறது.

இப்பெயர் குறிப்பது என்னவென்றால், எண்டோகிரைன் கிளாண்ட்களில் ஏதாவது ஒன்றின் ஈடுபாடு இல்லாமல் இருக்கலாம் அல்லது மல்டிபிள் எண்டோகிரைன் சிஸ்டம்ஸ் டிஸ்பங்ஷன் அதாவது, உடலிலுள்ள பல நாளமில்லா சுரப்பிகள் தங்களின் ஹார்மோன் சுரப்பை சரியாக கட்டுப்படுத்த முடியாத நிலை. மேலும், மெட்டபாலிக் தொடர்பான பிரச்னைகள் இருப்பதையும் இப்பெயர் குறிக்கிறது.

எனவே இது சினைப்பை தொடர்பான பிரச்னையோ அல்லது கருத்தரித்தலில் உள்ள சிக்கல் மட்டுமே கிடையாது. அதையும் தாண்டி இதனால் இளம் வயதிலேயே டயாபட்டிக், ரத்த அழுத்தம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. இன்சுலின் எதிர்ப்பு என்பது இதிலுள்ள மிக முக்கியமான பிரச்னையாகும். நீண்ட காலமாக இந்த பாதிப்பு தீவிரமாக இருப்பவர்களுக்கு கர்ப்பப்பை உட்புறத்தில் புற்றுநோய் (Endometrial Cancer) ஏற்படும் அபாயமும் உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டுதான் இந்தப் பெயர் மாற்றம் நடந்துள்ளது. மற்றபடி இதற்கான சிகிச்சை முறைகள் எல்லாம் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும்.

PMOS ஏற்படுவதற்கு உணவு முறைகள், சுற்றுச்சூழல், ரசாயனங்கள், நகர்ப்புற வாழ்க்கை, தூக்கக் குறைபாடு மற்றும் நாள்பட்ட மன அழுத்தம் காரணமாகுமா?

வாழ்க்கை முறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றம் இதில் மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் சொல்வது போல உணவுமுறை, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் ஆகியவை ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகின்றன.

இது ஒரு சங்கிலித் தொடர். தவறான வாழ்க்கை முறையால் ஹார்மோன் மாற்றம் ஏற்படுகிறது. அந்த மாற்றத்தினால் உடல்நிலை மேலும் மோசமடைகிறது. ஹார்மோன் சமநிலையின்மை இருப்பவர்களுக்கு சினைப்பையில் பிரச்னைகள் வரலாம். சினைப்பையின் பிரச்னைகளால் மீண்டும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம். எனவே இந்த சுழற்சியை உடைக்க வாழ்க்கை முறை மாற்றமே சிறந்த தீர்வு.

PMOS நிலையால் பாதிக்கப்படும் பெண்கள் எவ்வாறு தங்களை பராமரிக்கலாம்?

இதில் விஷயம் என்னவென்றால் குறைந்த சமூகப் பொருளாதார நிலையில் உள்ள பெண்களுக்கு இப்பாதிப்பு பெரிய அளவில் இல்லை. ஏனெனில் அவர்கள் உடல் உழைப்பில்லாத வாழ்க்கைமுறையில் இல்லை. பெரும்பாலும் உடல் சார்ந்த வேலைகளில் இருக்கக்கூடியவர்கள்தான். துரித உணவுகளை சாப்பிடும் வாய்ப்புகளும் அவர்களுக்கு குறைவு. நடுத்தர மற்றும் உயர் வர்க்க பெண்களிடையேதான் இப்பிரச்னை பெரும்பாலும் காணப்படுகிறது.

எனினும் PMOS நிலையால் பாதிக்கப்படும் பெண்கள் தங்களால் முடிந்தவரை அன்றாடம் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடலாம். ஜிம் சென்றுதான் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டுமென்று இல்லை. சாதாரணமாக நடைப்பயிற்சி செய்யலாம். டீன் ஏஜ் பெண்களுக்கு இப்பிரச்னை ஏற்படும்போது வாழ்க்கைமுறை மாற்றத்தை செய்ய வேண்டும். இது ஒரு நோய் அல்ல, இது ஒரு நிலை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

PMOS கருவுறுதல் பாதிப்பினை ஏற்படுத்துமா? இந்நிலையுடன் வாழும் பெண்களுக்கு, அவர்களின் இணையர்களும் குடும்பத்தினரும் எவ்வாறு சிறந்த முறையில் புரிதலையும் ஆதரவையும் அளிக்க முடியும்?

பெண்களின் இந்த நிலையை குடும்பத்தினரால் புரிந்துகொள்வது கொஞ்சம் கஷ்டம். இதுவே அப்பெண்களுக்கு ஒரு பெரிய அழுத்தமாக மாறக்கூடும். PMOS என்பது குணப்படுத்த முடியாத ஒரு பயங்கரமான நோய் கிடையாது. இது ஒரு உடல்நிலை மட்டுமே. இந்த பாதிப்பு உள்ள பெண்களுக்கு சமூக அழுத்தம், குறிப்பாக குழந்தைப்பேறு குறித்த அழுத்தம் அவர்களின் நிலைமையை மோசமாக்கும்.

முறையான வாழ்க்கை முறை மற்றும் உடல் எடையைக் குறைப்பதன் மூலம் மிகக் குறைந்த சிகிச்சையிலேயே இவர்கள் கருத்தரிக்க முடியும் என்பதை குடும்பத்தினர் புரிந்து கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும்.ஆரோக்கியமான உணவு, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மற்றும் போதுமான தூக்கம் ஆகியவற்றைத் தங்களின் அன்றாடப் பழக்கமாக மாற்றிக்கொண்டால், இந்தப் பிரச்னையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

கடைபிடிக்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய பொதுவான உணவு முறைகள்?

முதலில் சர்க்கரை மற்றும் அதிக எண்ணெய் கலந்த கொழுப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும். தினமும் காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். பாதாம், வால்நட் போன்ற நட்ஸ் வகைகளையும் சியா விதைகள், பூசணி விதைகள், ஆளி விதைகள் மற்றும் எள் போன்றவற்றை தினமும் ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளலாம். முட்டை, குறைவான கொழுப்பு மற்றும் அதிக புரதங்களை கொண்ட இறைச்சி, குறைந்த கொழுப்புள்ள பனீர் அல்லது டோபு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்னென்ன?

உடற்பயிற்சி செய்வது நல்லது. இதற்கான ஜிம்களுக்கு போகத்தான் வேண்டும் என்றில்லை. முடியாதவர்கள் தினமும் வழக்கமான நடைப்பயிற்சி செய்வது அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் தேவை. மன அழுத்தத்தை முறையாக மேலாண்மை செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்