Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘த்ரிஷ்டி’யை கண்டுபிடித்தவருக்கு பத்மஸ்ரீ !

நன்றி குங்குமம் தோழி

பெங்களூருவில் அமைந்துள்ள ‘தேசிய விண்வெளி ஆய்வகங்கள்’(National Aerospace Laboratories) மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு கழகத்தின்(CSIR) கீழ் இயங்குகிறது. தேசிய விண்வெளி ஆய்வகம், விமான வடிவமைப்பு, விண்வெளி தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியான டாக்டர் சுபா இந்தியாவின் முதல் உள்நாட்டு ஓடுபாதை தெரிவுநிலை அளவீட்டுக் கருவியான ‘த்ரிஷ்டி’யை உருவாக்கியதற்காக 2026ம் ஆண்டின் பத்மஸ்ரீ விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2011லிருந்து முக்கிய இந்திய விமான நிலையங்களில் நிறுவப்பட்ட ‘த்ரிஷ்டி’, விமானிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு முக்கியமான தெரிவுநிலை தரவை வழங்கி வருகிறது. விமானப் பாதுகாப்பை வலுப்படுத்தும் விலையுயர்ந்த வெளிநாட்டுக் கருவிகளை நம்பியிருப்பதை இது குறைத்துள்ளது.

2026 ஜனவரி 28 அன்று, பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் இறந்தார். இதுதான் வெகு சமீபத்திய இந்திய விமான விபத்து. விமானம் இறங்க ஓடுபாதை சரிவர தெரியவில்லை என்பது விசாரணையின் அறிக்கைகள் சுட்டிக்காட்டின. விமானம் இறங்க துல்லியமான தெரிவுநிலை அமைப்புகள் எவ்வளவு முக்கியமானவை என்பதை இந்த விபத்து மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

ரன்வே விஷுவல் ரேஞ்ச் (RVR) என்று அழைக்கப்படும் அளவுரு, விமானப் பயணத்தில், குறிப்பாக மோசமான வானிலை நிலைகளில் ஒரு முக்கிய பாதுகாப்பு அளவீடாகும். டாக்டர் சுபா இந்தியாவில் முதல் முதலாக வடிவமைக்கப்பட்ட ஓடுபாதை தெரிவுநிலை அளவிடும் அமைப்பான ‘த்ரிஷ்டி’ உருவாக்கும் குழுவிற்குத் தலைமை தாங்கியிருந்தார். ஒரு விமானி எவ்வளவு தூரம் முன்னோக்கிப் பார்க்க முடியும் என்பதைக் கணக்கிடுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கருவிதான் இது. அடர்ந்த மூடுபனி முதல் மழை மற்றும் தூசி புயல்கள் போன்ற அனைத்து வானிலைகளிலும் செயல்படும்.

‘த்ரிஷ்டி’ 2011ல், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கள சோதனைகளுக்காக பயன்படுத்தப்பட்டது. பின்னர் கொல்கத்தா மற்றும் லக்னோ விமான நிலையங்களில் பொருத்தப்பட்டது. பிறகு நாடு முழுவதும் முக்கிய விமான நிலையங்களில் நிறுவப்பட்டுள்ளது.71 வயதாகும் முனைவர் சுபா பெங்களூரைச் சேர்ந்தவர். உள்நாட்டு விமான தொழில்நுட்பத்தின் முன்னோடியான டாக்டர் சுபா இயற்பியல் மற்றும் மின்னணுவியலில் முதல் இடத்தில் தேர்ச்சிப் பெற்று 1974ல் தேசிய விண்வெளி ஆய்வகங்கள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ‘த்ரிஷ்டி’ உருவாகும் முன், இந்தியா விலையுயர்ந்த வெளிநாட்டுக் கருவிகளை நம்பியிருந்தது.

வெளிநாட்டுக்கு கருவிகளை பராமரிப்பது கடினமாக இருந்தது. த்ரிஷ்டியின் செலவு குறைந்த வடிவமைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதோடு, வெளிநாட்டுக் கருவிகளை நம்பியிருப்பதையும் இந்தியா குறைக்க உதவியது. விமானம் தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும், குறிப்பாக மூடுபனி, மழை அல்லது தூசி புயல் போன்ற சூழ்நிலைகளில், நிலைமை பாதுகாப்பானதா என்பதை மதிப்பிடுவதற்கு கிட்டத்தட்ட அனைத்து முக்கிய விமான நிலையங்களுக்கும் ஓடுபாதை தெரிவுநிலை தரவு தேவைப்படுகிறது. விமானம் நிலையத்திலிருந்து புறப்படும் போதும் தரை இறங்கும் போதும் விமானிகள் சரியான முடிவுகளை எடுக்க த்ரிஷ்டி தரவுகளை வழங்கி உதவுகிறது.

தொகுப்பு: கண்ணம்மா பாரதி